பெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்…?

மாலா கோகிலவாணி

அடுப்படியே உலகம் என்று பெண்களுக்காக வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை இன்று பல மாறுதல்களை அடைந்திருந்தாலும் அவர்கள் இன்னும் பயணிக்க வேண்டிய தூரங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

சர்வதேச மகளிர் தினங்களில் பெண் உரிமைகளை வலியுறுத்தி கையெழுத்திடுவதும் அமைதி வழி ஊர்வலம் நடத்துவதும் தொடர்ந்து நடக்கும் செயற்பாடுகளாக இருந்தாலும் அவற்றினால் அடையப்பட்ட பயன்கள் நூற்றிக்கு பத்துவீதம் மட்டுமாகவே காணப்படுகின்றன.

கன்னித்தன்மை என்னவென்று அறியாத வயதில் குழந்தையிடம் கன்னித்தன்மையை சோதிக்கும் தந்தையர்களும் எமது சமூகத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். பெண்கள் இன்று பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்ற ஒருபக்க நியாயப்பாடுமிக்க கருத்துக்களும் பெண்களுக்கு சமத்துவம் கிடைக்கப்பெற்றுவிட்டதென்ற நியாயப்பாடுகளும் இன்று சமூகத்தில் முன்மொழியப்பட்டு வருகின்றன.

அக்கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால்இ பெண்கள் ஒவ்வொரு துறையிலும் கால்பதித்துள்ளனர். அப்படியே கால்பதித்திருந்தாலும் அவர்கள் சமத்துவமாக மதிக்கப்படுகின்றார்களா? சுரண்டல்கள் என்பதும் இரண்டாந்தரமாக பார்க்கப்படும் அடிமட்ட சிந்தனைகளிலிருந்தும் பெண்கள் விடுபட்டுவிட்டார்களா? என்றால் அவை இன்னும் அடையப்படவில்லை என்பதே பெண்கள் தரப்பு நியாயப்பாடாக காணப்படுகின்றது.
பிரபஞ்ச உருவாக்கத்தில் பெண்ணின் பங்கு அளப்பரியது. அத்தகைய அளப்பரிய பணியை புரிந்துவரும் பெண்களின் கர்ப்பப்பை அவர்களின் கட்டுபாட்டில் இல்லை என்பதே இன்றைய நிதர்சனமான உண்மை. ஒரு பெண் தனக்கு குழந்தைகள் போதுமென்று தானே தீர்மானித்தாலும்கூட அதற்கான அனுமதியை ஆணே வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எமது சமூகத்தில் காணப்பட்டு வருகின்றது.

பெண்கள் குழந்தைகளை பெற்றுகொள்ளாமல் இருப்பதற்காக எத்தனையோ மருத்துவ முறைகள் வந்துவிட்டன. இத்தகைய மருத்துவ சிகிச்சைகள் பெண் செய்துகொள்ள வேண்டுமென்றால் கட்டாயமாக அவள் தனது கணவனின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை காணப்படுகின்றது. இன்று எத்தனை ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு முன்வருகின்றார்கள் என்றால் அது கேள்விகுறிதான்.
 
இதைத் தவிர இன்று எத்தனை பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதனை வெளிப்படையாக கூறக்கூடியவர்களாக காணப்படுகின்றார்கள். பெண்களுக்கான மொழிகளும்இ பெண்ணுரப்புகளை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

பெண்களின் இடுப்பை காட்டாத தமிழ் திரைப்படங்களை எம்மால் இன்று காண முடியுமா? பெண்களை காம பொருளாகவும் போகப்பொருளாகவும் பார்க்கும் நிலை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.  வீதியில் செல்லும் ஒரு பெண்ணை தமக்கு சமமானவள் என்று நினைப்பவர்கள் எத்தனைபேர்தான் உள்ளனர். மாறாக அவள் பெண் என்றும் அவளது பாலுருப்புக்களை நோட்டம் விடுபவர்களையும் எம்மால் இன்னும் காணமுடிகிறது.

கல்வித்துறை முதல் அனைத்து துறைகளிலும் பெண்கள் உயர்ந்த இடத்தை அடைந்தாலும் சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் அந்தஸ்து என்பதும் அவர்கள் சார்ந்த துறைகளில் எதிர்நோக்கும் சவால்கள் என்பதும்; அளப்பரியன. இன்று பாடசாலை முதல் வைத்தியசாலை என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான வன்முறைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. பெண்கள் பாதுகாப்பாற்றவர்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும் காணப்படும் நிலை இன்று அதிகரித்துவிட்டது.

பெண்களின் துன்புறுத்தல்களுக்கு காரணக்கரத்தாக்களாகவும் அதேநேரத்தில் பாதுகாவலர்களாகவும் ஆண்கள் இருப்பது எமது சமூகத்தின் இயலாமையை எடுத்துக்காட்டுகின்றது. ஆண்இ பெண் சமத்துவம் என்பது எமது சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் என்றால் ‘பெண் வன்முறை’இ ‘பெண் பாதுகாப்பு’இ ‘இரண்டாம்தர நிலை’ என்ற பதங்களுக்கான தேவை இன்று இருந்திருக்காது.

‘பெண் பாலியல் துஸ்பிரயோகம்’இ ‘கணவனை கொன்ற பெண்’ பல பத்திரிகைகளின் தலையங்கங்களையும் சினிமா பக்கங்களையும் விளம்பர பக்கங்களையும் பெண்களே இன்னும் அலங்கரித்துகொண்டு இருக்கின்றார்கள்.  எனவே வன்முறைகள் ஒழிய வேண்டுமென வெறுமனே கைகளை உயர்த்தும் நிலை மாறவேண்டும். சமூகத்தில ஊடுறுவிப் போயிருக்கும் பெண்ணடிமை என்ற ஆணிவேரை பறித்தெரிய வேண்டும். பிறக்கும் குழந்தைகளிலிருந்தே ஆண்இ பெண் சமத்துவம் என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.

பால்இ பால்நிலை தொடர்பான பாடங்கள் கல்வித் திட்டங்களில் இணைத்துகொள்ளப்படுவது இன்றியாமையாத தேவையாக உள்ளது. ஒரு குழந்தை குடும்பத்திலிருந்து அடுத்தப்படிக்கு காலடி எடுத்து வைப்பது என்றால் அது பாடசாலை பருவத்தில்தான். மாணவ பருவத்திலே ஆண்இ பெண் சமத்துவம்  என்பது வலியுறுத்தப்படுமானால் அதுவே சமூக மாற்றத்திற்கு காரணமாக அமையும்.

பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு செற்பாடுகளை அதுசார்ந்து செயற்படும் நிறுவனங்கள் சமூக மட்டத்தில் ஏற்படுத்துவதுமாக இருந்தால் அது சமத்துவத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக காணப்படும். பெண் விழிப்புணர்வு செயற்பாடுகளில் வெறுமனே பெண்களை மட்டும் பங்குகொள்ள செய்யாது அது சார்ந்த விளக்கங்களை ஆண்களுக்கும் வழங்குவதற்கு முயலவேண்டும்.

சமூகஇ கலாசாரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களிலும் பெண்களுக்கான சமபங்கு என்பது வலியுறுத்தப்பட வேண்டும். பாரபட்சம் என்ற நிலைப்பாடு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

திருமண சட்டங்கள்இ சொத்துரிமை போன்ற பல சட்டங்களில் பெண்களுக்கு பாரபட்சம் விளைவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலை மாற வேண்டும். பக்கச்சார்பற்ற சமசந்தர்ப்பம் பெண்களுக்கு வலியுறுத்தப்படுவதற்கான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.   அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அரசியல் தமைத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகள் என்பது பெண்களுக்கு தேவைப்படும் ஒன்றாக காணப்படுகின்றது. இதுசார்ந்த செயற்திட்டங்களில் ஈடுபடுவதற்கு பெண்கள் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

வெறுமனே பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளை மட்டும் கருத்தில்கொண்டு செயற்படாது பெண்களின் வளர்ச்சி சார்ந்த செயற்திட்டங்களில் இந்நிறுவனங்கள் அக்கறை செலுத்துமானால் பெண் சமத்துவத்தை இலகுவில் அடைந்துவிடலாம். பெண் அடிமைஇ பெண் பாரபட்சம் பெண வன்முறைகள் என்பவை எந்தெந்த மட்டங்களிலிருந்து எழுகின்றன என்பதை அறிந்து அதற்கு முற்றுப்புள்ளியிட்டால் மட்டுமே பெண் சமத்துவமென்பது சாத்தியமானது.

http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/60248-2013-03-07-16-04-32.html

1 Comment on “பெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்…?”

  1. இது தான் எனக்கு ஊடறுவில் பிடித்தமானது தகுந்த நேரங்களில் மிகவும் பிடித்தமான கட்டுரைகளை பிரசுரிப்பது உண்மையில் ஊடறுவில் எடுதும் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அதுவும் மகளிர் தின வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *