கடல் முற்றம் கவிதைத் தொகுதி

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்-Faiza Ali 01

Faisa Ali Book 04இயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலைiயும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.
விடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.

அக்கறையின் வெகு தொலைவில்
சிறு புள்ளியாய் தெரிகிறது
விடியல்
பேயுலவும் கரிய இரவாய்
இருண்டு கிடக்கிறது
மா கடல்
அலைகள் விட்டுச் சென்ற
இருளின் ஈரமோ
தீய்த்தெரிக்கிறது
மிக எளிய கால்களை
ஆனாலும்
விடியலை நோக்கி
அழைத்துச் செல்லும்
பெருவிருப்போடு
பற்றச்சொல்லி
விரல் நீட்டுகிறது
நம்பிக்கை
அவன் மட்டுந்தான் பேரழகு (பக்கம் 24) என்ற கவிதை ஒரு குழந்தை பற்றி எழுதப்பட்ட கவிதையாகும். குழந்தைக்கு ஒரு காய்ச்சல் என்றாலே அதைத் தாங்க முடியாத தாயாரிடம் வைத்தியர்கள் அனுமானித்துச் சொல்கின்ற காரணங்கள் பய உணர்வை உள்ளுக்குள் விதைக்கிறது. கவிதையின் இறுதி வரிகளை வாசிக்கும்போது மனது கனக்கிறது.
ஆனாலும் அவன்
வளர்ந்துகொண்டேயிருக்கிறான்
இயல்பேயற்ற இயல்புகளுடன்
அவன் தாயின்.. என் ஒரே தங்கையின்
கண்களினோரம்
பெருஞ் சமுத்திரமொன்றை
வளரவிட்டபடி
மேலாடை கிழிக்கப்படுகையில் (பக்கம் 26) என்ற கவிதை இன முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஒற்றுமையாக இருந்து முன்னேற முயற்சிக்காத மனிதர்கள், இன்று இன, மத, பிரதேச ரீதியாக முரண்பட்டு அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கிப்போடுகின்றார்கள். எல்லா இனத்திலும் காணப்படும் அப்பாவி மக்கள் இந்த நிலையை வெறுக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சில கடும்போக்குடையவர்களால் தூண்டி விடப்படும் இனவாதம் என்ற தீயானது முழு நாட்டிலும் பரவி விடுவதை இக்கவிதை வரிகள் நன்கு உணர்த்தி நிற்கிறது.
நான் உங்கள் நண்பன்
நீங்கள் என்னை நம்பலாம்
அன்று வானம்வரை எகிறிக்குதித்த
திருவிழாக்கால நம்பிக்கைகள்..
தொழுகைத் தலங்கள் நொறுக்கப்படுகையில்
சில காவிகளின் கோணல் சொண்டுகளால்
என் மேலாடை கிழிக்கப்படுகையில்
தரச்சான்றிதழ் இழுபறிக்குள்
பிடிச்சோறும் தொண்டைக் குழிக்குள்
சிக்கித் திணறுகையில்
வசீகர மொழி காவி (பக்கம் 48) என்ற கவிதை அழகியல் ததும்பியதாக காணப்படுகின்றது. ரசனையைத் தூண்டிவிட்டுச் சுகமளிக்கும் அந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-
அறைந்து மோதிய சாரளத்தோரமாய்
சிலந்திகள் சித்திரம் வரையத் தொடங்கிய வேளை
வந்தமர்கிற ஹம்மிங் பறவையின்
மெதுமை படர்ந்த கூரலகு சிந்துவது
எந்தப் பூவின் மகரந்தமோ
கண்ணாடி மணக்கிறது
காற்றாடி போலே இடைவிடாது சுழலுகிற
மெல்லிய சிறகசைவினிலே
ஊதித் தள்ளுகிறது பெரும்பெரும் பாறைகளை
உதிர்ந்த துகள்கள்
ஓவ்வொன்னுமேயதன்
வசீகர மொழிகாவிப் பறக்கின்றன
பரிபுரணமாய்
இயற்கை சார் அழகியலை தன் கவிதைக்குள் இருத்தி மென்னுணர்வு வெளிப்பாடுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர் கிண்ணியா எஸ். பாயிஸா அலி மென்மேலும் பல படைப்புகளைத் தரவேண்டுமென வாழ்த்துகின்றேன்!!!
நூல் – கடல் முற்றம்
நூலின் வகை – கவிதை
நூலாசிரியர் – எஸ். பாயிஸா அலி

 

 

 

 

1 Comment on “கடல் முற்றம் கவிதைத் தொகுதி”

  1. சகோதரி ரிம்ஸாவுக்கும் ஊடறுவுக்கும் என் அன்பான நன்றிகளும் பிரார்த்தனைகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *