அஃறிணைகள்…

-மாதவி ராஜ்-(அமெரிக்கா)

docufilm1 அண்மையில் நான் பார்த்த சில குறும்படங்களுள் என்னைப் பாதித்தவை பிடித்தவை என்ற வகையில் அஃறிணையும் ஒன்றாகும் அது பற்றிய சிறு குறிப்பு ஒன்றை ஊடறு மூலமாக தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

திருநங்கைகளின் வாழ்க்கை சரித்திரம்! திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தும் பணி தற்போது சில தரப்பினரால்   மேற்கொள்ளப்பட்டு வருவது சமூகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றே கருதலாம் அதற்கு சான்றாக அல்லது ஒரு பங்களிப்பாக அஃறிணைகள் என்ற குறும்படம் (29 நிமிடங்கள்) கடந்த வருடம்  வெளியாகி இருக்கிறது. வலைபதிவாளர் லிவிங்ஸ்மைல் வித்யா, ஏஞ்சல் கிளாடி ஆகிய இரு திருநங்கைகளின் உண்மைக்கதையே அஃறிணைகளாக உருவாகி இருக்கிறது. இருவருமே முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள்! இருவருமே  சமூகத்தில் ஒன்றி வாழவிரும்புபவர்கள்! இவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கு இவ்விருவரும் படும்பாடு ஒரு குறுங்காவியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநங்கைகளின் இரத்தத்தால் ஆன ஒரு சரித்திரப் படைப்பை தந்துள்ளார் இயக்குநர்

angel_gladdy

ஏஞ்சல் கிளாடியின் பாலினத்திரிபு போன்ற சிக்கலான பிரச்சினைகளுடன்  ஆரம்பிக்கும் இப்படம் திருநங்கைகள்  இருவருடைய வாழ்க்கையையும் மாற்றி மாற்றி கூறிச்செல்கிறது. வித்யாவின் வாழ்வில் அவர் சந்தித்த சோக சம்பவங்களையும், அதை தவிர்த்து ஏஞ்சல் வாழும் திறனையும் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

docufilm1ஆவணப்படத்துக்கு உரிய இயல்புகள் இல்லாமல் வணிக சினிமாவின் நவீன யுக்திகளையும், விளம்பர படங்களின் நேர்த்தியையும் ஒரு சேர கையாண்டு மிக யதார்த்தமாக இந்த கதை கூறப்பட்டுள்ளது. படிப்பு,சமூகத்தில் கிடைக்காத அங்கீகாரம்,  வறுமை, வேலைவாய்ப்பு இன்மை, சமூகத்தால் இழிவுபடுத்தல் என திருநங்கைகளின் வாழ்க்கை ஒடுக்கபட்டோர், ஒடுக்கப்படுவோர் போன்ற  தலித் மக்களின் வாழ்க்கையையும் விட  கொடூரமானது. சாதி எப்படி தலித்துகளை கொடுமைப்படுத்துகிறதோ அதே போல் தான் திருநங்கைகளின் வாழ்க்கையும் அடங்கும். தற்போது 100க்கு 5 வீதமாவது திருநங்கைகளை அங்கீகரித்து  கல்வி அறிவு,வேலைவாய்ப்பு  போன்றவற்றை பெறும் ஒரு சில திருநங்கைகளினால் மற்றைய திருநங்கைகளின் வாழ்விலும் நம்பிக்கை பிறந்து வருகிறது என்றே கூறலாம்.

பால் கிளாடி படிப்படியாக ஏஞ்சல் கிளாடியாக உருமாறும் காட்சிகளும், இதற்கிடையே அவர் சந்திக்கும் உளவியல், சமூகத்தினால் ஏற்படும்  சிக்கல்களும் மிக நேர்த்தியாக கூறப்பட்டுள்ளது. இடையிடையே லிவிங்ஸ்மைல் வித்யாவின் வாழ்வும் அவருடைய வாய்மொழியிலேயே பதிவு செய்யப்படுகிறது. உணர்வுகளை பதிவு செய்வதற்கு லிவிங்ஸ்மைல் வித்யாவின் கவிதைகளும் துணை நிற்கின்றன. திருநங்கைகள் குறித்த அறிவியல்ரீதியான புரிதலுக்கு தேவையான விளக்கங்களை மனநல மருத்துவர் ஷாலினி வழங்கியுள்ளார்.

திருநங்கைகளின் வாழ்வில் அவர்கள்  செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது  திருநங்கைகள் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளனர் இப்படத்தின் தயாரிப்பாளரானகீதாவும், இயக்குனரான இளங்கோவனும்! 

சமூகத்தில்  இதுபோன்ற குறும்படங்கள் ஏறபடுத்தும் தாக்கம் குறைவானதாக இருந்தாலும் இச்சிறு பங்களிப்பு இக்கலைகளுக்கூடாக வெளிவருவது வரவேற்கத்தக்கது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *