என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள்…இரோம் ஷர்மிளா

 யசோதா (இந்தியா)
Irom Sharmila என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். தனது மனோபாவத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.அன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்-பிரதமருக்கு இரோம் ஷர்மிளா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

anna-sharmilaஅன்னாவுக்குக் கொடுத்த மரியாதையை எனக்கும் கொடுங்கள்-பிரதமருக்கு இரோம் ஷர்மிளா வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்னாவின் உண்ணாவிரதம் குறுகிய காலத்தில் முடிந்து போனது. ஆனால் நான் இராணுவத்தின் கொடுமைகளை எதிர்த்து கடந்த 11 வருடமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். எனவே என்னையும் மதித்து எனது கோரிக்கைகளையும் பிரதமரும், மத்திய அரசும் கேட்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் இரோம் ஷர்மிளா.மணிப்பூரைச் சேர்ந்த இந்த வீரப் பெண்ணின் போராட்டம், அவரது மன உறுதி யாரையும் வியப்படைய வைக்கும். கடந்த 11 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஷர்மிளா.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 60 ஆண்டுகளாக அமுலில் இருந்து வரும் சிறப்பு இராணுவச் சட்டத்தை நீக்கக் கோரி உயிர்ப் போராட்டத்தை செய்கிறார் இரோம் ஷர்மிளா இந்த சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு இராணுவம் நிகழ்த்தி வரும் கொடுமைகள், பாலியில் வனஇமுறைகள் காரணமே இல்லாத கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள் போன்றவற்றை  எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.

Irom Sharmila11 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதையடுத்து அவரை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்தனர்.அங்கும் அவர் சாப்பிடவில்லை. இதையடுத்து வலுக் கட்டாயமாக திரவ உணவுகளை டியூப் மூலம் ஏற்றினார்கள். அப்படியும் போராட்டத்தை விடவில்லை ஷர்மிளா. அவரை விடுதலை செய்த பிறகும் கூட உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து அவரை இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு அறையில் சேர்த்து அங்கு டியூப் மூலமாக திரவ உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.

இவரது இந்த வீரப் போராட்டத்திற்கு மீடியாக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி யாருமே சரியான வெளிச்சத்தைக் காட்டவில்லை. அன்னாவுக்குக் கிடைத்த அபரிமிதமான விளம்பரம் இந்த வீரப்பெண்ணுக்கு  கிடைக்காமல் போய் விட்டது.தனது மாநில பெண்களின் நலனுக்காகவும், இராணுவக் கொடுமைகளுக்கு எதிராகவும் அன்னா போராட வர வேண்டும் என்று ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு அன்னாவிடமிருந்தோ அவரது குழுவினரிடமிருந்தோ இதுவரை பதில் ஏதும் இல்லை.

இந்த நிலையில் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் ஷர்மிளா கூறியுள்ளதாவது…என்னை தயவு செய்து அன்னாவைப் போல பாருங்கள் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். தனது மனோபாவத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் அன்னாவின் போராட்டத்தை மதிக்கிறேன். ஆனால் அதை நான் குறைத்து மதிப்பிட்டுக் கூறியதைப் போல சிலர் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.எல்லோரையும் போலவே நானும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே நினைக்கிறேன். ஆனால் எனது லட்சியங்கள், எனது போராட்டம் முடிந்தால்தான் அது சாத்தியமாகும். அதுவரை அதை நான் நினைத்துக் கூட பார்க்கப் போவதில்லை.

மத்திய அரசுதான் எனது போராட்டம் இத்தனை காலத்திற்கு நீடிக்க காரணம். மக்கள் இல்லை. இந்த அரசு என்னையும், எனது போராட்டத்தையும் அன்னாவுக்குக் கொடுத்தது போல மதிக்கத் தவறி விட்டது.என்னால் அன்னாவைப் போல வெளியில் போய் போராட முடியாது. டெல்லி சென்று போராட முடியாது. காரணம், நான் சிறையில் அடைபட்டுள்ளேன். எனக்குச் சுதந்திரம் கிடையாது.

என்னால் எம்.பிக்களை நம்ப முடியாது. உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் வெறும் வார்த்தையில் சொன்னால் என்னால் அதைக் கேட்க முடியாது. செயலில் காட்ட அவர்கள் உறுதி தந்தால் மட்டுமே என்னால் எனது போராட்டத்தை நிறுத்த முடியும் என் கூறுகிறார்  ஷர்மிளா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *