இன்னமும் வாழ்வேன்

சை. கிங்ஸ்லி கோமஸ்

Sam_0332 இலக்கியங்கள் கால சூழலுக்கு ஏற்ப தோன்றுபவை. வர்த்தக நோக்கங்களுக்காக நச்சு இலக்கியங்கள் ஆயிரம் ஆயிரமாய் தோன்றினாலும் மகா கவி பாரதியின் பொன்னான வாக்கியங்களில் ஒன்றான “காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்” என்பது பால் மர ஆணியாக படைப்பாளிகளின் இதயங்களின் ஆழ பதிந்த உண்மையாகும்.

மாவை வரோதயனின் இன்னமும் வாழ்வேன் – கவிதைகள் விமர்சனம்
    
 
தற்கால தமிழ் படைப்பிலக்கிய பரப்பானது இரண்டு வித்தியாசமான உள்நாதத்தினை கொண்டவையாக காணப்படுகின்றது. முதலாவது மனித நேய எண்ணக்கருவினை தன்னகத்தே கொண்டவையும், தமிழ் தேசியவாத கருத்தியல்களை மனித இதயங்களில் விதைப்பனவாகவும் காணப்படுகின்றன. என்றும் மனிதர்களுக்காக மனிதம் விதைக்கும் மனித நேய படைப்புகள் மக்கள் மத்தியில் அழியா இலக்கியங்களாக காணப்படுவது நாம் அனுபவித்து உணர்ந்த உண்மைகளாகும்.

 தேசிய கலை இலக்கிய பேரவை அதன் ஆரம்ப காலம் முதல் இன்று வரை தான் கொண்ட கொள்கையில் சிறிதேனும் மாற்றம் இல்லாமல் மனித நேயத்தினை அடி நாதமாகக் கொண்டு மக்கள் ஐக்கியம், மக்களுடனான போராட்டம், மக்களுக்காக இலக்கியம் என்னும் கோட்பாடுகளுடன் படைப்பிலக்கிய உலகிற்கு சேவையாற்றி வருகின்றது. அந்த வகையில் படைப்பிலக்கியத்தில் தனக்கான தனித்துவத்துடன் மனித நேய இலக்கியம் படைத்து வரும் மாவை வரோதயனது “இன்னமும் வாழ்வேன்” கவிதை தொகுப்பினை வெளியிட்டு மண்ணிற்கும், மனித மாண்பிற்கும் பெருமை சேர்த்திருப்படுதுடன் காலத்தின் தேவையறிந்து கலை படைப்புகளுக்கும் களம் அமைத்து கொடுப்பது தே.க.இ பேரவையின் உயர்ந்த பண்பாகும்.

 இலக்கியங்கள் கால சூழலுக்கு ஏற்ப தோன்றுபவை. வர்த்தக நோக்கங்களுக்காக நச்சு இலக்கியங்கள் ஆயிரம் ஆயிரமாய் தோன்றினாலும் மகா கவி பாரதியின் பொன்னான வாக்கியங்களில் ஒன்றான “காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்” என்பது பால் மர ஆணியாக படைப்பாளிகளின் இதயங்களின் ஆழ பதிந்த உண்மையாகும். இவ்வுண்மைக்கு உயிர் கொடுக்கும் இலக்கிய படைப்பாக காணப்படும் மவை வரோதயனின் “இன்னமும் வாழ்வேன்” கவிதை நூல் சான்றாக அமைகின்றது.

 நச்சு இலக்கியங்களும், நலிவுற்ற படைப்புகளும் ஆயிரம் ஆயிரமாய் விதைக்கப்பட்டாலும் இவற்றை தக்க தருணம் பார்த்து சிதைவடையச் செய்து அடையாளம் இல்லாமல் செய்ய மக்கள் இலக்கியங்கள் பிரசவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 மாவை வரோதயனின் “பாதாதி கேசம்” முதல் “சுகம் எனும் சொல்” வரையிலான 77 கவிதைகளுடன் சங்கமிப்பது ஆத்மாவுக்குள் காணாமல் போய் இருந்த மனிதாபிமான குருதி சொட்டுகளுக்கு உயிர் கிடைத்ததான ஒரு மாற்றத்தினை உணரக் கூடியதாக இருக்கின்றது.

 மாவையின் கவிதைகளுக்கும் விமர்சனம் எழுதுவதற்காய் வாசித்தபோது அந்த கவிதைகளே விமர்சனக் கவிதைகளாக இருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது.

 “வீண் பெருமை பேசுகின்ற மாந்தரிடை
  வாழ்ந்திட நீ வந்ததென்ன சேய் நிலவே?
  காண்பதெல்லாம் காசுமன நாட்டியமெ
  கண்டிட நீ காலமுண்டு கண்ணுறங்கு”

என்னும் வரிகள் “இன்று என் தாலாட்டு” என்னும் கவிதையிலும்,

 

 “தானம் புசித்து
  தர்மம் படித்து
  ஞானம் வளர்க்கும் அறவோர்
  மானமதாய்
  பட்டம் பெற்று பதவியும் கேட்டால்
  மட்டம் ஆகுமே மதம்”

     என்னும் கவி வரிகள் “துறவுத் தொழில்” என்னும் கவிதையிலும் விமர்சனக் கவிதைகளாக காணப்படுகின்றது.

Sam_0332 பாடைப்பாளியின் படைப்புகளையும், படைப்பாளியையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவதே இலக்கிய விமர்சனத்தின் தன்மையாக இருக்கின்றது. சமூகத்தின் நயவஞ்சக தன்மைகளை விமர்சிக்கும் படைப்பாளியின் படைப்புக்கள் மற்றும் ஒரு பரிணாமத்திற்கு ஈழத்து இலக்கியத்தை நகர்த்தும் தன்மையினை காணக்கூடியதாக இருக்கின்றது. அவை மாத்திரம் அன்றி “கண்ணில்லாதவன் கவி”, “ஆரோக்கிய தேசம்” போன்ற கவிதைகளும், விமர்சன பாங்கான கவிதைகளாக காணப்படுகின்றது. “பிழைக்க ஏய்க்கும் பாதை” என்னும் கவிதையிலே “புரட்டும் பொய்யும் களவும் செய்வோன் ஃ புவியில் தெய்வம் ஆகின்றான் ஃ வரட்டு வேதம் படிக்கும் மாந்தர்ஃ விடியல் தேடி மகிழ்கின்றார்ஃ பதற்றம் இன்றி படித்த பாடம் பிழைக்க ஏய்க்கும் பாதையேஃ உதட்டில் மட்டும் இருந்தால் உண்மைஃ உலகில் பேராய் வாழலாம்” என்னும் கவி வரிகள் பிற்போக்கு சிந்தனையையும், ஏகாதிபத்திய கல்வி முறையினையும் சுரண்டும் மனிதர் நடிப்புக்களையும் படு மோசமாக விமர்சிக்கும் தன்மையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

மதம், அரசியல், காதல், மனித நேயம், மண் மீது காதல், தாய்ப்பாசம், தாய் மண் மீது பாசம், கிரக்கட் என்னும் மாயை, பண்பும் பண்பாடும், பகட்டு அரசியல், பண்பாடு, கலாச்சாரம், நம்பிக்கை, சாதிய கட்டமைப்பு, கிராமத்தின் அழகு, ஊர் என்னும் சொர்க்கம், சீதனம், யதார்த்தம், நகைச்சுவை என்று மனித வாழ்வியலின் வேறுபட்ட கோணங்களை தனது கவிதைகளின் பாடு பொருட்களாக கொண்டு கவிதைகளை மாவை படைத்துள்ளார். தனது இதயத்தின் ஆழத்தில் தன்னை ரணப்படுத்தி கொண்டிருக்கும் யுத்தத்தின் துயர் தன்னை கவிதைகளாக்கி தனது யுத்த எதிர்ப்பினையும், மானுட வாழ்வின் சோர்வுகளையும் பாடியிருப்பது தனது மக்கள் மேலும், தனது மண்ணின் மீதும் தான் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை உலகிற்கு எடுத்து இயம்புகின்றது.

 மாவை வரோதயனின் அதிகமான கவிதைகளிலே நம்பிக்கையும், வெற்றியும் முடிவுகளாக வைத்திருப்பது இலக்கியத்தின் உள்ளடக்கம் மக்கள் இலக்கியமாகி விடிவுக்கான நம்பிக்கையை வழங்குபவையாக இருப்பது மாத்திரம் அன்றி வாசகனை மன அழுத்தங்களுக்குள் புதைத்து மாண்டு போகச் செய்யாமல் தட்டி எழுப்பும் கடமையையும் செய்திருப்பது வரவேற்க கூடியது.

“கனியட்டும் புவி நளை” என்னும் கவிதையிலே,

 “மனிதர்க்கு மதிப்புள்ள
 மண்ணாள்வு இனி வேண்டாம்
 கனியட்டும் புவி நாளை
 கல் மீதும் பயிர் செய்வோம்”
      என்னும் கவி வரிகளும்,

 

 

 

“வழுக்கியாறு” என்னும் கவிதையில்
 
 “ஏர்க் கால்வாய் குளமும் நீருயர்
 ஏதுவாய் மண்ணில் அமைத்திட வாருமே
 பரிற்; கூட்டிட விளைபயிர் செய்குவோம்
 பாதகம் சாய்த்து நேர்வழி யேகுவோம்”
        என்னும் கவி வரிகளும் இன்னமும் வாழ்வேன் என்னும் கவிதையிலே

  எத்தனை தோல்வி எனை மறித்தாலும் ஃ ஆசைகள் நெஞ்சில்  சூழ வைத்தேஃ இத்தரை மீதில் இன்னமும் வாழ்வேன் ஃ ஈற்றினில்  மேன்மை காணுமட்டும்.

     என்னும் கவி வரிகளும் நம்பிக்கையினதும், வெற்றியனதும் கட்டாயத்தினை உணர்த்தி நிற்கின்றன.

 மாவை வரோதயனின் கவிதைகளிலே சுட்டிக் காட்டி பெருமைப்பட வேண்டிய கவிதைகள் ஏராளம் இருந்தாலும் கவிதைகளின் உயிர்க்கும், உடலுக்கும் தொடர்பில்லாதது போல் நூலின் அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அட்டைப் படத்தினை நோக்கும்போது ஓவியனது அவசரம் விளங்குகின்றது.

 நூலின் உள்ளடக்கத்தினை எடுத்தியம்பும் அட்டைப் படமும், அட்டைப் படத்தின் வர்ணமும் நூலிற்கு உயிரூட்டும் முக்கிய அம்சங்களாகும்.

 சிவகடாட்சம்பிள்ளை சக்தியகுமரன் எனும் இயற்பெயரைக் கொண்ட மாவை வரோதயனின் எழுத்துக்கள் வாசகனுக்கு புத்துணர்ச்சியினை தருவதுடன், சமூக இழிவுகளுக்கு சாட்டையடி கொடுப்பனவாகவும் அமைந்துள்ளன. அனைத்து வாசகர்களாலும் வாசிக்கப்படவேண்டிய மாவையின் கவிதைகள் சமூக நகர்விற்கான நெம்புகோளாக திகழ்கின்றது.

 தமிழ் இலக்கிய வரலாற்றிலே  சோழ பாண்டிய பேரரசுகளின் அரசியல் உறுதிப்பாடு சீர்குழைய ஆரம்பித்த காலத்தில் தமிழ் நாட்டில் குறுநில மன்னர்கள் இலக்கியவாதிகளின் பாட்டுடைத் தலைவர்களாக மாறிய போக்கு பிற்காலத்தில் பள்ளு இலக்கியங்கள், குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலான புதிய இலக்கிய வடிவங்கள் மூலம் நகைப்புக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டதற்கு அமைய மாவை வரோதயனின் கவிதைகள் அரசியல்வாதிகளையும், யுத்தப்பிரியர்களையும், சீதனப் பேய்களையும், மண்ணிற்கும் மனிதர்களுக்கும் துரோகம் செய்பவர்களையும் விமர்சிக்கும் கவிதைகளாக இலக்கிய உலகிற்குள் சங்கமித்து இருப்பது புதிய தலைமுறையினரின் மனித நேயத்திற்கு சான்று பகரும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலை எதிர்க்காலத்தில் மனித நேயம் மிக்க மக்கள் கலை இலக்கியவாதிகளை தூண்டி வரும் படைப்பிலக்கியமாக காணப்படுகின்றது.

 

 
 
 

 
 

 

1 Comment on “இன்னமும் வாழ்வேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *