ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாகவும் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா கோகிலகுமாருடன் ஓர் நேர்காணல் -அனுதர்ஷி லிங்கநாதன்

“அஞ்சலா கோகிலகுமார்  பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த  ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாக அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா இன்று உள்ளுராட்சி சபை உறுப்பினராக அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார். பெண்களால் எல்லாத்துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு அஞ்சலா ஒரு முன்னுதாரணம்.”

This image has an empty alt attribute; its file name is anjala.jpg

?உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு அரசியலில் நுழையும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது

உண்மையில் பல கட்சிகள் தங்களுடைய கட்சியில் இணையுமாறு ஆரம்பத்தில் இருந்தே கேட்டார்கள். ஆனால் அரசியல்ல நடக்குற விசயங்கள்இ அரசியல்வாதிகள் மீதான மக்களோட கோபம் இதையெல்லாம் பார்த்து நான் இதுக்குள்ள போய் எதுவுமே செய்ய ஏலாது எண்டு நினைச்சனான். நான் அரசியலுக்குப் போக விரும்பேல்ல. மக்களுக்கு சேவை செய்யுற விருப்பம் இருந்தாலும் அதை அரசியல் மூலமா செய்ய நான் விரும்பேல்ல.   விகிதாசார வேட்புமனுவில பெண்கள் பேர் போடவிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படும் எண்டதால என்னக் கேட்டினம். நானும் அதப்பத்தி சிந்திக்கவே இல்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தினர் (TELO) தமது கட்சி சார்பில் என்ர கணவரிடம் பேசி தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். கணவர் விரும்பினதால “நீங்க கையெழுத்து வையுங்க. நாங்க உங்கள ஜெயிக்க வைக்கிறம்” எண்டு சொல்லும் போது நான் அத எதிர்த்துப்பேசல்ல. கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன். 

 எனக்கு என்ன செய்யுறது மக்களோட எப்பிடிக் கதைக்கிறது எண்டு குழப்பம். காணாமல் போனவங்க மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்கள்ல மக்களுக்கு வெறுப்பு இருக்கும் போது நான் எப்படி மக்களிட்ட பேசுறது எண்டு நேராவே கட்சியில் சிலரிடம் கேட்டன்.   உங்கள்ல நம்பிக்கை இருந்தால் மக்களை வாக்களிக்கச் சொல்லுங்க. உங்களால முடிஞ்ச நல்லத நீங்க செய்வீங்க எண்டு சொல்லுங்க எண்டு சிலர் ஆலோசனை கூறினார்கள்.

?.எப்படி உங்களுடைய தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டீர்கள் எவ்வாறான ஆதரவு கிடைத்தது?

உண்மையில தேர்தலில் போட்டியிடும் போது நான் எந்தவித விளம்பரமும் செய்யேல்ல. யாரையும் கூட்டிக் கொண்டு தேர்தல் பிரசாரங்களுக்குப் போகேல்ல. நான் தனியா தான் என்ட மோட்டார் சைக்கிள்ல தேர்தல் பிரசாரங்களுக்குப் போனான். நான் பஸ் ஓடினதால எல்லாருக்கும் என்னைத் தெரியும். அதனால அவங்க யாரும் என்னை வெறுக்கேல்ல. எனக்கு நம்பிக்கை இருந்தது நான் ஜெயிப்பன் எண்டு. எனக்கு நிறைய சவால்கள் இருந்ததுதான் ஆனாலும் மக்கள் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க.

?-அரசியலில் நுழையும் தருணங்களில் நீங்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொண்டீர்கள்

அரசியலுக்கு எண்டு நான் விரும்பிப் போகேல்ல. ஆனால் எனக்கு சேவை செய்யோணும் என்ற ஆசை இருந்தது. என்னால முடிஞ்சதை நான் அரசியலுக்கு வர முன்பிருந்தே செய்து கொண்டு தான் இருந்தன். இருந்தாலும் அரசியலுககு எண்டு புதுசாய் போன இடத்தில அந்தத் தேர்தல் காலங்களில் நிறைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. < அந்த வகையில் முக்கியமானது நான் கிராமங்களுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காகப் போகும் போது மக்களிடமிருந்து பல்வேறுபட்ட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எந்தக்கட்சி? என்ன உங்களால் செய்ய முடியும் எண்டெல்லாம் நிறையக் கேள்விகளை நான் எதிர்கொண்டடேன். ஒரு வீட்டில வளவுக்குள்ள வரவேண்டாம் எண்டாங்க. அவங்க விட்டுல நாலு பிள்ளைகளும் காணாமல் போயிட்டாங்களாம். இதுவரை எந்தப்பதிலும் இல்லை எனக் கோவப்பட்டார்கள்.  ஆரம்பத்தில் மக்கள் என்னை ஆதரிக்கவில்லை. மக்களிடம் பல தடைவை ஆதரவு கேட்டுச் சென்றேன். அப்படி நிறையத் தடவை போனதன் மூலமாகத்தான் மக்களது நம்பிக்கையைப் பெற்றேன்.   நான் எனக்கு வாக்களியுங்கள் என மக்களைக் கட்டாயப்படுத்தவில்லை. என்னோட இயல்பைப் பத்திக் கூறினது மூலமா உங்களுக்கு விருப்பம் இருந்தா எனக்குப் போடுங்கோ எண்டு தான் கேட்டனான். எனக்கு அதிகமா அவங்க ஆதரவு தந்ததற்கு காரணம் நான் பஸ் ஓடும் போதே அவங்களுக்கு என்மேல் விருப்பம் இருந்தது தான். அந்தக் காலங்கள்ல நிறைய உதவி செய்ததாலயும் மக்கள் என்ன நேசிச்சிருந்தாங்க.  இன்னுமொரு கிராமசேவகரும் எனது வட்டாரத்தில் என்னுடன் போட்டியிட்டார். அவரும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருந்தார். மிகுந்த போட்டியின் மத்தியிலேயே நான்  வெற்றி பெற்றேன்.

 ?.பெண் என்ற வகையில் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்.

 பெண்கள் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தச் செய்யும் போது அவர்களைப் பற்றித் தவறாக முகநூல்களில் பதிவிடுதல், ஊடகங்களில் இழிவாகப் பேசுதல் போன்றவற்றை செய்கிறார்கள். நாங்கள் பலரையும் அணுகி அவங்கட உதவிகள் மூலமாக வேலைத்திட்டங்களைச் செய்து முடிக்கும் போது அது பிடிக்காதவர்கள் எங்களையும் அவர்களையும் தொடர்பு படுத்தி முகநூல்களில் பதிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட பதிவுகள் வரும் போது பெண்களுக்கு அவர்களது கணவன்மார்களின் ஆதரவு கிடைச்சால் சமாளிக்க்கூடியதாக இருக்கும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு வீடுகள்ல கணவன்மார்களினதோ அல்லது குடும்பத்துடைய ஆதரவோ கிடைக்கிறதில்லை. அப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலான பெண்கள் நான் அரசியலுக்குள் வந்ததால தான் இப்படித் தப்பாப் பேசுறார்கள், இழிவுபடுத்துகிறார்கள், இனிமேல் நான் எதிலயும் தலையிடக் கூடாது எண்டு ஒதுங்கிப் போகிறார்கள்.

?.பெண்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் எண்டு நீங்க நினைக்கிறீர்கள்

பெண்களுக்கு நிறைய அநீதிகள் நம் நாட்டில நடக்குது. பாராளுமன்றத்தில பெண்கள்ட விகிதாசாரம் குறைவா இருக்கிறதால அதப்பத்தி முடிவுகள் எடுக்கப்படுறேல்ல. அதிகமான பெண்கள்  பேசும் போதுதான் பெண்களுக்களுடைய பிரச்சினைக்கான தீர்வுகளை பெறக்கூடியதாக இருக்கும். கூட்டாகப்பேசும் போது தான் எங்களுடைய கருத்துக்கள் எடுபடும். 25 வீதம் என்பதை 50 வீதம் ஆக மாத்தணும். பெண்கள் இலங்கையின் சனத்தொகையில 52 வீதமாக இருக்கும் போது ஏன் இந்த மாதிரி இடங்கள்ல மட்டும் நாங்க குறைந்த விகிதாசாரத்தில் இருக்கோணும். வெளியில இருந்து கதைக்குறதால எந்த மாற்றமும் வரப்போறதில்லை. சரியான பதவிகள்ல இருந்து பேசும் போது தான் மாற்றம் வரும். இந்த மாற்றம் அதாவது 50 வீதமாக பெண்கள் அரசியலில் இருக்கோணும் என்றதைத்தான் எல்லா அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. மாகாணசபைகள்ல பெண்கள் குறைஞ்ச விகிதமாக இருக்குறதால ஆணாதிக்கத்துக்கு எதிராக பெண்கள் பேசுவது முடியாத காரியம். அதனால பெண்கள் விகிதாசாரம் அதிகரிக்கப்படணும்.

?.உள்ளுராட்சி சபைகளில் பெண் உறுப்பினர்களும் ஆண் உறுப்பினரும் சமமாக நடத்தப்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா-

எங்கட உள்ளுராட்சிச் சபையை பொறுத்த வரைக்கும் பெண்களுக்கு அதிகாரம் இல்லை எண்டு சொல்லமுடியாது. தமிழ் தெற்கு பிரதேச சபையில் ஏழு பெண் உறுப்பினர்கள் உள்ளனர். பிரச்சினை என்னவென்றால் சில பெண்கள் முன்வந்து கதைக்கிறதில்லை. நான்; முடிஞ்சவரைக்கும் என்னோட பிரிவுக்குள்ள வர்ற எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் சபையில் கதைச்சிருக்கிறன். நிதி இல்லைஇ செய்து தரலாம் எண்டு தான் சொல்லுவாங்க. ஆனா வேலை நடக்கேல்ல. எங்களுக்கு கூட்டங்கள் நடக்கும் போது எல்லா பெண்களும் பங்குபற்றுகிறார்கள். மற்ற உள்ளுராட்சி சபைகளில் அதிகமான பெண்கள் சொல்லுற விசயம் தங்கள எழும்பிக்கதைக்க விடுறதில்லை என்பதுதான். சில உள்ளுராட்சிச் சபைகளில் உள்ள பெண்கள் கூட்டங்களின் போது தமது கருத்துக்களைத் தெரிவிக்க முற்படும் போதுஇ “நீர் விகிதாசாரத்தில வந்தனீர் அப்படி கதைக்க ஏலாது” என்று அப்பெண்கள் முடக்கப்படுகிறார்கள்.  பிரச்சினை என்னவென்றால் எங்கட சபையில நாங்க 07 பேர் இருக்கிறம். நாங்க ஏழு பேரும் ஒற்றுமையா இருந்தா என்ன வேணும் எண்டாலும் சாதிச்சுக்கொள்ளலாம்.

?.அரசியலில் பெண்கள் முன்வராமல் இருப்பதற்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள்

உண்மையில பெண்கள் திறமையில்லாதவர்கள் எண்டு இல்லை. பல பெண்களுக்கு அரசியலுக்கு வர ஆசை இருந்தாலும் தங்களால் முடியுமா எண்டு யோசிக்கினம். அரசியல்ல பெண்கள் பின்னால நிக்குறாங்க எண்டு இல்லை எல்லா இடத்திலயும் பெண்கள் தான் முன்னால நிற்கிறார்கள். ஆண்கள் நினைக்கிறார்கள் பெண்களை முன்னால விட்டால் தங்களின் இடம் பறிபோயிடும் எண்டு. உள்ளுராட்சிசபைகள், மாகாணசபைகள் இப்படி எல்லாத்திலயும் பெண்களை வேட்பாளர்களா அனுமதிக்காததுக்குக் காரணம் பெண்கள் தேர்தல் நின்றால் ஜெயித்துவிடுவார்கள் என்பதால் தான். எல்லாத் துறைகளில்லயும் பெண்கள் சாதிச்சுவரும் இன்றைய நிலமையில அவர்களை அரசியலில் உள்வாங்கினால் தங்களின் இடம் பறிபோயிடுமோ எண்டு தான்; யோசிக்கிறார்கள்.

?.ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற அரசியலில் பெண்கள் எப்படி தமது பலத்தை நிரூபிக்கவேண்டும்

பெண்களாகிய நாங்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் எங்களால் அரசியலில் சாதிக்க முடியும். அதற்கு நிறையச் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் ஆனால் சவால்கள்; வந்தால் நாங்கள் பயப்படக்கூடாது எந்தவொரு வெற்றியையும் அடையணும் எண்டால் நிறையச் சவால்களை எதிர்கொண்டுதான் வெற்றியை அடையலாம்.

?.மற்றப் பெண்களையும் அரசியலுக்குள் உள்வாங்க நீங்கள் ஊக்குவிக்கிறீர்களா

நான் அதத்தான் ஊக்குவிக்கிறன். ஒரு பெண் முன்னால வரணும் எண்டால் அந்தக் குடும்பத்தில இருக்கிற ஆண்களும் முழு ஆதரவு கொடுக்கணும். நான் ஒரு பஸ் ஓடுற அளவுக்கு முன் வந்ததற்கு என்னுடைய கணவர் தந்த ஆதரவுதான் காரணம். பெண்கள் முன்னால் வருவதற்கு அவங்கட குடும்பத்தின்ட ஆதரவும் முக்கியம். அந்த ஆதரவு கிடைக்காததால தான் நிறையப் பெண்கள் முன் வர்றதில்லை.

?.இந்த மூன்று வருடத்துக்குப் பிறகும் நீங்கள் அரசியலில் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறீர்களா?

அரசியல்ல மாகாணசபைக்கு எண்டாலும் பாராளுமன்றத்துக்கு எண்டாலும் நான் வேட்பாளராக நிற்கத் தயாராத்தான் இருக்கிறன். என்னுடைய கட்சி தான் அதற்கான வாய்பை வழங்க முடியும். அதுக்குள்ளயே நிறைய முரண்பாடுகள் இருக்கு. நான் எல்லா இடங்கள்லயும் பிரச்சினைகள் குறித்து பேசுவதால்இ நான் முன்னுக்கு வந்தால் அவங்கட இடம் பறிபோயிடுமோ எண்டு பல அரசியல்வாதிகள் நினைக்கிறாங்க. கட்சிய மீறி நான் சுயேட்சையாகக் கேட்க முடியாது.

?. ஒரு உள்ளுராட்சிச் சபை உறுப்பினராக எவ்வாறான விடயங்களை மக்களுக்காக முன்னெடுத்திருக்கிறீர்கள்

எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் தான் உதவி செய்யோணும் எண்டு நான் யோசிக்கேல்ல. எந்தக் கிராமத்துக்கு உண்மையான தேவை இருக்கோ அங்குதான் என்னோட செயற்பாட்டை ஆரம்பிச்சிருக்கன். என்னோட வட்டாரத்தில 26 கிராமங்கள் இருக்கு. அந்தக் கிராமங்கள் பத்தின முழு தகவல்களையும் நான் சேகரிச்சு வைச்சிருக்கிறன். பிரதேச சபையால எங்களுக்கு போனவருசத்துக்கான நிதி ஒதுக்கேல்ல. நாங்க வர்றதுக்கு முதலே பட்ஜெட் போட்டாச்சு.

பிரதேச சபை ஊடாக எனக்கு இந்த வருசத்துக்காக ஒரு கிலோமீட்டர் றோட் மட்டும் தான் கிடைச்சது. ஒருமில்லியன் ரூபா வேலைத்திட்டம் அது. எங்கட விளக்குவைச்ச குளம் கிராமத்தில ஒரு வீதி கூட செய்து கொடுக்காததால அந்த கிராமத்துக்கு தான்; எடுத்துக் கொடுத்திருக்கன்.    விளக்குவைச்சகுளம் கிராமத்தை முன்னுரிமைப்படுத்தி உதவிசெய்திருக்கிறன். பின்தங்கிய அந்தக் கிராமத்திற்கு ரயில்வே கதவுகள் இல்லை. இந்தப்பிரச்சினை பற்றி நான் அதிகமான அபிவிருத்திக் கூட்டங்கள்ல கதைச்சும் யாருமே அதைக் கவனத்தில எடுக்கேல்ல. நான் பாஸ்டர் ஒருத்தரிடம் கதைச்சு அவர் உதவினதால ரயில்வேகதவு போடப்பட்டிருக்கு. பெரியமடு கிராமத்திலயும் சில உதவிகள் செய்திருக்கன். கிராமங்களுக்கு வீதி மற்றும் மின்விளக்குள் பொருத்துதல், ஆலயங்கள் புனரமைப்பு போன்றவற்றுக்குப் பலரின் உதவியை நாடியுள்ளேன். பாடசாலைகளுக்கு மலசலகூடங்களைத் திருத்துறதுக்கும் மற்றும் மைதானங்களை மறுசீரமைக்குறதுக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறன். எல்லாவற்றையும் உடனடியாகச் செய்ய முடியாது. என்னால முடிஞ்சதை நான் கட்டாயம் செய்து கொண்டுதான் இருப்பன்.

?. உங்களுடைய பதவிக்காலம் எவ்வளவு? எவ்வான திட்டங்களை மக்களுக்காக முன்னெடுப்பீர்கள்?

இன்னும் மூன்று வருடங்கள் தான் என்னுடைய பதவிக்காலம். இன்னும் முன்று வருசத்தில எங்களோட கிராமங்களுக்கு அபிவிருத்தியை மேற்கொள்ள முயற்சிப்பேன். ஒவ்வாரு கிராமத்துக்கு ஒவ்வொரு வேலை செய்து வாறன். எங்கட பின்தங்கின கிராமங்களை கருத்திலெடுக்கிற மாதிரி வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.   உண்மையில  அரசியலுக்குள்ள நான் தள்ளப்பட்டாலும் அரசியலை இப்ப நான் விரும்புறன். அங்க போன பிறகு எனக்கு விளங்கின விசயம் என்னவெண்டால் உண்மையில  அரசியல்வாதிகள் எல்லாருமே சரியா செயற்படுவதில்லை. பின்தங்கின கிராமங்களை யாருமே  கண்டுகொள்வது இல்லை. அதனால தான் நான் முடிவெடுத்திருக்கிறன் யுத்தத்தால பாதிக்கப்பட்ட பின்தங்கியிருக்கிற கிராமங்களை முன்கொண்டு வரணும் என்ற ஆசை எனக்கு இருக்கு.  எங்கட கிராமங்களை நகரங்கள் மாதிரி கொண்டு வரணும். பெரிய அளவு இல்லையெண்டாலும்  பாடசாலைகள், வீதிகள், பொதுக்கட்டிடங்கள் போன்றவற்றை அபிவிருத்தி  செய்யோணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *