ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?

புரோட்டீன்கள்

prakeeth1

கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை  இலங்கை, இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

அரசியல் கைதுக்கு எதிராகவும்,பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை விட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த மாநாட்டாளர்கள் பேச்சு, எழுத்து சுதந்திரம் என மறுக்கப்பட்டிருக்கும்  இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்துகிறார்கள்? ஆகையால் “இம்  மாநாட்டில் கலந்துகொள்வோரும், நடத்துவோரும் சமூகபொறுப்பு, அக்கறையற்றவர்கள், அரசியல் பண்பில்லாதவர்கள்”. என்பதே எங்கள் கருத்து.

பல அடக்குமுறைகளை தன் பேனா மூலம் ஒரு எழுத்தாளர் கொண்டு வர முடியும். அதை பலர் தங்கள் பேனாக்கள் மூலம் தங்களது உயிரை பயணம் வைத்தார்கள் உயிரையும் இழந்தார்கள். லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டார்கள்.  பிரகீத் காணமால் போயுள்ளார் நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி இலங்கையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன.  எழுத்தாளர்கள் கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள், படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு இலங்கை என உலக ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றன.

2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கு செலவிடப்படும் பணத்தின் தொகை கிட்டதட்ட 50 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. ஆனால் யுத்தத்தால் ஏற்பட்ட  எமது மக்களின் இரத்தச் சுவடுகள் இன்னும் உலர்ந்துவிடாத நிலையிலும் எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், கர்ப்பிணித் தாய்மார்களினதும் முதியவர்களினதும்  அடிப்படைத் தேவைகைளை பூhத்தி செய்யாத நிலையிலும் இந்மகாநாடு நடத்தப்படுகின்றது.

அண்மைய  கணீப்பீட்டின்படி கிட்டதட்ட 90,000 கணவனையிழந்த பெண்கள் தங்கள் வாழ்வைத் தொலைத்துவிட்டு அநாதரவாக நிற்கின்றனர். பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதே போல்  யுத்தத்தினால் காயமுற்று நரம்புகள் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக் கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வற்றுப் போயுள்ள பல ஆயிரக்கணக்கானோர்  உதவியை  நாடிநிற்கின்றனர்;, பெற்றோரை இழந்து ஆயிரக்கணக்கில் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.  அவை தொடர்பாக உண்மை நிலைமைகளை யாரும் அறியாமல் இருக்க முடியாது. யுத்தத்தினால் பெற்றோரை இழந்த (ஒரு சில)  1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் தெல்லிப்பளை முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மீளக்குடியமர்ந்து உள்ளர்வர்களுக்கு எந்தவிதமான வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. .இடம் பெயர்ந்து  உடுக்க உடைகூட இல்லாமல் முகாம்களுக்குச் சென்ற நிலைமையிலேயே அங்கே மீளவும் குடியேறியுள்ளார்கள்.  பிள்ளைக்கு பால்மா வாங்கப் கூட பணம் இல்லை என வாய்விட்டு அழும் தாய்மார்கள். போசாக்கின்மையால் 3 அல்லது 4 குழந்தைகள் அன்றாடம் முகாமில் இறக்கிறார்கள். காணமால் போனோரைத் தேடி பெண்கள் முகாம்களுக்கு அலைகிறார்கள். சிலர் உயிருடன் இருக்கிறார்களா  என்ற தவிப்புடன் பல பெண்கள் கண்ணீருடன் முகாம்களின் வாசலில்…

prakeeth1

ஓவியம் – காணமல் போன பிரகீத் எக்நெலிகொட

இந்நிலையில் இவ் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு அவசியம் தானா??

அரசியல் கைதுக்கு எதிராகவும்,பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை விட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த மாநாட்டாளர்கள் பேச்சு, எழுத்து சுதந்திரம் என மறுக்கப்பட்டிருக்கும்  இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்துகிறார்கள்? ஆகையால் இம்  மாநாட்டில் கலந்துகொள்வோரும், நடத்துவோரும் சமூகபொறுப்பு, அக்கறையற்றவர்கள், அரசியல் பண்பில்லாதவர்கள். என்பதே எங்கள் கருத்து.

சமூகத்தில் அக்கறையுடைய பெண்கள் மற்றும் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இம் மகாநாட்டை புறக்கணிப்போம் நிராகரிப்போம் பாதிப்படைந்த மக்களுக்கும் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்கும் கணவனையிழந்த பெண்களுக்கும் அநாதரவாக ஆக்கப்பட்டுள்ள சிறுமிகள் சிறுவர்களுக்கும் உறுதுணையாக நிற்போம்.

6 Comments on “ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?”

  1. இப்போது தான் பெண்கள்வழித்துக்கொண்டுள்ளார்கள் இனியாவது உருப்படியான காரியங்கள் நடக்கட்டும் பெண்களை பகைக்க வேண்டாம்.

  2. ஊடறு சரியான கேள்வி!!!
    ஊடக சுதந்திரமில்லாத நாட்டில் என்ன மண்ணாங்கட்டிக்கு எழுத்தாளர் மாநாடு?

    சரியான நேரத்தில் புரோட்டீன்களின் கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள்.
    மிகப் பொருத்தமாக இருக்கிறது பிரகீத்தின் ஓவியம்.
    விஜய்

  3. நியாயமான கேள்வித் தலைப்புடன் கட்டுரை அமைந்திருக்கிறது. உரியவர்கள் சிந்திப்பார்களா?

    – சுதேசிகன்

  4. ஊடக சுதந்திரம் மட்டுமா பாலியல் துஸ்பிரயோகங்கள் பெண்கள் கடத்தப்படுவது தனியே இருக்கும் பெண்களிடம் இராணுவம் அத்துமீறி நடப்பது தமிழ் மக்களுக்கு இதுவரை எந்த வித தீர்வம் இல்லை, புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்றவர்கள் ஒரு சமாதனத்தீர்வை தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும் முருகபூபதி சோபாசக்தியின் பேட்டியில் விலாசம் எழுப்புகிறார். முருகபூபதி அவர்களே சைவத்தையும் கட்டிக்காத்துக்கொண்டு எழுத்தாளர்மகாநாட்டையும் செய்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியாதுங்கோ முதல்ல உங்கள் நாட்டில் உள்ள ஏழை எளியதுக்கு ஏதாவது செய்யுங்கோ அதன்பின்னர் கோடியாக செலவழித்து எழுத்தாளர் மகாநாடு நடத்தலாம் இலங்கை அரசாங்கம் இவ்வளவு பண்ம் தருகிறதே என்று சொல்ல ஏன் உங்களால் சொல்ல முடியாதுள்ளது.

  5. கலை இலக்கிய அரங்கம்–6

    சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!

    கழுதை மயிர் பிடுங்கி தீர்த்தமாடியவனாட்டம் சிற்சில எழுத்தாளர்கள்!

    கும்பலில் கோவிந்தா எனும் நிலை மாறவேண்டும்!

    ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?

    கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை இலங்கை இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

    “அரசியல் கைதுக்கு எதிராகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை விட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த மாநாட்டாளர்கள் பேச்சு எழுத்து சுதந்திரம் என மறுக்கப்பட்டிருக்கும் இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்துகிறார்கள்? ஆகையால் “இம் மாநாட்டில் கலந்துகொள்வோரும் நடத்துவோரும் சமூகபொறுப்பு அக்கறையற்றவர்கள் அரசியல் பண்பில்லாதவர்கள்”. என்பதே எங்கள் கருத்து.”

    —-– புரோட்டீன்கள்
    “அண்மைக் காலத்தில் இலங்கை அரசால் நடாத்தப்பட்ட இலக்கிய விழாக்கள் பற்றிய செய்திகள் பல அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் கூட சாகித்திய இரத்தினா என்ற விருதினை ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களையெல்லாம் பத்திரிகைகளில் பார்த்த ஞாபகமுண்டு. அது போல் கவிநாயகர் கந்தவனம் கூடக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் மகவம் கலைஞர் வட்டம் புனிதக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் நடாத்திய இலக்கியச் சந்திப்பொன்றில் 29.11.2009 அன்று கலந்து கொண்டு ‘கனடாவில் கலை இலக்கிய முயற்சிகள்’ பற்றிக் கட்டுரை வாசித்துள்ளார்.

    இப்படிக் கேள்வியெழுப்புகின்றார் தமிழக எழத்தாளர் மாயவன். இதைவிட புரோட்டீன்கள் போன்று தமிழக எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், ராமகிருஸ்ணன், மாலதி மைத்திரி, தாமரை ஆசிரியர், கோவை ஞானி போன்றேர்ர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். முதலில் சாகித்திய மண்டலப் பரிசுபற்றியும், இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் பின்நோக்கிப் பார்ப்போம்:

    முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

    இலங்கையில் கலை இலக்கிய-எழுத்தாளர்களின் ஸ்தாபன வடிவங்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நற்போக்கு எழுத்தாளர்கள் (இவர்கள் ஓர் அமைப்பாக இயங்கியதில்லை.) புதிய ஐனநாயக எழுத்தாளர் சங்கம், தேசிய கலை-இலக்கியப் பேரவை ஆகியனவாகும். இதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உயிரோட்டமாக இயங்கிய காலங்களில் பெரும்பான்மையான எழுத்தாளர்களை தன்னகத்தே உள்வாங்கியிருந்தது. சிவத்தம்பி, கைலாசபதி உட்பட பிரேம்ஜி, எச்.எம்.பி. முகைதீன், டானியல், என்.கே. ரகுநாதன், டொமினிக் ஜீவா, சில்லையூர் செல்வராஐன், செ. யோகநாதன், சுபையர் இளங்கீரன், அ.வ. இராஐரத்தினம், தெணியான், தெளிவத்தை யோசப், எஸ்.பொ. நீர்வை பொன்னையன், போன்ற இவர்களுடன் இன்னும் பலர்.

    இக்கால கட்டத்தில் இவ் எழுத்தாளர்கள் கலை இலக்கியம் மக்களுக்கானதே! என்பதை நிலை நிறுத்தி தம் ஆக்கங்களை ஆய்வுகளாக, சிறுகதைகளாக, நாவல்களாக, பதிவு செய்தனர். கைலாசபதி “பண்டைத்தமிழர் வாழ்வும் பண்பாடும்–அடியும் முடியும்”–போன்ற இன்னும் பல நூல்களையும், சிவத்தம்பி “ஈழத்தமிழ் இலக்கிய வரலாறு—சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும” போன்ற இன்னும் பல நூல்களையும் சமூக-விஞ்ஞான நோக்கில் இருந்து எழுதினர். இக்காலகட்டத்திலேயே கைலாசபதியும்–சிவத்தமபியும் இலக்கியத்தின் “இரட்டைத் துப்பாக்கிகள்” என வர்ணிக்கர்பட்டனர்.

    சாகித்திய மண்டலப் பரிசு

    இக்காலகடட்ம் தான் பல எழுத்தாளர்கள் சாகித்திய மண்டலப பரிசுகளைப் பெற்ற் காலமுமாகும்!. இவர்களில் டொமினிக் ஜீவா, சுபையர், இளங்கீரன் மு.தளையசிங்கம் , அ.வ. ராஐரத்தினம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்நேரத்தில் அ.வ. ராஐரத்தினத்திற்கு கொடுக்கவேண்டிய பரிசை, இளங்கீரனுக்கு வழங்கியதாகவும், இதை ராஐரத்தினம் பெருங்குற்றச்சாட்டாக்கி, முற்போக்காளர் சங்கத்தில் இருந்து வெளியேறி, “நற்போக்காளான்” ஆக வழி வகுத்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. அத்தோடு இதையடுத்த 70-ம் ஆண்டுக்காலகட்டத்தில் சாகித்திய மண்டலப் பரிசைப் பெறுவது பற்றிய பெரும் வாதப் பிரதிவாதங்களும் ஆரம்பித்தன.

    70-ம் ஆண்டு சிறிமாவோவின் சிறிலங்கா சுதந்திரக் ஆட்சி ஆட்சிபீடமேறியது. இதில் பீட்டர் கெனமன்–விக்கிரமசிங்காவின் கம்யூனிஸ்ட் கட்சியினரும், லங்கா சமசமாஐக்கட்சியினரும் பங்காளிகள் ஆகின்றனர். இவர்களின் கூட்டாட்சியில் புதிய அரசியல் திருத்தம், தரப்படுத்தல் போன்றவைகள் கொண்டு வரப்படுகின்றன. இதற்கெதிராக தமிழ்ப்பிரதேசங்களில் தமிழ்த்தேசியர்களின் எதிர்ப் போராட்டஙகள் ஆரம்பமாகி தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அத்தோடு பேரினவாத அரசின் திட்டமிட்ட நடவடிக்கைளால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தனித்தமிழ் ஈழத்திற்கான கருக்கட்டலும் ஆரம்பித்து. அது போராட்டங்களாகவும் ஆகிவிட்டது. இந்நேரத்தில் கூட இவர்கள் தமிழ்மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுக்காது அரசின் பேரினவாதத்திற்கு துணை போனார்கள். அரசியலில் –கலை-இலக்கியத்தில் திரிபுவாதிகளாகவே செயறபட்டனர். ஏன் இவர்களின் தலித்தியத்தின் மகாசபைக்கும்–எம்.சி சுப்பிரமணியத்திற்கும் சமாதான-சகஜீவனமும், சிறிமா சாஸ்டாங்க நமஸ்கார நிலையுமே! இதனால் சாகித்திய மண்டலப் பரிசைப் பெறவேண்டுமா? என்ற வாதப்பிரதிவாதம் பெரும் பொருளாகின்றது!

    இதற்கு முன்பாக 60-ம் ஆண்டுக் காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டுள்ளது. 66-களில் சண் தலைமையிலான கட்சி சாதியப் போராட்டத்தை முன்னெடுத்துவிட்டது. இந்நேரம் டானியல், என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன் போன்ற பலர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்து விலகிவிட்டனர். இவர்கள் இக்காலகட்டத்தில் சாகித்திய மண்டலப் பரிசை பெறக்கூடாதென வலியுறுத்தினர். டானியலுக்கு கூட இப்பரிசு கொடுக்க தீர்மானிக்கப்பட்டு, அவர் பெறமாட்டார் என்ற நிலையில், அது வேறொருவருக்கு கொடுபட்ட சம்பவமும் நடந்தேறியது.

    புதிய ஐனநாயக எழுத்தாளர் சங்கம்

    71- ஏப்ரல் கிளர்ச்சியின் பின் சண் தலைமையிலான கட்சியைச் சேர்ந்த பலர் சிறையிலிருந்து வெளிவருகின்றனர். அப்போது கட்சிப் புனர்நிர்மாணமும், கலை-இலக்கிய ஸ்தாபனம் பற்றியும் ஆலோசிக்கப்படுகின்றது! அவ்வாலோசனைகளின் உருவாக்கமே புதிய ஐனநாயக எழுத்தாளர் சங்கம்!. 72-ம் ஆண்டென நினைக்கின்றேன் அதன் மாநாடு திருகோணமலையில் நடைபெறுகின்றது. இம்மாநாட்டை டானியல், என்.கே. ரகுநாதன, சில்லையூர் செல்வராஐன் ஆகியோர் முன்நின்று நடாத்துகின்றார்கள்.

    இம் மாநாட்டீல் அன்றைய குமரன் பத்திரிகை ஆசிரியர் செ. கணேசலிங்கன்,புதுவை இரத்தினதுரை, சாருமதி, கே. செந்திவேல, க.தணிகாசலம், நந்தினி சேவியர், முருகு கந்தராசா, கி. பவானந்தன், இளைய பத்மநாதன், சிவராசா, சிவம் (தேடகம்-கனடா) உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ் எழுத்தாளர் சங்கத்தாலும் ஓரிரு ஆண்டுகளதான் இயங்க முடிந்தது. 74-ல் இதிலுள்ள் பெரும்பான்மையோர் தேசிய கலை-இலக்கியப் பேரவைவை உருவாக்கினர். அதன் சஞ்சிகையாக தாயகம் தொடர்ந்து வெளிவருகின்றது.

    நற்போக்கு எழுத்தாளர்கள்!

    இச்சொல்லை முதன் முதலில் தேர்ந்தெடுத்தவர் சேர் பொன்னம்பலம இராமநாதனின் மருமகன் நடேசபிள்ளையாவார். மரபுவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் இதற்கு சுதந்திரன் பத்திரிகைக்கு ஊடாக வரைவிலக்கணம் கொடுத்தார்கள். இவர்களில், பேராசிரியர் சதாசிவம், சு. நடேசபிள்ளை, அ.வ. இராசரத்தினம், கனக செந்திநாதன், சொக்கன்,மு. தளையசிங்கம், போன்றோர்களே முக்கியமானவர்கள். இவர்களுடன் எஸ் பொ.வும். இவர்கள் தங்களின் செயற்பாடாக ஒரு மாநாட்டையோ ஓர் கூட்டத்தையோ, ஓர் சஞ்சிகையையோ வெளியிட்தாக எத்தகவலும் இல்லை.

    இந்நற்போக்காளர்களில் ராஐரத்தினம், எஸ்.பொ. போன்றவர்கள் காலத்திற்கு கால்ம் மாறிவரும் அரசுகளில் தங்களுக்கு சாதகமான அரசுகளுடன் சேர்ந்து தங்களுக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வார்கள். எஸ்.பெர். 65-70-காலகட்டஙகளில் யூ.என்.பி. ஆட்சியில் மந்திரி திருச்செல்வ- அருளுடன் அரச பாடத்திட்ட குழு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தானத்திற்குள்ளும் புகுந்தார். இக்காலத்திலதான் தளையசிங்கத்தின் புத்தகமான போர்ப்பறைக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைக்கின்றது. 73-ல் தளையசிங்கத்தின் மரணத்தோடு அவரது நற்போக்கும்–சர்வோதய இயக்கமும் அஸ்தமனம் அடைகின்றது. இதையடுத்து 70-ம் ஆண்டு ராஐரத்தினம் மூதூர் மஜீத்தை சிறிமாவிடம் சேரப்பண்ணி, அவரை எம்.பி.யாக்கவும் வேலை செய்தார். வெற்றியின் பின் அவருக்கூடாக சாகித்திய மணடலக்குழுவிற்குள்ளும் புகுந்தார். இவைகளையே நற்போக்குவாதிகளின் நற்போக்காகக் காணலாம்.

    இலங்கையின் கலை இலக்கிய எழுத்தாளர்கள்–தாபனங்களின் கடந்தகால இப்பதிவுகளுக்கு ஊடாக நாம் பலவற்றை படிக்க முடியும். இப்பாடங்களுக்கூடாக எம் எதிர்கால வேலைமுறைகளையும்–விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

    நடைபெறவிருப்பது புரட்சிகர அமைப்பொன்றின் மாநாடல்ல. மிதவாதப் போக்குடைய இவர்களிடம் போய்….கோவை ஞானி என்னதான் கேட்கின்றார்?

    “ கொழும்பில் மாநாடு நடத்துவது என்றால் அரசு நிபந்தனை உண்டு என்று கேள்விப்பட்டேன். அதாவது ராஜபக்சேவை விமர்சனம் பண்ணக்கூடாது. முள்ளி வாய்க்கால் போன்ற பிரச்சனைகளை பேசக்கூடாது. அப்படியென்றால் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த உணர்வே இருக்கக் கூடாது. இலங்கை சிங்கள அரசு தமிழர்களுக்கு மிகப் பெரிய அழிவையை உண்டாக்கி இருக்கிறது என்று மனதில் எண்ணம் இருந்தாலும் கூட பேசக்கூடாது. அல்லது பேச வேண்டுமானால் அரசுக்கு அனுசரணையான செய்திகளை மட்டும் பேச வேண்டும். அந்த மாதிரி பேசக்கூடியவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈழ மக்கள் விடுதலைக்கு எதிராக பேசக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இந்த மாநாட்டில் பங்கு கொள்வார்கள்!”

    ஞானி போன்றவர்களின் இக்கதைகள் “கழுதை மயிர் பிடுங்கி தீர்த்தமாடியவர்கள்” போல் உள்ளது சில தமிழகத்தினதும்—எம் எழுத்தாளர்களினதும் நிலை! இதை சைவ சமயப் பிரசங்கி கிருபானந்தவாரியார் அழகாகக் சொல்வார். இராமேஸ்வரம் கோவில் முன்பான கடற்கரையில் தீர்த்தமாட பலர் கூட்டமாக நின்றனர். அதற்குள் ஓர் கழுதையும்!. வடஇந்தியாவில் இருந்து பிதிர்க்கடன் தீர்க்க வந்த ஒருவர் பக்கத்தில் நின்ற கழுதையிலிருந்து மயிர் ஒன்றைப் பிடுங்கி, சிவ சிவ என கும்பிட்டபடி கடலில் குதித்து தீர்த்தமாடினான்!. இதைப் பார்த்தவர்கள் எல்லாம் கழுதையை பலாத்காரதாக பிடித்து மயிர் பிடுங்கி அர்படியே தீர்த்தமாடினார்கள்!. இதைப் பார்த்த ஓருவர் ஏன் இப்படியெனக் கேட்டபொழுது, வடஇந்தியாவிலிருந்து வந்தவர் அப்படிச் செய்தார்! அதனாலேயே நாங்களும் என்றனர்!

    இது போலவே எஸ். பொ. கழுதை மயிர் பிடுஙகியவனாட்டம், மாநாட்டை நிராகரி என்றிட, சில புலி இணைய தளங்கள் இதை பிரசுரிக்க, அதைக் அப்படியே கொப்பியடிக்கின்றனர் எழுத்தாளர்கள் சிலர்!. சென்ற வாரம் தமிழக எழுத்தாளர் ஒரு சிலரிடம் கதைத்த பொழுது, இது எஸ்.பொ. தீராநதி, இன்னும் சில இணையதளங்களால் வந்தவினை என்றார்கள். இதில் ஞானி போன்ற பலர் அவசரப்பட்டு பலதை கவிட்டுக் கொட்டிவிட்டனர் என்றனர்!. இவ் அபிப்பிராயமே இலங்கை எழுத்தாளர்கள் பலரதும்!.

    இதில் என் நோக்கம் இம்மாநாட்டிற்கு பச்சைக்கொடி காட்டுவதும், வக்காலத்து வாங்குவதுமல்ல!. கடந்தகாலங்களில் புலம்பெயர் மாநாடுகள் (இலக்கிய-பெண்கள் சந்திப்புக்கள் உட்பட்) என்றால் கனல் பறக்கும் கர்னகடுர புலி-அரச அறிக்கைகள்-பேச்சுக்கள்-அதனடிப்படையிலான தீர்மானங்கள் தான்!.

    கடந்தகால இப் போக்கில் இருந்து விடுபட்டு, எதிர் காலத்திலாவது இந்நிலையை மாற்றினால் என்ன?. சர்வதேச த.எ. மாநாடு போன்று, தாயகம் நோக்கிய, இலக்கிய-பெண்கள் மாநாடுகள் சந்திப்புக்களை நடாத்தினால் என்ன?. இம் மாநாடுகளில் அங்குள்ளவர்களையும் பங்குகொள்ள வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் என்ன? . அரச-மகிந்த எதிர்ப்பு கோஸங்களுடான-போஸ்டர்கள்-பனர்கள், போட்டு-மாட்டி ஒட்டி- மாநாடு நடத்தினால்தான் அது மாநாடோ?. இக்கோஸங்கள் இல்லாத மாநாடுகளுக்கு உந்த தேசிய சர்வதேச எழுத்தாளர்கள் வரமாட்டார்களோ?. நாட்டு நிலவரத்தை கணக்கில் எடுத்து மூல-தந்திரோபாய ரீதியாக எம்வேலை முறைகளை மாற்ற முடியாதோ?. அதனடிப்படையில் ஒடுக்கபபட்ட்-பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய நிகழ்வுகளை நடாத்த முடியாதோ?. முடியும்!. முயன்றால் முடியும்!. இது உங்களுக்கான எம் போதனைகள் அல்ல! தாயக வேலைக்கான எம் எதிர்கால் மக்கள் நலன்சார் வேலைமுறையும் இதுவேதான்!.

    குறிப்பு: இதிலுள்ள பதிவில் விடுபட்டுள்ள பல விடயங்கள் உண்டு. இதை அடுத்தடுத்த பதிவுகளில் தருகின்றேன். இதையொட்டி மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தங்கள் தகவல்களையும் தந்துதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *