சல்மாவின் ஆவணப்படம் -விமர்சனம்

புதியமாதவி மும்பை

இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.

சல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்.sparrow வின் அம்பை என்ற லஷ்மி நான் மதிக்கும் , பெருமை கொள்ளும் ஒரு எழுத்தாளர்,  இனிய தோழி, வழிகாட்டி.சில்வர் ஜூப்ளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது sparrow. ஒவ்வொரு மாதமும் கலை இலக்கிய சமூக தளத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்  பெண்களுடன் நடத்தும் உரையாடல் நிகழ்வு கடைசி சனி/ஞாயிற்றுக்கிழமையில்  நடக்கிறது. அம்பையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கடந்த சனிக்கிழமை, 29.3/14ல் அந்தேரி (மேற்கு) நான் நிகழ்வுக்குப் போவதற்கு சிறிது  தாமதமாகிவிட்டது. சல்மாவின் ஆவணப்படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான் ஆரம்பித்தது என்றார்கள். படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது. சேனல் 4ன் நிதி உதவியுடன் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் பார்த்தப் பின் சில கேள்விகள் எழுகின்றன.

1)ராசாத்தி சல்மாவைப் பற்றி டில்லி சென்றிருந்தப் போது யாரோ சொல்ல இவரும் இருக்க அந்த அறிமுகத்தில் இந்தப் படம் எடுத்தவர் இவர் வீட்டுக்கே வந்து இவர்களுடன் 3 மாதங்கள் தங்கி இருந்ததாகச் சொல்கிறார்.. அவர் சொல்லும் தகவல்கள் அனைத்தையும் நாம் நம்பத்தான் வேண்டும். சல்மா ரொம்பவும் பிரபலமானவர் என்பதால்.

2) எப்போது வேண்டுமானாலும் தன் கணவர் தன் முகத்தில் ஆசிட் வீசிவிடலாம் என்ற அச்சத்தில் தன் குழந்தையை முகத்தோடு அணைத்துக் கொண்டே  தூங்கியதாகச் சொல்கிறார் சல்மா. அதே கணவருடன் இன்று வரை தொடர்கிறது அவர் வாழ்க்கை??? இதைக் கேள்விக்குட்படுத்துவது அவருடைய தனிப்பட்ட வாழ்வை கேள்விக்குட்படுத்தியதாக என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும் என்பதை நானறிவேன். என்றைக்கு இதை எல்லாம் அவர் படம் எடுத்து ஊர் ஊராக தேசம் தேசமாகச் சென்று காட்ட ஆரம்பித்துவிட்டாரோ அன்றைக்கு இது அவர் சார்ந்த தனிமனித விஷயம் என்பதைத் தாண்டி விடுகிறது. இவ்வளவும் அவர் கணவரைப் பற்றிய உண்மைகளாக கூட இருக்கலாம்.

ஆனால் என் இனிய சகோதரி சல்மா அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இப்படி எல்லாம் அவரைப் பற்றி நீங்கள் வெளி உலகத்திற்குக் காட்டியப்பின்னரும் அவர் உங்களுடன் வாழ்கிறார். வாழ அனுமதித்திருக்கிறது உங்கள் சாதியும் மதமும் உங்கள் குடும்பமும் அவர் குடும்பமும். உங்களுக்குத் தெரியுமா சல்மா… எங்கள் சாதியில்
எங்கள் குடும்பத்தில் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எந்தச் சாதியிலும் எந்தக் குடும்பத்திலும் எந்த வீட்டிலும் இம்மாதிரி வெளிப்படையாக பேசப்பட்டு விட்டால் அவள் வாழ்வது சாத்தியமில்லை! உங்களுக்கு அபரிதமான
சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
.

3) பெண் வீட்டில் அடைப்பட்டிருப்பது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய தேசத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையே உங்கள் ஆவணப்படத்தில் ” சல்மா சிறைவைக்கப்பட்டிருந்ததாக, பூட்டி
வைக்கப்பட்டிருந்ததாக, அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக…” சொல்லப்படும் வாசகம்

ஒரு இருண்ட அறையின் பின்புலக் காட்சியில்

FROM THE AGE OF 13 HER FAMILY KEPT HER LOCKED UP IN THIS ROOM,

அதன் பின் சல்மா ஜன்னலருகில் வந்து நிற்பார்.

THAT WAS THE ONLY WINDOW OUTSIDE WORLD

உண்மையில் சல்மாவை இந்த அறையில் அவர்கள் குடும்பம் பூட்டி வைத்திருந்ததா அல்லது வயதுக்கு வந்தப  பின் பெண்கள் வீட்டுக்குள் மட்டுமே அடைபட்டிருக்கும் நிலையை இப்படி சொல்லுகின்றார்களா? சல்மா…

நீங்கள் இந்த ஆவணப்படத்தைச் சுமந்து கொண்டு பயணிக்கும் தேசங்கள் எங்கும் எம்மாதிரியான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை அறிவீர்கள் தானே?

4) இந்தியா ஆப்கானிஸ்தான் அல்ல, அரபு நாடும் அல்ல. நம் சல்மா அவர்கள் “மலாலா ” அல்ல. ஆனால  இந்த ஆவணப்படம் ஏதோ ஒரு வகையில் இந்திய இசுலாமிய சமூகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் மத்தியில் இசுலாமிய குடும்பங்களில் பெண்கள் அறையில் பூட்டி வைக்கபப்டிருந்தார்கள் என்ற பிம்பத்தைக் கொடுக்கிறது.
தவறுதலாக.

5) இசுலாமியப் பெண்களின் திருமணச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்கிறார் சல்மா. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல் வாதியும் கூட. திமுக வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ பெண்களுக்கான இடம் குறித்தோ திமுக சல்மா எதுவும் வாய்திறப்பதில்லை. அப்படியே அவர் பேசினாலும் அது திமுக வின் தலைவருக்கும் தளபதிக்குமான துதிப்பாடலாக இருக்கிறது.

6) சல்மாவின் கவிதைகளை அவர் மகன்கள் கேட்பதில்லை,என்கிறது ஆவணப்படம். ஆமாம் எந்தப் பெண் எழுத்தாளரின் எழுத்துகளை அவர்களின் பிள்ளைகள் கொண்டாடுகிறாரார்களாம்?

7) சல்மா தன் தோழியிடம் பேசும் காட்சி வரும். அக்காட்சியில் சல்மா புர்கா அணிந்து முகம் மறைத்து அடுப்பறையில் நின்று கொண்டு  பேசுவார். அந்தப் பெண்ணோ புடவையில் எல்லோரையும் போல. முகத்திலிருந்து திரை விலகமல் அடுக்களையில் தன் பால்யகால சிநேகிதியுடன் பேசும் காட்சியில் என்ன சொல்ல வருகிறார்கள்?

8)இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது. அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.

9) பிரபலமானதும் அரசியல் அதிகார வட்டத்திற்குள் வந்தப் பின்னரும் கணவர், குடும்பம் பற்றிய சல்மாவின் விமர்சனங்களை சம்மந்தப்பட்ட அவர்கள்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் சல்மாவுக்கு
நாம் உண்மையிலேயே பாராட்டு சொல்லத்தான் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *