ஞாபகங்கள் -Nadarajah Kuruparan

செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!இப்பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப் போகும் பயன் என்ன? எனச் சிந்திப்போரும் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடையங்களும் எங்கள் நினைவுகளுக்குள் மட்டும் இருந்து, நாங்கள் படிப்படியாக மறந்துகொண்டிருக்கும் விடையங்களும் என்றென்றைக்குமாக மறைந்தே போகட்டும் எனக் கருதுபவர்களும் என்னை மன்னித்துவிடுங்கள். சொல்லாத செய்திகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியே ஆகவேண்டும்.நண்பர்களே, ஒருகாலத்தில் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாகச் சிந்தித்து, சமூக விடுதலையை நேசித்த என் நண்பர்கள் பலரை இழந்த துயரம் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அந்தத் துயரங்களின் உள்ளே உள்ள சொல்லாத செய்திகளை இப்போழுதும் சொல்லாவிடின் இனி எப்போதுமே சொல்ல முடியாது போய் விடும்.அர்த்தமற்ற நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் // அவலத்திலும் அச்சத்திலும் உறைந்து போன நாள்கள். //மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து// வாழ்தலில் எனக்கு பிரியமேயில்லை!// மேற்குறித்த வரிகள் செல்வியின் இதயத்தில் இருந்து வந்த இருவேறு கவிதைகளில் இருந்து பெறப்பட்டவை. இவ்வரிகளை எழுத்த வைத்த காலம் கீழ்வருமாறு இருந்தது.

இந்திய இராணுவம் 21.01.1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு முற்றாக வெளியேறியது. (1990 பங்குனியில் திருமலையில் இருந்த கடைசி இந்திய இராணுவ அணியும் வெளியேறியது.) இந்த வெளியேற்றத்துடன், யாழ் குடாநாடு புலிகள் வசமானது. புலிகளின் வருகையுடன் மெல்ல மெல்ல மாற்று அரசியலுக்கான கதவுகள் மூடப்பட்டத் தொடங்கின. இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவர்களை மட்டுமன்றித் தமிழ் ஈழ விடுதலை தொடர்பான மாற்று அரசியல் நிலைபாட்டைக் கொண்டிருந்தவர்களையும் புலிகள் குறிவைத்தனர். புலிகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவரையும் குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், மனித உரிமைவாதிகள் போன்றவர்களைப் புலிகள் தமது கண்காணிப்பு வளையத்துள் கொண்டுவந்தனர்.PLFT அன்ரன் (ஐயர் என அழைக்கப்பட்டவர்) நான் அவரை இணுவிலில் சந்தித்து உரையாடிய சிலநாட்களின் பின் (1990ன் நடுப்பகுதியில்) புலிகளால் கைது செய்யப்பட்டார். NLFT இயக்க உறுப்பினர்கள் மற்றும் மாற்று இயக்கங்களில் முன்பிருந்த சிலரும் அக்காலங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களிற் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் தலைமறைவாகவே இருந்தனர். அக்காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு அவர்களிடம் அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்பதுடன் அதற்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டிருந்தன. இந்தக் காலத்தில் செல்வி யாழ்ப்பாணத்தில்தான் இருந்தார் செல்வியுடன், கவிஞரும் பல்கலைக்கழக மாணவியுமான சிவரமணி, யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களான தீப்பொறி தர்மலிங்கம், ஆசிரியர் தில்லை என்ற தில்லைநாதன் (சிவரமணியின் நண்பர்) மனோ என்ற மனோகரன் (பல்கலைக்கழக மாணவர்) போன்றோர் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். இவர்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் திண்ணைகளிலும், தேனீர்ச் காலையிலும் அவ்வப்போது சந்தித்துப் பேசிக்கொண்டு இருப்பார்கள்.செல்வி, மனோ என்ற மனோகரன் மற்றும் சிவரமணி ஆகியோருக்கு, UTHR (University Teachers for Human Rights ) செயற்பாட்டாளர்களுடன் நெருக்கமான உறவும், தொடர்பும் இருந்தன. இதனை UTHR தனது அறிக்கை ஒன்றிலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. (https://www.uthr.org/Book/Forward.htm) UTHR ன் முக்கிய தலைமை செயற்பாட்டாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகி இருந்த காலம் அது.”பூரணி இல்லம்” என்ற பெண்கள் தொண்டு நிறுவனத்துடன் செல்விக்கும் சிவரமணிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது..

வடக்கில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு நிவாரண உதவிகளை இந்த மையம் செய்து வந்தது. யாழ்ப் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அவை மற்றும் இலக்கியவட்டத்தின் செயற்பாட்டாளராகவும் செல்வி இயங்கியவர். UTHR மீதான புலிகளின் சந்தேகப் பார்வை செல்வியின் மீதும் படர்ந்தது. அடிப்படை மனித உரிமைகளும் சனநாயகமும் விடுதலைப் போராட்டத்தின் போதும் பேணப்பட வேண்டியவை என்பதை உணராத புலிகள் UTHR உடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் கைதுசெய்யத் தொடங்கி இருந்தனர். செல்வியும் அவரது நண்பர்களும் இந்தச் சூழலை சரியாகப் புரிந்துகொள்ளவோ அல்லது கணிப்பிடவோ தவறியதனால் புலிகளினால் கைதாகினர் என்பது வரலாற்றுத் துயரம்.அப்போது நிலவிய அந்தத் தீவிரமான சூழலை புரிந்துகொண்ட நான், எனது பல்கலைக்கழகக் கல்வியின் தொடர்ச்சியைப் பற்றிய கவலைகளைத் துறந்து குடாநாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். நண்பன் போல் (Paul) தனியொருவனாக எம்மை யாழ்க் குடா நாட்டில் இருந்து மீட்டுக் கொழும்பிற் சேர்த்தார்.யாழில் இருந்து புறப்பட முன்பாகவும், கொழும்பை அடைந்த பின்பும், செல்விக்கும் ஏனைய நண்பர்களுக்கும் நிலமையின் கடுமையை புலப்படுத்தி, தற்காலிகமாகவாயினும் யாழ் குடா நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரியிருந்தேன்.

ஆனால் அதனை அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை. செல்வி உட்படக் குடாநாட்டில் தம்மை தக்க வைக்க விரும்பிய நண்பர்கள், எனது வெளியேற்றம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு. அதனை விடுத்து இப்படி ஒவ்வொருவரும் வெளியேறினால் யார் அவற்றைச் செய்வது எனச் செல்வி கடிந்துகொண்டார். செல்வி என் வெளியேற்றம் குறித்து என்னைத் திட்டி தீர்த்து எழுதிய கடிதம் ஒன்றும் எனக்குக் கிடைத்திருந்தது. மாற்று அரசியற் சிந்தனை கொண்டவர்களுக்கு 90களின் ஆரம்பக் காலம் மிகுந்த உயிராபத்து நிறைந்த காலமாக இருந்தது. நெருக்கடியான காலமாக இருந்தது. அவ்வழியிற் 1991-ம் ஆண்டு மே மாதம் துயர் நிறைந்த மாதம் ஆகியது. மே மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று கவிஞரும் பெண்ணிலைச் செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவியுமான சிவறமணி தனது 23ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முந்திய நாட்களில் சிவறமணி பதட்டத்துடனும், விரக்தியுடனும் காணப்பட்டதாக அவரது நெருங்கிய நண்பர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

இரவுகளில் யாராவது வீட்டுக்கதவில் தட்டினால் தன்னைக் கேளாது கதவைத் திறக்கக் கூடாது எனச் சிவறமணி தனது வீட்டாருக்குச் சொல்லி வைத்திருந்ததாக அறிந்தேன்.சிவறமணி தற்கொலை செய்து கொண்ட அதே மே மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ”புதியதோர் உலகம்” நாவலாலாசிரியரும். தீ்பொறியின் முக்கிய செயற்பாட்டாளருமான கோவிந்தன் ( கேசவன் மற்றும் டொமினிக் என்ற பெயர்களிலும் அறியப்பட்டவர் ) கொக்குவிலில் வைத்துப் புலிகளால் கைது செய்யப்பட்டார். காலையில் சிவறமணி தற்கொலைச் செய்தி பரவியது. இரவு கேசவன் கைதாகினார்.கேசவனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புபட்டதாகக் கூறப்பட்டு மற்றும் ஒரு பல்கலைக்கழக மாணவர், (தனது பெயரைக் குறிப்பிட அவர் விரும்பவில்லை) சிவறமணியின் மரண வீட்டில் கலந்து கொண்ட பின் விடு திரும்பிச் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது அன்றைய தினமே மே 21 மாலை 5 மணிக்கு கொக்குவிலில் வைத்துக் கைதானார். சிவரமணியின் இறுதியாத்த்திரையும், இவரது கைதும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலையும் ஒரே நாளில் இடம்பெற்றவை.கேசவனுடன் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் 8 மாதங்களின் பின் புலிகளால் விடுவிக்கப்பட்டார். இவரை விடுவிப்பதற்காகத் தங்கவைக்கப்பட்ட விடுவிப்பு முகாமில் புதியதோர் உலகம் கோவிந்தனையும் – (கேசவனையும் ) விடுவிப்பதற்காக வைத்திருந்த போதும் இறுதி நேரத்தில் அவரை விடுவிக்கும் முடிவைப் புலிகள் மாற்றிக்கொண்டதாக விடுவிக்கப்பட்ட நண்பர் கூறினார்.

கேசவன் கைதாவதற்கு முன்னர் யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் தீபொறி தர்மலிங்கம் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். ஆயுத விவகாரம் ஒன்று குறித்து, தனது நெருங்கிய நண்பரும், யாழ் நகர மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளருமான ஒருவரை புலிகள் கைது செய்ததனை அடுத்து, அவரை விடுவிப்பதற்காகக் தீப்பொறி தர்மலிங்கம் தானே புலிகளிடம் சென்று சரணடைந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரையுமே புலிகள் விடுவிக்கவில்லை. மே 21 ஆம் திகதி கைதாகி 8 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டதாக நான் கூறிய பல்கலைக்கழக மாணவரிடம் தர்மலிங்கத்தின் கைது குறித்தும் புலிகள் விசாரணையின்போது உரையாடி இருக்கிறார்கள். அதில் இருந்து வைகாசி 21க்கு முன் தர்மலிங்கம் கைதாகி இருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. நெருங்கிய தோழியான சிவறமணியின் இறப்பும், தன்னைச் சுற்றி இருந்தவர்கள் கைது செய்யப்பட்டமையும் செல்வியைக் கடுமையாக பாதித்திருந்தன. இந்தக் தொடர் கைதுகள் குறித்த தனது விசனங்களையும் அவர் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் வெளிப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அத்துடன் தான் ஒரு பைத்தியக்காரிபோல் வெறுமையாக வீதிகளில் உலாவுகிறேன் எனத் தன் நண்பர் போலுக்கு எழுதிய கடிதத்தில் செல்வி குறிப்பிட்டு இருக்கிறார். புலிகளால் கைது செய்யப்படுவதற்கு 2 நாட்கள் முன்னதாக தனது பல்கலைக்கழக சக மாணர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற செல்வி “இனி உன்னிடம் வர மாட்டேன்.

என்னைப் பின்தொடர்கிறார்கள். அதனால் மற்றவர்களுக்கு என்னால் பிரச்சனை வரக் கூடாது” எனச் செல்வி சொல்லி இருக்கிறார். 1991 ஓகஸ்ட் 30ல் செல்வி வாடகைக்குத் தங்கியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தை அண்மித்த நாச்சிமார் கோவிலடிக் கலட்டி வீட்டில் வைத்துப் புலிகள் அவரைக் கைது செய்தனர். நான் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது இந்த வீட்டிற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். செல்வியைக் கைது செய்த போது அவரது எழுத்துக்கள் உட்பட்ட அவர் வசம் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் புலிகள் எடுத்துச் சென்றதாக அவ்வீட்டார் தெரிவித்திருந்தனர்.செல்வியின் கைதுக்கு முன்னதாக ஓகஸ்ட் 28ஆம் திகதி அவரது நெருங்கிய நண்பரான தில்லை என்ற தில்லைநாதன் புலிகளாற் கைது செய்யப்பட்டிருந்தார். தில்லை பாவற்குளத்தில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். பல்கலைக்கழகப் பட்டதாரி. முன்னாள் புளொட் செயற்பாட்டாளர். தீ்ப் பொறி தர்மலிங்கத்தின் நெருங்கிய நண்பர். தற்கொலை செய்து கொண்ட கவிஞர் சிவறமணியின் காதலர். இவர்களின் மற்றைய நெருங்கிய நண்பரும், யாழ் பல்கலைக்கழக மாணவரும், மனித உரிமை செயற்பாடுகளோடு தன்னை பிணைத்திருந்தவருமான மனோ என்ற மனோகரன் ஓகஸ்ட் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டார். செல்வி ஓகஸ்ட் 30 காலை புலிகளாற் கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் செல்வியும் நடிப்பதாக இருந்த The Accused என்ற பாலஸ்தீன ஆங்கில நாடகம் செல்வி இல்லாமலே, அவரது வசனங்களை வேறொருவர் வாசித்ததன் மூலம் யாழ் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்டது.செல்வியினதும் எனதும் நெருங்கிய நண்பரும் – தற்போதைய கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜெயசங்கர் (அப்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்) இந்த நாடகத்தை நெறிப்படுத்தியிருந்தார்.

அப்போதைய யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலமொழி கற்கைகள் துறையின் இணைப்பாளர் கலாநிதி சுரேஸ் கனகராஜா, மற்றும் ஆங்கில போதனாசிரியரும், ஊடகவியலாளரும், எழுத்தாளரும், பேரறிஞருமான ஏ.ஜே கனகரட்ணா ஆகியோர் இந்த நாடகத்தை மேற்பார்வை செய்து, அதன் அரகேற்றத்திற்கு துணை புரிந்தார்கள்.The Accused என்ற அப் பாலஸ்தீன நாடகத்தின் கருப்பொருள் அன்று பல்கலைக்கழகத்தில் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி இருந்தது. அரசியற் செயற்பாட்டாளர் ஒருவர், விபத்து என்ற போர்வையில் ராணுவ அதிகாரத்தால் கொல்லப்படுகிறார். அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைத் தாம் கொன்றுவிட்டதான பெருமகிழ்வில் இருந்தவேளை கொல்லப்பட்டவர் வந்து கதவை தட்டுகிறார் என்பதுவே நாடகத்தின் சாராம்சம்.இது UTHRன் ஸ்தாபகர்களில் ஒருவரும், முறிந்தபனை ஆசிரியருமான வைத்திய கலாநிதி ராஜினி திரணகமவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடகம் என ஒரு சில இலக்கியக்காரர்களும், ஒரு சில நாடகவியலாளார்களும் அன்று சர்ச்சையை உருவாக்கி இருந்தனர். உண்மையில் அந்த நாடகம் இராணுவ எதேச்சாதிகாரத்திற்கு எதிரான நாடகம் என்பதனைப் புரிந்துகொள்ளாத அவர்கள், அதனைப் புலிகளுக்கு எதிரான நாடகம் எனப் பிரச்சாரப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் செல்வியைத் தொடர்ந்து, பல்கலக்கழக, ஆங்கிலத்துறையைச் சேர்ந்த அவரது நண்பி ஒருவரும் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் ஒரு வாரத்திலேயே விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டபோது “உங்களில் பிரச்சனை இல்லை ஆனால் உங்களுடன் இருந்தவர்கள் சிலர், உங்கள் வட்டத்தைப் பயன்படுத்தி எம் தொடர்பாகப் பிழையான தகவல்களைப் பிழையான தரப்பினருக்கு வழங்குகின்றனர்” எனப் புலிகள் குறிப்பிட்டதாக அவர் மூலம் அறியக் கிடைத்தது. 30 வருடங்களின் பின் செல்வி என்ற செல்வநிதி தியாகராஜாவைப் பற்றிய நினைவுகள் மீள்கின்றன.புளொட்டின் மகளீரமைப்புச். செயற்பாட்டாளராக, தோழி சஞ்சிகையின் ஆசிரியராக, அசோக்கின் (யோகன் கண்ணமுத்து) நண்பியாக 80களில் செல்வி அறிமுகமாகினார். விசேடமாக அசோக்குடன் நெருக்கமாக மாணவர் அமைப்பு பணிகளில் ஈடுபட்ட நிலையிற் செல்வியுடனான நெருக்கமும் அதிகரித்திருந்தது.1986களில் புளொட்டின் உட்கட்சி முரண்பாடுகள், மாற்று இயக்கங்கள் மீதான புலிகளின் தடை என்பவற்றைத் தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கிய பலர் மீண்டும் படித்துப் பல்கலைக்கழகம் புக முயன்றனர். அசோக் – செல்வியுடனான இந்த நெருக்கத்தின் தொடர்ச்சியாகச் செல்வி எமது மருதனார்மட வீட்டில் தங்கியிருந்து கல்வியைத் தொடரத் தீர்மானித்திருந்தார். அவருடன் இணைந்து நானும் என் கல்வியைக் தொடரத் தீர்மானித்தேன். அவர் எனக்கு ஆங்கிலம் கற்பிக்க நான் அவருக்குப் பொருளியல் கற்பித்தேன். ஆனால் 1986ல் ஏற்பட்ட பாரியதொரு விபத்தினாலும், தவிர்க்க முடியாத அரசியல் நெருக்கடிகளாலும், பல் கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எழுதும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டேன்.

ஆனால் செல்வி பரீட்சை எழுதிப் பல்கலைக்கழகம் புகுந்தார். யாழ் குடாநாட்டில் என் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அங்கு நிற்க முடியாத நிலை எனக்கு எற்பட்ட போது செல்வி தனது சேமமடு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று அடைக்கலம் தந்து பாதுகாத்தார்.பின்பு நானும் 1987ல் பரீட்சை எழுதி, யாழ் பல்கலைக்கழகம் புகுந்தேன். அதனைத் தொடர்ந்து மீண்டும் 1990ல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் நாங்கள் குடாநாட்டில் இருந்து தப்பிக் காடுகளின் ஊடே வவுனியா சென்ற போது செல்வியின் மைத்துனர் செல்வனின் (கிருஸ்ணகுமார்- செல்வியின் தங்கை கலாவின் கணவர்) கொரவப்பொத்தனை வீதியில் இருந்த வீட்டிலே தங்கியே பின் கொழும்பு சென்றோம். வவுனியாவரை ஓடி வந்த சைக்கிளை செல்வனின் தந்தையிடம் கொடுத்து பெற்றுக்கொண்ட 1000 ரூபாய் பணத்துடனேயே கொழும்புக்கு ரயில் ஏறினேன்.இவ்வாறு எனக்கும் செல்விக்குமான உறவு என்பது அரசியலுக்கு அப்பால் சகோதர, குடும்ப உறவாக மாறியிருந்தது. போராட்ட காலங்களில் செல்வி என அழைத்த நான், பின்னர் வயதில் மூத்தவரான அவரை செல்விஅக்கா என்று அழைக்க, என்னை அவர் டேய் குரு என் உரிமையுடன் அழைக்கும் பிணைப்பு இருந்தது. மிகவும் வறுமைப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பத்தில் தாயின் அரவணைப்பில் வளர்ந்த செல்வியின் வறுமையிலும் செம்மையை அவரது சேமமடு வீட்டில் கண்டு வியந்தேன். வவுனியாவின் சேமமடுவில் பிறந்த செல்வி தன் முயற்சியால் மேல் எழுந்து போராட்டத்தில் தன்னை இணைத்து போராட்டம் பின்னடைவைச் சந்தித்த போது அயராத முயற்சியால் பல்கலைக்கழகம் புகுந்தவர்.

பல்கலைக்கழக கல்வியின் நிறைவே தனது எதிர்கால வாழ்வின் அடித்தளம் என, அவர் உறுதியாக நம்பினார். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தில் சிறப்புக் கல்வி இறுதியாண்டில் பயின்று கொண்டிருந்த செல்வி தான் ஒரு வருடம் தாக்குப் பிடித்தால் கல்வியை நிறைவு செய்யலாம் என எண்ணியிருந்தார். புலிகள் அவரைக் கைது செய்யாது இருந்திருந்தால் செல்வி இன்று ஒரு பேராசிரியையாக மிளிர்ந்திருப்பார் என்பதிச் சந்தேகம் இல்லை. ஈழத்துக் கவிஞராகவும், பெண்ணிலைவாதியாகவும், செல்வி எனும் பெயரினால் பெரிதும் அறியப்பட்ட செல்வநிதி தியாகராசா, சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பினால் (PEN) 1992 ஆம் ஆண்டுக்கான எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருதும் சர்வதேச கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான Poets Essayists and Novelists (PEN) அமைப்பால் செல்விக்கு வழங்கப்பட்டது.தோழி எனும் பெண் இலக்கிய இதழின் ஆசிரியராக செயற்பட்ட செல்வி, பல்கலைக்கழக வாழ்வில் நாடக நெறியாளராகவும், நடிகையாகவும், இரண்டு நாடகங்களின் எழுத்துருவாளராகவும் விளங்கினார். செல்வியின் கவிதைகள் சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றன. ஈழத்து பெண் கவிஞர்களின் குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள் என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்தன. 1994 ஆண்டு சர்வதேச கவிதை அமைப்பின் International poetry Society award எனும் விருதும் செல்விக்கு வழங்கப்பட்டது.

இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ”சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும். இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.முதன்முறையாக இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட இந்த விருதைப் பெற்றுக் கொள்ளச் செல்வி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அப்போதும் விடுதலைப் புலிகள் அவரை விடுவிக்கவில்லை. 1993 மார்கழியில் வெளியான சரிநிகர் பத்திரிகையில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட்டப்பட்ட, விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் ( இப்பேட்டி Counterpoint எனும் ஆங்கில சஞ்சிகையில் வந்தது) செல்வி தமது தடுப்புக் கைதியாக இருந்ததனை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். (செல்வியின் படங்களுடன் சரிநிகர் செவ்வியும் இணைத்திருக்கிறேன்)பல்கலைக்கழக மாணவர்களான செல்வி என்ற செல்வநிதி தியாகராஜா, மற்றும் மனோ என்ற மனோகரன் ஆகியோருக்கு தாம் மரண தண்டனை வழங்கியதாக 1997ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டனர். https://amp.ww.en.freejournal.org/…/chelvy-thiyagarajah… செல்வி உங்களின் விடுதலைக்காகப் பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன. மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் உங்களின் விடுதலையைக் கோரியிருந்தன. ஆனால் அந்த விடுதலை இறுதிவரையும் சாத்தியப்படாமலே போனது. இப்போது நம் நினைவுகளாகவும், உங்கள் கவிதைகளுமாகவே நீங்கள் எங்களுடன் பயணிக்கிறீர்கள். செல்வி என்னும் தோழியின் – அக்காவின் நினைவுகள் தரும் மனப்பாரம் நான் இருக்கும் வரை அழியப்போவதில்லை.

ஆனால் தற்காலிகமாக இறக்கி வைத்திருக்கிறேன். விடுதலைப் போராட்டத்தின் பேரால் மானுட அறத்திற்கு எதிரான நடவடிக்கைகளைச் செய்ய எந்தப் போராட்ட அமைப்புக்கும் உரிமை இல்லை. செல்வி கொல்லப்பட்டமை எங்கள் போராட்டம் மானுட விழுமியங்களை வழுவிச் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களில் ஒன்று.குறிப்பு: என்னுள் உறைந்திருந்த அழியாத நினைவுகளுடன், செல்வியுடன் நெருக்கமாக இருந்து செயற்பட்ட நண்பர்கள் பலரிடம் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் பெற்றே இப்பதிவை உருவாக்கினேன். இதனை எழுத உதவிய பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்களுக்கும் நன்றி.நினைவுகளுடன் உங்கள் நண்பன் குரு என்ற நடராஜா குருபன்.நன்றி Nadarajah Kuruparan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *