பெண்கள் நிலை பற்றி ஐ.நா அறிக்கை

மோதல்கள் மற்றும் பேரழிவுகளுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சமாதான மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் பெண்களின் கருத்துக்களுக்கு பலம் மிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள உலக சனத்தொகையின் பிந்தைய நிலை குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு போர் அல்லது இயற்கையழிவின் பின்னர், ஒரு நாடு வெறுமனே மீளக்கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக அங்கு பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமமான இடமளித்து, அவை மேலும் சிறப்பாக மீளக்கட்டியமைக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆயுத மோதல்களில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறைகளும் மற்றும் சமாதான மீட்சி நடவடிக்கைகளில் அவர்கள் ஓரங்கட்டப்படுதலும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை முக்கிய தீர்மானம் கொண்டுவந்த பத்தாவது ஆண்டு நிறைவும், 2010 ஆம் ஆண்டுக்கான உலக சனத்தொகையின் நிலைமை குறித்த அறிக்கையும் ஒரே நேரத்தில் வந்துள்ளன.


இன்னமும் இந்த விடயத்தில் எந்தளவு முன்னேற்றம் தேவை என்று அந்த அறிக்கை கோடிகாட்டியுள்ளது.

பெண்கள் போர்களை தொடுப்பது மிகவும் அபூர்வம் என்கின்ற போதிலும், அதன் பிரதிபலன்களால்- பாலியல் சார்ந்த வன்செயல்களால், ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படும் பாலியல் வல்லுறவால், குடும்பங்கள் பிரிந்து போவதால் ஏற்படுகின்ற கண்ணீரால் அவர்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐ. நா சனத்தொகை நிதியத்தின், நிறைவேற்று இயக்குனரான தொறயா அஹ்மட் ஒபைட் கூறுகிறார்.

15 வருடங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்த பொஸ்னிய போரில் உயிர் தப்பியுள்ள பல பெண்கள் பல வகையிலான பாலியல் வன்கொடுமைகளையும் தாண்டி வந்திருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவ்வாறு உயிர் தப்பி திரும்பியவர்களில் பலரை அவர்களது

குடும்பங்கள் நிராகரித்துவிட்டன. தமது குடும்ப கௌரவத்தை அழித்து விட்டதாக பல பெண்களின் மீது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினார்கள். இவ்வாறு திக்குத் தெரியாமல் மன அழுத்தத்தில் தவித்த பல பெண்கள் தமது கதைகள் வெளியே தெரிந்தால், தாம் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று தவித்தமை பற்றியும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் இளையவர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என்று அனைத்து தரப்பினரையும் தீவிரமான அழுத்தம் பாதித்தது என்பதையும், பலர் தமது இறுதிக்காலத்தில், தனிமையிலும், வறுமையிலும், மறக்கப்பட்டவர்களாகவும் வாழ நேர்ந்தது என்பதையும் இந்த அறிக்கை ஒப்புக்கொள்கிறது.

ஆனால், ஆண்களுக்கு நிகரான வாய்ப்புக்களும், உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால், மீள்கட்டமைப்புக்கான வாய்ப்புக்கள் மேம்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கை வாதிடுகிறது.

கடந்த தாசாப்த அனுபவங்கள், நெருக்கடிக்கும், மீட்சிக்கும் மற்றும் அபிவிருத்திக்கும் இடையிலான பொய்யான தடைக்கோடுகளை அழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

தமது கலாச்சாரத்தின் ஊடாக மோதலுக்கு பின்பான மன அதிர்ச்சியை புரிந்துகொள்ளவும், மற்றும் தம்மிடையே துயரத்தை குறைப்பதற்கான வழிகளை தேடவும், சம்பந்தப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற நம்பிக்கையான பல புதிய முயற்சிகள் தமக்கு நல்ல எதிர்ப்பார்ப்பை தந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *