40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் – வி.சிவலிங்கம்

வி.சிவலிங்கம்

சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. அத்துடன் ஒரு பெண்னை இழிவுபடுத்தியதாக முன்வைக்கப்படும் அபத்தக் குற்றச்சாட்டு இதில் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் இழிநிலையையும், வங்குரோத்துத்தனத்தையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.

—-

“”தலித்தியம், பெண்ணியம் போன்ற உயரிய கோட்பாடுகளை தமது குறுகிய அரசியலுக்கு தொடர்ந்தும் பாவிக்கும் ஒரு சிறுபிரிவினருடன் தொடர்ச்சியாகப் பயணிக்கமுடியுமா என்ற ஆழமான வினாவினையும், சந்தேகத்தினையும் மிக வெளிப்படையாகவே இந்த நிகழ்வு தோற்றுவித்துள்ளதை பலருடன் உரையாடியதிலிருந்தும், எனது பார்வையிலிருந்தும் என்னால் காணமுடிகிறது.”””

 (நீண்ட காலமாக அரசியல், இலக்கிய, கலாசாரத் தளங்களில் இலக்கியச் சந்திப்பு நண்பர்களுடன் நட்பு ரீதியான உறவினைக்கொண்டிருந்தவன் என்ற அடிப்படையிலும், 40வது இலக்கியச் சந்திப்பு லண்டன் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையிலும், இந்த இலக்கியச் சந்திப்பின் இரு நாள் அமர்வுகளிலும் கலந்துகொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை அவதானித்தவன் என்ற வகையிலும், எனது மனச்சாட்சியை முன்நிறுத்தி என்னுடைய கருத்துக்களைச் சொல்வது எனது தார்மீகப் பொறுப்பு என நான் உணர்கிறேன்.)

 கால்நூற்றாண்டு ஆயுளை எட்டியுள்ள இலக்கியச் சந்திப்பு, லண்டனில் இடம்பெற்ற 40வது இலக்கியச் சந்திப்பிற்கு பின் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறித்து பேசவேண்டிய தருணம் இதுவென்றே எண்ணுகிறேன்.

 இவ் இலக்கியச் சந்திப்பில் இடம்பெற்ற நிகழ்வுகள் கடந்த 39 சந்திப்புகள் சந்தித்த பிரச்சனைகளை விட மிக வித்தியசமானது. இதுவரையான இலக்கிய சந்திப்புகள் புகலிடத்தில், பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக பேசும் சூழலில் இடம்பெற்றது. அது மட்டுமல்ல இலக்கியச் சந்திப்பினை தோற்றுவித்த பங்களிப்பாளர்களின் நோக்கங்களைக் கேள்விக்குட்படுத்தும் நிலமைகள் எழவில்லை.

 ஜனநாயகம், மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அதிகாரத்திற்கு எதிரான தார்மீகக் கோபம் போன்ற விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் இலக்கியப் படைப்பாளர்களை, வாசகர்களை இணைக்கும் ஓர் தளமாகவே இச்சந்திப்பு தோற்றுவிக்கப்பட்டது, வளர்த்தெடுக்கப்ட்டது. இதனை வளர்த்தெடுத்தவர்களில் சிலர் மரணமடைந்தும் விட்டனர். அவர்கள் பற்றி 40வது இலக்கியச் சந்திப்பின்போதும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இன்னும் சிலர் இன்னமும் இதில் செயற்படுகிறார்கள்.

 இலங்கையில் இலக்கியச் சந்திப்பினை நடத்துவது தொடர்பாக இணையத்தளங்களிலும், முகநூல்களிலும் வெளியிடப்பட்ட கருத்துகள் சந்திப்பினை எங்கு நடத்துவது என்பது தொடர்பான தீர்மானங்கள் எடுத்த முறைமை தொடர்பானதாக இருந்ததே தவிர, புகலிட சந்திப்பு இலங்கையில் இடம்பெறுவது தொடர்பான தார தம்மியங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. அவ்வாறான சில கருத்துகள் வெளியிடப்பட்டபோது அவை  தனி நபர் தாக்குதல்களாக, அவமதிப்புகளாக முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலமைகளே காணப்பட்டன. அல்லது அதற்கான ஆக்கபூர்வமான விவாதங்களைத் திறப்பதற்கான வாய்ப்புகள் அற்ற போக்கே காணப்பட்டது.

 

இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு.

1. இலக்கியச் சந்திப்பு என்பது தனக்கான ஸ்தாபனக் கட்டமைப்பினைக் கொண்டிராத பலவீனம் வெளிப்படையாகத் தெரிந்தது.

 -கடந்த சந்திப்புகள் அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராகச் செல்ல எத்தனிக்கவில்லை. இலங்கையில் இன்றுள்ள நிலமைகள் பலரும் அறிந்ததே. அது மட்டுமல்ல புகலிட இலக்கியம் என்ற அம்சம் இலங்கை நிலமைகளை வைத்தே தோற்றுவிக்கப்பட்டது. அங்கு நிலமைகள் மாறலாம், அதனால் புகலிட இலக்கியம் மாற்றம் பெறவேண்டிய அவசியம் இல்லை. அதற்கெனத் தனியான விசேட பண்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை வளர்ந்து வருகின்றன. இவ்வாறான போக்கு ஏனைய புகலிட சமூகங்களிலும் உள்ளன. இலங்கையில் புகலிட இலக்கியம் குறித்து விவாதிக்கலாம் ஆனால் புகலிட இலக்கிய அமைப்பு தனது சந்திப்பை அங்கு நடத்துவதாயின் அதன் அடிப்படை கோட்பாட்டு அம்சங்களில் குறைந்தபட்ச உடன்பாடு காணப்பட வேண்டும். இவை மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர வெறுமனே விவாதங்களற்ற அல்லது இலக்கியச் சந்திப்பு தொடர்பான வரலாற்றுத் தொடர்புகளற்றவர்கள் கையை உயர்த்தி தீர்மானிக்கும் விவகாரம் அல்ல.

 -இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடத்தவதா? இல்லையா? என்பதை வாக்கெடுப்பிற்கு விட்டு தீர்மானிக்க முடியாது. வாக்களிப்பவருக்கான அடிப்படைத் தகுதி வரையறுக்கப்படாத நிலையில் வாக்கெடுப்பு என்ற அம்சம் பொருத்தமற்ற தெரிவாகிறது. கடந்த காலங்களில் எங்கு நடத்துவது? தொடர்பாக எடுத்த முடிவுகள் வாக்கெடுப்பாக கொள்ள முடியாது. அவை ஒப்புதல் பெறப்பட்ட அம்சமே தவிர வேறெதுவும் அல்ல. சந்திப்பின் இறுதியில் அடுத்த சந்திப்பிற்கான முன்மொழிவு என்பது எப்போதுமே ஏகமனதான முடிவாக இருந்துள்ளது. இந் நிலையில் ஏகமனதான முடிவினை எட்ட முடியாத நிலையில் வாக்கெடுப்பிற்கு விடுவது என்ற வாதம் பொருத்தமற்றது. பதிலாக மேலும் கலந்து முடிவு செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வாக்கெடுப்பு தவிர்க்க முடியாதது எனத் தெரிவிப்பவர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் செயற்பட்டமை அப்பட்டமாக தெரிந்தது. இது இலக்கியச் சந்திப்பின் கலாச்சாரம் அல்ல.

 -இலங்கையில் நடத்துவது தொடர்பான வாதத்திற்கு இடமளிக்காமையும், வாக்கெடுப்பிற்கு விடவேண்டுமென்ற வாதங்களும், வாக்களிப்பதற்கான தகுதி வரையறுக்கப்படாமையும் இலக்கியச் சந்திப்பு அமைப்பின் ஸ்தாபனக் குறைபாடு எனக் கருதுகிறேன். இது சரி செய்யப்படுவது மிக அவசியமென்றே கருதுகிறேன்.

2.இலக்கியச் சந்திப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு அவை ஒவ்வோர் சந்திப்பிலும் உறுதி செய்யப்படுவதற்கான பொறிமுறை இல்லாமை.

 அனுசரித்துச் செல்லப்பட்ட கோட்பாட்டு நிலைப்பாடுகளிலிருந்து இச் சந்திப்பு விலகிச் செல்வதாக இதில் நீண்ட காலமாக இணைந்து சென்றவர்கள் கருதிய நிலையில், அதனை விவாதிக்க இடமளிக்கப்படவில்லை. தனி நபர் தாக்குதல்களாக (பெரும்பாலும் தலித் எதிர்  வெள்ளாளர்), மாற்றப்பட்டு அவமதிப்பே எஞ்சி நின்றது.

 

25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பு வடிவத்தில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டவர்கள் அதனைக் காப்பாற்ற முயற்சிப்பது தமது சொத்தாக எண்ணுவதை விட அதன் அழிவை அல்லது கோட்பாட்டு விலகல் தற்கொலை முயற்சியாக அமையலாம் என்ற அச்சமாகவும் அதனைக் கருத முடியும். இலக்கியச் சந்திப்பின் கோட்பாட்டு விலகல் பற்றிய விவாதத்தின் அடிப்படையிலேயே இம் முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர வாக்கெடுப்பு மருந்து அல்ல.

41வது சந்திப்பு என்ற விவகாரம் இம்மாதிரியான முடிவுக்குச் சென்றுள்ளமை அதன் அடிப்படை கோட்பாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக, சிலர் முன்வைக்கும் கருத்துக்களில் நான் உடன்படுகிறேன். எனவே இலக்கியச் சந்திப்பு தனது கோட்பாட்டு நிலைப்பாடுகளை மீண்டும் உறுதி செய்வதற்கான வேளை இதுவெனக் கருதுகிறேன்.

 40வது இலக்கியச் சந்திப்பு ஆரம்பமாகிய தினம் முதல் அதன் செயற்பாட்டை கேள்விக்குட்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக பேச்சாளர்களாக ரயாகரன், சாத்திரி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.  பேச்சாளர்களை அழைப்பதற்கான முடிவை நிருவாகக் குழுவினரே முடிவு செய்திருந்தனர். அம் முடிவில் திருப்தியடையாதவர்கள் தமது அதிருப்தியை நிர்வாகக் குழுவிடமே பேசியிருக்க வேண்டும். பேச்சாளர் பற்றிய விபரம் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான போதிய அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பதிலாக அவர்களைப் புண்படுத்தும் விதத்தில் பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கு விநியோகிக்கப்பட்டு அவர்களது பேச்சும் தடைப்படுத்தப்பட்டது. நேரக் கட்டுப்பாடு காரணமாக சில விவாதங்களுக்கான காலங்கள் மாற்றப்பட்டது குறித்து ஆங்காங்கே வெளியிடப்பட்ட கருத்துக்கள் புண்படுத்துவதாகவே அமைந்திருந்தன. இச் சந்திப்பிற்கென இலங்கை, தமிழகத்திலிருந்து பேச்சாளர்கள் அழைக்கப்பட்ட நிலையில் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், மன்னிப்புக் கோரும் அழுத்தங்கள் என்பன சந்திப்பின் சுமுகமான செயற்பாட்டை தடைப்படுத்துவதற்கான முயற்சிகளாகவே காணப்பட்டன. கலகம் செய்கின்றோம் என்ற போர்வையில் மோசமான ஜனநாயக மீறல்களும், அநாகரீக செயற்பாடுகளும் அரங்கேற்றப்பட்டன.

 இலக்கியச் சந்திப்பின் முக்கியத்துவத்தை மலினப்படுத்திய போக்காகவே நான் அவதானித்தேன். நிர்வாகக் குழுவில் ராகவன் அவர்கள் இருந்தார். ரயாகரன், சாத்திரி ஆகியோரை அழைப்பதாக எடுத்த முடிவின் போது அவர் தனது சந்தேகங்களை வெளிப்படுத்திய போதிலும் இறுதியில் அழைப்பது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்டு செயற்படுவதுதான் ஜனநாயக நடைமுறை. ஆனால் சந்திப்பின்போது சாத்திரி அவர்களின் உரையை அதன் ஆரம்பத்திலேயே கேள்விக்குட்படுத்தியவர் ராகவன் அவர்களாகும்.

 இதுவே அவரது நோக்கம் குறித்த சந்தேகங்களை எம் மத்தியில் எழுப்புகிறது. இச் சந்திப்பு தொடர்பாக ராகவன் அவர்கள் குறிப்புகள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்.  அதில் தனது இவ்வாறான நடவடிக்கை குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. தானும் இணைந்து எடுத்த முடிவை எதிர்த்து அங்கு நடந்து கொண்ட முறை அவரது ஜனநாயகம் குறித்த புரிதல்களை கேள்விக்குட்படுத்துகிறது. இதே போன்று, 41வது இலக்கியச் சந்திப்பு தொடர்பான விவாதத்தில் தலைமை வகித்த நிலையில், தன்னிச்சையான பக்கச்சார்புடன் எவ்வித ஆலோசனையுமின்றி வாக்கெடுப்பிற்கு விட்டிருந்ததும் சந்தேகத்தை தருகிறது. குறிப்பில் கொடுத்த விளக்கங்களை விட அவரது செயற்பாடுகள் அதிக விளக்கங்களை பார்வையாளர்களுக்கு வழங்கியது என்பதே யதார்த்தம்.

 இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக இரு சாராரும் பேசி முடிவுக்கு வரவேண்டுமென தாம் இரு சாராரையும் வற்புறுத்தியதாக கூறும் அவர், இரு சாராரின் நிலைப்பாட்டின் உண்மையான தார்ப்பரியத்தை குறிப்பாக இலங்கைக்கு எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த வாதங்களின் கருத்துக்களை வெறுமனே கனடாச் சந்திப்பில் காணப்பட்ட குறைபாடுகளுக்குள் வரையறுத்து கூறியது இலக்கியச் சந்திப்பின் கோட்பாடுகளின் தாக்கத்தை பலவீனப்படுத்தும் ஓர் முயற்சியாகவே காணப்பட்டது.

 இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கு முயற்சித்தவர்கள் அதற்கு எதிராக தெரிவித்த கருத்துகளுக்கு ஆக்கபூர்வமான பதில்களை வழங்கவில்லை. பதிலாக அவை ஓர் சாதிப் பிரிவினரின் திட்டமிட்ட சதி என்ற அடிப்படையில் விவாதங்கள் நகர்த்தப்பட்டன. அங்கு சாதிப் பிரிவினரின் ஆதிக்கம் குறித்து மிகவும் மோசமான விதத்தில் சிலரின் பேச்சுக்கள் இருந்தன. அவரின் தலைமையின் கீழ் இவை நடந்தேறின. ஆனால் இவை குறித்து எந்தவிதமான கருத்தும் ராகவன் அவர்களின் குறிப்பில் காணப்படவில்லை. இவை அவரின் கவனத்தை ஈர்க்கவில்லை அல்லது அவை ஒரு பொருட்டாக கொள்ளத் தேவையில்லை என அவர் கருதுகிறாரா?

 சாதிப் பிரிவின் ஆதிக்கம் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மிகவும் கேவலமானவை. இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கான நியாயங்கள் இவ்வளவு கீழ் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பலரை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதாக அமைந்தன. இவ்வாறான உரைகள் பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டன. அவர்களுக்கு எவ்வாறான செய்தியை இந்த நிகழ்வுகள் வழங்கின? இவர்களை அழைத்தவர்கள் எவ்வாறான மன நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்?

 ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 40வது சந்திப்பினை அவமானப்படுத்தும் நோக்கம் கொண்டதாகவே ஏலவே திட்டமிடப்பட்ட வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்தது என என்னால் சிந்திக்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக நடைபெற்ற சந்திப்பினை உரிய முறையில் முடித்துவைக்க இவர்கள் உதவவில்லை. ராகவன் அவர்களின் குறிப்பில் இலண்டனில் பேசி முடிவு செய்யலாம் என்ற நம்பிக்கையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பியவர்கள் கொண்டிருக்கவில்லை எனக் கூறுகிறார். இரண்டாக உடையும் ஆபத்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். பிளவு ஏற்படும் என்ற நிலையை நான் உணரவில்லை ஆனால் தற்போது அதனை உணர்கிறேன். ஏனெனில் சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. அத்துடன் ஒரு பெண்னை இழிவுபடுத்தியதாக முன்வைக்கப்படும் அபத்தக் குற்றச்சாட்டு இதில் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் இழிநிலையையும், வங்குரோத்துத்தனத்தையும் அப்பட்டமாகக் காட்டுகிறது.

 ராகவன் அவர்கள் “இலங்கை அரசை எதிர்ப்பது வேறு, அரசு மேற் கொள்ளும் நிகழ்வுகளை எதிர்ப்பது வேறு, யாரும் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்பன வெவ்வேறானது” என வாதிக்கிறார். இதில் முதலில் குறிப்பிட்ட நிலைப்பாடு அரசின் அதிகாரப் போக்கிற்கு எதிராக எழும் உணர்வு எனவும், இலங்கையில் இருப்பவர்கள் யாரும் எங்களை கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது என்ற நிலை இரண்டாவது நிலைப்பாட்டிற்கு காரணம் எனவும் கூறுகிறார். இப் போக்கு ஆதிக்கச் செருக்கு எனவும் வரையறுக்கிறார். இந்த இரண்டு அனுமானங்களும் தவறு எனக் கருதுகிறேன். இலங்கை அரசை எதிர்ப்பது என்பது எங்கிருந்து எழுகிறது? இலக்கியச் சந்திப்பின் கோட்பாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கையில் இருப்பவர்கள் எம்மைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலை குறித்து தெரிவித்திருப்பது என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அவ்வாறான ஒரு நிலை காணப்படுமானால் அதற்குக் காரணம் தனி நபர் அல்ல பதிலாக ஸ்தாபன வடிவம் அற்ற இலக்கியச் சந்திப்பு ஆகும். அக் குறிப்பில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் உதவி பெறப்பட வேண்டும் என ஆலோசனை வழங்க முயற்சிக்கிறார். ஆனால் இவர்கள் 40 இலக்கியச் சந்திப்பின் முடிவுகள் அதன் தோற்றத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை தொலைத்துவிட்டதாக உணர்கிறார்கள். அத்துடன் இதுவரை காலமும் கட்டி எழுப்பிய தனிநபர் உறவு அதன் மிகவும் பலவீனமான பகுதியை வெளிப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

 தலித்தியம், பெண்ணியம் போன்ற உயரிய கோட்பாடுகளை தமது குறுகிய அரசியலுக்கு தொடர்ந்தும் பாவிக்கும் ஒரு சிறுபிரிவினருடன் தொடர்ச்சியாகப் பயணிக்கமுடியுமா என்ற ஆழமான வினாவினையும், சந்தேகத்தினையும் மிக வெளிப்படையாகவே இந்த நிகழ்வு தோற்றுவித்துள்ளதை பலருடன் உரையாடியதிலிருந்தும், எனது பார்வையிலிருந்தும் என்னால் காணமுடிகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *