குருதி வடியும் வியர்வை கடைகள்!

 பாரதி தம்பி
‘‘அம்மா, அப்பா௪ என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி! அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?’’ தன் மீது இடிந்து விழுந்து கிடக்கும் எட்டு மாடி கட்டட குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் தருணத்தில் 15 வயது சிறுமி, துண்டுச் சீட்டில் எழுதி வைத்த குறிப்பு இது.

அதை எழுதும்போது அவள் மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? வலியால், வேதனையால் எப்படித் துடித்திருப்பாள்? அந்த சிறுமி மட்டுமல்ல௪ உழைப்பதற்கு உடம்பைத் தவிர வேறு எதுவுமற்ற ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களை துல்லத் துடிக்க கொலை செய்திருக்கிறது பங்களாதேஷ் ஆடை நிறுவன ‘விபத்து’!

ஏப்ரல் 24-ம் தேதி (2013) நொறுங்கி விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் ஆயிரத்துக்கும் மேல். தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியான சாவர், மாபெரும் மனித சுடுகாடாக காட்சியளிக்கிறது.

விபத்து நடந்த ராணா பிளாசா மொத்தம் 8 மாடிகளைக் கொண்டது. இதில் ஐந்து ஆயத்த ஆடை நிறுவனங்கள் இயங்கி வந்தன. அனைத்திலும் சேர்த்து 3,500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களின் சரிபாதி பேர் இன்று உயிருடன் இல்லை. ஆனால் பங்களாதேஷுக்கு இத்தகைய விபத்துகள் புதியவை அல்ல.

2005-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் என்ற ஜவுளி தொழிற்சாலை இடிந்துவிழுந்து 73 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 2006-ல் மற்றொரு தொழிற்சாலை இடிந்துவிழுந்து 18 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நவம்பரில் தஸ்ரின் ஆடை ஏற்றுமதி நிறுவனம் தீப்பற்றிக்கொண்டதில் 112 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 1990-களில் இருந்து கணக்கிட்டால் இடிந்து விழுந்தும், தீப்பற்றியும் இறந்துபோன தொழிலாளர்களின் எண்ணிக்கை 1500-க்கும் அதிகம். ஆனால் எதற்கும் பங்களாதேஷ் அரசு கவலைப்படவில்லை.

தன் சொந்த நாட்டு குடிமக்கள் ஆயிரம் பேர் இறந்த நிலையிலும் கூட, ‘‘இது விபத்து. உலகில் எங்கு, எப்படி விபத்து நடக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது. தொழிலாளர்கள் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இருக்கும் வேலையும் பறிபோகும்’’ என்று பச்சையாக மிரட்டுகிறார் பிரதமர் ஷேக் ஹசினா பேகம்.

ஒரு பிரதமர் ஏன் இப்படி பேச வேண்டும்? ஏனெனில் ஆடை ஏற்றுமதி மூலம் பங்களாதேஷுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை ஒப்பிடும்போது செத்து விழும் ஏழைத் தொழிலாளர்களின் உயிர் அவருக்குப் புறக்கணிக்கத் தக்கதாகத் தோன்றலாம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்களுக்கான ஆடைகள், பங்களாதேஷில் இருந்துதான் தயாராகின்றன. ஜவுளி ஏற்றுமதியில் உலக அளவில் சீனா, இத்தாலிக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் இருந்த பங்களாதேஷ் இப்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. டாக்காவை சுற்றிலும் சுமார் 4,500 ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்குகின்றன. எங்கு திரும்பினாலும் கார்மென்ட் தொழிற்சாலைதான்.
இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 லட்சத்துக்கும் மேல். இவற்றில் 90 சதவிகிதம் பேர் பெண்கள்.

12 மணி நேரத்துக்கும் அதிகமான வேலை, இருட்டு அறையில் நாள் முழுக்க தையல் எந்திரங்களின் சத்தம், இடைவிடாத உழைப்பு௪ இதற்கான ஊதியம், மாதத்திற்கு வெறும் 2,000 ரூபாய். இதுவும் நான்கு ஆண்டு கால தொழிலாளர் போராட்டத்துகுக் பிறகு 2010-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகைதான். சீனா, கம்போடியா, இந்தியாவை விட மிகக் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதால், உலகின் முன்னணி ‘பிராண்டட்’ ஆடை நிறுவனங்கள் பங்களாதேஷை நோக்கி படையெடுக்கின்றன.

இந்த ஏழைத் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சி தயாரிக்கப்பட்ட ஆடைகள், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் ஷோகேஷ்களில் வைத்து டாலர்களில் விற்கப்படுகின்றன. ராக்கெட் முதல் அணுகுண்டு வரை எல்லாவற்றையும் தன் நாட்டிலேயே தயாரித்துக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள், இதற்கு மட்டும் ஏழை நாடுகளுக்கு வருவது ஏன்? ஏனெனில் இங்குதான் தொழிலாளர்களின் உழைப்பை மிகக் குறைந்த கூலிக்கு சுரண்ட முடியும். இதற்கு உள்ளூர் முதலாளிகளும், அரசியல்வாதிகளும் கங்காணி வேலைப் பார்க்கிறார்கள்.

பங்களாதேஷின் 10 சதவிகித ஆடை நிறுவனங்கள் நேரடியாக அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவை. 50 சதவிகித நிறுவனங்கள் ஏதோ ஒரு விதத்தில் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. தற்போது இடிந்து விழுந்த ராணா பிளாசாவின் முதலாளி முகமது சகேல் ராணா, ஆளும்கட்சியான அவாமி லீக்கின் இளைஞர் அணித் தலைவர்.இது பங்களாதேஷின் நிலைமை மட்டுமல்ல௪ உலகம் முழுவதும் இத்தகைய கொடூர உழைப்புச் சுரண்டல் நீடிக்கிறது. வளர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும், குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் நாடுகளை நோக்கி தங்கள் தொழிற்சாலைகளை மாற்றுகின்றன. ‘அந்நியச் செலாவணி, வேலைவாய்ப்பு’ என பில்-டப் கொடுத்து இதை வரவேற்கும் அந்தந்த நாட்டு அரசுகள், ஏராளமான வரிச் சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. சொந்த நாட்டு மக்கள் மின்சாரம் இல்லாமல் வாடி வதங்கினாலும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் திறக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் இத்தகையதுதான். ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும், பங்களாதேஷ் ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இங்கும் 12 மணி நேர வேலையும், 7 ஆயிரம் 8 ஆயிரம் சம்பளமும்தான் தொழிலாளர்களுக்கு மிச்சம்.

OLYMPUS DIGITAL CAMERA
ஆங்கிலத்தில் sweatshop  என்பார்கள். ‘வியர்வை கடைகள்’ என அழைக்கப்படும் இவை உலகளாவிய அளவில் வியாப்பத்திருக்கின்றன. பத்துக்குப் பத்து அறையில் நெருக்கமாக அமர்ந்து நாள் முழுக்க ஒரே விதமான வேலையை செய்துகொண்டே இருக்க வேண்டும். அருகிலேயே அதேபோன்ற ஒரு பத்துக்குப் பத்து அறையில் நெருக்கியடித்து தங்கிக்கொள்ள வேண்டும். காலை ஐந்து மணிக்கு குளித்து, சாப்பிட்டுவிட்டு இயந்திரத்தில் அமர்ந்தால் நாள் முழுக்க உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். ரெடிமேட் ஆடைகள், ஷூ, பொம்மைகள், ஹேண்ட்பேக், சாக்லேட்கள் என இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவை. நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஐ&பாடு மற்றும் ஐ-போன்கள் சீனாவின் வியர்வைக் கடைகளில் இருந்துதான் தயாராகிறது. புகழ்பெற்ற நைக், அடிட்டாஸ் ஷூக்கள் ஆப்பிரிக்காவின் வியர்வைக் கடைகளில் தொழிலாளர்கள் உருவாக்குபவை.

இத்தகைய அடிமைக் கடைகள் ஏழை நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளிலும்தான் இருக்கும் என நினைத்துவிடாதீர்கள். 2000&ம் ஆண்டு கணக்கின் படி அமெரிக்கா முழுவதும் மொத்தம் 11,000 வியர்வைக் கடைகள் இருக்கின்றன. பளபளக்கும் நியூயார்க், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தின் இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் மனிதர்கள் உயிர் வடிய உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தாய்லாந்து, கம்போடியா போன்ற வறிய ஆசிய நாடுகளில் இருந்து பாஸ்போர்ட், விசா இல்லாமல் கள்ளத்தனமாக அழைத்துவரப்பட்டவர்கள்.

‘‘பளபளக்கும் தொழிற்சாலையின் புகைப்படத்தைக் காட்டினார்கள். வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை எனவும், 2400 டாலர்கள் சம்பளம் எனவும் சொன்னார்கள். ஆனால் வந்தபிறகு எல்லாமே தலைகீழாக இருக்கிறது. எங்கள் நாட்டில் சம்பாதித்ததில் பாதியைதான் சம்பாதிக்கிறோம். அதற்கு நாள் முழுக்க அடிமைகளைப் போல உழைக்க வேண்டியிருக்கிறது. பாஸ்போர்ட் இல்லை; விசா இல்லை; இந்த நரகத்தில் இருந்து மீண்டு செல்ல வழி தெரியவில்லை. எங்கள் மரணம்தான் எங்களை விடுவிக்கும்’’ என்று சொல்கிறார் நியூயார்க் வியர்வை கடை ஒன்றில் பணிபுரியும் தாய்லாந்து பெண்.

தன் நாட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு நாய் புகுந்தால் கூட கண்டுபிடித்துவிடும் அமெரிக்கா, இந்தப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கள்ளத்தனமாக நுழைவதை தெரிந்தே அனுமதித்துள்ளது. அவர்கள் சொந்த நாட்டுக்குப் போக வேண்டும் என நினைத்தால் பாஸ்போர்ட், விசா இல்லை என்ற எண்ணமே முடக்கிப் போட்டுவிடும். வாழ்நாள் முழுக்க இந்த வியர்வை கடைகளில் உழைத்து சாவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. படித்த பணக்கார ஐ.டி. ஊழியர்களை முறைப்படி விசா கொடுத்து மரியாதையுடன் அழைத்துக்கொள்ளும் அதே அமெரிக்காதான் படிக்காத ஏழைத் தொழிலாளர்களை கள்ளத்தனமாக உள்ளே இழுத்துக்கொள்கிறது. சிறார் தொழிலாளர்களுக்கு எதிராக ஆவேசமாக பேசி புரட்சி புராஜெட்க் பிடிக்கும் எந்த என்.ஜி.ஓ.வும், வியர்வைக் கடைகள் மூலம் சின்னஞ்சிறுவர்களின், சிறுமிகளின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை லாபமீட்டும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவது இல்லை.

ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் தாதுவளம், காடுவளம், நீர்வளம் ஆகியவற்றை சூறையாடும் மேற்கத்திய நிறுவனங்கள் உழைப்பு வளத்தை வியர்வைக் கடைகள் மூலம் சுரண்டுகின்றன. உள்ளூர் முதலாளிகளையும், லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் இந்த தொழிலை நம்பியே இருக்கும்படியான சூழலை உருவாக்கிவிட்டு, பிறகு ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசினாலும் ‘ஒப்பந்தம் ரத்தாகும்’ என்று மிரட்டுகின்றனர்.

அன்று ஆப்பிரிக்க கறுப்பின மக்களை அடிமைகளைப் போல உழைப்பதற்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார்கள். பர்மாவில் சயாம் ரயில் பாதை அமைக்கவும், இலங்கை தேயிலைத் தோட்டங்களில் உழைக்கவும், தென் ஆப்பிரிக்க கரும்புத் தோட்டங்களை செப்பனிடவும் தமிழர்களை பிடித்துச் சென்றார்கள். வரலாறு இதை ‘கொத்தடிமை முறை’ என்கிறது. எனில், அற்பக் கூலிக்கு உயிரை உறிஞ்சி எடுக்கும் இந்த வியர்வைக் கடைகளையும் அப்படித்தான் அழைக்க வேண்டும். அதற்கு நாம் ஒரு விஷயத்தை உணர வேண்டும்.

நாம் அணிந்திருக்கும் பிராண்டட் ஆடைகளில் உலகத் தொழிலாளர்களின் உதிரம் படிந்திருக்கிறது!

நன்றி: ஆனந்த விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *