ஆழியாள் கவிதைகள் (அவுஸ்திரேலியா)

வீடு


எனக்கோர் வீடு

நாலு சதுர அறைகளும் (10 அடி –  10 அடி)
நன்நான்கு மூலைகளும்
நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

என்னைச் சுழற்றும் கடிகாரமும்
என்னோடே வளரும் சுவர்களும்
சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர்
வீடு வேண்டும் எனக்கு.

பூட்டற்ற கதவுகளுடன்,
சாத்த முடியாத ஜன்னல்களுடன்
எப்பக்கமும் வாயிலாக
வீடொன்று வேண்டும் எனக்கு.

குளிரில் கொடுகி
வெயிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்றில் அசைந்து -என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த

ஒரு வட்ட வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு
வானத்தின் வளைவுடன்.

(30.01.2007)

************

“இரைச்சலில் நம் காதுகளுக்கெட்டாத வாக்கியங்களின் கருணையையும், கரிக்கும் உப்புக்காற்றில் காதலர் மென்று விழுங்கிய அழகிய சொற்களையும், பிரம்ம ரகசியமாய்க் கோர்த்து வைத்திருக்கிறது அப் பெருமடி.”

பெருமடி


கடற்கரைகளில்
எவ்வாறெல்லாம் புதைத்திருக்கிறோம்
இரகசியங்களை.

விரல்களால் கீறி அழித்தவையும்
காற்பெரு நகத்தால் நிமிண்டிப் புதைத்தவையும்
கால் நனைக்கையில் பாதத்தூடு நழுவிப் போனவையும்,
மணற்கோட்டையாய் எழுந்தவையும்
தோண்டிய குழியுள் விழுந்தவையும் என
எத்தனை இரகசியங்களைப்
புதைத்திருக்கிறோம் கடற்கரைகளில்?
எத்தனையைக் கரைத்திருக்கிறோம் இக் கடல்நுரைகளில்.

ஆனால்
கடலின் பெருமடியோ வாஞ்சை மிக்கது,
மிக வாஞ்சை மிக்கது.

இரைச்சலில்
நம் காதுகளுக்கெட்டாத வாக்கியங்களின் கருணையையும்,
கரிக்கும் உப்புக்காற்றில்
காதலர் மென்று விழுங்கிய அழகிய சொற்களையும்,
பிரம்ம ரகசியமாய்க் கோர்த்து வைத்திருக்கிறது அப் பெருமடி.

ஒவ்வோர் நாளினது கடைநுனியிலும்
நம் ஒவ்வோரது ஒவ்வொரு ரகசியமும்
உயிர் பெற்று எழுகிறது
சினை பொதிந்த ஓர் வெள்ளி மீனாய்
ஓர் கடற்பாசித் தாவரமாய்
ஓர் பவளப் பூப்பாறையாய் உருக்கொண்டு.

ஆமாம்
கடலின் பெருமடியோ வாஞ்சை மிக்கது,
மிக வாஞ்சை மிக்கது.

மீளவும் மற்றுமொரு புதிய நாளின் விடியலில்
ஹோ….ஹோ…ஹோவென
மேலும் இரகசியங்கள் பல வேண்டி
ஆர்ப்பரித்துப் பாறைகளில் மோதிச் சிதறுகிறது கடல்.
கரையொதுங்கும் அலைகளூடு
தவிப்பாய்க் காத்திருக்கின்றனர் கடற் கன்னியர்
நம் இரகசியங்களைக் கடல் சேர்த்து உயிர்ப்பிக்க.

17.01.2007

***********

சுருங்கிய வெறுங்கைகளே, வெம்பி அல்லாடிச் சொல்லப், போதுமானதாய் இருந்தன, வேண்டாம் போர் என்று.

கி.பி 2003இல் தைகிரீஸ்…கி.பி 2003இல் தைகிரீஸ்…


என் மடியில்
வாட்டிய பாண்; துண்டுகளுடன்
அமர்ந்திருந்தது ஒரு கோப்பை.
ஆசுவாசமாய் அருகே
தன் ஆவியைப் பறக்க விட்டபடி
சிறு கோப்பிக்கிண்ணம்.

விடிகாலைச் செய்திகள்
தொலை நிழலாய்
சுருள் அவிழ
தூரத்துப் பார்வையில்
தைகிரீஸ் நதிக்கரையைப்
பார்த்திருந்தேன்.

இருண்முகிலாய்ப் பிரண்டெழும்
புகைமூட்டத்துள்
உலகத்துக் கடவுளரெலாம்(?)
ஒற்றுமையாய் வந்தாற்போல
சோதிப் பெரும் பிரகாசத்தில்
ஊனக்கண் கெடப் பார்த்திருந்தேன்.

அசரீரிகளின் ஒலித்தெறிப்பில்
செவிப்பறைகள் அதிர்ந்து நோக
மேலும் பார்த்துக் காத்திருந்தேன்.

கிட்டவே இப்போது மிகக் கிட்டவே
தெரிகிறது தைகிரீஸ் நதிக்கரை.

அங்கு காலகாலமாய்க்,
காலம் தன்னில் கதைகளை கிறுக்கிச்
சென்ற கைகளை
உயர்த்தி மேலே பிடித்திருந்தது
மெசப்பத்தேமியா

அதில்
பதாகையேதும் தெரியவுமில்லை,
இருக்கவுமில்லை.

சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று.

கண்கள்
கரும்பிணம் மிதக்கும்
சிறு குட்டைகளாய்
கலங்கிக் குழம்பித்
தெளிவுற முயல

காலியாய்க் கிடந்தன
கோப்பையும்
கிண்ணமும்.

(27.03.2003)

************

காமம்


உயரும்
மலையடிவார மண்கும்பிகளுள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்

பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று –
அவளுக்கு.

(10.11.2002)

************

கலாச்சாரம்


நேர்கோட்டுக் கூட்டங்கள்
உருவமைத்த
அடுக்குமாடிச் செவ்வகங்களும்
கூரை முக்கோணங்களும்
நீலத்தில் அளைந்து கரையும்
பார்வைகளுக்கு ஓர் இடையூறாய்
கண்ணாடி ஜன்னல்களும்.

அறையுள்
இயந்திரச் சலிப்புடன்
நேர்கோடு வரைந்து வைத்த
ஆதாரத் திண்மங்களாய்
மேசை, தாள் கோப்புப் புத்தகங்களோடு
விடைத்த அவன்.

திட நிலைச் சுவர்கள்
நாலு மூலைகளில் நெட்டையாய்க் குந்தியிருந்தன.

இருத்தலின்
சுவாரசியம் அருக
அடைபட்ட நிலைக்கதவின்
பிடிதனை வளையத் திருகித்
திறந்த போது
சிரித்துக் கலகலத்துப்
பேர் வெள்ளமாய்க் கரை உடைக்கும்
புகுந்த
நேர்கோட்டிற் பயணமுறா ஒளிக்கற்றைகள்.

(28.10.2002)

1 Comment on “ஆழியாள் கவிதைகள் (அவுஸ்திரேலியா)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *