மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது.…

என்றாலும் நான் எழுவேன்!

Caged_bird2

-மாயா அஞ்சலோ-
                               தமிழில்: லறீனா அப்துல் ஹக்  (இலங்கை)
—-

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி
வரலாற்றில் கடைநிலையில்
என்னை நீ எழுதலாம்;
அழுக்குக்குள் தோயும்படி
அழுத்தமாய் மிதிக்கலாம்
என்றாலும் நான் எழுவேன்,
சிறு புழுதியைப் போல!
எனது தோற்றமுனை வருத்துகின்றதா?
வாட்டமுற்று நீ வருந்துவதேன்?
என் வீட்டின் முன்னறை அருகிருந்து
முடுக்கிவிடத் தோதான – பல
எண்ணெய்க் கிணறுகளை
அடையப்பெற்றதுபோல் – நான்
நடப்பதைக் கண்டுதானோ?

நிலவினைப் போல்
பகலவன் போல் –
கடலதன் மேலெழும் அலைகளைப் போல்
கிளர்ந்தே உயர்ந்தெழும்
நம்பிக்கைகளைப் போல்
மேலும் நான் எழுவேனே!

தாழ்த்திய விழியுடன்
தலை கவிழ்ந்திருக்கஇ
அழுதழுது அரற்றியே
தொய்வுற்ற ஆன்மாஇ
கண்ணீர்த் துளியென
துவள்கிற தோளுடன்
நொறுங்கிய நிலையில் – எனைக்
காணவோ விழைகிறாய்?

என்னுடைய கொல்லை(ப்புறத்தில்)யில்
பொன்னுடை சுரங்கங்கள்
பெற்றதைப் போல நான்
வாய்விட்டுச் சிரிக்கிறேன்.
என்னுடைய ‘நிமிர்வு’ உன்னுள்
சீற்றத்தை விளைக்குதோ? – கடின
உழைப்பின் பயனென
அதனைக் கொள்ளாயோ?

சுடுமொழி கொண்டு நீ
என்னைச் சுடலாம்|
விழிகள் இரண்டினால்
வெட்டியும் போடலாம்
தீரா வெறுப்பினால்
எனை நீ கொல்லலாம்
ஆனால்இ
வீசிடும் காற்றாய் – அதன்
பின்னும் நான் எழுவேனே!

வைரங்கள் கிடைத்ததாய்
கால்களை இணைத்து நான்
நடனத்தில் திளைக்கையில்இ
என்னில் எழும் கிளர்ச்சி
உனைத் துன்புறுத்துகிறதோ?
ஒரு புதிராகத் தோன்றியே
வியப்பினில் ஆழ்த்துமோ?

வரலாற்று இழிவென்னும்
குடில்களைத் தாண்டி
நான் எழுவேன்!
வலிகளில் வேரோடிய
கடந்தகாலத் தடமிருந்து
நான் எழுவேன்!

நான் ஒரு கருங்கடல்இ
ஆழ்ந்து அகன்றவள்
பொங்கியே ஆர்த்தெழும்
பேரலையானவள்!
பயமெனும் இருள்களைப்
புறந்தள்ளி எழுவேன்!

அற்புதமானதோர்
புலர்காலைப் பொழுதாய்
நான் மீள எழுவேன்!

என் முன்னோர்கள் தந்திட்ட
முதுசொம்கள் சுமந்து
அடிமைகள் சமுதாய
விடுதலையின் கனவாய் – நான்
எழுவேன்,
எழுவேன்,
எழுவேனே!

                                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *