அனைத்து ஊடகங்களுக்கும் தோழமையான வேண்டுகோள்


 

வணக்கம்,

இலங்கையில் வன்முறையால் ஜனநாயகம் கட்டிப்போடப்பட்டுள்ளது. இதனை இலங்கையின் இனவாத அரசு தனது படைகளை மக்கள் முன்னிறுத்தி ஆதிக்க அனியாயம் செய்கின்றது. இதனைத் தட்டிக் கேட்கும் நாதி என்பது அனைத்து இனங்களின் இணைவிலேதான் தங்கியுள்ளது. இந்த வன்முறை அரசினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் இலங்கையின் அனைத்து இனங்களிலும் உள்ளனர். இந்த அரச வன்முறைகள் தனித்து தமிழ் மக்கள் மீது மட்டும் கட்டவிழ்த்து விடப்பட்டவை அல்ல என்பதை மக்கள் நலம் சார்ந்த, இனங்களின் சுய இணைவை விரும்புகின்ற அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நன்கு புரிந்தவர்களாகும். மக்களுக்கான ஊடகங்கம் என்பது அனைத்துப் பேதங்களையும் கடந்ததாகும். அதுவே பேதங்களினாலும் அநீதிகளினாலும் பாதிக்கப்படும் மக்களின் உற்ற நண்பனாகும்.   

தங்களை ஊடக ஜனநாயகத்தில் நின்று, அரச வன்முறையின் பக்கம் சாராத, துணிவுடன் முக்கிய செய்திகளைத் தெரிவு செய்து வெளியிடும் ஊடகமாக தங்களின் பத்திரிகையை – இணையத்தை, மக்கள் தெரிந்து தெளிந்து அறிந்து கொண்டு, மக்கள் தங்களைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த வகையில்:

இன்று தென்னிலங்கை சகோதர சிங்கள மாணவர் அமைப்புக்களும் மக்கள் நலம் சார்ந்த இடதுசாரிச் சக்திகளும் தென்னிலங்கை ஜனநாயக விரும்பிகளும், யாழ்ப்பாண மாணவர் மீதான அரச படையினரின் வன்முறைகளைக் கண்டித்து – இன ஒடுக்குமுறைக்கு எதிராக – தமிழ் மாணவர்களின் ஜனநாயக உரிமையை முன்னிறுத்தி, பாரிய ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்துகின்றனர். இதனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களையும் தீட்டுகின்றனர் என்பது பற்றி தாங்கள் அறிந்திருக்கலாம். 

இப் போராட்ட உண்மைச் செய்திகளையும் இனித் தொடரப்போகும் போராட்டச் செய்திகளையும், மக்களுக்கான தங்களின் ஊடகங்களில் எதுவித இருட்டடிப்பும் செய்யாமல் உடனுக்குடன் வெளியிடுமாறு இத்தால் தங்கள் ஆசிரிய – ஊடகபீடங்களைத் தோழமையுடன் கோருகின்றோம். 

இது மக்கள் நலம் சார்ந்த ஊடக ஜனநாயகத்தில் நின்று செய்தி வெளியிடும் அனைத்து ஊடகங்களுக்குமான  பொதுக் கோரிக்கையும் வேண்டுகோளுமாகும். 

 

இவ்வண்ணம்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தொடர்புகளிற்கு:

www.ndpfront.com

ndpfront@gmail.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *