இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்

அன்பாதவன்.

PeyaridathaNadsathirankal s

கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை.

வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் தனது உடலுக்கும் உயிருக்கும் ஊறு நேரும் என்ற சூழலில், யுத்தக்களத்தில் எழுதப்பட்ட 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகளை ஊடறுவின் முயற்சியால் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தொகுப்பாய் நம் கையில்…

PeyaridathaNadsathirankal s

‘இவள் பெண்… இவளால் முடிந்தது இவ்வளவே, இதை மட்டும்தான் செய்வாள்’ என்று இதுகாறும் சமூகம் வரைந்திருந்த வரைபடங்களை மீறி புதிய சாகசங்களோடு புதிய மொழியில் புதிய களத்தில் வரையபட்டு வாசகனுக்கு புதியதோர் கவியனுபவத்தைத் தருவதாய் இக்கவிதைகள்..

எங்கள் கிராமத்தில்
இனிய வசந்தங்கள் கருகின
பூட்ஸ் கால்களின் கீழ்
புனிதங்கள் நசிந்தன
வியர்வை முத்துக்கள் சிந்தி
விளைவித்த நெல்மணிகள்
முற்றமெங்கும் சிந்தின
விழுந்து கிடந்த மலர்களை
இரும்புச்சக்கரங்கள் மிதித்தன
சிதறிய உடல்களும்
சிந்திய ரத்தமுமாய்
இரவு சூழ்ந்தது.
தூரத்தே துப்பாக்கிகள் வெடித்தன.

இத்தகையச் சூழல்கள் தாய்த்தமிழகம் பார்த்தறியாதவை. ஆனால் ஈழந்த்து சஙனங்களுக்கோ நித்தமும் வாய்த்தவை. ஒரு புறம் காட்டிக் கொடுப்பவர்கள் இன்னொரு புறம் புத்த புன்னகைப் பூசிய ராணுவ மிருகங்கள். இதற்கப்பால் அமைதியின் பெயரால் வந்திறங்கிய அந்நிய ராணுவமென ஈழத்துச் சொந்தங்கள் கண்ட கோரமுகங்கள் பலப்பல.

இலங்கைய்ரசு படையெடுத்து வந்து
படுகொலைப் புரிந்தது
அன்றுஅழுது புலம்பியவர்க்கு
ஆறுதல் அளிப்பது போல்
அமைதியாய் ஆக்கிரமித்தது
அயல்நாட்டுப் படை”

படைகளை எதிர்க்கையில் மரணம் நிச்சயம் உண்டு, அதற்கு முன் பாலியல் பலாத்காரமும் உண்டெனத் தெரிந்தும் களத்தில் நின்றவர்களில் உரிமைக்குரலின் புதிவுகளிவை.

சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்.
சின்னாபின்னப்பட்டுப் போகலாம்
ஆனாலென் உணர்வுகள் சிதையாது
உங்களைச் சிந்திக்க வைக்கும் அது.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்”

என்று ஒரு போராளி தன் இறுதிக் கவிதையை எழுதி முடிக்க இன்னொருப் போராளி அந்த சுதந்திர ஜோதியை நெஞ்சுள் சுமந்து தொடரோட்டம் ஓடி ஒரு கட்டத்தில் வெற்றியின் எல்லையைத் தொட்ட சமயத்தில் எழுதிய வரிகள் உணர்வின் உச்சத்திற்கு அழைத்துச் செல்பவை. 91ல் காப்டன் வானதி எழுதிய கவிதைக்குப் பதிலாக 2000. நாதினி எழுதுகிறார்:

எழுதாத என் கவிதையை எழுதுங்களேன்
எனும் உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது
உப்பு வெளியில் உருகிய
உங்கள் உடல்கள் மீது
எமது வீரர்கள் எழுதாத உன் கவிதையை
எழுதி முடித்தனர்

எம்மை ஏறி மிதித்து அவர்
ஏளனம் செய்த மண்ணில்
இப்போ என்
தேசியக் கொடி பறந்து
எழுதாத உன் கவிதை
எழுதப்பட்டுவிட்டது

க்ளத்தில் நிற்கையிலும் காதுகளில் குண்டு சப்தம் கேட்கையிலும் மனசின் நுண்மூலையில் பாசமும் காதலும் உறவின் மேன்மையும் ஒரு தென்றலைப் போல் வருடும் வரிகளும் இத்தொகுப்பிலுண்டு.

இப்போதெல்லாம் அவனை
அடிக்கடி காணமுடிவதில்லை
முகாமின் வாசலில்
அவனது வாகனமோ
தோழர்களோ நிற்கக்கூடும்.
எல்லாவற்றையும் தாண்டியத்
தேடலாய் என் பார்வை விரியும்.

எப்போதாவது தெருவில்
அவசர இயக்கத்தில்
கண்டுவிட நேர்கையில்
சந்திப்பை வரவேற்பதாய்
அவன் கண்கள் ஒருமுறை விரியும்
மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும்
அவனுக்குத் தெரியும்
எனக்கு அது போதுமென்று…”

துப்பாக்கிச் சூழலில் அதிகாரம் பிறக்குமெனில், காதலும் பிறக்க வாய்ப்புள்ளதுதானே!

இந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் போகக்கூடும்.! வாழ்க்கையிலிருந்து போராட்டமோ சாவல்களோ இல்லாத சூழலில் வடிவம், மொழி இவற்றிலிருந்து புதிய சவால்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்கள். புதுக்கவிதை இயக்கமே மத்திய வர்க்கம் சார்ந்த ஒரு சூழலில் ஈழத்துக் கவிதைகளோ போராட்டக் களத்தின் மையத்திலிருந்து எழுபவை. பிரச்சனைகளில் நேரடீத் தாக்குதல்களின் பக்கவிளைவுகளாக ஈழக்கவிதைகள் உருவாகின்றன என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கவிதைகளை கவிதைச் சாரமே இல்லை என மறுப்பவர்களும் கூட இக்கவிதைகளின் வழியாய் வெளிப்படும் குரூர அவஸ்தையை, வலியை, வாதையை, குருதி வழியும் மொழியை நிணம் மணக்கும் ரணத்தை மறுக்கவியலாது. ஏனேன்றால் இக்கவிதைகளில் குருதியின் வீச்சமும் கந்தக நெடியும் வீசுவதை நல்ல வாசகனின் நாசி உணரக்கூடும்.

கவிதை என்பது மவுன வாசிப்புக்கு மட்டுமே என்பதும் பொதுத்தளத்துக்கு வந்ததனாலேயே அது தன் கலைத்தன்மையை இழந்துவிடுகிறது என்று இட்டுக்கட்டப்பட்ட மூட நம்பிக்கைகளை மீறி யுத்தத்தின் சப்தத்தின் நடுவிலும் காதலின் மெல்லிசை கேட்பதும் அதிகாரத்தின் ஆயிரம் கைகளை மீறி விடுதலை நேசிக்கும் நம்பிக்கையின் உதயரேகைகள் மின்னுவதும் இத்தொகுப்பின் சிறப்பம்சங்கள்.

“விடியல்” “ஊடறு “வழியாக வந்திருக்கும் இந்நூல் நிச்சயமாய் ஓரு விடியலைத் தரிசிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *