பெண்ணியமும் மலையகப் பெண்களும் -செல்வி. கணேஷன் பரமெஸ்வரி(நாவலப்பிட்டிய, இலங்கை)

This image has an empty alt attribute; its file name is malai.jpg

சமகால உலகில் சமத்துவம் சுதந்திரம் உரிமை என்பவற்றை பெண்களால் போராட்டங்கள் மூலம் வெற்றிக்கொடி நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத் தன்மை எந்தளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது சமகால பெண்களில் வாழ்க்கை முறையிலிருந்தே  முடிவெடுக்க வேண்டியுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கையில் பெண்களுள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக அவர்களது சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று சீர்தூக்கி பார்ப்பது அவசியமான ஒன்றாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்புஎன வர்ணிக்கப்படும் வருமானத்துறையில் பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத்தரும் தொழிளாளர்களுள் 65 சதவீதமானவர்களே இந்த பெருந்தோட்டத்துறை பெண்களே மலையகப் பிரதேச பெண்கள் என்று கூறப்படுகின்றது. 1960ன் பிறகு 1990 வரை அதிக வருமானத்தை அதாவது இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈற்றித் தந்தவர்கள் இந்தப் பெண்கள். மாறிவரும் உலகில் இந்த வருமானத்துறை இலங்கை வருமானத்தில் வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக உள்ளனர். ஆனால் இவர்களது வாழ்க்கையோ முற்கள் நிறைந்த பற்றைக்காடுகளாய் உள்ளது.

சர்வதேச ரீதியிலும் தேசியரீதியிலும் காணப்படும் பெண்களின் கல்வி; சமூக அரசியல்  சமய நிலையுடன் ஒப்பிடும் இடத்து சகல துறையிலும் பின் தங்கிய நிலையிலுள்ளவர்கள் இம்மலையக பெண்கள். ஆரம்ப காலங்களை விட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்கு காணப்பட்டாலும் ஏனைய சமூக பெண்ணின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஦#39;ப்பிடும் இடத்து இவர்களது இந்த முன்னேற்றப்பாதை திருப்தி கரமானதாக இல்லை. என்பதை அனைத்து புத்தி ஜீவன்களும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

போதியளவு கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தனக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இது இவ்வாறு இருக்க தொன்னூறுகளின் பிறகு பெருந்தோட்டத் துறையினுள் சமூக அபிவிருத்தியில் தன்னை ஒரு பங்காளனாக இணைத்துக் கொண்டுள்ள சர்வதேச அரச சார்பற்ற பொது நிறுவனங்கள் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் ஓரளவேனும் விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தனித்து தனது அயராத சேவைகளால் இந்த பெண்களை முன்னேற்றமடையச் செய்ய எத்தனிக்கின்ற போதும் இவர்களது சேவை எந்தளவு இந்த பெண்களுக்கு சென்றுள்ளது என்பது கேள்விக்குறி.

தனக்கென மரபு ரீதியான மூடநம்பிக்கையூடான ஒரு சமூதாய கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப்பெண்களில் நூற்றுக்கு 20 சத வீதமானவர்களே தனது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான காரணம் அர்த்தமற்ற மூடநம்பிக்கையும் இவர்களை சூழ்ந்திருக்கும் வறுமை எனும் மாய பிசாசுமே. விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றை ஆண் சமூகத்திடம் அடகு வைத்தவர்களாகவே இப் பெண்கள் காணப் பட்டாலும் அண்மைக் காலமாக இந்த பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலை விட்டு கல்வியில் ஆர்வம் காட்டுவதும், சுய தொழிலினை செய்வதற்கு எத்தனிப்பதுவும்  வெளிப்பிரதேசங்களுக்கு சென்று வேறு தொழில் வாய்ப்புக்களை தேடிச் செல்வதும் ஆகும். இதற்கு காரணமான  அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இது இவ்வாறு இருந்த போதும் இந்த பெண்களின் சமூக கட்டமைப்பு சார்ந்த வாழ்க்கையில் குறிப்பிட்டு பெருமை பாராட்டுமளவில் இன்னும் முன்னேற்றமடையவில்லை என்பதனை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

பெண்ணியம் பேசும் சர்வதேச பெண்ணிய அமைப்புக்கள்;  அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிவரும் சேவைகள் பூரணமாக இந்த பெண்களுக்கு போய் சேர்வதனை எதிர்காலத்தில் இவ் அமைப்புக்கள் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இல்லையேல் மாறி வரும் நவீன யுக உலகில் ஒரு அடிமைப்பட்ட பெண் சமூகம் குத்துக்கல்லாக இருப்பதனை மாற்ற முடியாமல் போகும். அதே வேளை எந்தளவு உலகில் பெண்ணியம் பேசப்படாடமலும் பெண்ணியத்தின் பூரணத்துவத்தினை எய்துவதென்பதும் கனவாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *