வேரோடு களைதல்

~ லறீனா அப்துல் ஹக் ~
பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நான் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா? இந்தக் கட்டுரையில் வேரோடு களையப்பட வேண்டிய அவ்வாறான ஒரு மாபெரும் சமூகத் தீமை குறித்தே சுருக்கமாய் அலசப்போகிறோம்.  நிருபமா, தவ்ஃபீக் சுல்தானா. இந்த இரண்டு பெயர்களையும் இலகுவில் மறந்து விடுவது யாராலும் சாத்தியமில்லை என்றே நினைக்கின்றேன். யாரோ சில வெறியர்களின் பாலியல் வக்கிரங்களுக்குப் பலியான ஆயிரக் கணக்கான பெண்களுக்கான குறியீடாக அவர்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டார்கள்.

பாலியல் வல்லுறவு, இளம் பெண் மீது ஆஸிட் வீச்சு, சிறுமி கடத்திக் கொலை என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகளில் அன்றாடம் இடம்பெறும் அவலங்களைக் கண்டு அவ்வப்போது சில அனுதாப வார்த்தைகளை, சாபங்களை அள்ளி எறிந்துவிட்டோ கண்டனங்களைத் தெரிவித்துவிட்டோ கடந்துபோய்விடுகின்றோம்.

ஆனால், அத்தகைய சமூக அவலங்கள் தொடர்பில் அத்தோடு மட்டும் நம்முடைய கடமை முடிந்துவிடுமா? முழு உலகுக்கும் அருளாக அமைந்த ஒரு வாழ்க்கை நெறியைச் சுமந்தவர்கள் என்று உரிமைகோரும் ஒரு சமுதாயத்திற்கு இவைபோன்ற பிரச்சினைகளின்போது இதைவிட அதிகமான பங்களிப்புச் செய்ய முடியாதா? எப்படி இவற்றை ஒழித்துக்கட்டுவது? இந்தக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என நினைக்கின்றேன்.
இன்றைய சமூக அமைப்பில் பெண்களுக்கு மட்டுமென்ன மூன்று வயதோ அதற்குக் குறைந்த வயதோ உள்ள பெண்குழந்தைக்குக்கூட பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகிறது. வீட்டில், வெளியில், பணியிடங்களில், பள்ளிக்கூடத்தில் என எல்லா இடத்திலும் பெண்கள் துன்புறுத்தலுக்கோ கொடுமைக்கோ ஆளாகும் பயங்கரம் தொடர்கின்றது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, என்னென்ன காரணங்கள் இதன் பின்புலத்தில் உள்ளன, எப்படி இவற்றைத் தவிர்க்கலாம், தடுத்துநிறுத்தலாம் என்ற கேள்விகளுக்கு விடைதேடவேண்டிய கட்டாயத்திற்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆபாச சினிமா, இணைய வெளியெங்கும் பரவிக்கிடக்கும் ஆபாசத் தளங்கள், தெருவெங்கும் திறந்துவிடப்பட்டிருக்கும் மதுபானச்சாலைகள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. பெண்களை வெறுமனே போகப் பொருளாக அல்லது உடம்பை மையப்படுத்திய பாலியல் பண்டமாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல் பரவலாவதற்கும், மனிதனுக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிடுவதிலும் மேற்படிக் காரணங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன என்பதில் ஐயமில்லை. என்றாலும், இந்த வெளிக் காரணிகளுக்கு அப்பால் இதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஓர் அகக்காரணியும் உண்டு என்றே நான் கருதுகின்றேன். இன்னொரு வகையில் சொல்வதானால், மேற்சொன்ன காரணங்களின் தூண்டுதலுக்குள் சிக்கி, மிருகக்குணம் எனும் நோயினால் பீடிக்கப்படாமல் தற்காக்கக்கூடிய எதிர்ப்புச் சக்தி ஒவ்வொரு வீட்டிலும் சரிவர ஊட்டிவளர்க்கப்படாமையும் ஒரு காரணம்தான்  எனலாம். அது பற்றிச் சற்று நோக்குவோம்.        

வீடு என்பது வெறுமனே ஓர் இருப்பிடம் மட்டுமே அல்ல. ஒரு சமூகத்திற்குத் தேவையான தனிமனித ஆளுமைகளை உருவாக்கும் பள்ளிக்கூடமும்கூட. ஆகவே, அனாசாரங்களும் ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்துள்ள ஒரு சூழலில் வாழும் நாம், நமது வீட்டிலே அடுத்த தலைமுறை உருவாக்கத்தில் நம்முடைய பாரம்பரியமான அணுகுமுறைகளின் பொருத்தப்பாடு குறித்துச் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்ளூ புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள் பற்றியும் யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பன்னெடுங்காலமாகப் ‘பெண்ணின் உடல்’ ஆண்களுக்கு வியப்பூட்டும் ஒன்றாக, கிளர்ச்சி ஊட்டும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. கலை, இலக்கியங்களில் மட்டுமல்ல, நம்முடைய வீடுகளிலும் அதற்கான களம் உருவாகி இருக்கிறது என்பதை நம்மில் பலர் அறியாதவர்களாகவே இருக்கிறோம். எப்படி?
குறித்த பருவத்தில் ‘வயதுக்கு வரும்’ பெண் குழந்தை, வீட்டில் உள்ள ஆண் சகோதரர்களுக்கு ஒரு புதிராக மாறுகிறாள் அல்லது அவ்வாறு மாற்றப்படுகிறாள். மாதவிடாய்க் காலங்களில்கூட அவள் தொழுவதாக, நோன்பு நோற்பதாக நடிக்கவேண்டிய நிலையே பெரும்பாலும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. அது பற்றி வீட்டில் உள்ள ஆண்களிடம் வெளிப்படையாகப் பேசுவதோ உணர்த்துவதோ வெட்கம், இழிவு என்பதான மனப்பிரமைகளை நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். அதை நமது பண்பாடு, சம்பிரதாயம், மரபு என்ற பெயர்களால் நியாயப்படுத்த முனைகின்றோம். அவ்வாறே, இரண்டாவது பிரசவம் பற்றி மூத்த குழந்தையிடம் பேசும் போது, ‘பாப்பாவை ஆஸ்பத்திரியில் வாங்கிவந்தேன்’ என்று மழுப்புகின்றோம். ‘அப்படித்தான் செய்துவருகிறோம்ளூ அவற்றில் எல்லாம் என்ன தவறு?’ என்று நீங்கள் கேட்கலாம். முதல் கோணல் முற்றுங் கோணல் என்பதுபோல், அங்கே நாம்விடும் அசட்டையால் சில எதிர்மறை விளைவுகள் நேர்கின்றன என்பதை நாம் அறிவதில்லை.

ஆணைப்போலவே பெண்ணும் அல்லாஹ்வின் படைப்பு, பிரதிநிதி. ஒரு பெண் உடலளவில் எழுத்தில் வடிக்க இயலாத துன்பத்தை, அசௌகரியத்தை, வலியை மாதந்தோறும் எதிர்கொள்கிறாள்ளூ அந்த வலியையும் சுமந்தவளாகத்தான் தன் அன்றாடப் பணிகளை மிகுந்த சிரமத்தோடு செய்கிறாள்ளூ அவளது சிரமத்தைக் கருத்திற் கொண்டுதான் கருணைமிக்க அல்லாஹ் அக்காலத்தே அவளுக்குத் தொழுகையில் விலக்கும், நோன்பு நோற்பதில் தற்காலிக விலக்கும் அளித்துள்ளான் என்ற உண்மையை அவளது ஆண் சகோதரன் உணரும் வாய்ப்புக் கிடைக்கும் என்றால், தன்னுடைய தாய் இரத்தம் சிந்தி உயிரைப் பணயம் வைத்துத்தான் தன்னையும் மற்ற சகோதரர்களையும் பெற்றெடுத்தாள் என்பதைத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் சிறுவயதிலேயே ஒரு மகனுக்குக் கிடைக்கும் என்றால், ‘பெண்’ பற்றிய அந்த ஆணின் மனப்பதிவு எத்தகையதாக மாறக்கூடும்? பெண்ணின் உடல் சார்ந்த கிளர்ச்சிக்குப் பதிலாக மிகுந்த மதிப்புணர்வும் கனிவும் தோன்றுமா, இல்லையா? ஆம், அங்குதான் அல்லாஹ் தஆலா ஆண் – பெண் இருபாலாரின் மத்தியிலான சமநிலையைப் பேண வழியமைத்துத் தந்துள்ளான்ளூ ஒருவர் மற்றவருக்குத் துணையாகவும் அனுசரணையோடும் பரிவோடும் இருக்கவேண்டும் என்ற புரிதலை அதிகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.

மாதவிடாய், பிள்ளைப்பேறு என்பன பற்றியெல்லாம் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளிடம் பேசுவது சாத்தியமா, அதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா என்ற கேள்விகள் உங்கள் உள்ளங்களில் எழலாம். அதற்கான பதில் ‘ஆம்’ என்பதுதான். தொழுகை, நோன்பு முதலான வணக்க வழிபாடுகளை விதியாக்கும்போது ‘தம்யீஸ்’ எனப்படும் விபரமறியும் பருவம் பற்றி இஸ்லாம் கரிசனை கொள்வதை நாம் அறிவோம். இதனை 10 வயது என சில அறிஞர்கள் வரையறுக்கிறார்கள் எனப் படித்துள்ளேன். இதன்போது தொழுகை, நோன்பு என்பவற்றை முறிக்கக்கூடிய விடயங்கள் எவை, குளிப்பு கடமையாகும் சந்தர்ப்பங்கள் எவை என்பன பற்றியும் போதிக்கப்படும். அவை பற்றி அல்குர்ஆன் வசனங்களிலும், அவை தொடர்பான சட்ட விளக்கங்கள் ஹதீஸ் நூல்களிலும் ஒளிவு மறைவு இன்றிப் பதிவுசெய்யப்பட்டு இருப்பதையும் நாம் அறிவோம்.

ஆக, இஸ்லாம் இதன் மூலம் எதிர்பார்ப்பது என்ன? குறித்த பருவத்தில் ஆணோ பெண்ணோ தமது உடல் பற்றி அறிந்துகொள்வது இன்றியமையாதது. இதில், பெண்ணுடைய உடல், அதன் இயல்பு, அது எதிர்கொள்ளும் அசௌகரியம், வலி என்பன பற்றி ஓர் ஆணுக்கு அறிவூட்டப்படும்போது, பெண்ணுடல் பற்றி அவனுக்குள் உள்ள கவர்ச்சியும், கிளர்ச்சியும் மட்டுப்படும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.

வீட்டில் மாதம் தோறும் ஒரு குறித்த காலப்பகுதியில் தன் சகோதரி கட்டிலில் புரண்டு ஏன் அழுதுகொண்டிருக்கிறாள் என்ற கேள்வி அந்த வீட்டில் உள்ள ஆண்பிள்ளையின் மனதில் எழவேசெய்யும். பூசி மழுப்பி மறைக்காமல் கூறப்படும் ஓர் உண்மையான பதிலின் மூலம் அதற்கான விடையை அவன் தெரிந்துகொள்ளும்போது, அவனுக்குத் தன் சகோதரி மீதான பரிவும் பாசமும் அதிகரிக்கும். ஒரு பெண்ணின் உடலுக்குப் பின்னால் உள்ள அவஸ்தையைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவன் அடைகின்றான். அவ்வளவு காலம் வரை தன் அறியாமையால் ‘ஏய், பட்டப் பகலில் நேரம் காலம் தெரியாமல் கட்டிலில் சாய்ந்துகொண்டு என்ன பண்ணுறே? போ, போய் ஒரு டீ போட்டுட்டு வா’ என்று அதட்டிப் பழக்கப்பட்ட அண்ணன், கல்யாணம் கட்டிய பின்னர் மனைவியின் வழியே மாதவிடாயின் அவஸ்தை எப்படியானது என்பதைத் தெரிந்துகொண்ட பின் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வதை நாம் நம்முடைய அனுபவத்தில் கண்டிருப்போம். இது அவன் கண்டறிந்த உண்மை, அவனது மனநிலையில் ஏற்படுத்தும் சிறு சலனத்தின் வெளிப்பாடுதான், இல்லையா?

ஆகவே, ஆரம்பம் முதலே வீட்டில் வளரும் ஆண் – பெண் பிள்ளைகள் மத்தியில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றோரே, குறிப்பாகத் தாய்மாரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால், இதனை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்!’ என்ற பாணியில் அன்றி, மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயம் கவனத்தில் கொள்ள மறக்கக்கூடாது. இவ்வாறு தெளிவுபடுத்தும்போது, செயற்கையாக அன்றி, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கு ஏழு வயதாயிற்று. ஐந்து நேரமும் தொழவேண்டிய பருவம். அவனுக்குத் தொழுகையில் நான்தான் ‘இமாமத்’ செய்துவந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மகனை அழைத்து, இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு நீயே தனியாகத் தொழுதுகொள்’ என்றேன். ‘அது ஏன்? அப்போ நீங்க தொழ மாட்டீங்களா? தொழாட்டி அல்லாஹ்கிட்ட உங்களுக்குப் பாவம் வருமே?’ என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் அவனிடமிருந்து எழவே நான் வாயடைத்துப் போனேன். ‘எனக்குக் கொஞ்சம் சுகமில்லை மகன்’ என்று சமாளிக்கப் பார்த்தேன். ‘அப்படி இருந்தால் படுத்துக் கொண்டோ உட்கார்ந்து கொண்டோ தொழுங்களேன், உம்மா’ என்று தீர்வோடு நிற்கிறான், மகன். சரி, ஆவது ஆகட்டும் என்று துணிந்து, அவனை அருகில் அழைத்து உட்காரச் சொன்னேன். பின்னர், அவனுக்குப் புரியும் வகையில் பெண்ணின் உடல் அமைப்பு, மாதவிடாய் பற்றியெல்லாம் மிகவும் எளிமையாக விளங்கப்படுத்தினேன். ஏற்கெனவே அவன் அறிவியல் பாடத்தில் விலங்குகளினதும், மனிதனினதும் இனப்பெருக்கம், விலங்குகளில் பாலூட்டிகள் பற்றியெல்லாம் சிறிதளவு படித்தும் இருந்தமையால் நான் சொல்வதை அவனால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது, அல்ஹம்துலில்லாஹ்!

இந்தச் சம்பவம் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. பள்ளிக்கூட இஸ்லாம் பாடப் புத்தகத்தில் குளிப்பு பற்றிய பாடம் இருப்பது என் நினைவுக்கு வந்தது. இஸ்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு கூறுமானால் அதில் கட்டாயம் ஆழ்ந்த பயன் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. தொடர்ச்சியான சிந்தனையின் அடியாய், ‘பெண்’ பற்றிய ஆண் பிள்ளைகளின் அதீத கற்பனையும் கிளர்ச்சி உணர்வும் மட்டுப்பட்டு பரிவும் புரிதலும் மேம்படவும் பெண்ணுடல் பற்றிய இந்த அழகிய அறிவூட்டல் உதவும் என்ற சிந்தனை வலுப்பட்டது. ‘பெண் எனும் சக உயிரி தன்னளவில் மிகுந்த அவஸ்தைகளோடு வாழ்கிறாள்ளூ அவள் தன் சிரமங்களோடும் அசௌகரியங்களோடும்கூட தன் பணிகளை ஆற்றுகிறாள்ளூ உயிரையே பணயம் வைத்து, இரத்தம் சிந்தி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உன்னதமான பணியைச் செய்கிறாள்; அவள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவள்’ என்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் உள்ளங்களில் சிறுவயது முதலே அழுத்தமாகப் பதிக்கப்பெறுமானால், பெண்ணை உடல் சார்ந்து வக்கிரமாய்ப் பார்க்கும் போக்கு பெரிதும் தவிர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்படியான புரிந்துணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்தப் பெண்ணையும் போகப் பொருளாகவோ பாலியல் பண்டமாகவோ வெறித்துப் பார்க்கமாட்டார்கள்.மாறாக, மிகுந்த கண்ணியத்தோடும் கனிவோடுமே பார்ப்பார்கள்.

பெண்களும் பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் இக்கொடிய பிரச்சினையைத் தீர்க்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கலாம். அவைபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தெரிவுசெய்து ஆய்வுகள் நடத்தினால், நல்லதொரு குடும்பச் சூழல் அமையாதவர்கள், குடும்ப அமைப்பில் முறையாகக் கிடைக்கக்கூடிய அன்போ அரவணைப்போ சரிவரக் கிடைக்காதவர்கள், சிறுவயதில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர்கள் அதிகப்பேர் இருப்பார்கள். அவர்களுக்குத் தேவை உளவளச் சிகிச்சையும் உரிய பராமரிப்புமே என்பதை உளவள ஆலோசகர்கள் (உழரஸீஉநடடழசள) பரிந்துரைப்பார்கள். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளின் அடிப்படை குடும்ப அமைப்பின் முறையான நெறிப்படுத்தலில் ஏற்படும் குறைபாடுகளில் இருந்தே முளைவிடுகின்றது என்ற நிலையில், அவற்றை நீக்குவது குறித்து நாம் தீர ஆராயவேண்டியுள்ளது. அடிப்படையான மனநிலை மாற்றம் என்பது அதில் முதன்மையானது.

ஆகவே, சகோதரிகளே! நம் வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளின் உள்ளத் தரையினில் கள்ளிச் செடிகள் வளர்ந்துவிடாமல் வேரோடு களைவோம்ள பண்பையும் பரிவையும் புரிந்துணர்வையும் ஊட்டி வளர்ப்போம், இன்ஷா அல்லாஹ்!
 
நன்றி: விடியல் வெள்ளி (ஜனவரி 2014)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *