25 ஆண்டுகளாக…?கூடங்குளத்திற்கும் இதே நிலை வேண்டுமா?

(பகலவன் குழுமம்}

timemagazinecover ஹசீரா தனது 11 மாதக் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்த ஹசீரா தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடுவதைக் கண்டார்.

1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலேதான் அன்றைய பொழுதும் கழியும் என்று இயல்பாக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினர் மக்கள்.அன்றாட வேலைகளை முடித்து விட்டு நிம்மதியாக மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகள், விளையாடி முடித்த களைப்பில், தன் பெற்றோரின் அரவணைப்பில் இனிமையான கனவுகளோடு, ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

இப்போது போல கேபிள் டிவியின் ஆக்ரமிப்பு இல்லாததால், ஊரே நிசப்தமாக இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டும், டிரான்சிஸ்டரில் கிஷோர் குமாரும், லதா மங்கேஷ்கரும் இனிய குரல்களில் இரவின் அமைதியை தாலாட்டிக் கொண்டிருந்தனர்.

போபால் மாநகரில், ஜெயபிரகாஷ் நகரில், ஹசீரா பீவி தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாரோடு ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். திடீரென்று எழுந்த அவரது கணவர் கடுமையாக இருமத் தொடங்கினார். “யாரோ மிளகாய எரிக்கிறாங்க போல இருக்கு“ என்று கூறினார். ஹசீரா பீவிக்கும் இருமல் கடுமையாக வந்தது.

ஹசீரா தனது 11 மாதக் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்த ஹசீரா தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு பல்வேறு திசைகளில் ஓடுவதைக் கண்டார். எங்கும் ஒரே குழப்பம். அலறல்.

மக்கள் கூட்டத்தோடு ஓடிய ஹசீரா மக்களோடு மக்களாக அருகில் இருந்த ஒரு கல்லூரிக்குள் சென்று அடைக்கலம் புகுந்தார். அங்கு சென்ற போதுதான் குழப்பத்தில் தனது 4 வயது மகனை வீட்டிலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வர மீண்டும் வீட்டுக்கு ஒடினால், இறந்து விட்டான் என்று நினைத்து தனது மகனை பிணங்களோடு வண்டியில் கிடத்தி வைத்திருந்ததை கண்டார்.

என்ன நடந்தது என்று உணர்வதற்குள்ளாகவே அன்று இரவே 4000 மக்கள் செத்து மடிந்தனர். யூனியன் கார்பைட் தொழிற்சாலைக்கு அருகாமையில் இருந்த குடியிருப்புகளான ஜெயப்பிரகாஷ் நகர், காஜி கேம்ப், சோளா கேன்ச்சி மற்றும் ரயில்வே காலனி பகுதியில் வசித்த அனைத்து மக்களும் கடும் பாதிப்புக் குள்ளாயினர்.

 timemagazinecover

பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி

 முதல் 72 மணி நேரத்திற்குள்ளாக 8000 மக்கள் செத்து மடிந்தனர்.

 அடுத்த சில ஆண்டுகளுக்குள் 15000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

 மொத்தத்தில் இந்த விஷ வாயுக் கசிவினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டுகிறது.

என்ன தான் நடந்தது அந்த மோசமான இரவில் ?

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாக பயிர் உற்பத்தியை அதிகரிக்க உயர் விளைச்சல் விதைகளை பயன் படுத்தத் தொடங்கினர். இந்த உயர் விளைச்சல் விதைகளுக்கு அதிக உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் தேவைப்பட்டன.

 உரங்களுக்கும் பூச்சி கொல்லிகளுக்குமான தேவை அதிகமானதால் 1969ம் ஆண்டு மத்திய பிரததேசம் போபால் மாநகரத்தில் “யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டேட்“ என்ற பூச்சி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப் பட்டது.

 இந்த தொழிற்சாலை, மோசமான பூச்சிக் கொல்லியாக உருவெடுத்திருந்த, சர்ச்சைக்குரிய “டிடிட்டி“ எனப்படும் “டைக்ளோரோபினைல் ட்ரைக்ளோரோஈதேன்“ என்ற ரசாயனத்துக்கு மாற்றாக “கார்பரில்“ என்ற பூச்சிக்கொல்லியை தயாரிப்பதற்காக நிறுவப் பட்டது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் ஸ்லோகன் என்ன தெரியுமா ? “விஞ்ஞானத்தின் உதவியோடு புதிய இந்தியா”

 அமேரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமாக அமெரிக்க நிறுவனம் 51 சதவிகித பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு தொடங்கப் பட்டது. இதற்கு முன் ராணுவத் திடலாகவும், சுற்றிலும், நெருக்கமான மக்கள் கூட்டம் இருந்த ஒரு இடத்தில் இத்தொழிற்சாலை தொடங்கப் பட்டது.

 இந்தப் பூச்சிக் கொல்லி தயாரிக்க தேவையான முக்கியமான ரசாயனம் “மீதைல் ஐசோ சயனேடு” என்ற கொடிய விஷம். இந்த மீதைல் ஐசோ சயனேடு யூனியன் கார்பைடின் அமெரிக்கா மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையிலிருந்து முதலில் இறக்குமதி செய்யப் பட்டு வந்தது.

 பிறகு 1980 முதல் போபாலிலேயே தயாரிக்கப் பட்டது. ஆனால் மீதைல் ஐசோ சயனேடு போபாலிலேயே தயாரிக்கத் தொடங்கிய நேரம், யூனியன் கார்பைடின் பூச்சிக் கொல்லிக்கு சந்தையில் வரவேற்பு குறையத் துவங்கியது.

 இறுதியாக 1984 டிசம்பர் முதல், இத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் நிறுத்தப் பட்டு, இத்தொழிற்சாலையை சுத்தமாக மூடி விட, யூனியன் கார்பைடு நிறுவனம் ஆலோசித்து வந்தது.

 தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப் பட்டாலும், 60 டன்கள் மீதைல் ஐசோ சயனேடு இத்தொழிற்சாலையின் மூன்று தொட்டிகளில் இருப்பு வைக்கப் பட்டிருந்தது. இத்தொட்டிகளில் 610 என்ற எண் உள்ள ஒரே தொட்டியில் மட்டும், பாதுகாப்பு அளவுகளை விட மிக அதிகமாக 40 டன் சேமிக்கப் பட்டிருந்தது.

 இந்த மீதைல் ஐசோ சயனேடின் கொதி நிலை 31.1 டிகிரி. சாதாரண தட்பவெட்பத்தில் ஒரு அறையில் வைத்திருந்தாலே காற்றில் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்த ரசாயனம் மணம் இல்ல தன்மை கொண்டதால், காற்றில் பரவினாலும் உடனடியாக தெரிய வாய்ப்பில்லை. கண் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலால் மட்டுமே தெரியும்.

 இந்த மீதைல் ஐசோ சயனேட் வைக்கப் பட்டிருக்கும் தொட்டி, குளிர் நிலையில் வைக்கப் பட வேண்டும். யூனியன் கார்பைட் வழிகாட்டுதல் குறிப்பேட்டின் படியே ஐசோ சயனேட் வைக்கப் பட்டிருக்கும் தொட்டி 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப் பட வேண்டும். ஆனால் போபாலில் இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரியாக வைக்கப் பட்டிருந்தது.

 1984 டிசம்பர் 2 அன்று இரவு தொழிலாளர்கள் வழக்கமாக பைப்புகளை சுத்தம் செய்யும் வேலையை முடிக்கும் தருவாயில் 610 தொட்டியில் ஏராளமான தண்ணீர் புகுந்தது. தண்ணீர் மீதைல் ஐசோ சயனேடில் கலந்தவுடன், அது வைக்கப் பட்டிருக்கும் இரும்புத் தொட்டி கிரியாஊக்கியாக செயல் பட, ரசாயன மாற்றம் ஏற்பட்டு, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய விஷ வாயுவாக மாறி காற்றில் பரவியது.

 அன்று இரவு காற்று வேகமாக வீசியதால், அருகாமையில் உள்ள மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் இவ்விஷ வாயு புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத் துயிலில் ஆழ்த்தியது. இக்காற்றில் இருந்து தப்பிக்க, வேகமாக ஒடியவர்கள், வேகமாக இவ்விஷக் காற்றை சுவாசித்து, அதிவேகமாக மாண்டனர்.

இக்காற்று பரவத் தொடங்கியதும், இதை சுவாசித்த மக்கள் கண் எரிச்சலும், நுரையீரல் எரிச்சலும் அடைந்து சுருண்டு விழுந்தனர்.

1985ல் மத்திய சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விஷ வாயுவை சுவாசித்த 36 கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கருச்சிதைவு ஏற்பட்டது, 21 குழந்தைகள் குறையுடன் பிறந்தன, 27 குழந்தைகள் இறந்து பிறந்தன என்று தெரிவித்தார். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு பெண்களை மருத்துவமனையில் ஆய்வு செய்ததில் 90 சதவிகித பெண்கள், கருப்பை சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகியுள்ளதும், 79 சதவிகித பெண்களுக்கு இடுப்பு எலும்பு வீக்கமடைந்த நோயும், 75 சதவிகித பெண்களுக்கு கழுத்து எலும்பு தொடர்பான நோய்களும், 35 சதவிகித பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிகப்படியான ரத்தப் போக்கும், 59 சதவிகித பெண்களுக்கு, இதர பல்வேறு நோய்களும் வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூச்சுத் திணறல் மற்றும், சுவாசப் பை தொடர்பான நோய்கள், ஏறக்குறைய அனைவரையுமே பாதித்திருந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த விஷ வாயுக் கசிவு எதிர்பாராமல் நேர்ந்த விபத்தா ?

 யூனியன் கார்பைட் நிறுவனத்திற்கு பொறுப்பு இல்லையா ?

மீதைல் ஐசோ சயனேட் இருக்கும் தொட்டிகளை பராமரிக்க பட்டதாரிகளும், 6 மாத பயிற்சி பெற்றவர்களும் நியமிக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு, பள்ளிக் கல்வி முடித்தவர்கள் ஆபரேட்டர்களாக நியமிக்கப் பட்டனர்.

 ஓரு ஷிப்டுக்கு 12 ஆபரேட்டர்கள், 3 மேற்பார்வையாளர்கள், 2 பராமரிப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஒரு தலைமை கண்காணிப்பாளர் இருக்க வேண்டிய இடத்தில் 6 ஆபரேட்டர்கள் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே பணியில் நியமித்திரந்தது யூனியன் கார்பைட் நிறுவனம்.

தனியார் முதலாளிக்கு லாபம் மட்டும்தானே பிரதானம் ?

1982 மே மாதம் அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து போபால் தொழிற்சாலையை ஆய்வு செய்ய வந்த, எல்.கே.கைல், ஜே.எம்.பவுலன் மற்றும் சி.எஸ்.டைசன் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு, போபால் தொழிற்சாலையில் பல குறைகளை சுட்டிக் காட்டினர்.

மேலும், மீதைல் ஐசோ சயனேட் வைக்கப் பட்டிருந்த தொட்டிகளில் சேப்டி வால்வ் மற்றும் அவசர நிலையில் வேலை செய்ய வேண்டிய பல பகுதிகள் பழுதாக இருந்ததை சுட்டிக் காட்டினர். ஆனால், இந்த நிபுணர் குழு சுட்டிக் காட்டிய எதுவுமே சரி செய்யப் படவில்லை.

picture04அடுத்ததாக போபாலைச் சேர்ந்த ராஜ் குமார் கேஸ்வானி என்ற பத்திரிக்கையாளர் சப்தஹீக் என்ற இந்தி வார இதழில் 1982 செப்டம்பர், மற்றும் அக்டோபரில் வெளியான இதழ்களில் “தயவு செய்து இந்நகரத்தை காப்பாற்றுங்கள்“, “எரிமலையின் வாயிலில் போபால்“ மற்றும், “உங்களுக்கு புரியாவிட்டால், துடைத்தெரியப்படுவீர்கள்“ என்ற தலைப்பில், அமெரிக்க நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும், அவை சட்டை செய்யப் படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும், போபால் நகரம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துக்களையும் பட்டியலிட்டிருந்தார்.

மேலும் 1984 ஜுன் 14ல் மத்தியப் பிரதேச முதலமைச்சருக்கு என்று கூறி, இதே விஷயங்களை “ஜனசட்டா“ என்ற தினப் பத்திரிக்கையில் விரிவாக எழுதியிருந்தார். இந்த எச்சரிக்கையையும் ஒருவரும் கண்டு கொள்ள வில்லை.

இந்த பேரழிவுக்கு முன்னாலேயே யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் 4 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. 1981ல் அஷ்ரஃப் என்பவர் வாயுக் கசிவினால் இறந்திருக்கிறார். இவர் மரணத்தையொட்டி அமைக்கப் பட்ட குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. மத்திய அரசுக் குழு அத்தொழிற்சாலைகளில் சில மாறுதல்களை செய்யச் சொன்னது.

 ஆனால், அந்த மாறுதல்கள் இறுதி வரை செய்யப் படவேயில்லை.

 எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால், தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், இரு தொழிற் சங்க தலைவர்களை பணி நீக்கம் செய்தததோடு முற்றுப் பெற்றது.

இவ்வாறு யூனியன் கார்பைடு நிர்வாகம் எவ்வித சட்டதிட்டங்களையும் மதிக்காமல் செயல்பட்டதற்கு காரணம் மாநில முதலமைச்சர் மற்றும் அதிகாரிள் நிர்வாகத்தின் கைக்குள் இருந்ததுதான்.

 சியாமளா மலைத் தொடரில் அமைந்திருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை, முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்காகவே நடத்தப் பட்டது. மேலும், பெரும்பாலான அரசு அதிகாரிகள், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் லஞ்சப் பட்டியலில் இருந்தனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கின் இறுதியில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.62,200 ம் காயமடைந்தவருக்கு ரூ.25,000ம் உச்ச நீதிமன்றத்தில் 1989ம் ஆண்டு ஏற்பட்ட உடன்படிக்கையில் வழங்கப் பட்டது.

 இந்த உடன்படிக்கை எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது தெரியுமா ? யூனியன் கார்பைட் நிறுவனம் 470 மில்லியன் டாலர் வழங்கினால், அந்நிறுவனத்தின் மீது உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை ஏற்பட்டது.

1991ல் பொதுமக்களிடையே எழுந்த கடும் கோபத்தின் காரணமாக, யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மீது இருந்த கிரிமினல் வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

1992ல் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் மீது, பிடியில் வெளிவரமுடியா நிரந்தர பிடி வாரண்ட்டை போபால் நீதிமன்றம் பிறப்பித்தது.

வாரன் ஆண்டர்சன் ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்த ஆண்டர்சன் இன்று வரை சட்டத்தின் முன் நிறுத்தப் படவில்லை.

இந்த ஆண்டர்சனை சட்டத்தின் முன் நிறுத்த நடந்த முயற்சிகளும், அவர் ஏன் இன்று வரை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படவில்லை என்பதும், தனிக் கதை.
1987 டிசம்பர் 3ல் விஷவாயுக் கசிவு நடந்ததும், டிசம்பர் 7ல் ஆண்டர்சன் இந்தியா வருகிறார். வந்தவுடன், காவல்துறையால் கைது செய்யப் படுகிறார்.

 கைது செய்யப் பட்ட 6 மணி நேரத்திற்குள் ஆண்ர்சன் பிணையில் விடுவிக்கப் பட்டு, டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்ற அவர் இன்று வரை திரும்பவில்லை.
1992ல் ஆண்டர்சன் மீது பிறப்பிக்கப் பட்ட பிடி வாரண்ட், இன்னும் நிலுவையில் உள்ளது. ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவர இந்தியா இன்னும் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பதாக, பாராளுமன்றத்தில் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப் பட்டுள்ளன1992 ஏப்ரல் 10ல் ஆண்டர்சன் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. 1993 செப்டம்பரில் சிபிஐ வெளியுறவுததுறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியது. 1995ல் வெளியுறவுத் துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையைக் கோரியது.

செப்டம்பர் 1996ல் சிபிஐ, ஆண்டர்சன் மீதான வழக்குப் பிரிவுகளில் மாற்றம் வேண்டும் என்று கூறியது. இது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு 2002ல் கருத்துரைக்காக அனுப்பப் பட்டது. அவர் கருத்துரைப் படி, மே 2002ல் போபால் நீதிமன்றத்தில் ஆண்டர்சன் மீதான வழக்குப் பிரிவை மாற்றுமாறு சிபிஐ கோரியது.

 ஆனால் நீதிமன்றம் மாற்ற மறுத்தது. மீண்டும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் அமெரிக்க தூதரகம் தொடர்பு கொள்ளப் பட்டு ஆண்டர்சனை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்குப் பிறகு நடந்ததுதான் பெரிய அயோக்கியத்தனம். அமெரிக்க தூதரகத்தின் யோசனைப்படி, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் சட்ட நிறுவனத்தின் படி கருத்து கேட்கப் பட்டது.

 அந்த சட்ட நிறுவனம், ஆண்டர்சனை இந்தியா கொண்டு வருவதற்கான முகாந்திரம் இல்லை என்றும், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, எந்தக் குற்றம் புரிந்திருந்தாலும், ஒரு நபரை பரிமாற்று ஒப்பந்தம் மூலம் இன்னொரு நாட்டுக்கு அனுப்புவதை தடுக்கும் அதிகாரம் உண்டு என்றும் கருத்து தெரிவித்திருந்தது.
ஒரு அமெரிக்க குற்றவாளியை இந்தியாவுக்கு கொண்டு வர, அமெரிக்க தனியாரி நிறுவனத்திடம் கருத்து கேட்கும் இந்திய அரசை என்னவென்று சொல்வீர்கள் ?
முதலாளிகளின் தந்திரங்கள் எப்படி இருக்கிறது பாருங்கள் ?
 

அமெரிக்க நிறுவனம் யூனியன் கார்பைடின் போபால் தொழிற்சாலை உட்பட அதன் இந்திய கிளை, 1994ல் “எவரெடி இன்டஸ்ட்ரீஸ்“ என்ற நிறுவனத்திற்கு விற்கப் பட்டது. அமெரிக்க நிறுவனம் யூனியன் கார்பைட், “டவ் கெமிக்கல்ஸ்“ என்ற மிகப் பெரிய நிறுவனத்தால் 2001ல் வாங்கப் பட்டது.

டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம், யூனியன் கார்பைடின் இந்திய நிறுவனத்தை அது வாங்காததால், போபால் விபத்து பற்றி அதற்கு பொறுப்பில்லை என்று அறிவிக்கிறது.
இந்த டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் வரலாறு இதை விட மோசம்.

அமெரிக்க வியட்நாம் போரின் போது, இந்த டவ் கெமிக்கல் நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கிய கொடிய ஆரஞ்சு கேஸ் எனப்படும் ரசாயன குண்டுகளை அமெரிக்கா வியட்நாம் மக்களின் மேல் வீசியதால் ஏற்பட்ட பாதிப்பு 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் தொடர்கிறது என்று கூறுகிறார்கள்.ஆரஞ்சு வாயு பாதிப்பால் உருமாறி பிறந்திருக்கும் குழந்தைகள்

நிகாரகுவா, கோஸ்டரிகா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு, டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வழங்கிய பூச்சிக் கொல்லியை பயன்படுத்திய வாழை விவசாயிகள், இன்று வரை, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

டவ் கெமிக்கல் நிறுவனத்தின் பாதிப்பால் உருமாறி பிறந்திருக்கும் ராபர்டோ

picture08இத்தனை கொடுமைகளுக்கு உள்ளாகிய போபால் மக்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம்,
வழங்கிய நிவாரணத் தொகை இறந்தவருக்கு ரூபாய் 62,200 மற்றும் காயமடைந்தவருக்கு ரூபாய் 25,000 மட்டுமே.
இது போன்ற மற்ற விபத்துகளில் வழங்கப் பட்ட நிவாரணங்களைப் பார்ப்போம்.
இந்தியாவில் உபகார் திரையரங்கு விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு வழங்கப் பட்ட நிவாரணம் ரூ15 முதல் 18 லட்சம்
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஒரு எண்ணைக் கப்பல் கடலில் கச்சா எண்ணையை கொட்டியதற்காக அமெரிக்க நீதிமன்றம் விதித்த அபராதம் 3975 கோடிகள்.”மார்ல்பரோ” சிகரெட் பிடித்ததால் எனக்கு புற்று நோய் வந்தது, அந்த சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் இந்த விபரத்தை தெரிவிக்காததால் தான் நான் சிகரெட் பிடித்தேன், அதனால் எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கில் அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய நஷ்ட ஈடு 1387 கோடிகள்.

நிலத்தடி நீரை ரசாயனத்தால் பாழ் படுத்தியதற்காக கெவ்ரான் நிறுவனத்திற்கு விதிக்கப் பட்ட அபராதம் 1955 கோடி.ஆஸ்பெட்டாஸ் தயாரிப்புத் தொழிற்சாலை நடத்தியதால் காற்றில் ஏற்பட்ட மாசுக்காக ஜான்ஸ் மேன்வில்லி கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு விதிக்கப் பட்ட அபராதம் 2311 கோடி.

தவறான அறுவை சிகிச்சையால், பக்கவாதம் ஏற்பட்டதற்காக ப்ரஷான்த் தனாகா என்பவருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இழப்பீடு, ரூபாய் 1 கோடி.9/11 சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய நஷ்ட ஈடு எவ்வளவு தெரியுமா ? சராசரியாக ஒரு நபருக்கு 8.32 கோடி ரூபாய்கள்.

இப்போது, போபால் விஷ வாயுக் கசிவில் இறந்தவர்களுக்கு வழங்கப் பட்ட ரூபாய் 62,200ஐயும், காயமடைந்தவர்களுக்கு வழங்கிய ரூபாய் 25,000த்தையும் நினைத்து பாருங்கள்.
இன்றோடு போபால் விஷ வாயுக் கசிவு நடந்து 25 ஆண்டுகள் முடிந்து விட்டன.

 

வயது முதிர்ந்த ஆண்டர்சன்இன்னும் இச்சம்பவத்திற்கு காரணமான வாரன் ஆண்டர்சன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படவில்லை.பாதிக்கப் பட்ட மக்களுக்கு எலும்புத் துண்டை வீசி விட்டு தன் நிறுவனத்தை விற்று விட்டு தப்பிச் சென்று விட்டது யூனியன் கார்பைடு நிறுவனம்.

பாதிக்கப் பட்ட மக்கள், யூனியன் கார்பைடு அளித்த பரிசான புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களோடு வாழ்ந்து வருகிறார்கள்இப்பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார்கள் என்று நாம் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து டெல்லி அனுப்பினோம். ஆனால் அங்கே கேள்வி நேரத்தில் கூட உறுப்பினர்கள் அவையில் இல்லாததனால் கேள்வி நேரமே ஒத்தி வைக்கப் படும் அவலம்.விஷவாயுத் தாக்குதலில் யாரென்று அடையாளம் தெரியாமல் புதைக்கப் பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளில் ஒன்று.

 picture04

 

 

 

 

 

 

 

1 Comment on “25 ஆண்டுகளாக…?கூடங்குளத்திற்கும் இதே நிலை வேண்டுமா?”

  1. ஒட்டு மொத்தமாக சமுதாயத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்த எழுதப்பட்ட பதிவு. கூடங்குளத்தை விடுங்க. இன்னைக்கி தேதி வரை இந்தியாவில் வெறொரு உரம் தயாரிப்பு ஆலை நிறுவப்படவில்லையா? அது எல்லாம் கசிந்தால் என்ன செய்வது. அதை எதிர்த்து எழுதவேணடியதுதானே. கூடங்குளத்தில் உள்ள பாதிப்பு உரம் தயாரிப்பு உள்ள எல்லா ஊர்களிலும் உள்ளதே.

    சரியான நேரத்தில் சரியான கட்டுரைகளைத் தருவதே நல்ல ஊடகத்திற்கு எடுத்துக்காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *