மெட்ராஸ் கஃபே …

புதியமாதவி -மும்பை

ராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி ‘குற்றப்பத்திரிகை” என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா படங்களையும் விட மேசமாக இருந்தது.  அந்த திரைப்படத்தில் வந்த ஒரே ஒரு வசனத்தில் ராஜிவ்காந்தியின் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறை அதிகாரியை அரசியல் வாதி குற்றம் சுமத்தும் காட்சியில்
அந்த அதிகாரி அரசியல்வாதியைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்பார்,

நீங்கள் யாரும் குண்டு வெடிக்கும் போது அருகில் இல்லையே, யாரும் காயப்படவில்லையே அது எப்படி? என்று

இந்த ஒரு வசனம் தவிர இத்திரைப்படத்தில்  பாராட்டும் அளவுக்கு எதுவுமில்லை. ஆனால் இத்திரைப்படம் தணிக்கையாளரின் பெட்டியில் பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல. சற்றொப்ப 15 வருடங்கள் சென்சார் போர்ட் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதி மறுத்தது. அதன் பின் ஏகப்பட்ட எடிட்டிங் நடந்திருக்கும். அப்படி ஒரு மசாலா படத்தை வெளியிட  அனுமதி மறுத்த இந்திய தணிக்கை
ஆணையம் தற்போது வெளிவந்திருக்கும் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு எவ்விதமான இடையூறுகளுமின்றி அனுமதி கொடுத்தது எப்படி? ஏன்?

இந்தக் கேள்வி தான் மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம் இந்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்ப்பவர்களுக்கு யோசிக்க வைக்கிறது.

தமிழ் ஈழம் வரலாற்றையும் போராட்டங்களையும் அறியாத குறிப்பாக தமிழரல்லாத  பிற மாநிலத்து இளைஞர்களிடம் இத்திரைப்படம் உறுதியாக ஒரு இந்திய வல்லரசின் பிம்பத்தை நிலைநாட்டுகிறது.

அத்துடன் ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்க உளவுத்துறை உலக நாடுகளுக்கே சட்டாம்பிள்ளையாக இருப்பதைக் காட்டி எல்லாம் அறிந்த பரம்பொருள் போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருப்பார்கள். அதே பாணியில் மெட்ராஸ் கபேயும் இந்திய  “ரா’ உளவு அமைப்பைக் காட்ட முனைந்திருக்கிறது. ஓரளவு திரைப்படத்தின் மிகச்சிறந்த காட்சி அமைப்புகளின் ஊடாக அதை நிலைநாட்டியும் இருக்கிறது.  அதாவது இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு ராஜீவ்காந்தியின் அந்தக் கோர முடிவு குறித்து ஏற்கனவே தெரியுமாம்! ஒரு மயிரிழையில் அவர்கள் பிந்திவிடுகிறார்களாம்! அவ்வளவு திறமையான அமைப்பாம் இந்தியாவின் “ரா” இந்திய ரா குறித்து இம்மாதிரியான ஒரு எண்ணத்தை இந்திய இளைஞர்களிடம் மட்டுமல்ல, உலகமெங்கும் காட்டியாக வேண்டிய ஏதோ ஒரு நிர்பந்தம் இந்தியாவின் ‘ரா’வுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

அது என்ன நிர்பந்தம் என்பதை ‘பஞ்சாபி சமோசா’ என்று  எதிர்காலத்தில் யாராவது எழுதுவார்கள் அல்லது திரைப்படமாகவும் எடுக்கலாம். மெட்ராஸ் கபே ஃபில்டர் காபியை விட  வரப்போகும் ‘பஞ்சாபி சமோசா”
ரொம்பவே சூடாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *