இன்னமும் வாழந்துகொண்டிருக்கிறாள் அவள்

ஆதிலட்சுமி

வெளித்தெரியாத் துயரங்களுடன்

வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவள்…

காலவெளியில் கரைந்துபோக மறுத்து

கண்ணீரைப் பரிசளிக்கின்றன அவை…

நான்கு சுவர்களுக்குள் இறுகி…

நாளும் நேரமும் தெரியாமல்

மனிதமுகம் பாராமல்…

சப்பாத்துக்களின் சத்தத்துக்கு அஞ்சிய

நாட்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள

அவள் விரும்பியதில்லை…

சிவப்பேறிய கண்களுடன் வந்த மனித

மிருகங்களின் முன்னால் அமர்ந்து

அவஸ்தைப்பட்ட மணித்தியாலங்களை

எவருக்கும் சொல்ல மனம் துணிந்ததில்லை…

சேலை அணிந்த எலும்புக்கூடாய்

அம்மா அவளைப் பார்க்க வந்து சென்றபின்

அழுத நாட்களை எழுதவும் முடிவதில்லை…

தூக்கம் இமைகளை அழுத்திய பொழுதுகளில்

பக்கத்து அறையில் இருந்து வெளிவந்த

அலறலை மறக்க முடிவதில்லை…

காலைநேர கணக்கெடுப்புக்கான ஒன்றுகூடலில்

தலையைக் குனிந்தபடி நின்ற தோழிக்கு

நடந்தது என்னவென்று தெரிந்து கலங்கியதை

சொல்ல எவரையும் நம்பியதில்லை…

குழந்தைகளின் பசியை போக்கமுடியாத

தன் இயலாமையை எண விசும்பிய மூத்த

தோழனின் உருக்கத்தை பேச

வார்த்தைகளை அவள் தேடியதே இல்லை…

காலில் தைத்த முள்ளாய்

எப்போதும் வலிக்கின்றது அவளின் இதயம்…

அவளின் துயரங்களில் இலாபமீட்ட

பேரம் பேசிவருகிறார்கள் சிலர்…

தோள் தந்து தாங்கவேண்டியவர்கள்

தூரநின்று வேடிக்கை பார்க்கின்றனர்…

தன் துயரங்களை மறைத்தபடி,

பொன்னை உரைப்பதுபோல்

தன்னை உரைப்பவர்களையும் தாங்கிக்கொண்டு…

இன்னமும் எல்லோருக்குமாய்

வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அவள்.

– ஆதிலட்சுமி

10. 07. 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *