‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம்

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற பெண்களுடனும் இணைந்து வேலை செய்த போது கிடைத்த அனுபவங்களை இந்நாடகத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள முயற்சித்ததை அவதானிக்க முடிந்தது. இந்நாடக அளிக்கையூடாக கிடைக்கின்ற நிதி பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தேசத்தில் பாதிப்புக்களுக்கு பரிகாரம் தேட வேண்டியதும் இனியும் பாதிப்புக்கள் வராது பாதுகாக்க வேண்டியதும் முக்கியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வழிகளை நாமே கண்டு கொள்ளல் அவசியமாகின்றது.  பாதிக்கப்பட்டவர்களுக்கான அபிவிருத்தியில் மன அபிவிருத்தி பற்றி சிந்தித்தல் மிக அவசியம். மன அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்திட்டத்தில் அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் அரங்கு முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குகின்ற செயல்திறன் அரங்க இயக்கம் (யுஉவiஎந வுhநயவநச ஆழஎநஅநவெ) இவ்வாறான பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது.  பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் நாடகத்தையும் செயல்திறன் அரங்க இயக்கமே தயாரித்துள்ளது. இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பவர் தே. தேவானந்த், ஒன்றரை மணிநேரத்தைக் கொண்ட இந்நாடக அளிக்கைக்கான இசையமைப்பை த. றொபேட் செய்துள்ளார்.

கணவனை போரினால் இழந்த பெண்ணொருத்தி எவ்வாறு தன் வாழ்வை நகர்த்திச் செல்கிறாள். அவள் சந்தித்த சோதனைகளை வேதனைகளை சவால்களை எவ்வாறு முகங் கொடுக்கிறாள். இடிந்தும் துவண்டும் அழுதும் ஆவேசப்பட்டும் நம்ப முடியாத சிந்தனைகளுக்கும் எவ்வாறு ஆட்படுகிறாள் என்பதையும் முடிவில் மீயாற்றல் கொண்டவளாக குடும்பமொன்றிற்கு தலைமை தாங்கும் திறனுடன் எவ்வாறு மிளர்கிறாள் என்ற கருப்பொருளை கொண்டதாக நாடகம் நகர்ந்து செல்கிறது.பால் போல் நிலவெறிக்கபச்சை வயல் முகம்சிரிக்கதாயே உன்மடியில் அன்றுதவழ்ந்த பெரும் நினைவெமக்குள்….  என்ற பாடலுடன் யாழ்ப்பாணக் குடும்பம் ஒன்றின் புகைப்படத்தை; காட்சிப்படுத்துவதுடன் நாடகம் ஆரம்பமாகிறது. தமிழர் தாயகப் பூமியை புகைப்படம் எடுக்க முயற்சித்தால் புகைப்படக் கருவிக்குள் எவ்வாறான காட்சித் துண்டங்கள் வெளிப்படுமோ அவை மேடையில் வெளிப்பட்டன. யாதார்த்த வாழ்வின் சம்பவங்கள் உணர்வுகள், தோற்றங்கள் அனைத்தும் மேடை யாதார்த்தமாக்கப் பட்டிருக்கின்றன. யாதார்த்த வாழ்வின் அனுபவங்கள் படிமங்களாக (ஐஅயபந) கோர்க்கப்பட்டுள்ளன. இதனை படிம அரங்கு ஆற்றுகை எனவும் குறிப்பிடுவர்.நீண்ட காலமாக கைலாபதி கலையரங்கில் நாடகங்களைக் காணவில்லை என்ற ஆதங்கம் பலரிடமும் காணப்பட்டது. அந்தக் குறை அன்று நீக்கப்பட்டது. நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நாடகத்தை பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. இசை, காண்பியங்கள், நடிப்பு, மேடையசைவுகள், வேட உடைகள் போன்ற அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்;டு நாற்பத்தைந்து இளைஞர் யுவதிகள் ஒன்றினைந்து மேடையில் பிரமிப்பை ஏற்படுத்தினார்கள். தொன்னூற்றி ஐந்து இடம்பெயர்வு காட்சி மேடையில் காட்டப்பட்ட போது அந்தப் பிரமிப்பை உணர முடிந்தது.

தமிழர் தம் பண்பாட்டில், ஐதீகங்களில் காணப்படும் பல பண்புகள் தேர்ந்தெடுத்து நாடக கதைக்குள் புகுத்தி நாடகத்தை நகர்த்திச் செல்கிறார்கள். மடிப்பிச்சை எடுத்தல், தன் உடலை வேறொரு உருவமாக மாற்றுதல், கூடுவிட்டு கூடு பாய்தல், கடவுள் உரு எடுத்தல், போன்ற பல பண்புகளை நாடகத்தில் காணமுடிந்தது. இடம்பெயர்வு வாழ்விலும் மீளக்குடியேறும் படிமுறைகளிலும் காணப்படுகின்ற அகப்புறச் சிக்கல்கள் சமாதானச் செயல்முறை நகர்கின்ற முறைமை போன்ற விடயங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.ஒரு பெண் குடும்பத்தை தலைமைதாங்கி நடத்திச் செல்கின்ற போது எவ்வாறான இடர்களை சமுகத்தில் இருந்து குறிப்பாக ஆண்களிடமிருந்து எதிர்நோக்குகிறாள். அவ்வாறான இடர்களை எதிர்கொள்வதற்து என்னென்ன வழிகளை அவள் சாத்தியமென்று நினைக்கிறாள் போன்ற விடயங்களும் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது. போரின் இடையில் சிக்குண்ட மனிதன் தான் வாழ்வதற்காக பல திறன்களை வகுத்தாக வேண்டியவனாகின்றான். அந்த திறன்கள் பின் வாழ்க்கைக்கு வழுச்சேர்க்கும் திறன்களாக மாற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாடகம் முடிவடைகிறது.போர் தந்த வாழ்விழிவை

போக்கும் திறன் முறை செய்

நேர் கொண்ட பார்வை – உந்தன்

நிமிரும் குணம் உன் சொந்தம்

ஊர் உந்தன் – உறவும் உந்தன்

உள் மனதில் நிலை உணர

வேர் கொண்டெழுக – உந்தன்

விழுதும் வளர இன்றே!      நா. சிவசிதம்பரத்தின் பாடலுடன் நாடகம்       முடிவடைகிறது.

போர்க்காலத்தில் மக்கள் பிரச்சனைகளை நுணுகி ஆராய்ந்து பேசிய அரங்கு போர் ஓய்ந்திருந்த காலத்தில் அமைதியாக காணப்பட்டது. தற்போது, மீண்டும் போர் வெடித்துவிடுமோ என்ற அச்ச சூழ்நிலை நிலவுகின்ற இந்த நேரத்தில் மீள உயிர்த்திருப்பது பலரையும் ஆறுதல்படுத்தியுள்ளது

1 Comment on “‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம்”

  1. Iநான் இங்கு எனது எழுத்தக்களையும் பதிவிட விரும்புகிறேன். அதற்குரிய தொடர்புகொள்ளும் முறை தெரியவில்லை தயவுடன் அறியத்தருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *