குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!

-பிரியதர்ஷினி சிவராஜா-

Thank you. https://wowinfo.org/gender

jevva1

“வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” என்று கூறும் அந்தப் பெண்ணுக்கு 41 வயது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 16 வயதான மகளுடனும் வயோதிப பெற்றோருடனும் வசித்து வருகின்றார். அவரது வீட்டில் இரண்டு தையல் இயந்திரங்கள் இருக்கின்றன. ஆடைகள் தைப்பதற்காக வெட்டப்பட்ட துணித் துண்டுகள் வீட்டின் பிரதான அறையில் ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. குவிந்து கிடக்கும் தைக்கப்பட்ட ஆடைகளுக்கு பொத்தான்களை அவர் தைத்துக் கொண்டிருந்தார். தனிப் பெற்றோராக (Single Parent) தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக அவர் தையல் வேலையில் ஈடுபட்டு வருகின்றார். தனிப் பெற்றோர் என்ற வகிபாத்திரம் இந்த சமூகத்தில் எவ்வாறு உள்வாங்கப்படுகின்றது? தனிப் பெற்றோர் என்ற ரீதியில் சமூகத்தில் அவர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க நேர்கின்றது?

“நாங்கள் காதல் திருமணம் புரிந்து கொண்டோம். எமக்குள் பல்வேறு காரணங்களினால் மனக்கசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. அவர் என்னுடன் வாழ முடியாது என்றார். அதற்கேற்ப பல காரணங்களைக் கூறி அவரது பெற்றோரையும், உறவினர்களையும் உதவிக்கு அழைத்து என்னை விவாகரத்து வரைக்கும் இணங்க வைத்தார். திருமணமான ஒருவருடத்திற்குள் நாம் பிரிந்துவிட்டோம்”.இவ்வாறு அந்தப் பெண் (பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.) தனது கடந்த காலத்தை விபரித்தார்.
விவாகரத்தைப் பெற்றார் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னாலும் அதற்கு, ‘பெண்ணாக’ அவர் கொடுத்த விலை மிக அதிகம்.
“அவர் விவாகரத்து வழக்கில் என்னைப் பெரிதும் அலைக்கழித்தார். எனக்கு பைத்தியம். நான் குடும்பத்திற்கு சரிவராத பெண் என்று இல்லாத பொல்லாத காரணக்களை எல்லாம் கூறி என்னை அவமானப்படுத்தும் அளவுக்கு தூற்றினார். ஒரு வயதுப் பெண்பிள்ளையுடன் மனதில் வேதனைசுமந்து நான் விவாகரத்திற்கு ஒப்புதல் அளித்து விவாகரத்தை வழங்கினேன். தாபரிப்பு செலவாக மாதம் 2 ஆயிரம் ரூபா மட்டும் கிடைக்கிறது. அது ஒரு பிள்ளையை வளர்க்க போதுமானதல்ல. எனது முயற்சியில் எனது உழைப்பில் நான் வாழப்பழகினேன்.” என்று கூறும் அவர் தன் குடும்பம்கூட தன்னை அனுசரிக்கவில்லை என்ற கவலையையும் வெளியிட்டார்.

 

“விவாகரத்து பெற்று நான் ஒரு வயதுக் குழந்தையுடன் தனித்துவிடப்பட்டேன். யாரும் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. என் குடும்ப உறவினர்களும், இந்த சமூகமும் என்னைத்தான் குற்றவாளியாகப்பார்க்கிறது. ஆனால் அவருக்கு மிக இலகுவாக இன்னொரு திருமணம் செய்யமுடிந்ததுடன் இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையானார்

தனிப் பெற்றோராக வாழ்வதற்கு ஒரு பெண் முடிவெடுத்தால் அவள் குடும்பத்தில் தாயின் வகிபாத்திரத்தையும், தந்தையின் வகிபாத்திரத்தினையும் வகிக்க வேண்டிய இரட்டை நிலைக்குள் தள்ளப்படுகிறாள். ஆனால் ஆணுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை. மனைவியை விட்டு பிரிந்தவருக்கோ, மனைவியை இழந்தவருக்கோ அடுத்த திருமணத்திற்கு ஒரு பெண் எப்போதும் தயார இருக்கிறாள் இந்த சமூகத்தில். அதேதான் இங்கும் நடந்தது.
“விவாகரத்து பெற்று நான் ஒரு வயதுக் குழந்தையுடன் தனித்துவிடப்பட்டேன். யாரும் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. என் குடும்ப உறவினர்களும், இந்த சமூகமும் என்னைத்தான் குற்றவாளியாகப்பார்க்கிறது. ஆனால் அவருக்கு மிக இலகுவாக இன்னொரு திருமணம் செய்யமுடிந்ததுடன் இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தையானார்.” என இந்த சமூகத்தின் பாரபட்சத்தை முன்வைக்கிறார் அவர்.
இவ்வாறு விவாகரத்துப் பெற்ற பெரும்பாலான பெண்கள் சமூகத்தின் சிறுமைப்படுத்தல்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இரட்டைச் சுமைகளுடனும் சமூகத்தின் வசைகளுடனும் விவாகரத்துப்பெற்ற ஒரு பெண் வாழவேண்டியிருப்பது பெரும் அநீதிதான். “எனது மகள் பூப்பெய்திய போது நான் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை. ஆனால் வேதனையும் மகிழ்வும் கலந்த ஒரு வித உணர்வு எனக்கு அப்பொழுது ஏற்பட்டது. கணவனைப் பிரிந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. அவர் ஒருபோதும் எம்மை எட்டிப்பார்த்ததேயில்லை. ஆனால் சம்பிரதாயத்திற்கு தந்தையை அழைக்கவேண்டும் என எல்Nலூரும் வற்புறுத்தினர். எனது அம்மாகூட அப்படித்தான் கூறினார். ஆனால் நான் தடுமாற்றம் இல்லாத தீர்மானத்தை எடுத்தேன். குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, மகளின் விழாவுக்கு தந்தை தேவையில்லை என்று பிடிவாதமாக நின்றேன். அவ்வாறு நடத்தி முடித்தேன்.” என்கிறார் மிகுந்த வைராக்கியத்துடன்.
ஆனாலும், விவாகரத்துப் பெற்ற இந்தப் பெண் தனது தாய் தந்தையருடன் வாழ தொடங்கியதிலிருந்து அவரின் உறவினர்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவும், தன் வாழ்க்கை தொடர்பான அனுதாபப் பார்வைகளை எதிர்கொள்ளவும் நேரிட்டதாக கூறுகிறார். அதனால் “நான் வெளியில் எங்கும் தலைகாட்டுவதில்லை. உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதனை கூடிய மட்டும் தவிர்த்து வந்தேன். திருமண வீடுகளுக்கு தவிர்க்க முடியாமல் போக நேரும் போது எங்கேயாவது ஒரு மூலையில் அமர்ந்திருந்து விட்டு வந்து விடுவேன். என்னைப் பார்த்தவுடன் பல கேள்விகளைக் கேட்பார்கள். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க நான் விரும்புவதில்லை. அவர்களது எல்லாக்கேள்விகளும் என்னை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதாகவே இருக்கும். அதனால் அவர்களை எதிர்கொள்வதனை நான் தவிர்த்து விடுவேன்.” என்கிறார் அவர்.ஆனாலும் இந்த குடும்ப கட்டமைப்பில், பிள்ளைகளின் பெயருக்கு கொடுக்கும் முதலெழுத்துபோல் அப்பாவுக்கு கொடுக்கும் உயர் அந்தஸ்தும், சடங்கு சம்பிரயதாயங்களில் கணவன், அப்பா என்று ஆண்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை பெண்களுக்கு இல்லை. எந்த விதத்திலும் குடும்பத்திற்கு அனுசரணை வழங்காத ஆணாக இருந்தாலும் கணவன், அப்பா என்ற அந்தஸ்து அவர்களை எத்தகைய ஒரு நிகழ்வாக இருந்தாலும் முன்னுரிமைகொடுத்து கௌரவிக்கிறது. அவர்கள் இல்லாத மனைவி, அம்மா என்ற பாத்திரங்கள் அந்தளவுக்கு கௌரவம்பெறுவதில்லை. அந்த பாத்திரங்கள் கௌரவம் பெறவேண்டுமென்hறல், பெயருக்கேனும் கணவன், அப்பா இருந்தாகவேண்டும். உண்மையில் அப்பா இல்லாது வளர்ந்த பிள்ளை அப்பாவை எதிர்பார்க்காவிடினும் இந்த சமூகம் அதை எதிர்பார்க்கிறது. கண்கள் பனிக்க அந்த தருணத்தை விபரித்தார்.

“என் பிள்ளை ஒருபோதும் தந்தையைப் பார்க்க வேண்டும் என்று கேட்டதில்லை. ஆனால் ஒரு தடவை மட்டும் பாடசாலை விழாவுக்கு தந்தை வந்திருந்தால் நன்றாக இருக்கும், அவளது நண்பிககளும் அவர்களது பெற்றோரும் தனது தந்தை பற்றி விசாரிப்பதாகவும் தான் பதில்சொல்ல முடியவில்லை என்றும் கவலைப்பட்டாள். அன்று நான் அவளை வெளியில் அழைத்து சென்று வேண்டியதெல்hலம் வாங்கிக்கொடுத்து ஐஸ்கிறீம் உட்பட, வாங்கிக் கொடுத்து தந்தை இல்லாத வாழ்க்கையை நாம் சந்தோசமாகவும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்தினேன்” என்கிறார் மிகவும் தெளிவாக. ஆம் கணவனின்றி தனித்து வாழும் பெண்கள் தமது குழந்தைகளுக்காக தம்மை நெறிப்படுத்தி எழுந்து நிற்கிறார்கள். ஆனால் இந்த சமூகம் மீண்டும் மீண்டும் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என அழுத்தி உரைத்துக்கொண்டேயிருக்கிறது. எந்த கொடுமையான கணவனையும் கட்டிமாரடிக்கவேண்டும் என பெண்ணைப் பணிக்கிறது.

“நான் சற்று பொறுமையுடன் அனுசரித்து வாழ்ந்திருக்கலாம் என்றும் என்னைச் சுற்றி உள்ளவர்கள் எப்பொழுதும் கூறிக்கொண்டிருக்கின்றனர். என்னால் அதனை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி எல்லா தவறுகளுக்கும் நான் காரணமாக இருக்க முடியும்?” அந்தப் பெண்ணின் கேள்வியில் ஆத்திரம் வெளிப்பட்டது. “குடும்பம் என்றாலே அதில் எத்தனை பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு தனிப் பெற்றோராக என் பிள்ளையின் முழுப் பொறுப்பையும் ஏற்றிருக்கின்றேன். அவளுக்கான கல்வி வசதி முதல் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி வருகின்றேன். அதுமட்டுமல்லாமல், வீட்டு வாடகை, பெற்றோருக்கான மருத்துவ செலவுகள், உணவு, பராமரிப்பு செலவுகள், வீட்டு மின் கட்டணம், நீர்க்கட்டணம் என்று அனைத்திற்கும் நான் தான் பொறுப்பு. ஆனால் இவ்வளவு சவால்களையும் நான் தனித்து நின்று எதிர்கொள்கின்றேன் என்பது எவ்வளவு கடினமான வேலை என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை. எனக்கு யாரும் ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருப்பதுமில்லை. ஆனால் என்மீது அவதூறு கூறுவதற்கு மட்டும் எல்லோரும் வரிசையாக வந்துநிற்கிறார்கள். இதனால், என் மகளும் எங்கள் உறவினர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்கின்றாள்.” என்கிறார் சலிப்புடனும் கவலையுடனும்.“தந்தை பற்றியும், அவரின் பிரிவால் நான் பட்ட துயரங்களையும் என் மகள் நன்கு அறிவாள். ஆனாலும் எங்கள் திருமணப் புகைப்படம் ஒன்றை தனது அறையில் மாட்டி வைத்திருக்கின்றாள். ஒரு தந்தை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக அதை அவள் அங்கு வைத்திருக்கிறாள் போலும். ஏனெனில் அவர் என்னைப் பிரிந்தது நியாயமற்றது என அவள் அடிக்கடி கூறிக்கொள்வாள்.”
இதனால்தான் பல பெண்கள் விவாகரத்து பெறாமலே தனித்து வாழ்ந்துவருகின்றனர். சமூகத்திற்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் என அதற்கு காரணம் கூறுகின்றனர்.

அது எப்படி எல்லா தவறுகளுக்கும் நான் காரணமாக இருக்க முடியும்?”

இவருக்கு வயது 36. ஓன்பது வயதேயான மகனுடன் வாழ்ந்துவரும் இவர் பிரபல நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிகிறார். “பெற்றோரால் பேசிச் செய்யப்பட்ட திருமணம் நடந்தது. காலப்போக்கில் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவும் கணவரைப் பிரிந்து வாழ முடிவு எடுத்தேன். சட்டப்படி பிரிவது மகனை பாதிக்கும் என்ற அச்சத்தில் சட்டப்படி விவாகரத்து பெறாமலே தனித்து வாழ்கிறேன்” என்கிறார்.
“எனது மகன் வார இறுதி நாட்களில் தந்தையிடம் சென்று வருவார். வார நாட்களில் என்னிடம் தான் இருப்பார். பாடசாலை முதல் கல்வி சம்பந்தமான அனைத்து வேலைகளையும் நான் தான் செய்கின்றேன்;.” என்று கூறும் அந்தப் பெண் தனது பெற்றோருடனும் திருமணம் செய்யாத தங்கையுடனும் வசித்து வருகின்றார்.

“வீட்டில் எனது தாயார் தான் மகனை பாடசாலைக்கு அனுப்பி எடுப்பார். எனது வேலைப்பளு காரணமாக சில வேளைகளில் மகனை சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்படும். வேலை முடிந்து நான் வீடு செல்லும் போது அவன் நித்திரைகொள்வான். மனதுக்கு வேதனையாகவும் இருக்கும். ஆனால் என்ன செய்வது? தொழிலை விட்டு விட்டு முழு நேரம் அவனைக் கவனித்து கொள்ள விரும்பினாலும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அவ்வாறு ஒரு போதும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்ட அந்தப் பெண் கலங்கிய மனதுடன் மேலும் சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். “அப்பா தன்னுடன் இல்லை என்ற ஒரு ஏக்கம் மகனுக்கு இருக்கின்றது. வார இறுதி நாட்களில் அப்பாவுடன் இருந்து விட்டு வரும் போது ஒரு மாற்றத்தினை அவனிடம் நான் அவதானிக்கின்றேன். அவனது பாடசாலை ஆசிரியர்களிடமும், அப்பா தன்னுடன் இல்லை என்றும் தன்னை எவரும் கவனிப்பதில்லை என்றும், தன் மீது அன்பு செலுத்த யாரும் இல்லை என்றும் கூறியிருக்கின்றான். இதனால் பிள்ளையை கவனிப்பதில்லை என்று ஆசிரியர்களின் கடும் கண்டனத்தினை நான் எதிர்கொள்ள நேரிட்டது.” என்று கூறும் இந்தப்பெண் இரட்டைச்சுமையால் திணறிப்போகிறாள். “வீட்டை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பையும் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் மகனின் கல்வி செயற்பாடுகள் குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக நான் பெரிதும் உழைக்கின்றேன். ஆனால் நான் பிள்ளை பற்றிய அக்கறையின்றி செயற்படுவதாக எனது மகனின் பாடசாலை அதிபர் உட்பட வகுப்பாசிரியர் மற்றும் இதர பாட ஆசிரியர்களும் குற்றம் என் மீது குற்றம் சுமத்துகின்றனர்.” என்று வேதனையுறும் இந்தப்பெண்ணுக்கு தனது மகனைப் பார்த்துக்கொள்வதற்கு முழுநேரத்தையும் ஒதுக்கமுடியவில்லை என்ற குறை உள்ளது. இந்தனை பிரச்சினைகளுடனும் தனது வாழ்க்கையை நடத்தும் இவருக்கு மேலதிகமாக வேறு ஒரு பிரச்சினையும் உள்ளதாக கூறுகிறார்.

“கணவனைப் பிரிந்து வாழ்வதால் பாலியல் ரீதியாக என்னை இலகுவில் அணுகலாம் என பலரும் நினைக்கின்றனர். இதனால் சில ஆண்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சிலர் அவதூறு பேசுகின்றனர். அவசரத்திற்கு எந்த ஆணிடமும் எந்த உதவியையும் கேட்கமுடியாதுள்ளது” என்கிறார் மனம் நொந்தவராக. திருமணமான பெண்கள் தனித்து வாழ முடிவெடுத்தாலும் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவொரு பொருளாதார பாதுகாப்போ, வாழ்வதற்கான பாதுகாப்போ அற்ற நிலையில் வாழும் நிலைதான் மூன்றர் உலக நாடுகளில் உள்ளது.

இவ்வாறு தனித்து வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பெண் தனித்து வாழமுடியாத ஒரு உயிரியாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் இன்று பெண்கள்தான் அதிகளவில் தனித்து வாழ்பவர்களாக அதனால் ஏற்படும் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்பவர்களாக வாழ்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *