சுனிலா அபேசேகராவின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – சுவிஸ் தமிழர் பேரவை

தகவல் சண் தவராஜா

su-0

மனித உரிமைச் செலாளர் சுனிலா அபேசேகர அவர்களின் இழப்பு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒன்று என லொசான் மாநகரசபையின் உறுப்பினரும், சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளரும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சிறி லங்கா மனித உரிமைச் செயற்பாட்டாளரும் ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக இடையறாது குரல் கொடுத்து வந்தவருமாகிய சுனிலா அபேசேகர எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். தமக்கு எதிரான சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் யுத்தம் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறி லங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகவும் நீதி வேண்டித் தமிழ் மக்கள் இராஜதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி வருகின்ற முக்கியமான ஒரு காலகட்டத்தில் அவரது மரணம் சம்பவித்துள்ளது. தமிழர் தரப்பு நியாயங்களை சிங்களச் சகோதரர்களுக்கு விளக்குவதன் ஊடாக அவர்களின் ஆதரவைப் பெற்று தமது உரிமைகளை வென்றெடுப்பதில் இணைப்புப் பாலமாகச் செயற்படும் சுனிலா போன்றோரின் இழப்பு இன்றைய தருணத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி நிற்கிறது.

நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்த அவருக்கு மரணம் துன்பத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்துள்ள போதிலும்இ ஈழத் தமிழ் மக்களுக்கு அவரது தேவை மிகவும் அதிகமாகத் உள்ள இன்றைய காலகட்டத்தில் அவரது மரணம் இரட்டிப்பு வேதனையாக அமைந்துள்ளது.பெண்களின் உரிமைகளுக்காகவும், பொதுவில் மனித உரிமைகளுக்காகவும் பல தசாப்தங்களாகப் போராடி வந்த ஒருவர் அவர். உள்நாட்டில் மாத்திரமன்றி, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகப் பொதுமன்றங்களிலும் ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் காத்திரமாக ஒலித்த குரல் அவருக்குச் சொந்தமானது.

சுவிஸ் தமிழர் பேரவை உட்பட பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தொடர்களிலே  பங்கு கொண்டவர் அவர். நீதி வேண்டி நிற்கும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவரது இழப்பு அளப்பரியது. ஈடு செய்ய முடியாதது. அவரது மரணத்தை இட்டு அஞ்சலி செலுத்தும் இலட்சோப லட்சம் மக்களுடன் சுவிஸ் தமிழர் பேரவையும் இணைந்து கொள்கின்றது. ஈழத் தமிழ் மக்கள் சுய நிர்ணய அடிப்படையுடன் கூடிய தீர்வொன்றைப் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்ற அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதில் நாம் தொடர்ந்தும் செயற்படுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும் – எனத் தனது அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *