போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்

வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் அதன் பின் பேசினார்: அவர் பேச்சில் சில கருத்துகள்… தோழி புதியமாதவி, உயிருடன் வாழும் இன்றைய போராளிகளின் நிலை என்ன வாக இருக்கிறது என்கிற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் குறித்து அவர் அறியாதவர் அல்ல. ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் தங்கள் வருங்கால துணைவர் என்னவாக இருக்க வேண்டும் என்று படித்த இளம்தலைமுறையைச் சார்ந்த இன்றைய பெண்கள் பேசினார்கள்.
 
 
போரிலக்கியம் என்ற சொல் தமிழனுக்கு ஒன்றும் புதியதல்ல. காதலும் வீரமும்
நாணயத்தின் இருபக்கங்கள் போல வாழ்ந்த நம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில்
வீரம் மிக்க கதைகள் பல உண்டு.“பகைவர் முன் நின்று போரில் யானையைத் தடுத்துக் கொன்று வீர மரணம்
அடைந்த வீரனுக்கு எடுத்த நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர
எமக்கு வேறு வழிபாடு இல்லை” என்று சங்க இலக்கியத்தில் பேசப்பட்டது
வெறும் கவிதை மட்டுமல்ல, அதுவே நம் வாழ்க்கை. அதுவே நம் வழிபாடு.
அதுவே நம் நம்பிக்கை. தமிழன் வாழ்க்கையில் சிரார்த்தம் செய்வதெல்லாம்
கிடையாது. அதெல்லாம் ரொம்பவும் பிற்காலத்தில் வந்ததுதான்.
நடுகல் வழிபாடாக இருந்த தமிழன் வழிபாட்டின் தொடர்ச்சியாகவே
திருவள்ளுவர் நம்பிய “நீத்தார் பெருமை”யும். இன்றும் கூட எம் கிராமப்புறங்களில்
தைப் பொங்கலுக்கு அடுத்த நாளில் அக்குடும்பத்தில் நீத்தார்பெருமையை
நினைவுகூர்ந்து அவர்களுக்கு விருப்பமானதைச் சமைத்துப் படையலிட்டு
புதுத்துணி வாங்கி வைத்து அக்குடும்பத்தார் கூடி வழிபாடு செய்யும் நாளாகவே
இருப்பது அதன் எச்சம் தான்..
 
போரிலக்கிய வரலாற்றில் கலிங்கத்துப் பரணிக்கு தனி இடம் உண்டு, எனினும்
பரணியில் பெண்ணுக்கான இடம் போர்க்களத்தில் போரிட்டு இல்லம் திரும்பும்
ஆடவனை மகிழ்விப்பது மட்டுமே. அதாவது வீரனின் காதல் வடிகாலாகவும்
பசித்திருக்கும் அவன் காமத்தைத் தீர்த்து வைக்கும் நுகர்ப்பொருளாகவும்
மட்டுமே சித்தரிக்கப்படுகிறாள். போர்த்தெய்வமாக பெண் தெய்வம் வளர்த்தெடுக்கப்பட்ட
இக்காலக்கட்டத்திலும் கூட பெண்ணின் நிலை இப்படியாகத்தான் இருந்தது.
இதை தொல்காப்பியர் கால தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே காணலாம்.
தமிழனின் பண்பாடு என்று பேச வரும் போது அதன் முதல் அத்தியாயத்தில்
இடம் ப்டிக்கும் தொல்காப்பியமும்
 “போர்க்களத்தில் பெண்ணை விலக்கியே
வைத்திருக்கிறது “
“எண்ணரும் பாசறைப் பெண்ணோடு புணரார்”
“புறத்தோர் ஆங்கண் புரைவதென்ப “
(தொல். பொருளதிகாராம் கற். நூற்பா 34 &35)
 
இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் பெற்றதுடன் இந்திய இனக்குழு மக்களின் வாய்மொழிப் பாடல் கதைகளில் இடம் பெற்று ஏதொ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டும் கூட என்னிடம் கேட்டால் ‘போரிலக்கியம்’ என்று தான் சொல்வேன். அவ்விரு காப்பியங்களிலும் ‘அரக்கியர்’ என்றழைக்கப்படும் பெண்கள் தான் ஆணுடன் சமமாக எதிர்நின்று சமராடிய பெண்களாக என் கண்முன் வருகிறார்கள். இந்தக் காப்பியங்கள் எல்லாம் கற்பனையேஎன்று சொல்லுபவர் குறித்து நமக்குப் பிரச்சனையே இல்லை! ஆனால் காப்பியநிகழ்வுகள் எல்லாம் வரலாறாக நிறுவப்படும் போது இந்த அரக்கியர் யார்? என்பதும் அந்த வீரப்பெண்களுக்கும் தமிழ்ச் சமூகத்திற்குமான அடையாளம் குறித்தும் தொடர்புகள் குறித்துமான இந்திய இனக்குழு வரலாற்றை நாமும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.இராமயணக் காப்பியத்தில் அயோத்தி இராமனின் தந்தை தசரதனின் காதல் மனைவி கைகேயிதான் மன்னனுடம் போர்க்களத்தில் அருகிலிருந்தப் பெண்ணாக காட்டப்படுகிறாள்.தசரதன் போரிடும் போது தேர்ச்சக்கரத்தின் அச்சாணி முறிந்துவிட அவள் தன்கட்டைவிரலை அச்சாணியாக்கி அவன் வெற்றிக்கு காரணமாகிறாள். அதனால்தான் தசரதன் அவளுக்கு இரு வரம் கொடுத்ததாகவும் அவள் அந்த வரங்களை தனக்குத் தேவைப்படும் காலத்தில் கேட்டுக்கொள்வேன் என்று சொன்னதும் அதன் பின் இராமனின் பட்டாபிஷேகத்திற்கு முந்தினம் அவள் வரம் கேட்டதும் அவன் கொடுத்ததும் இன்றும் நம் அயோத்தியா அரசியல் வரை விரிகின்ற இராமாயணக்கதையாக இருக்கிறது .
மகாபாரதக் கதையில் மானபங்கப்படுத்த தேவி பாஞ்சாலி கூட
ஓம் தேவி பராசக்தி ஆணையுரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்- அந்தப்
பாழ் துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டும் கலந்து குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவி குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியேன் “
 
 
 
என்று சபதம்தான் செய்தாளே தவிர அவள் சபதத்தை நிறைவேற்றியதும் அந்தப்பொறுப்பும் அவள் கணவன்மாரின் செய்லபாடாகவே இருப்பதையும் பார்க்கிறோம்.
முதலாம் உலகப்போரின் மிகச்சிறந்த போர் இலக்கியமாக போற்றப்படும்விரா மேரி பிரிட்டனைனின் தன் வரலாறு கூட ( Vera Mary Brittain’s Her
Testament of youth is oமுதலாம் உலகப்போரில் போரில் காயம்பட்ட ஜெர்மானிய வீரர்களைக் கவனிக்கும் செவிலிப்பெண்ணாக வேலைப்பார்த்த அனுபவமும் அப்போரில் தன் காதலனையும் சகோதரனையும் இழந்த வலியும் அவள் தன் வரலாற்றையும் போரின் கொடுமைகளையும் எழுத வைத்தன எனலாம்.இந்த வரலாற்றின் பின்னணியில் அண்மையில் ஊடறு + விடியல் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ஈழப்பெண் போராளிகளின் கவிதை தொகுப்பு நூல்“பெயரிடாத நட்சத்திரங்கள்’ மிகுந்தக் கவனத்தைப் பெறுகிறது.
 
 
வீர உணர்வை தலைமுறை தலைமுறையாய் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கடப்பாடு மட்டுமே கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்கான அந்த வீர உணர்வையும் கண்ணகியின் அறச்சீற்றத்தையும் தொன்மங்களிலிருந்து எடுத்துக்கொண்டு நம் ஈழப் பெண் போராளிகள் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைத்திருக்கிறார்கள்.கவிதைக்கான தகுதிகளாக படிமம் , குறியீடு என்ற அறிவுஜீவித்தனமான அளவுகோல்களை எல்லாம் வைத்துக்கொண்டு இக்கவிதையை அணுகுபவர்கள் நிச்சயமாக ஏமாற்றம் அடையக் கூடும்.க்ருத்துருவாக்கங்களின் எதிரொலியாக உருவாகும் கவிதைகள் பிரச்சாரமாக குன்றிவிடும் என்று நவீன கவிதையின் பிதாமகன்கள் எல்லால் சொல்லியிருப்பதைப் புரட்டிப் போட்டிருக்கும் நெம்புகோல் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள். வாழ்க்கை அனுபவத்திலிருந்துநிறுவப்படும் கருத்துருவம் பிரச்சாரமாகாது என்பதற்கு ஈழப் பெண் போராளிகளின் இக்கவிதைகளே மிகச்சிறந்த சான்றுகளாக இருக்கின்றன.19 வருடங்களாக நீதிமன்ற கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்த எம் வாச்சாத்தி பெண்களின் சோகத்தின் ஒரு துளி கூட எம் தாய்த்தமிழ் நாட்டின் பெண் கவிஞர்களின் பெண்மொழியைப் பாதித்ததில்லை. வரலாற்றுப் பார்வையோ சமகால அரசியல் பார்வையோ அது குறித்த தெளிவோ தேடலோ நம் தமிழ்நாட்டில் பெண் கவிஞர்களிடம் இல்லையே என்று ஆதங்கப்படும்சூழ்நிலையில் தான் ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள் மிகச்சிறந்த ஆறுதலாக இருக்கின்றன.அரசியல், வரலாற்று நிகழ்வுகளின் ஊடாகப் பயணித்து பெண்ணுடலை, பெண்ணியத்தைப் பேசி இருக்கிறார்கள்.இவர்கள் ஆயுதம் தாங்கியது காலத்தின் கட்டாயம் என்பதை அடுத்த நூற்றாண்டின் வாசகனுக்கும்எளிதில் உணர்த்தும் வகையில் பின் இணைப்பாக யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் 1996ல் கவிதை வடிவில் வெளியிட்ட துண்டு பிரசுரத்தை இணைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
 
தான் கவிஞராக அறியப்பட வேண்டும் என்றோ பெண்ணியம் பேச வேண்டும் என்றோ தேச இன விடுதலையை ஆவணமாக்க வேண்டும் என்றோ எழுதப்பட்டவை அல்ல இக்கவிதைகள். ஆனால் இவை எல்லாமாக இருக்கின்றன இக்கவிதைகள். சிட்டுக்குருவிகளின்சிறகசைப்பு போல மழைத்துளிப் பட்ட மண்வாசனைப் போல பனிக்குடம் உடைத்து மலர்ந்த குழந்தையின் அழுகுரல் போல இயல்பாக, உண்மையாக இருக்கின்றன இக்கவிதைகள்.
 
விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக புகலிடத்து வாழும் மேற்கத்தியபெண்நிலைவாத நோக்கில் மட்டுமே சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.பெண் என்றால் உயிர்தரும் தாயமை பெண் போராளி என்றால் உயிர் அழிக்கும் வன்முறைபெண் இயல்புக்கு மாறான பெண்ணின் இயற்கை உணர்வுகளை அழித்த குரூரம் என்று குரல் கொடுத்தனர்.இன்னொரு பக்கம் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தப் பெண்களை முற்றிலும் வித்தியாசமானவர்களாக மற்ற பெண்களிடமிருந்து மாறுபட்டவர்களாக சித்தரித்தனர்.அடேல் பாலசிங்கம் அவர்கள் ” women is combat belong to a totally new world, a world outside a normal woman’s life. And that is what makes these women fighters so interesting and admirable.They have taken up a life that bears little resemblance at all to ordinary existence of women’என்றார்கள். பெண் போராளிகளுக்கும் சமூகத்திற்குமான இடைவெளி இருந்து கொண்டே இருந்தது என்று சொல்வதை விட அப்படி ஒரு இடைவெளியை உருவாக்கி அதைப் பத்திரமாகக் கட்டிக் காப்பதில்இயக்கமும் சமூகமும் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.விளைவு?
 
இன்று அவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்ற கேள்விதான்.போர்க்காலத்தை விடக் கொடியது போருக்குப் பிந்தையக் காலக்கட்டம். துப்பாக்கிகள் மவுனமான இக்காலக்கட்டத்தில் அவர்கள் போற்றப்படவில்லை. கொண்டாடப்படவில்லை. உயிருடன் வாழும்பெண் போராளிகளின் இன்றைய நிலைமை தமிழ்ச் சமூகத்தின் நன்றி கெட்ட குணத்தை மட்டுமல்ல,தமிழ்ச் சமூகத்தில் முகமூடியைக் கிழித்திருக்கிறது.அவர்கள் ஆயுதம் தாங்கியதும் போராடியதும் யாருக்காக?அவர்கள் உடல் ஊனமுற்றது யாருக்காக?போரில் வீரமரணம் அடைந்தால் மட்டும்தான் போராளியா?போரில் காயமடைந்து ஊனமுற்றவர்களாக தோற்றுப்போனவர்களாக களைத்துப் போயிருக்கும்அவர்கள் இன்று நிராயுதபானியாக தங்களுடைய சொந்த தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக– அதன் உடலிருந்து வடியும் சாதியம், சடங்கு சம்பிரதாயம், ஆணாதிக்கம் ஆகியஅனைத்துக்கும் எதிராக களத்தில் நிற்கிறார்கள். அவர்கள் இன்னும் மரணிக்கவில்லை.(04/12/2011 ஞாயிறு மாலை, மும்பை தமிழ்ச் சங்கத்தில் , தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் 13 ஆம் அமர்வில் பெயரிடாத நட்சத்திரங்கள் – ஈழப்பெண் போராளிகள் கவிதைத் தொகுப்புகுறித்த அறிமுக உரை. )

பெயரிடாத நட்சத்திரங்கள் – ஓர் அறிமுகம்

மும்பை , சயான் தமிழ்ச்சங்கத்தில் கடந்த ஞாயிறு 04/12/2011 மாலை6.30 மணிக்கு தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமத்தின் 13ஆம் அமர்வுநடைபெற்றது. வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் அதன் பின் பேசினார்: அவர் பேச்சில் சில கருத்துகள்… தோழி புதியமாதவி, உயிருடன் வாழும் இன்றைய போராளிகளின் நிலை என்ன வாக இருக்கிறது என்கிற அவலத்தைச் சுட்டிக் காட்டினார். அவர்களை இன்றைய தமிழ்ச்சமூகம் குறித்து அவர் அறியாதவர் அல்ல. ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் தங்கள் வருங்கால துணைவர் என்னவாக இருக்க வேண்டும் என்று படித்த இளம்தலைமுறையைச் சார்ந்த இன்றைய பெண்கள் பேசினார்கள். அனைவருமே தங்களுக்கு ஏ.டி.எம் மிஷின் போல ஒரு கணவன் வேண்டும் என்று தான் விருப்பப்பட்டார்கள். ஒரு mediocrity சமூகத்தில் ,அறிவியல் ரீதியான பார்வைகளை தொலைத்து விட்ட சமூகத்தில் ,விளம்பரங்களை அலசல்கள் இல்லாமல் ஏற்றுகொண்ட சமூகத்தில் இம்மாதிரியான ஒரு படித்த இளம் தலைமுறையை உருவாக்கி இருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தில் போராளிகளைப் பற்றியோ நம் விழுமியங்கள் குறித்தோ எம்மாதிரியான அக்கறைக் கொண்டிருபார்கள் ! அவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்? இதற்கெல்லாம் யார் காரணம்? என்ற தொடர் கேள்விகளை நான் வைக்கிறேன். பெண்கள் இன்று நேற்றல்ல,யுகங்களாக போர்க்களத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆயுதம் தாங்கியும் ஆயுதம் தாங்காமலும். போர் என்று சொல்வது தேசியம் என்ற போர்வையில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டது. அதனால் தான் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் மகள் தன் பிறவியை வெறுக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு “தம் நண்பருக்கு எழுதிய கடிதமாக” மன அழுத்தத்துடன் வாழ்ந்த நெருக்கடிகளை வெளியிட்டிருக்கிறார். சாதியமும் மதச் சடங்கு சம்பிரதாயங்களும் எப்போதும் எல்லா நாடுகளிலும் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருந்தன, இருக்கின்றன. ஆவணப்படங்களை எடுப்பது என் தொழிலாகவும் நான் விரும்பும் செயலாகவும் இருப்பதால் இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களை நானறிவேன்.

 
ஒருமுறை தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில், அங்கு ஒதுக்கப்பட கிராமப்புறங்கள் இருந்தன, நான் காலில் செருப்பணிந்து அவர்கள் தெருவழியே நடந்து சென்றுவிட்டதால் (நான் அப்போது அதை வேண்டுமென்றே செய்யவில்லை என்பது வேறுவிஷயம். இப்போது போனாலும் அப்படித்தான் நடந்துக்கொள்வேன் என்பதும் உறுதி) ஒரு நாள் முழுவதும் நான் அங்கிருக்கும் உயர் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து பலவிதமான தொல்லைக்கும் ஆளானேன் .. இம்மாதிரியான பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அம்மாதிரியான சூழலில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் அதை மவுனத்தில் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து குரல் கொடுக்கும் கலகக்குரலிலும் நாம் இன்னும் அறியாத பெண் போராளிகள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேசவிடுதலையின் ஊடாக பெண்விடுதலையைக் கனவுக் கண்ட போராளிகள் இந்தப் பெண்கள் என்பதை அவர்களின் கவிதைகளைப் புரட்டிப் பார்த்த இந்த சில நிமிடங்களில் என்னால் அவதானிக்க முடிந்தது. பெண்களுக்கு என்று தேசமில்லை, நாடில்லை, மொழியில்லை, எங்கெல்லாம் மனிதம் கொலைசெய்யப்படுகிறதோ அங்கெல்லாம் முதலில் ஒலிக்கும் கலகக்குரலாய் இருப்பதும் பெண்ணின் குரல்தான்ன்பதையும் இக்கவிதைகள் உணர்த்த தவறவில்லை. பெண் எப்போதும் இரண்டால் பால்நிலையில் வைத்து தான் பார்க்கப்படுகிறாள் (second sex). ஈழத்திலோ இரண்டாம் குடிமகனாக்கப்பட்ட தமிழ் ஆண்களின் சமூகச்சூழலில் இவளின் பால்நிலை எம்மாதிரி இருந்திருக்கும் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இக்கவிதைகளை வாசிக்கும் போது இப்பெண்கள்
 
 ஆயுதம் ஏந்தியதும் களத்தில் ஆணுக்கு நிகராக நின்று சமர் புரிந்து வெற்றிகள் பல கண்டதும் இந்தப் பயணங்களின் ஊடாக பெண்விடுதலையைப் பேசியதும் கனவு கண்டதும் இக்கவிதைகளை வாசிக்கும் போது நான் கண்ட பல்வேறு தளங்களாக விரிகின்றன. போரிலக்கியங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். war literature, warring literature, literature under war. பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பு literature under war எனப்படும் போர் நெருக்கடியில் எழுதப்பட்ட இலக்கியவகையைச் சார்ந்ததாகவே நான் கருதுகிறேன். அடுத்துப் பேசிய திரு ராஜாவாய்ஸ் அவர்கள் இக்கவிதைகளுக்கு முன்பாக படைக்கப்பட்ட ஷோபாசக்தி கொரில்லா, இம் ஆகிய படைப்புகளிலிருந்து ஈழப் போரிலக்கியங்களைப் பேச ஆரம்பித்தார். இப்பெண் போராளிகளின் கவிதைகள், இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல சமூகத் தளத்திலும் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டியதுடன், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் இப்பெண் போராளிகளால் பெருமை அடைகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் தான் இப்பெண்கள் வீடுகளைத் துறந்து சமூகவெளிக்குள் வர மிகப்பெரிய காரணிகளாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. பகைவன் இப்படித்தான் இருப்பான் என்பதை ஏற்றுக்கொண்ட நம் பெண்களால் அவர்கள் நம்பிய பெரிய அண்ணனின் துரோகம் அந்தத் தூரிகைகளைத் துப்பாக்கி ஏந்த வைத்தது. இந்தப் போராளிகள் பிறந்த தமிழ்ச் சமூகத்தில் தான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதற்காகவும் அவர்கள் வாழ்ந்தக் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்காகவும் இப்போதைக்கு நாம் பெருமைப் பட்டுக்கொள்வோம். கையறுநிலையில் வாழும் நமக்கு சின்ன ஆறுதலாக இருக்கிறது என்ற ஆதாங்கத்துடன் தன் பேச்சை முடித்துக்கொண்டார். கவிஞர் தமிழ்நேசன் பெயரிடாத நட்சத்திரங்கள் குறித்த தன் பார்வையைக்
கீழக்கண்டவாறு பதிவு செய்தார்.
 
போரிலக்கிய வரலாற்றில்… என்று அறிக்கை அழைப்பு வந்தது. புத்தகம் கைக்கு வந்தவுடன் இது போரிலக்கியமாக மட்டுமல்ல, பேரிலக்கியமாகவும் திகழ்கிறது என்பதை இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையின் கனமும் உணர்த்துகிறது. எழுத்து என்பது போராட்டத்தின் ஒரு வடிவம் , ஒரு முகம் என்பதை மறந்துப் போன மறத்தமிழனுக்கு நினைவூட்ட வந்த நட்சத்திரங்கள் இவை. இத்தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே இதயத்தை இனம்புரியாத கனம் ஆட்கொண்டுவிட்டது. முதல் கவிதையைப் படிக்க ஆரம்பித்த வுடன் என்ன பேச வேண்டும் என்பது மனசிற்குள் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல ஓட் ஆரம்பித்தது. இரவும் பகலும் மனசை நிலை கொள்ள இயலாத தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றன இக்கவிதைகள். ஒவ்வொரு கவிதையையும் வாசித்துமுடிக்க வெகுநேரம் தேவைப் படுகிறது. ஒவ்வொரு வரியும் அது ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து மீண்டு, அடுத்த வரி அடுத்த கவிதை செல்வதற்கு நம்மை ஆசுவாசபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு கவிஞைகளின் படைப்புகள் கால வரிசையில் முன்னும் பின்னுமாக இருந்தாலும் கூட ஒரு கவிதையின் தொடர்ச்சியாக அடுத்த கவிதையையும் நாம் காணமுடிகிறது. அம்புலியின் “நாளையும் நான் வாழ வேண்டும்” என்ற கவிதை சம்மட்டி எடுத்து நம் நம் நெற்றியில் ஓங்கி அடித்ததைப் போல உணர்கிறேன். கவிதையின் அத்தலைப்பிலிருந்து மீளவே வெகுநேரம் ஆனது.
 
நான் எப்போதும் மரணிக்கவில்லை என்பதிலும் யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை என்ற வரிகளிலும் ஒவ்வொரு ஈழத்தமிழனின் உணர்வுகளின் பிரதிபலிப்பே. யுத்தம் எமக்குப் பிடிக்கவில்லை எம்மீது திணிக்கப்பட்டது என்பதையும் சேர்த்தே ஆவணப்படுத்தி இருக்கின்றன இக்கவிதைகள். இந்தப் பெண்ணின் மனசைத்தான் கடும்போக்கு உடையவர்கள் என்று விமர்சிக்கப்பட்டதையும் நாம் அறிவோம். உங்களைப் போலவே எனக்கும் வாழ்க்கையின் சுகமான நிமிடங்களை அனுபவித்து வாழ ஆசை உண்டு. நான் வெறும் ஆயுதம் தாங்கியவள் மட்டுமல்ல, ஆயுதம் தாங்கியதாலேயே நான் முரடும் அல்ல, எனக்குள் ஈரம் உண்டு, அந்த ஈரம்தான் என் மக்களின் வாழ்க்கைக்காக என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. ஆயுதம் ஏந்தியதால் எனக்குள் ஆசை, காதல், அன்பு, கருணை, பாசம் எல்லாம் மரணித்துவிட்டதாக எண்ண வேண்டாம், நான் அதே உயிர்த்துடிப்புடன் தான் வாழ்கிறேன், இன்றுமட்டுமல்ல, என்றும் எப்போதும் என்னை நான் , என்னுள் இருக்கும் என்னை நான் இழந்துவிட மாட்டேன்’ என்று அடித்து சொல்வது போல சொல்கிறார்,
 
‘நான் இன்னும் மரணிக்கவில்லை’ என்று. எழுதாத என் கவிதையை எழுதுங்களேன் என்ற காப்டன் வானதியின் தொடர்ச்சியாக தொடங்கும் நாதினியின் ‘உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.. உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது, எங்கள் கைகளுக்கு வந்த உந்தன் பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை” என்ற வரிகள் ஆய்தங்கள் மவுனமான இக்காலத்தில் மிகவும் பொருள் பொதிந்தவை. இப்படி எழுதப்பட்ட கவிதை இன்று காலச்சூழலில் சிக்கி சிதைக்கப்பட்டுள்ளது, வரலாறு நெடுக யுத்தமும் சிதைவுகளும் நீண்டு கிடக்கின்றதெனினும் நம் கண்முன்னே ஒரு கனவு தேசம் களவாடப்பட்டு விட்டதை நினைக்கும் போது இக்கவிதை வரிகள் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பதை உணர முடிகிறது. கிழிந்த காற்சட்டை ஒன்றை தைத்தவாறிருந்தாள் ஒருத்தி, ஊசியால் நூல் கோத்தவாறு அவள் மெல்ல சொன்னாள், ‘வானமும் பீத்தலாய் போய்ச்சுது, இது முடிய அதையும் நான் பொத்தி தைக்க வேண்டும் என்ற கவிதையில் காற்சட்டை பூமி மிகச்சிறந்த குறியீடாகி கவிதையைக் கனமுள்ளதாக்குகிறது.
 
நிகழ்ச்சியின் இடையில் பெயரிடாத நட்சத்திரங்கள் புத்தகத்திலிருந்து கவிதைகளை அ.ரவிச்சந்திரன், கவிஞர் ஜெயகாண்டீபன் ஆகியோர் வாசித்தார்கள். தமிழ்ச் சங்கத்தின் சிற்றரங்கம் தமிழ் ஆர்வலர்களால் நிரம்பி இருந்தது. நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தார்கள் ராஜாவாய்ஸும், கராத்தே முருகனும். நட்சத்திரங்கள் தெரியாத மும்பை இரவு வழக்கமான இலக்கிய கூட்டம் அல்ல இது என்பதற்கு சாட்சியாக அன்று தூங்காமல் விழித்திருந்தது.
 

பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்த தொகுப்புக்கு இது வரை வந்த விமர்சனங்கள், நேர்காணல்கள்.
வெளியீட்டு நிகழ்வுகள்

 *******

 பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை(ஜெயப்பிரகாஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி )

நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள் (http://www.globaltamilnews.net)

மரணத்தின் பின்பான வாழ்வு : பெயரிடாத நட்சத்திரங்கள்-(யமுனா ராஜேந்திரன்-http://www.globaltamilnews.net)

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! (காலம் ஆதரவில்)

பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” கனடா அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை)

(நன்றி கீற்று.கொம்)

மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள்

 

1 Comment on “போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *