இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திரம் கோரி அறிக்கை வெளியாகி உள்ளது:-

galle_literary_fest_appeal_ தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் கொள்கிறது.

20 ஜனவரி 2011 நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி, சேரன் டேவ் ரம்ரன்ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர் :-அரசியல் கேலிச் சித்திரக்காரரான பிரகீத் எகனெலியகொட காணாமல் போய் ஒரு வருடமாகப் போகிறது:-

இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திரம் கோரி நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி,சேரன், டேவ் ரம்ரன்
ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பு, புலம்பெயர் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு ஆகியன சர்வதேச ரீதியாக கவனத்துக்குட்படுத்தும்படி கோரியுள்ளன.

இன்னும் சில நாட்களில் அரசியல் கேலிச் சித்திரக்காரரான பிரகீத் எகனெலியகொட காணாமல் போய் ஒரு வருடமாவதை அவருடைய குடும்பத்தாரும், சக பணியாளர்களும் நினைவுகூர உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பதாக 2010 ஜனவரி 24ஆம் திகதி கடுமையாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த தலைநகரான கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது பற்றிய எந்தத் தகவலும் அவருடைய மனைவிக்கு வழங்கப்படவில்லை.

அதேவேளை ஆசியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள் அனைவரும் இலங்கையின் தென்பகுதி நகரமான காலியில் இலங்கையின் முக்கியமான சுற்றுலாத்துறை முகவர்களின் இணை அனுசரணையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலக்கியவிழாவுக்காக ஒன்று கூடவுள்ளனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தினால் கேலிச்சித்திரக்காரர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் இன்றுள்ள சூழ்நிலையில், இலக்கியத்துக்கு விழா எடுக்கும் இந்த நிலைமையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் மிகவும் இடரார்ந்த ஒரு விடயமாகவே கருத்திற் கொள்கிறது. காலி இலக்கிய விழாவுக்குப் போவதற்கு முன்னர் இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு இதில் கையொப்பமிட்டவர்கள் கோரியுள்ளனர்.

galle_literary_fest_appeal_

2011 ஜனவரி 26-30 வரை காலியில் நடைபெறவுள்ள ஐந்தாவது இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்புக் கிடைத்துள்ள ஒவ்வொருவரும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவதையும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் அச்சமும் மலைப்பும் தரும் வகையில் அதிகரித்துக் காணப்படுவதையும் கருத்தில் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.போர் முடிவடைந்து பின்னரும் கூட இலங்கையில் படுகொலைகள், உடல் ரீதியான தாக்குதல்கள், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், தணிக்கை என்பன தொடர்ந்து கொண்டு வருகின்றன என்றும் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் உட்பட இலங்கை அரசாங்கத்தின் மிக மூத்த அதிகாரிகளே சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளிலும் மிக மோசமாக ஊடக சுதந்திரம் நசுக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளிலும் நேரடியாகவே ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்களைப் போன்ற முக்கியத்துவமிக்க சர்வதேச அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்கள் நாட்டினுள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு எள்ளளவேனும் வழி சமைக்காமல் அதனை ஒடுக்கி வருகின்ற இலங்கை அரசாங்கத்துக்கு இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஏற்புடமையை வழங்குவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்றே நாங்கள் நம்புகின்றோம்.

காலி இலக்கிய விழா ஆரம்பமாவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக 2011 ஜனவரி 24ஆம் திகதி ஊடகவியலாளரும் கேலிச்சித்திரக்காரருமான பிரகீத் எக்னெலியகொட காணாமல் போன இரண்டாவது வருட நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக பத்தியொன்றை எழுதியதன் பின்னர் நாட்டின் தலைநகரில் வைத்து அவர் காணாமல் போய்விட்டார். இவர் காணாமல் போனமை குறித்து முறையான விசாரணையை நடாத்துவதில் பொலிஸார் தோல்வியடைந்துள்ளனர். நீங்கள் எந்த கருத்துச் சுதந்திரத்திற்காக செயற்படுகிறீர்களோ அதே கருத்துச் சுதந்திரத்திற்காகவே பிரகீத்தும் போரடியுள்ளார். தற்போது அவருடைய இரு மகன்மாரும் தந்தையில்லாது தவிக்கிறார்கள்.

இன்னுமொரு முக்கியமான ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க 2009 ஜனவரி 8ஆம் திகதி தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்றதும் உயர் பாதுகாப்பு வலயத்துள் ஆகும். அப்பகுதிகளில் பாதுகாப்பு படைகள் காவலரண்களை அமைத்திருந்தனர். அவ்வாறிருந்தும் கொலையாளிகள் தப்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
லசந்த கொல்லப்படுவதற்கு முன்பாக எழுதி அவர் கொல்லப்பட்ட பின்பு வெளியான அவருடைய ஆசிரிய தலையங்கத்தில் ‘இறுதியாக நான் கொல்லப்பட்டால் என்னைப் படுகொலை செய்தது இந்த அரசாங்கமாகவே இருக்கும்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

2006இலிருந்து 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மூன்று ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். முப்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். எஞ்சியுள்ள ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும் நிகழ்த்துனர்களும் அச்சுறுத்தப்பட்டும், தாக்குதலுக்குள்ளாகியும் எதை எழுதினார்களோ அதற்காக 20 வருடங்களுக்கு மேல் சிறையில் தள்ளுவதுமான நிலைகளையே எதிர் நோக்கி வருகிறார்கள்.

போர்க்குற்றங்கள் உட்பட ஏராளமான அட்டூழியங்கள் இடம் பெற்ற விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான போரைப் பற்றி அறிக்கையிட ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மலைபோல் குவிந்துள்ள நிலையில் உலகில் உள்ள எவரும் அவற்றைப் பார்வையிடும் நிலையில், நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் அவற்றைப் பற்றிப் பேச முடியாது, குறைந்த பட்சம் வடக்குப் பிராந்தியத்திற்கு விஜயம் செய்யக் கூட முடியாது. ஏனெனில் அவ்வாறு செய்தால் ஒன்றில் தாங்கள் காணாமல் போகக் கூடும் அல்லது கொல்லப்படக் கூடும் என்றும் ஊடகவியலாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழலுக்குத் தான் நீங்கள் கலந்து கொள்வதன் ஊடாக அங்கீகாரம் கொடுக்கப் போகிறீர்கள். எல்லா இடங்களிலும் எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே ஒற்றுமைக்காக தங்கள் கைகளை இறுகப் பிணைத்து நிற்றும் ஒரு மரபின் தொடர்ச்சியாக பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உள்ள உங்கள் சகோதர சகோதரிகளுக்கும் ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும் என்று உங்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

உங்களுடைய நடவடிக்கைகளும் நீங்கள் தெரிவிக்கும் செய்தியும் தெளிவாக இருக்க வேண்டும் என நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அதாவது பிரகீத் காணாமல் போனமை குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரச் சூழலில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும். இல்லாவிட்டால் இலக்கியத்தையும் எழுத்;துச் சுதந்திரத்தையும் நீங்கள் கொண்டாடுவதில் ஏதும் அர்த்தம் இருக்க முடியாது.
நோம் சோம்ஸ்கி
அருந்ததி ராய்
கென் லோச்
அன்ரனி லொவன்;ரின்
தாரிக் அலி
சேரன்
டேவ் ரம்ரன்

இத் தளத்திற்குச் செல்வதனூடாக இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் நீங்களும் இதில் கையொப்பமிடலாம்

 http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html 

நன்றி  http://globaltamilnews.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *