பெண்ணுலகின் பரிமாணங்கள்

அமரதாஸ்

இன்றைய உலகில், நல்ல பயன் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான, சீரியஸான கலைச்சாதனமாக, சினிமாவைக் கையாளும் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இலங்கையின் சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே செயற்படுகிறார்.இவர் ஆறாவதாக இயக்கிய ‘ஆகாச குசும்’ என்ற சிங்களத் திரைப்படமானது, ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்து, தற்போது தனிமைப்பட்ட நிலையில் சீவிக்கும் ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்வை, அவளது மனோவுலகின் பரிமாணங்களை, உள்முகப் பயணத்தை, குற்ற உணர்வின் தாற்பரியங்களை மையக் கதையாடலாகக் கொண்டு, பல்வேறு தளங்களில் விரிவடைகிறது.

நாம் வாழும் உலகமயமாக்கச் சூழலின் மாயச் சுழற்சிக்குட்பட்டு, நம் கவனப் பரப்பிற்குட்படத்தவறும் மனிதர்களை, அவர்களின் வாழ்க்கை முறைகளை, பாலியல் நடத்தைகளை புரிந்து கொள்ளவும் பகுப்பாய்வு செய்யவும் கோருகிறது.

‘ஆகாச குசும்’ என்பது  வானத்து நட்சத்திரங்களைக் குறிக்கிறது. (தமிழ் மொழி பெயர்ப்பில் ஆகாயப் பூக்கள்) பிரபலமான நடிகர்களை நட்சத்திரங்கள் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. வானத்து நட்சத்திரங்களின் குறிப்பிட்ட கால ஜொலிப்பை, அவற்றின் நிலையற்ற தோற்றப்பாட்டினை உருவகப்படுத்தும் விதத்தில், உள்ளடக்கத்தினை அல்லது பேசு பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்  ‘ஆகாச குசும்’ என்ற இத்திரைப்படத்தின் தலைப்பு வசீகரமானது.

இத் திரைப்படத்தின் திரைக்கதையானது மிகவும் எளிமையாகவும் அதே நேரம் ஆழமான பரிமாணங்களுடனும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவுகளையும், புதிர்களும் அந்தரங்கச் சந்துகளும் நிறைந்த பெண்ணுலகின் பரிமாணங்களையும் பரிசீலிக்கும் இத் திரைப்படத்தின் மையக் கதாபாத்திரமான சந்தியாராணி, முன் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவள். வயோதிகம் நெருங்கி, திரையுலகச் சூழலில் இருந்து அந்நியமாகி வாழ்கிறவள். தற்காலத்தில் பிரபலமாகவுள்ள நடிகர்களின் (இருபாலாரும்) அந்தரங்க உறவைத் தொடரும் இடமாக சந்தியாராணியின் வீடு அமைந்திருக்கிறது. அவர்களுக்காக ஒரு அறையை ஒதுக்கித்தந்து, அதன் மூலம் கிடைக்கும் வாடகைப் பணத்திலும், சிறு தொழில் ஒன்றின் மூலம் (‘பற்றிஸ்’ தயாரித்து விற்றல்) கிடைக்கும் வருமானத்திலும் தன் வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். அதே நேரம் தன்னைப் பொருளாதார ரீதியாக நம்பியிருக்கக்கூடிய தங்கையான மல்லிகாவிற்கு உதவுபவளாகவும் இருக்கிறாள்.

 இந்த நிலையில் தற்கால நடிகை சாலிகா, தனது காதலனை அந்தரங்கமாக சந்திக்குமிடமாக சந்திராணியின் வீடு அமைகிறது. சாலிகாவின் கணவனுக்கு இந்த ரகசிய உறவு தெரிந்து, அங்கு அவன் பொலிஸாரை அழைத்து வந்து விடுகிறான். அங்கு அறையினுள் தங்கியிருக்கும் சாலிகாவிற்கும் அவளது காதலனுக்கும் அவர்களுக்குத் துணைபோன சந்தியாராணிக்கும் நெருக்கடி நிலைமை ஏற்படுகிறது. சாலிகா, தனது வீட்டிலிருந்து வந்து சந்தியாராணியுடன் தங்கிவிடுகிறாள். அப்புறம் காதலனால் புறக்கணிக்கப்படுகிறாள். பிரியா, தனது நெருங்கிய தோழியான பன்டியுடன் இரவு நடன விடுதியில் பணிபுரிபவள். ஒரு முறை அங்கு பிரச்சினையேற்பட்டு அவள் பொலிஸாரின் விசாரணைக்குட்பட நேர்கிறது. எதிர்பாராத விதமாக அவள் தன்னை சந்தியாராணியின் மகள் என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். பொலிஸார் சந்தியாராணியுடன் தொடர்பு கொள்கையில் இதனை சந்தியாராணி மறுதலிக்கிறாள். அவளுக்குத் திருமணமாகவில்லை என்பதான விம்பத்தையே அவளது தகப்பனும் அவளும் ஏற்படுத்தி வெளியுலகில் நிலை நிறுத்தியிருக்கிறார்கள். உண்மையில் சந்தியாராணி மிக இளவயதில் திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானவள். நடிகையாவதற்காகவே கணவன் மற்றும் குழந்தையிடமிருந்து பிரிய நேர்ந்திருக்கிறது.

தன் உண்மை மகளைப் பற்றிய அறிமுகமும், அவளைப்பற்றிய எண்ணங்களும் சந்தியாராணியின் இருப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நிலை குலைந்து குற்ற உணர்வில் தவிக்கும் அவளுக்கான உளவளத் துணையாக சாலிகா இருக்கிறாள். வாழ்வில் பாதிப்பிற்குள்ளான புறக்கணிக்கப்பட்ட சந்தியாராணியும் சாலிகாவும் பரஸ்பரத்துணையாகி விடுகிறார்கள்.

தன் மகளைத் தேடியலைகிறாள் சந்தியாராணி. தன்னுறவை மறுதலித்த தாய்மீது வெறுப்பை வெளிப்படுத்தும் பிரியா, தன் தோழியான பன்டியுடன் விலகியோடுகிறாள். கர்ப்பமடைந்த நிலையில் இரவு நடன விடுதியிலிருந்து விலகி, ஒதுங்கி வாழ முயலும் அவளுக்கு எயிட்ஸ் தொற்று இருப்பது தெரிய வருகிறது.

முரண்பட்டுவிட்ட தாய் – மகள் உறவின் பின்னிருக்கும் தவிப்பும், உள்ளார்ந்த நேசிப்பும் இத் திரைப்படத்தின் பிற்பகுதியில் நிறைந்திருக்கிறது. பிறந்திருக்கும் தன் பேத்தியைக் கையிலேந்தி ஷஇது என்னை மன்னிக்குமா?| என்றும் ஷஅதுக்கு நான் ரொம்ப நாள் வாழவேண்டியிருக்கும்| என்றும்  சந்தியாராணி அங்கலாய்ப்பதுடன் அவளது அகவயமான மற்றும் புறவயமான பயணம் ஒரு பிரதான சந்தியை அடைகிறது.

அப்புறம், பிரியா தன் தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதங்களின் காட்சிப் படுத்தலோடு அவற்றை எடுத்துரைக்கும் அவளது தீர்க்கமான பின்னணிக்குரல் இழைய, ஆகாச குசும் திரைப்படம் நிறைவடைகிறது.

ஒரு ஆணாக இருக்கும் இயக்குநர் பிரசன்ன, பெண்களின் மனோவுலகை இவ்வளவு நுணுக்கமாகவும் ஒத்துணர்வுடனும் (நுஅpயவால) அணுகியிருக்கும் விதம் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பெண்ணுலகை அவர் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்து தரிசிக்க விழைகிறார். நம்மிலும் அத்தகைய தரிசனம் நிகழ நம்மை வழிப்படுத்துகிறார். இவை பற்றியும், பிரசன்னவின் படைப்புலகில் இழைந்திருக்கும் பெண் பாத்திரங்களின் முக்கியத்துவம் குறித்தும் நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டபோது, பிரசன்ன பெண்மைய சினிமாக்காரரா என்று கேட்டார்.

பிரசன்னவை, பொதுவாகவே படைப்பாளியை அப்படியொரு வட்டத்தினுள் அடக்கிவிட முடியாது, கூடாது. ஒருவரது படைப்புலகினுள் சில விடயங்கள் தூக்கலாக இருக்கக்கூடும். அது இயல்பானதே. தூக்கலான விடயங்களைச் சார்ந்து படைப்பாளியை வரையறுத்துவிடுவது ஆரோக்கியமானதல்ல.

தங்கள் படைப்புகளில் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிற, உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்களான இங்மர் பெர்க்மன், சத்யஜித் ரே போன்றோரை பிரசன்ன, ஞாபகப்படுத்துகிறார். அவர் தனது படைப்புகளில் நெருக்கடிக்குள்ளாகும் கதா பாத்திரங்களது மனவியல் சார்ந்த நுட்பமான பதிவுகளை முன் வைத்து, அவர்கள் மீதான அத்தகையவர்கள் மீதான கரிசனையினை, புரிந்துணர்வினை, ஒத்துணர்வினை பார்வையாளர் மட்டத்தில் நிகழ்த்தி விடுகிறார்.

பிரசன்னவின் ‘புரஹந்த களுவர’ என்ற உலகப் புகழ்பெற்ற திரைப்படத்தின் மையப்பாத்திரமாக வயோதிகமடைந்த வன்னிஹாமி இடம் பெறுகிறார். தனிமையை உணரும் தந்தையாக அவரது பாத்திரவார்ப்பு ஆழமானது, இயல்பானது, எளிமையானது. அத் திரைப்படத்திலும் ஏனையவற்றிலும் வெளிப்படுகிற, பிரசன்னவின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் பார்வையும் கதையாடலும் மிகுந்த கவனிப்பிற்குரியவை.

நேர்காணல் வடிவிலான வெளியீட்டிற்காக இயக்குநர் பிரசன்னவுடன் என்னால் நிகழ்த்தப்பட்ட, இன்னமும் எழுத்து வடிவில் வெளியிடப்படாத கலந்துரையாடலின் போது இத்தகைய விடயங்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன.

ஆகாச குசும் திரைப்படத்தினூடாக பெண்ணுலகினைத் திரைவிரிக்கும் பாங்கினாலும் நடிகர்களைக் கையாண்டிருக்கும் விதத்தினாலும் பிரசன்ன, உலகின் சிறந்த இயக்குநர்களின் வரிசையில் மிளிர்கிறார்.

2008 இல் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சந்தியாராணியாக நடித்த மாலினி பொன்சேகாவிற்கு ‘வெள்ளி மயில்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2009 இல் இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச ‘லெவாந்தே’ திரைப்பட விழாவில் மாலினி பொன்சேகாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இத் திரைப்படமானது 2009 இல் ஸ்பெயினில் நடைபெற்ற கிரணாடா சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான ஷநெட்பெக்| விருதும், 2009 இல் பிரெஞ்சு நாட்டு ‘வெசூல்;’ சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரியின் கௌரவிப்பும் பெற்றுள்ளது. மேலும், உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் இத் திரைப்படம் பங்கேற்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

சந்தியாராணியாக நடித்திருக்கும் மாலினி பொன்சேகா மட்டுமல்ல, பிரியாவாக வரும் நிம்மி ஹரஸ்கம, சாலிகாவாக வரும் தில்ஹானி ஏக்கநாயக்க, பன்டியாக வரும் சமனலி பொன்சேகா ஆகியோரும் தமது சிறப்பான நடிப்பினால்  இத் திரைப்படத்தினை வளப்படுத்தியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. நாடகம், சினிமா ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழக விரவுரையாளரும், கலைஞருமான எனது நெருங்கிய நண்பர் ஒருவர், இத் திரைப்படத்தில் நடிப்பு சார்ந்த போதாமைகளைச் சில இடங்களில்  உணரமுடிவதாக நேரில் என்னிடம் தெரிவித்திருந்தார். இவ் விடயம் பரிசீலனைக்குரியதே.

சினிமா என்பது காட்சிக்கலை என்ற அடிப்படையில் (சினிமா காண்பதற்கு மட்டுமானதல்ல) பிரசன்னவின் காட்சியமைப்புக்கள் தீவிரமானவை, சுவாரஸ்யமானவை, ஆழ்ந்த கலை அனுபவத்தைத் தருபவை.

உதாரணம் ஒன்று

சாலிகா தனது ரகசியக் காதலனும், நடிகனுமான உதித்துடனான உடலுறவின் பின்னர் படுக்கையிலிருந்த நிலையில் தன் மீதான காதல் உண்மையானதா என்று கேட்கிறாள். அவனோ அவள் பக்கம் திரும்பி சிகரெட் புகை வளையங்களை ஊதுகிறான். சாலிகா அவற்றைப் பிடிக்க முயற்சிக்கிறாள்.

உதாரணம் இரண்டு

இரவு நடன விடுதியின் உள்ளே தன்னைத் தேடிவரும் தாயை வெறுப்பேற்றும் நோக்கிலும், அவளைப் புறக்கணிக்கும் வகையிலும் அருகிலிருக்கும் ஆணை, திடீரென இறுக்கி முத்தமிடுகிறாள் பிரியா.

உதாரணம் மூன்று

தன் மகளின் இருப்பை அறிந்த பிறகு, சாலிகா முன்னிலையில் தேநீர் தயாரிக்க முற்படுகையில் சந்தியாராணி விம்மி உடைகிறாள். அந்த இடத்தில் அவள் கொதிக்கும் சுடுநீராகிவிடுகிறாள்.

உதாரணம் நான்கு

தன் தோழியான பிரியாவின் வேண்டுகோளுக்கிணங்கி அவளைத் தேடிவரும் தாயிடமிருந்து அவளை மறைத்துவிட்டு, அவள் நன்றி தெரிவிக்கும் போது பன்டி கலங்கியழுகிறாள். (‘ஆகாச குசும்’ திரைப்படத்திற்கான விமர்சனம் எழுதுவதற்காக, படத்தின் சிங்கள மூலப்பிரதியினை னுஏனு வடிவில் இயக்குநர் பிரசன்ன என்னிடம் தந்திருந்தார். அதனை வீட்டில் என்னுடன் பார்த்துக் கொண்டிருந்த எனது உறவு வட்டத்தைச்சேர்ந்த சிங்களம் புரியாத இளம் பெண், பன்டி கலங்கியழுதபோது தானும் கலங்கியழுதார்.)

இதனை எழுதிக் கொண்டிருக்கையில் இத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றிய சிந்தனையோட்டத்தின் போது, எனக்குள் இயல்பாகவே நடந்த ஒரு கண்டுபிடிப்பினைப் பதிவுசெய்ய விழைகிறேன்.

இத்திரைப்படத்தில் பெண் பாத்திரங்கள் அணுகப்பட்டிருக்கும் விதத்திற்கும் ஆண் பாத்திரங்கள் அணுகப்பட்டிருக்கும் விதத்திற்கும் இடையே ஒருவித சமநிலைக்குழப்பம் தோன்றுகின்றது. இங்கு நான் பதிவு செய்ய விழைவது பாத்திரங்களின் முக்கியத்துவம் பற்றியதல்ல, பாத்திரங்களை அணுகும் விதம் பற்றியது.

சமூகத்தால், குறிப்பாக ஆண்களால், பெண்வர்க்கம் பாதிக்கப்படுவதும், மேலாதிக்க ரீதியாக பயன்படுத்தப்படுவதும் சமூக யதார்த்தம் தான். எனினும் ஆண்கள் எல்லோரும் மோசமானவர்களென்றோ, பெண்கள் எல்லோரும் அப்பாவிகளென்றோ வரையறுத்து விட முடியாது. எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல அம்சங்களும், தீய அம்சங்களும் கலந்தே இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் வீதாசார வேறுபாடுகள் இருக்கலாம்.

பிரசன்னவின் கலையாக்கத்தின் போது, பெண் பாத்திரங்கள் அணுகப்பட்டிருக்கும் விதம் நுட்பமானது, ஆழமானது, மனிதாபிமானத் தன்மையும் பல் பரிமாணத் தன்மையும் கூடியது.

தன் நடத்தைகளை விரும்பாத தங்கைக்கு உதவுவதிலும், தனிமைச் சூழலுக்குள் அகப்படுகின்ற சாலிகாவிற்கு ஆதரவளிப்பதிலும், தன் மகளைத் தேடியலைவதிலும், குற்ற உணர்விலிருந்து வெளியேற முனைவதிலும் சுயநலம் ஆழ்ந்திருந்தாலும், சந்தியாராணியின் மனிதாபிமானம் இயல்பானது, தேவையானது.

இது போலவே சாலிகா, சந்தியாராணி மேல் கொள்ளும் மனிதாபிமானம், புரிந்துணர்வு, ஒத்துணர்வு என்பவற்றுள் சுயநலம் இருப்பினும், அவை இயல்பானவையே. மேலும், பிரியாவும்  பன்டியும் கொண்டிருக்கக்கூடிய பரஸ்பர புரிந்துணர்வும் மனிதாபிமான நடவடிக்கைகளும் அலாதியானவை.

ஆனால், இத் திரைப்படத்தில் குறைவாக, குறைந்த நேரம் இடம்பெறும் ஆண் பாத்திரங்கள் சுயநலம் மிகுந்தவர்களாக, பெண் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களாக, மனிதாபிமானம் அற்றவர்களாக சித்திரிக்கப்படுகின்றார்கள். அவர்களது பாத்திர வார்ப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை போலும். இது திட்டமிட்டு செய்யப்பட்டதாகக் கருத வாய்ப்பில்லை.

சாலிகாவைக் காதலித்து, உடற்சுகம் கண்டதும் அவளை ஓரங்கட்டும் உதித், சந்தியாராணியை நடிகையாக்கும் முயற்சியில் அவளது திருமண பந்தங்களை (கணவன், பெண் குழந்தை) பிரித்து விடுகின்ற அப்பா மற்றும் ஸ்ரூடியோ அதிபர், மனைவியின் ரகசிய உறவை அறிந்து அவளைக் கையும் மெய்யுமாக பொலிஸாரிடம் மாட்டி விடுகின்ற கணவன் எரிக், இரவு நடன விடுதியில் பிரியாவிடம் சல்லாபம் கொள்வதிலேயே குறியாகத் திரிகின்ற ஆள், பிரியாவிற்கு கருச்சிதைவு செய்ய முற்படுகையில் அவள் விரும்பத்தகாதவாறு நடந்து கொண்டு விட்டு, அவள் எழுந்து ஓடும் போது வேசியென்று திட்டும் வைத்தியர், பிரியா கர்ப்பம் தரித்திருப்பதையும், பிறகு அவளுக்கு எயிட்ஸ் தொற்று ஏற்பட்டிருப்பதையும் விறைப்பாகவே அறிவிக்கும் பிறிதொரு வைத்தியர், சினிமாவில் நடிக்கும் சந்தர்ப்பங்கள் அற்றுப் போன நிலையில் இருக்கும் சந்தியாராணியையும், சாலிகாவையும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வைக்க முயற்;சி செய்யும் இளைஞன், இப்படியாகத்தான் ஆண் பாத்திரங்களின் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆண்களின் பாத்;திர உருவாக்கத்தில், போதாமைகள் தோன்றுவதால் பிரசன்ன, ஆண் வர்க்கத்திற்கு எதிரானவரென்பது முடிவல்ல. எனக்கு இருக்கும் குழப்பம், பெண்ணுலகைப் புரிந்துகொள்ள முனைகின்ற பிரசன்ன என்கிற ஆண், உருவாக்கி உலாவவிடுகின்ற ஆண் பாத்திரங்கள் பெண்ணுலகைப்  புரிந்து கொள்ள முயற்சிக்காதது பற்றியதே.

பிரசன்ன, பெண்களை அணுகும்போது காட்டும் கரிசனையும் தீவிரமும் ஒத்துணர்வும் ஆண்களை அணுகும்போது பலவீனமாகி விடுகின்றதா? இத் திரைப்படத்தின் கதையாடலும் நோக்கமும் பெண்ணுலகை மையப்படுத்தியிருப்பதும் இதற்குக் காரணமாகக் கூடும். வேறு வகையில் பார்த்தால் திரைக்கதையின் தேவை இத்தகைய ஆண்களுக்கானதாக இருக்கக்கூடுமோ? எது எப்படியிருப்பினும் தேர்ந்தெடுப்பதின் அரசியல், புறக்கணிப்பதின் அரசியல் குறித்த அக்கறைகள்  அவசியமானவையே.

இத் திரைப்படத்தின் இயல்பினைத் தீர்மானிக்கும் முக்கியமான கதாபாத்திரமாகிய பிரியாவின் அறிமுகம், மற்றும் மையப்பாத்திரமான சந்தியாராணியின் பிரதான தேவை, அல்லது அவளது தேடலுக்கான, செயற்பாடுகளுக்கான, முரண்பாடுகளுக்கான பிரதான காரணம் ஆகியவை இத் திரைப்படத்தில் சற்றுத் தாமதமாகியே இடம் பெறுவதனை உணரமுடிகிறது. இவை சற்று முன்னதாகவே, தொடக்கப்பகுதியிலே (ழுpநniபெ) வந்திருக்குமானால், திரைக்கதையானது மேலும் சுவாரஸ்யமானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்திருக்கக் கூடும்.

இத் திரைக்கதை ஒரு தேர்ந்த படைப்பாளியாகிய பிரசன்னவின் பார்வை. எனது தனிப்பட்ட பார்வையினையோ விருப்பு வெறுப்புக்களையோ திணிப்பது நோக்கமல்ல. இது ஒரு கலைவிமர்சனம் என்ற வகையில், சிறந்த கலை வெளிப்பாடுகளின் விதிமுறைகளினது பின்னணியிலிருந்து முன் முடிவுகளற்ற நிலையில் பிரசன்னவின் கலையை அணுகும் நிலையிலேயே சிறந்த கலைவிமர்சனமாக  அமைய முடியும்.

திரைக்கதையின் சிறப்பியல்புகளாகப் பல உத்திமுறைகள் உலகளாவிய ரீதியாகப் பின்பற்றப் படுகின்றன. அவற்றைக் கலை வெளிப்பாட்டை மட்டுப்படுத்தும் இறுக்கமான வரைவிலக்கணமாகக்  கொள்ளத் தேவையில்லை. அவை பார்வையாளரோடு தொடர்பாடலை மேற்கொள்ளும் நிலையில் ஆரோக்கியமான வெற்றிகரமான வழிமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும் புதிய உத்திமுறைகள் தேர்ந்த கலைஞர்களால் முன்வைக்கப்பட்டு, கையாளப்பட்டு அவை வெற்றிகரமான ஆரோக்கியமான விதிமுறைகளாவதும் திரையுலக யதார்த்தம்.

இத் திரைப்படத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பிலிருந்து இரவு நடன விடுதி சார்ந்த பகுதிகள் வேறுபட்டு தனித்துத் தெரிவதாகவும் அது கலையனுபவத்தைப் பாதிப்பதாகவும் கூறி, இது குறித்த எனது அனுபவத்தை சில நண்பர்கள் கேட்டார்கள். என்னைப் பொறுத்த வரையில் அப்படியிருப்பதை உள்ளடக்கம் சார்ந்ததாகவே பார்க்கமுடியும். இயக்குநர் இந்த விடயத்தில் திட்டமிட்டே செயற்பட்டிருக்கக்கூடும். இருவேறு பிரதான உலகங்களைத் திரைப்படம் காட்டுகின்றது. அதிரடியான  இசை மிகுந்த, வண்ணமயமான, போதை தருகின்ற, செக்ஸியான, நிலையற்ற உலகமும் அது சார்ந்த யதார்த்தமுமே இரவு விடுதி சார் பகுதிகளில் விரிகிறது. ஏனைய பகுதிகளின் உலகமும் அது சார்ந்த யதார்த்தமும் வேறானவை.

இரவு நடன விடுதிசார் காட்சிகளின் லயம் வேகமானது. ஏனையவற்றின் லயம் வேறானது, அமைதியானது. இரண்டையும் அடுத்தடுத்து வைக்கும்போது ஏற்படுகின்ற லய மாற்றத்திற்கான, முரணுக்கான நியாயத்தை, இயல்பை உள்ளடக்கமே வழங்கிவிடுகிறது. இத்தகைய இடங்களில் படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்தின் பணியும், வழிப்படுத்தியிருக்கக்கூடிய இயக்குநர் பிரசன்னவின் பார்வையும் மிகுந்த ஒத்திசைவுக்குள்ளாகியிருப்பதாகவே படுகிறது.

பிரசன்ன, தனது திரைப்படங்களின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் லயம் சார்ந்து அக்கறையுடன் செயற்படுபவர் என்பது அவரது திரைப்படங்களிலேயே தெரியவரும். குறிப்பாக ஷபுரஹந்த களுவர| திரைப்படத்தின் கட்டமைப்பு லயம் சீரானது, இயல்பானது. ஷஆகாச குசும்| திரைப்படத்தின் கட்டமைப்பு, லயம் அதற்கேயுரிய விளக்கத்தில் உள்ளடக்கம் சார்ந்து  இயல்பானது தான். ஆனால் சீரானதல்ல.

இத் திரைப்படத்தில் பெண்ணுலகினை நேர்த்தியான ஒளிப்பதிவுச்  செயன்முறைகள் வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் எம்.டி.மகிந்தபால, உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் வரிசையில் நோக்கப்படவேண்டியவர்.  பிரியா சார்ந்த காட்சிகளும் சந்தியாராணி சார்ந்த காட்சிகளும் நேர்த்தியாக, போதிய அளவுகளிலான ஒளியமைப்புக்களுடன், வித்தியாசப்படுத்தல்களுடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், சட்டக சமப்படுத்தல் (குசயஅந டீயடயnஉந) காட்சித்தெரிவு (ஊழஅpழளவைழைn) ஒளியமைப்பு (டுiபாவiபெ) சார்ந்து சில இடங்களில் போதாமைகளை உணர முடிகிறது.

பிரியாவின் ஜொலியான, தடுமாற்றங்கள் நிறைந்த, கவர்ச்சிகரமான அறிமுகம் தொடங்கி, அவள் எயிட்ஸ் தாக்கத்திற்குள்ளாகி, குழந்தையைப் பெற்றெடுக்க வைத்தியசாலை செல்வது வரையான பகுதிகளில் அவளின் பாத்திர உருவாக்கம், பாத்திர உருமாற்றம், நிம்மி ஹரஸ்கமவின் சிறந்த நடிப்பினூடாகவும் எம்.டி.மகிந்தபாலவின் சிறந்த ஒளிப்பதிவினூடாகவும் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது மையப்பாத்திரமான சந்தியாராணியின் பகுதிகளுக்கும் பொருந்தும்.

எனினும் சந்தியாராணியின் தனிமையுணரும் தருணங்களையும், அகவயமான வெளிப்பாடுகளையும் கமெரா கோணங்கள், காட்சித்தெரிவு மற்றும்; ஒளியமைப்பு போன்றவற்றின் மூலம் மேலும் நேர்த்தியான அல்லது வேறு வகையான பதிவுகளுக்கு உட்படுத்தியிருக்க முடியும்.

படத்தொகுப்பும், ஒலியமைப்பும் இத் திரைப்படத்தின் முக்கியமான பலங்கள் எனலாம். இவற்றைத் தென்னிந்தியாவில் மேற்கொண்டிருக்கிறார் பிரசன்ன. உள்ளடக்கம் சார்ந்து  முரண்களோடியைந்த  லயத்தை இத் திரைப்படத்திற்கு வழங்குவதில் ஏ.ஸ்ரீகர்பிரசாத்தின்  படத்தொகுப்புப் பணி பெரும் பங்காற்றுகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வகையில் சந்தியாராணியின் பழைய பாடல்கள் ஐந்தும் அடுத்தடுத்து படத்தொகுப்பு செய்யப்பட்டிருப்பதானது துருத்தலானதாகத் தோன்றுகிறது.  தொலைக்காட்சி வழியாக, பாடல்கள் வெளிப்படுத்தப்படும் உத்திமுறைகளிலோ வேறு வகையிலோ அந்தப் பாடல்கள் கையாளப்பட்டிருக்கலாம்.

ஏ.ஏஸ்.லக்ஸ்மிநாராயணனின் ஒலியமைப்பின் சிறப்பியல்புகளை இத் திரைப்படம் நெடுகிலும் உணரமுடிகிறது. காட்சியமைப்புக்களின் நம்பகத்தன்மைக்கும், உயிர்ப்புக்கும் அவரது நுட்பமான போதிய அளவுகளிலான ஒலியமைப்புக்கள் வலுச்சேர்க்கின்றன.

பின்னணிக் குரல் ஒலிப்போடு இடம்பெறும் சில காட்சிகள் (குறிப்பாக கடிதங்கள்  சம்மந்தப்பட்டவை) சினிமா என்கின்ற காட்சியூடகத்திற்கு (சினிமாவென்பது காண்பதற்கு மட்டுமல்லவெனினும் அடிப்படையில் அது காட்சியூடகமே) அவ்வளவு பொருத்தமானவையாகத் தோன்றவில்லை. அத்தகைய இடங்கள் இயல்பற்றவையாக, வலிந்து புனையப்பட்டவையாகத்  தோன்றுகின்றன. அத்தகைய இடங்களில் பாத்திர நடவடிக்கைகள், உரையாடல் போன்ற வேறு உத்திகளைப் பயன்படுத்தி, வேண்டிய வெளிப்பாடுகளை மேற்கொண்டிருக்கக்கூடிய சாத்தியங்களுண்டு. இத்தகைய சாத்தியங்களின் வழிமுறைகள் வலிந்து புனையப்பட்டவையாகத் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வேறு வழிமுறைகள் இல்லாதபோது பாத்திரத்தின்  இயல்பிற்கேற்ப, காட்சிகளின் பின்னணியில் குரலை ஒலிக்கவிடும் உத்தியைப் பயன்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாததே. பிரசன்னவின் ஏனைய திரைப்படங்களிலும் காட்சிகளின் பின்னணியில் குரல் ஒலிப்பதான காட்சிகளைக் காண முடிகின்றது. அவரது பாத்திரங்களின் குணாதிசயங்களின் நிமித்தம், சில பாத்திரங்களின் உள்முகப்  பயண இயல்பின் காரணத்தால் இத்தகைய உத்தியை அவர் திட்டமிட்டு மேற்கொண்டிருக்கவும் கூடும்.

பிரசன்ன, ‘சிசில கினி கனி’ முதல் ‘ஆகாச குசும்’ வரை ஆறு திரைப்படங்களை  இயக்கியிருக்கிறார். அவற்றின் வழியே, பிரசன்னவின் பெண்ணுலக தரிசனங்களையும் சமூக, அரசியல் அக்கறைகளையும் அவதானிக்க முடிகின்றது.

மனிதரின் அகவயமான பயணங்களும், போராட்டங்களும் பிரசன்னவின் பெரும்பாலான பாத்திரங்களின் இயல்பாகின்றன. நெருக்கடி நிலைமைகளுள் சிக்குண்டு இருக்கக்கூடிய மனிதரைத் தனது கதாபாத்திரங்களின் வழியாகப் புரிந்து கொள்ள முயல்கின்றவராகவும் அவர்களுக்கு உதவ முன்வருபவராகவும் பிரசன்ன தென்படுகின்றார். மேலும், அதிகார வர்;க்கத்தினதும் சமூகத்தினதும் குறிப்பிட்ட சில அரசியல் நிலைப்பாடுகளினதும் மோசமான விளைவுகளைத் தனது படைப்புக்களினூடாகப் பதிவு செய்பவராகவும் காட்சியளிக்கிறார்.

“ஆகாச குசும்” என்ற இத் திரைப்படம் தென்னிந்திய பொதுத் தமிழ்ப் பேச்சு வழக்கில் மொழிமாற்றம் (Subtitle)செய்யப்பட்டு ‘ஆகாயப் பூக்கள்’ என்ற பெயரில் 2011 ஏப்ரல் முதலாம் திகதியன்று கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் (ராஜா திரையரங்கு) வெளியிடப்பட்டது. அன்றைய தினம் முன்னோட்டக் காட்சி(Preview Show) யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இத் திரைப்பட இயக்குனர் பிரசன்ன அதற்குத் தனது தமிழ் நண்பர்களை அழைத்திருந்தார். அவர்களது நண்பர்களையும் அழைத்துவரச் சொல்லியிருந்தார்;. அவரும் வந்திருந்தார். முன்னோட்டக் காட்சியில் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தாலும் அது ஒரு இனிய அனுபவமாகவே இருந்தது.

நன்றி –  பெண்   (மட்டக்களப்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *