ஒற்றைத் திறப்பு

 சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை)
ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு
விரிவுரைக்கு செவி விற்ற
முழுநாட் களைப்பு

கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம்
அரை மணி இடைவெளி..
மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…
வீடு வாடகையானாலும் நம் வீடாயிற்றே
கொஞ்சம் ஓய்வெடுக்க…
குளிக்க…..
ஈரத்தலை சுற்றிய துண்டுடன் ‘காட்டில் ஒரு மான்” வாசிக்க
சின்னச்சின்னதாய் இடியப்பம் இடித்த சம்பல் சாப்பிட
செளகரியமாய் உடை மாற்ற
வீடு தான் தோது.

அலுங்கிக் கசங்கிய உடையாய்
தேநீர் கோப்பைப் பின்னணியில்
மிருதுவான உரையாடல் கனவோடு
வலிக்கால்கள்
வீடு வரை கொண்டு சேர்த்தன.

வாசல் வந்த பின் …
திறப்பு???
ஆயிரம் மைல் தொலைவில்
அலிபாபாக் குகையி்ல்
பத்திரமாய் கிடந்தது.

அரக்கப் பறக்க
அலுவலக நண்பருக்கு அழைப்பு
அடுத்த பஸ்ஸில் அனுப்பி வைப்பதாய்
ஒரு மணி நேரம் இரண்டாக
ஓரிடத்தில் முளைத்துக் கிடந்தோம்.

தாமதமாய் மேல் வீட்டு ஞாபகம்
உதிக்க
எப்போதும் திறக்காத கதவொன்றால்
ஒட்டடை அலங்காரத்தோடு
உட் பிரவேசம்

அப்போது பார்த்து
நாற்சக்கர வண்டிஇ திறப்புடன்
நம்மூர் தாண்ட
இரு சக்கர வண்டி
இப்போது இப்போது என
இரு மணித்தூரம் கடக்க
விலைமதிப்பில்லா திறப்பு
மீண்டும் சாவித்துவாரம்
கண்டதுஇ
அப்பாடா?

இன்னொரு திறப்பு வெட்டல்
நாளைக்கு நாம் செய்யும் முதல் வேலை

மாதங்களும் தொலைந்தழிந்தேகின்

திறப்பு இன்னும்
ஒற்றையாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *