அம்பேத்கரும், பெரியாரும்

– ஓவியா இந்தியா

Ambedkar_speech_at_Yeolaperiyar_add_2801  இன்றய தினம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை இந்தத் தலைவர்கள் நமக்கு உருவாக்கிக் கொடுத்தது-.  அவர்களைப் பற்றி பேசுவது எழுவது போல் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறொரு விசயம் இருக்க முடியாது. 

சென்ற நூற்றாண்டு நமக்களித்த இரண;டு மகத்தான தலைவர்களைப் பற்றி இந்தக் கூட்டத்தில் நான் பேசப் போகிறேன். இதற்காக இந்த வாய்ப்புக்காக நான் நன்றி சொல்ல வேண்டும். இன்றைய தினம் நாம் வாழ்ந்து கொண் டிருக்கும் வாழ்க்கை இந்தத் தலைவர்கள் நமக்குஉருவாக்கிக் கொடுத்தது. அவர்களைப் பற்றி பேசுவது எழுதுவது போல் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறொரு விசயம் இருக்க முடியாது. தன்னை வளர்த்து ஆளாக்கிய
பெற்றோரைப் பற்றிப் பேசும் போது ஒரு மனிதருக்கு எத்தகையதொரு மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுமோ அதைப் போல் பன்மடங்க மேலதிகமான மகிழ்ச்சி நமது சமுதாயம் உயர்வடைய பாடுபட்ட தலைவர்களைப் பற்றி பேசும் போது நமக்கு ஏற்படுகிறது.

1923 முதல் 1956 அதாவது அம்பேத்காரின் பொது வாழ்வுப் பயணத்தின் துவக்கத்திலிருந்து அவரது மரணம் வரையிலும் இத்தலைவர்கள் சமகாலத்தில், ஒத்த கருத்தும் செயல்பாடும் உடைய தலவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.  இவர்களிருவரும் ஒருவரைப் பற்றி, மற்றவர் மிகுந்த உயர்வும் பெருமிதம் நிறைந்தமான கருத்க்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  வடபுலத்திலும், தென்புலத்திலுமாக இயங்கிய இந்தத் தலைவர்கள் தத்தம் பகுதிக்கு ஒருவர் மற்றவரை அழைத்தும் அறிமுகப்படுத்தியும் அவர்கள் சேவையை தம் பகுதிக்கும் நீடிக்க வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தும் செயல்பட்டிருக்கிறார்கள்.

கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகியிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த டாக்டர் அம்பேத்கார்  தன் தந்தையின் இராணுவ சேவையினால் கிடைத்த பின்புலத்தில் ஒரு கல்விமானாக தன்னை வளர்த்துக் கொள்கிறார்.  அந்தப் பயணத்தின் போது தன் சொந்த வாழ்விலேயே பல்வேறு அவமானங்களையும், கொடுமைகளையும் சந்திக்கிறார்.  அத்தனை தடைகளயும் தாண்டி மிகப் பெரிய அறிவாளியாக ஒளிரத் தொடங்கிய அவரது ஆற்றலை தீண்டாமைக் கொடுமையால் மங்க வைக்கவோ, மறைத்து வைக்கவோ முடியவில்லை.  இந்தியாவிலேயே மிகப் பெரிய கல்விமான் என்ற நிலையை அடைந்து விட்ட அந்த மாமனிதர் சற்று பார்ப்பனர்களுக்கு வளைந்து கொடுத்திருந்தால் மிகப் பெரிய சுகபோகங்களை அடைந்திருக்க முடியும்.  ஆனால் அவரோ இந்த சமுதாயம் விடுதலை அடைய வேண்டும் என்றும் அதன் எதிரிகள் யார் என்பதிலும் மிகக் கறாராக இருந்தார். இந்த இடத்தில் பெரியார், அம்பேத்காரரைப் பற்றி சொல்லியுள்ள அறிமுகத்தையே நான் மீண்டும் தர விரும்புகிறேன்

“அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன படிப்பு,  திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதான் அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள்;  ஆகையால், அம்பேத்கார் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு திறமை என்பவை மாத்திரமல்ல  அவருடைய படிப்பும், திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை ‘அறிவாளி’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.  மற்றவர்கள் படிப்பு, திறமையெல்லாம் வேறுவிதத்தில் பயன்படுத்தப் படுகின்றன.”அவர் தனது பொது வாழ்வுப் பயணத்தை 1923 ல் துவங்கினார் என்று சொல்லாம். அந்த ஆண்டில்தான் அவர் ‘பகிஷ்கிரித் ஹிட்டகரிணி சபா’ என்ற அமைப்ப துவங்கி ஒடுக்கப் பட்ட மக்களுக்கான தனது விடுதலைக் குரலை ஒலிக்கத் துவங்குகிறார்.  ஒடுக்கப் பட்ட மக்களுக்காகக் கல்விப் பணியளிப்பதில் அவரது சேவை துவங்குகிறது.  

இந்த இரண்டு தலைவர்களும் ‘நேரடியாக சந்தித்தல்’ என்ற நிகழ்ச்சி 1940-ல்தான் நிகழ்கிறது.  ஆனால் இவர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொண்டதும் ஏற்றுக் கொண்டதும் அதற்கு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்து விடுகிறது.  1927 ல் முதன்முதலாக சவுகார் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க உரிமை வேண்டும் என்று அவர் நடத்திய கிளர்ச்சிக்கான உந்து விசையை இந்தியாவின் முதல் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் என்றழைக்கப்படுகிறது ‘பெரியார்’ அவர்களால் நடத்தப்பட்ட வைக்கம்’ கோவில் நுழைவுப் போராட்டத்திலிருந்தே ‘தான்’ பெற்றதாக அம்பேத்கார் குறிப்பிடுகிறார். 

1930-35 ல் பஞ்சாபில், ‘ஜாத் டாத் தோடமண்டல்’ என்ற பெயரில் சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒர் அமைப்பு நடத்தப்பட்டது அந்த அமைப்பு ஓர் மாநாடு கூட்டி அம்மாநாட்டிற்கு தலவராக அம்பேத்கரை அழத்தது.  பெரியாரும் கூட அந்த அமைப்பில் ஓர் உறுப்பினராக சேர்த்திருந்திருக்கிறார்கள். அம்பேத்கர், அந்த மாநாட்டின் தலைம உரையை 100 பக்கத்திற்கு தயார் செய்திருந்தார். அந்த உரையே,  சாதி அமப்பின் உருவாக்கம்  மற்றும் இயக்கம் பற்றிய மிகச் சிறந்த ஆய்வுரையாக இன்றளவும் விளங்குகிறது. அதில் அவர் சாதி ஒழிய வேண்டுமென்றால், இந்து மதம் ஒழிய வேண்டும் என்று ஆதாரபூர்வமாக எடுத்துரைத்திருந்தார்.  இதனை முன்கூட்டி அறிந்து கொண்ட அந்த அமைப்பினர் அந்த உரையை அவரைப் பேச விடவில்ல.  ஆனால் பெரியார் அந்த உரையை அவரிடமிருந்து தருவித்து அதனை மொழி பெயர்த்து‘சாதிய ஒழிக்கும் வழி’ என்ற தலப்பில் தனி நூலாகவே வெளியிட்டார்.  அவ்வாறு அதனை மொழிபெயர்த்து அந்த காலகட்டத்தில் வெளியிட்ட ஒரே தலைவர் இந்தியாவில் பெரியார் மட்டும்தான்.

1930-க்கு முன்பாகவே வடக்கில் இராமாயணத்தைக் கொளுத்திய ஒரு தலைவராக அம்பேத்கரை அறிந்து கொண்ட பெரியார் அவரை தனது குடிஅரசு பத்திரிகை வாயிலாக தொடர்ந்து தனது மக்களுக்கு அவருடைய செயல்பாடுகள் பற்றி அறிவுறுத்தி வந்திருக்கிறார். 
 
இது பற்றி அவரே குறிப்பிடுகையில், “நமக்கு ஏற்ற நண்பர் என்பதை எண்ணி அவரை நான் பாராட்டி வந்தேன். நமது குடிஅரசில்அவரைப் பற்றி பாராட்டி எழுதியதைப் பார்த்துதான் தாழ்த்தப்பட்டவர்களே அவரைஉணர்ந்தார்கள்.”இவ்வாறு அம்பேத்கர் பற்றி பெருமிதமான கருத்துக்களை கொண்டிருந்த பெரியார் 1930களிலேயே ஈரோடு மாநாட்டிற்கு அவரை அழைக்கிறார். ஆனால், ஏனோ அம்பேத்கரால் வரமுடியாமல் போயிற்று. அதன்பின் பம்பாய் சென்றிருந்த போது அம்பேத்கரும், ஜின்னாவும்பெரியாரை வந்து சந்திக்கிறார்கள். 1944-ல் நீதிக்கட்சி சேலம் மாநாட்டில் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெறுகிறது. திராவிடர் கழகம் இனி முழுக்க சமூக இயக்கமாக இயங்கும் என்றும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்ற சர் போன்ற பட்டங்களை இயக்கத்தில் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. இதனை மறுத்த நீதிக்கட்சியினர் சிலர் டாக்டர் அம்பேத்கரை விருந்துக்கு அழைத்துத் தங்களை ஆதரிக்கும் படி கேட்டுக்கொள்கிறார்கள்..

அதில் கலந்து கொண்ட டாக்டர் அம்பேத்கர் அவர்கள், அவர்களின் செயலை மறுத்து பெரியார்தான் அவர்களின் உண்மையான தலைவர் என்று அறிவுறுத்துகிறார். காங்கிரசுக்காரர்கள் எவ்வளவு ஒரு மனதாக ஆதரிக்கிறார்கள்? ஆனால் பெரியார் போன்ற ஓர் உண்மையான தலைவரை நீங்கள் ஏற்காமல் இருக்கலாமா? என்று கேட்கிறார். அத்துடன்சேலம் மாநாட்டு முடிவுகளையும் நோக்கங்களையும் தான் முழுமையாக ஆதரிப்பதாக
தெரிவிக்கிறார். இதன்பின் பர்மா மியான்மரில் நடைபெற்ற உலக புத்த சமய மாநாட்டில் பெரியாரும் அம்பேத்கரும் சந்திக்கிறார்கள். புத்த சமயத்திற்கு மாறுவது பற்றி நீண்ட கலந்தரையாடலை இருவரும் நிகழ்த்துகிறார்கள்
.
இனி இந்த இரண்டு தலைவர்களையும் இணைத்த பொதுப்புள்ளிகள் பற்றி சிறிது பார்ப்போம்

1.  சாதி ஒழிய வேண் டும்

2.  சாதி ஒழிய இந்து மதம் ஒழிய வேண் டும். அதன் வர்ணசிரம தர்மம் ஒழிய வேண்டும்

3.  இவை ஒழியாமல் பாதுகாப்பவர்களாகவும் இந்த இந்து வர்ண சிரம சாதி அமைப்பில்
பலனடைபவர்களாகவும் இருப்பவர்கள் பார்ப்பனர்கள்,

4. இவர்களின் பார்ப்பனர்களின் சமூக ஆதிக்கத்தை ஒழிக்காமல் மேற்கூறிய நோக்கங்கள்
நிறைவேறாது. எனவே இவர்களை இவர்களின் ஆதிக்கத்தை முழு மூச்சாக எதிர்க்க
வேண்டும்

5. இந்த இந்து வர்ணசிரம அமைப்பை வைத்துக் கொண்டு தீண்டாமையை எதிர்ப்பேன்
அல்லது ஒழிப்பேன் என்று சொல்கிற காந்தி கபட வேடதாரி. அவரையும் எதிரியாக இனங்
காணுதல் மற்றும் காட்டுதல்
 
6. மாற்று சமூக நடவடிக்கைகளாக இட ஒதுக்கீடு அரசியலையும் கலாச்சாரத் தளத்தில் கலப்பு திருமணத்தையும் தூக்கிப் பிடித்தது.

மேற்கூறிய புள்ளிகள்தான் பெரியாரையும், அம்பேத்கரையும் இணைக்கும் புள்ளிகளாகும்.இதனையொத்து இரு தலைவர்களும் நிறைய காரியங்களை செய்திருக்கிறார்கள். அம்பேத்கர் கீதையை ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்று குறிப்பிட்டதை பெரியார் மீண்டும் மீண்டும் மட்டுமல்ல. மாறாக அந்த உண்மையை சொல்வதற்கு இந்திய சமூகத்தில் மிகப் பெரிய துணிச்சல் தேவைப்பட்டிருக்கிறது. ஏன் இன்றும் கூட அது துணிச்சலைக் கோருகிற விசயமாகத்தான் இருக்கிறது. எனவே அம்பேத்கரை அவரது சமரசமற்ற துணிச்சலுக்காக பெரியார் நேசிக்கிறார். ஏனெனில் அவர் துணிச்சலான நேர்மையை மட்டுமே மதித்த தலைவர். அவர் அம்பேத்கரைப் பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்

“உள்ளபடி சொல்கிறேன் இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால் அது தோழர் ஜின்னா அவர்களிடமும் தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான் தோழர் ஜின்னாவிடமிருந்து விடுதலை பெற்று விட்டார்கள். ஆனால் அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெற முடியவில்லை. அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார்.” அதே போல்தான் காந்தி எதிர்ப்பு என்பதிலும். பெரியார் காஞ்சிபுரத்தில் காங்கிரசு மாநாட்டில் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறிய போது அவர் இந்த காந்தியும், காங்கிரசும் ஒழிய வேண்டும் என்று சொல்லிதான் வெளியேறுகிறார். அம்பேத்கர் அவர்களும் காந்தியை சமரசமற்று எதிர்க்கிறார். இலண்டனில் வட்டமேசை மாநாட்டில் காந்தி ‘நான் இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று சொன்ன போது ‘நீங்கள் எங்கள் இனத்தின் பிரதிநிதியல்ல’ என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார், காந்தியார் திரும்பவும் இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன் என்று சொன்னவுடன் அம்பேத்கர் அவர்கள் பத்துத் தடவை சொல்லுகிறேன் நீங்கள் எங்கள் பிரதிநிதி அல்ல என்று, திரும்பத் திரும்ப வெட்கமில்லாமல் பிரதிநிதி என்று சொல்லுகிறீர்கள் நீங்கள் உங்கள் மகாத்மா பட்டத்தை துஷ்பிரயோகம் செளிணிகிறீர்கள் என்று சொன்னார். காந்தியார் வேறு வழியில்லாமல் உட்கார்ந்து விட்டார்.

அதே போல் அம்பேத்கரின் மிகப் பெரிய சாதனை அரசியல் சட்டத்தின் வாயிலாக இந்தியாவின் அனைத்துத் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வாங்கித் தந்ததும் பிற்படுத்தப் பட்டோருக்கான கமிசன் அமைப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்ததும் ஆகும். இதனாலேயே மண்டல் கமிசன் அமைக்க முடிந்தது, உள்ளிட்ட அனைத்து சாதியினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் வகுப்பு வாரி உரிமை பெற்றுத் தந்ததும் இந்திய விடுதலைக்குப் பின் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட சில மாதங்களுக்குளாகவே நடப்பில் இருந்து வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடும் தாழ்த்தப் பட்டோருக்கான கல்வி ஒதுக்கீடும் அந்த அரசியல் சட்டத்தின் 15 வது பிரிவின் படி தடை செய்யப் படக் கூடிய சூழல் உருவானதை எதிர்த்துப் போராடி அந்தச் சட்டத்தை திருத்த செய்து அந்த 15 வது பிரிவில் உட்பிரிவு 4 அணி சேர்த்து அந்த சலுகைகளைக்
காப்பாற்றித் தந்ததும் பெரியாரின் போராட்டமேயாகும்.

இந்தப் பொதுப் புள்ளிகளில் இவ்வாறு இந்த இரண்டு தலைவர்களும் தங்கள் வாழ் நாளில் சமரசமின்றி இயங்கினார்கள். இனி இவர்களை வேறுபடுத்தும் புள்ளிகளைப் பார்ப்போம். வேறுபடுத்துதல் எல்லா
நிலைகளிலும் முரண் படுத்துதல்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

1, வடவர் எதிர்ப்பு மற்றும் மொழிக் கொள்கை
2, இந்திய ஏற்பு
3, மத ஏற்பு
பெரியாருடைய ‘இந்தி எதிர்ப்பு’ என்பது சாராம்சத்தில் பார்ப்பன எதிர்ப்பு என்பதேயாகும்
இந்து மதம், இந்து மதக் கடவுள்கள் வரிசையிலேயே அவர் இந்தியை வைத்துப் பார்த்தார்.
நேரம் கருதி இந்தக் கருத்தை நான் மேலும் விவரிக்க விரும்பவில்லை.

1940-ல் பெரியார் அம்பேத்கரையும் ஜின்னாவையும் சந்தித்த போது தனது கட்டாய இந்தி எதிர்ப்புக் கொள்கையை அம்பேத்கரும் ஜின்னாவும் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். பெரியாரின் இந்தி எதிர்ப்பு கோணத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் பின்னாளில் இந்திதான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றே அம்பேத்கர் கருத்து கொண்டிருக்கிறார்.

இதனுடைய தொடர்ச்சிதான் பிற நிலைகளும். வடவர் எதிர்ப்பு, இந்திய மறுப்பு என்பதும் பெரியாரின் நிலைப்பாடுகளாகும். அதில் சிறப்பு என்னவென்றால் எப்படி சாதி ஒழிப்பு என்பது மத ஒழிப்போடு தொடர்புள்ளது என்ற அவர் சிந்தித்தாரோ அப்படித்தான் இந்திய அமைப்பும் பார்ப்பனர்களுக்கானது இந்து மதத்துக்கானது என்று அவர் பார்க்கிறார். இந்து – இந்தி – இந்தியா என்பதே அவர்தம் பார்வை. இந்த சிந்தனைப் போக்கு அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட விசயங்களில் வராது. மாறாக இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க இயலும் அதற்கு இந்தியா என்ற அமைப்பு தேவை என்று அவர் பார்க்கிறார். ஆனால் இந்து மதத்தால் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் ஒரு காரணியைத் தவிர இம்மக்களை இணைக்கும் வேறு சமூகக் கலாச்சாரக் காரணிகள் ஏதுமில்லை. ஆனால் சாதி ஒழிப்பு இயக்கங்கள் சாதிக்குள் இருந்த மக்களை சாதியை ஒழிப்பதற்காகவே திரட்டின. அவ்வாறு சாதி ஒழிந்து போக வேண்டிய பட்சத்தில் அகில இந்திய அளவில் இந்த மக்களை இணைக்கும் காரணி எதுவாக இருக்கும் என்பது கேள்விக்குரிய ஒன்று என நான் கருதுகிறேன்.

பவுத்தத்திற்கும் மாறுவதை ஆதரித்திருந்த போதிலும் தானே அம் மதமாற்று நிலை எடுப்பது தனது பகுத்தறிவுக் கொள்கைக்கு ஒவ்வாத ஒன்று என்பதில் கறாராக இருந்திருக்கிறார். ஆனால் சாதியமைப்பினால் பாதிக்கப் பட்டவர்கள் மதம் மாறுகிற உரிமையை தூக்கிப் பிடித்திருக்கிறார். அம்பேத்கருக்கும் தனது பலத்த ஆதரவைத் தெரிவிக்கிறார். ஆனால் அப்போது கூட நீங்கள் தனியாக போகாதீர்கள் அந்த மதத்தினர் உங்களை ஏய்த்து விடுவார்கள். எனவே ஒரு படையோடு போங்கள் என்று இஸ்லாமுக்கு மாறுவது என்ற பிரச்சனை வந்த போதும் கூறியிருக்கிறார். பவுத்தத்துக்கு மாறுவது என்ற பிரச்சனை வந்த போதும் கூ றியிருக்கிறார். மேலும் பவுத்தத்துக்கு மாறுவது என்ற போது கூடுதலாக ஒன்று சொல்கிறார்.

நீங்கள் பவுத்தத்திற்கு மாறுவது குறித்து பார்ப்பனர்கள் அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். ஏனெனில் ஏற்கனவே அவர்கள் பவுத்தத்தை சீரணித்து விட்டார்கள் என்று கூறுகிறார். எனவே மதமாற்றத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்த போதிலும் அதில் அம்பேத்கரின் நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இறுதியாக இவ்வாறு சில மாறுபட்ட நிலைகள் இந்தத் தலைவர்கள் கொண்டிருந்ததற்கு அவர்கள் செயல்பட்ட பூகோளப் பரப்பு வேறு வேறு என்பது முதன்மைக் காரணி என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு அந்தத் தலைவர்கள் இறுதி இலட்சியத்தில் முரண்பாடு கொண்டிருக்கவில்லை என்பதையும் எனது கருத்தாக பதிவு செய்து கட்டுரையை முடிக்கிறேன்.

25-04-2010 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் விழாவில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *