அ-ப்-பா.

– நளாயினி  தாமரைசெல்வன்  (சுவிஸ்)

அ-ப்-பா.

எனக்கும் அப்பாவுக்கும் நெடுகப்போட்டி.
அடிக்கிறாரோ இல்லையோ
வைத்த தடியை காணம் காணம் என்றபடி
பூவரசம் தடி சீவிவைக்க மறப்பதே இல்லை.
நானுமோ எடுத்தெறியாமல் விட்டதே இல்லை.
****

அ-ப்-பா.

*

வாருங்கள்
எனது அப்பாவைப்படிப்போம்.
அழகியவாழ்க்கை.

*
செல்லமாய் எனது அப்பாவின்
கன்னம் கிள்ளி
செவியைத்திருகி
தலையில் குட்டி
அவரின் மனதுள்
சிம்மாசனம் போட்டு
அமர்ந்திருப்பவள் நான்.

*
அப்பா அப்பா அப்பா
சொல்லிப்பாருங்கள் நீங்களும்.
எனக்குள் சந்தோசம்
நிரம்பிவழிகிறது

*
தூவானத்துடன் குhடிய மழைநாள்.
ஆம்மாவின் கையால் தேநீர்.
அப்பாவின் மடி.
சங்கீதம்.

*
திருட்டுத்தனம்
பொய்.
வீடெங்கும் அமைதி.
அப்பாவின் புன்சிரிப்பு.
விடுமுறைநாள்.

*
எனது களவு
கண்டும் காணாமல்.
அப்பாவின் செருமல்.

*
தொடுகை
அரவணைப்பு
விழிமொழி
புன்சிரிப்பு
புரியாத புதிர் அப்பா.

*
மெல்லிதான அதட்டல்
கோபமான பார்வை
தடியெடுப்பது போன்ற பாவனை
ஆனாலும் அப்பா
தோற்றுப்போவது ஏனோ என்னிடம் தான்.

*
ஒரு அட்டையை காட்டி
வாசிக்கும் படி கேட்டார்.
க.ம.க்-கா-ர-ன்.
வாசித்து முடித்தேன்.
அப்படி என்றால்
கமக்காரன் என்றால்
தோட்டம் செய்பவன்.
பள்ளன். என்றேன்
கன்னத்தில் பளார் என ஒரு அறை.
ஐந்து வயதுப்பிள்ளையிடம்
கேட்கும் கேள்வியா
அம்மா அணைத்துக்கொண்டார்.
அம்மாவின் கைகளை நகர்த்திவிட்டு
அப்பாவின் கால்களை
இறுக அணைத்துக்கொண்டேன்.

*
உங்களில் யாருக்காவது
கிடைத்திருக்கிறதா
தண்டனையின் பின்
சயிக்கிளில்
ஊர்ச்சுற்றுலாவும்
இனிப்பப்பண்டங்களுமாய்.
ஓ.. என்ரை அப்பா
என்ரை சொத்து.

*
ஒரு போதுமே
அம்மாவோடு சண்டைபோடாத அப்பா.
பாடசாலை விடுமுறை நாட்களில்
எப்படித்தான் சண்டை தொடங்குவாரோ.
ஆனாலும் மின்னலாய் சயிக்கிளை
எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார்.
அடடா ! கள்ளன் பிடிபட்டான்.
நண்பர்களுடன் அரட்டை..

*
அதிகாலை நான்கு மணி.
மெதுவாய் போர்வை விலத்தி
அப்பாவின் கணுக்காலை
தொட்டுப்பாற்கும் எனது கை.
ம்.. குஞ்சு என்றபடி
தன்னை இன்னும் அதிகமாய்
கம்பளிக்குள் குறுக்கும் அப்பா.
அப்பாவின் இசை இல்லாக்காலை.
அப்பாக்கு சுகயீனம்.
மாரிகாலத்தில் இப்படித்தான்
அனேககாலை விடிந்தது.

*
கோவித்துக்
கொள்வதுண்டு என்னோடு
நானோ தலையை குனிந்து மௌனித்தபடி
காலை தரையில் உதைத்துக்கொண்டே
விழியை மட்டும் உயர்த்துவேன்:
“அதுக்கென்ன இப்ப?”
“எக்கேடும் கெட்டுப்போ என
விட்டுவிட முடியாதே உன்னை”
என முணுமுணுத்தபடி விலகுவார்.
எப்படித்தான்
எனது விழிமொழியை
புரிந்து கொள்கிறாரோ!

*
எனக்கும் அப்பாவுக்கும் நெடுகப்போட்டி.
அடிக்கிறாரோ இல்லையோ
வைத்த தடியை காணம் காணம் என்றபடி
பூவரசம் தடி சீவிவைக்க மறப்பதே இல்லை.
நானுமோ எடுத்தெறியாமல் விட்டதே இல்லை.

தொடரும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *