’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்….

எம்.ஏ.சுசீலா

’பெரிய கடவுஎம்.ஏ.சுசீலா ள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்….


’பெரிய கடவுள் காக்க வேண்டும்!’-பெண்கள் தினத்தில்….

சர்வதேசப் பெண்கள் நாளில்…….
‘’‘’பெண்விடுதலை வேண்டும்…
பெரிய கடவுள் காக்க வேண்டும்’’
என்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்….ஒவ்வொரு மனித மனசாட்சிக்குள்ளும் மறைந்தும் ஒளிந்தும் கிடக்கும் அந்தப் பெரிய கடவுளைத் தூசி தட்டி விழித்தெழச் செய்ய வேண்டியது நமது பொறுப்புத்தான் என்பதையும் நாம் என்றைக்குத்தான் புரிந்து கொள்ளப்போகிறோம்..?’’

தன்னம்பிக்கை தராத-கழிவிரக்கமூட்டும் பெண் சார்ந்த எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டுமென்பதைச் சில காலமாக நான் ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டிருக்கிறேன்; ஆனாலும்..அண்மைக்காலக் குரூர நடவடிக்கைகள் பலவும்   அன்றாட நடவடிக்கைகளாகவே ஆகி வருவது (குறிப்பாக நாளும் அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுகள்,ஆசிட் வீச்சு போன்றவை) மனதுக்கு ஆயாசமூட்டுவதாகத்தான் இருக்கிறது. இன்றைய நாளிதழ் செய்தி ஒன்று தில்லியில் 48 மணிநேரத்துக்கு ஒரு முறை பெண் சார்ந்த  7 வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகக் கூறுகிறது;மற்றுமொன்று பெண் சார்ந்த பாலியல் குற்றங்கள் போன ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்திருப்பதை எடுத்துச் சொல்கிறது.இந்தச் சூழலில் பெண்கள் தின வாழ்த்துக்களை மட்டும் சொல்லுவதோடு மனதை அமைதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பெண் சார்ந்த சமூக மனப்போக்கும்-அவளை நுகர்பொருளாக மட்டுமே அணுகும் ஆணின் உளக்கட்டமைப்பும் மாறினாலன்றி வெறும் வாய்ச் சொல் வீரங்களும், அந்த நேரத்து ஆவேசங்களும் இந்த நிலையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப்போவதில்லை. ஆனாலும் கூட…எழுத்து என்ற கதவின் வழி சமூக மனச்சாட்சியைத் தட்டிக் கொண்டே இருப்பது ஒரு தார்மீகக் கடமை என்றே தோன்றுகிறது.கருத்தொருமித்த காதல்…, ஒட்டும் இரு உள்ளங்களின் இறுகிய பிணைப்பே காதல் என்பது புரியாததால்….அதைப்புரிந்து கொள்ளும் மனப்பக்குவத்தை நம் ஊடகங்களும், so called ’திரைக்’காவியங்க’ளும் அளிக்காததால் – கணநேரச் சலனத்தையும்,ஒரு பக்கம் மட்டுமே ஜனிக்கும் வெறி பிடித்த காமத்தையும் மட்டுமே காதல் என்னும் மாயச் சிமிழுக்குள் வண்ணக்கனவுகளாக்கி வியாபாரம் செய்து கொண்டிருப்பதால் சாதனைப்பெண்களாக வலம் வர வேண்டிய வினோதினிகளும் வித்யாக்களும்…இன்னும் பெயர் தெரியாத எண்ணற்ற பல பெண்களும் ..ஆசிட் வீச்சின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் முகத்தை மட்டுமன்றித் தாங்கள் பதித்துச் செல்ல வேண்டிய முகவரிகளையே தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வினோதினி
வித்யா

இவர்கள் செய்த பாவம்…தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக்காதலை ஏற்க மறுத்தது…! காதல் ஒருவனைக் கைப் பிடிப்பது பெண்ணின் கம்பீரமான உரிமை என்றால் அவனை மனம் ஏற்க விரும்பாதபோது நிராகரிக்கும் உரிமையும் அவளுக்கு உரியதே என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால்…தன்னைப்பற்றிய பெருமிதத்தில் -அளவுக்கு மீறிய தன்னகங்காரத்தில் திளைக்கும் ஆணின் மனப்போக்கு அதை ஏற்க மறுத்து அடம் பிடிக்கிறது; முரண்டு பிடிக்கிறது…’என்னிடம் வயதும்,வாலிபமும் இருக்கும்போது என்னை இவள் எப்படி மறுதலிக்கலாம்’என்று கெக்கலித்தபடி பேயாட்டம் போடுகிறது. அவ்வாறான காட்சி அமைப்புக்களையும்,வசனங்களையும் ஊக்குவிக்கும் திரைப்படங்களே ஆரவாரமான வரவேற்புக்களையும்,கைதட்டல்களையும் அள்ளிக் குவிக்கின்றன.வேலைவெட்டி இன்றி சுற்றித் திரிபவனாக….ஊரறிந்த  பொறுக்கியாகவே ஒருவன் இருந்தாலும் அவன் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தி விட்டால் அவள்  அதை ஏற்றே ஆக வேண்டும்…காரணம் அந்தப்படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் அவன் ஹீரோ ஆக்கப்பட்டு விடுவது உறுதி. அப்படிப்பட்ட அதிபராக்கிரமசாலியான (!?) ஒருவனை ஏற்க ஒரு பெண் முன் வரவில்லையென்றால் ‘அவள் திமிர் பிடித்தவள்…ஆணவக்காரி..’

முதலில் சொல்லப்போனால்…இந்த ஒருதலைக்காதல் என்னும் சொல்லாட்சியே சரியானதில்லை.

ஒரு தரப்பில் மட்டுமே ஏற்படும் இவ்வகையான உணர்வைக் ‘கைக்கிளை’ என்று குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.
கிளை என்பது உறவு…கை என்பது சிறியது.(கைக்குட்டை,கையேடு ஆகிய சொற்களை நினைவுபடுத்திக் கொள்ளலாம்)
தொல்காப்பிய உரைகள் வழியாகப்  பல  வகைகளில் அர்த்தப்படுத்திக் கொள்ள இடமளிப்பது கைக்கிளை என்னும் தொடர்.

ஒன்று…., ஒரு தரப்பில் மட்டுமே தோன்றும் இது சிறுமையானது. எந்த வகையிலும் எவருக்கும் பெருமை தராதது.

அடுத்தது….இத்தகைய உணர்வு நீடித்திருக்கும் காலகட்டம் மிகக் குறுகியது. அடுத்த தரப்பில் எந்த எதிர்வினையும்,சமிக்ஞையும் சாதகமாகக் கிடைக்காதபோது கௌரவமாக விலகிச் சென்று விடுவதே கண்ணியமான ஓர் ஆணின் நடத்தையாக இருக்க முடியும்.

மூன்றாவதான ஒன்றும் உண்டு…
அதுவே ஒரு தரப்பில் தோன்றும் அன்பை மாற்றுத் தரப்பிலும் ஏற்படுத்தி ஒத்த காதலுக்கு வித்தாவது. காரணம் எந்தக் காதலுமே ’அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்ற காவியக்காட்சி போல அமைந்து விடுவதில்லை; முதலில் ஒரு மனதில் தோன்றிப் படிப்படியாக அடுத்த உள்ளத்திலும் பற்றிக் கொளும் காதலே நடைமுறையில் சாத்தியமானது.
‘’யான் நோக்குங்கால் நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்’’
என்ற திருக்குறள் ஒரு மனத்தின் குரல் இன்னொரு மனதிலும் மெல்லப் பற்றிப்படரத் தொடங்கும் படிநிலையைப்படம் பிடிக்கிறது.

ஆனால்….அது…வெறித்தனமானதில்லை. தான் விரும்பும் இன்னொரு நெஞ்சின் ஒப்புதல் கிடைக்கும் வரை அது மௌனமாகக் காத்திருக்கவே செய்கிறது… ஒப்புதல் கிடைக்காதபோது ஆவேசமோ ஆத்திரமோ கொள்ளாமல் வழி விட்டு விலகிச் செல்கிறது. தனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரௌத்திரம் கொண்டு அதை அழிக்கவோ சிதைக்கவோ அது துடிப்பதில்லை…அதனாலேதான் அதற்கும் குறிப்பிட்ட ஒரு கால வரையறை இருப்பதைக் கைக்கிளை என்னும் சொல் உணர்த்துகிறது. முதலில் ஒரு தரப்பில் மட்டுமே அன்பு ஏற்பட்டிருக்கலாம்…ஆனால் மறுதரப்பு அதை உடன்படவில்லையென்றால் அது சிறுமைப்பட்டுப் போகும் என்ற காரணத்தால்… சிறிது காலம் மட்டுமே அது அவ்வாறு இருப்பது நியாயம் என்பதாலேயே குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்கு உட்பட்ட அன்பு கைக்கிளை என்கிறது தமிழ் மரபு.

மரபும் தெரியாமல்….பெண் மனமும் புரியாமல் பித்தேறித் திரியும் பேய்க்கூட்டங்கள் இருக்கும்வரை…..நம் சமூகத்தில் நிர்பயாக்களும்,வினோதினிகளும்,வித்யாக்களும்தான்  பெருகிக் கொண்டிருக்க முடியும்…
‘’பெண்விடுதலை வேண்டும்…
பெரிய கடவுள் காக்க வேண்டும்’’
என்றான் பாரதி..அந்தப் பெரிய கடவுள் சட்டப் புத்தகங்களுக்குள்ளோ,மேடை முழக்கங்களுக்குள்ளோ இல்லை என்பதையும்….ஒவ்வொரு மனித மனசாட்சிக்குள்ளும் மறைந்தும் ஒளிந்தும் கிடக்கும் அந்தப் பெரிய கடவுளைத் தூசி தட்டி விழித்தெழச் செய்ய வேண்டியது நமது பொறுப்புத்தான் என்பதையும் நாம் என்றைக்குத்தான் புரிந்து கொள்ளப்போகிறோம்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *