தாயுடன் ஒரு உரையாடல்

லக்ஷ்மி  (பிரான்ஸ்)

 march11-6

vananga1940ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி கென்யாவின் நியேரி மாவட்டத்தின் இஹித்தே எனும் கிராமத்தில் பிறந்தவர்.  இவர் மத்திய கிழக்கு ஆபிரிக்காவில்  கலாநிதி பட்டம் பெற்ற முதல் பெண். இவர் 1976ம் ஆண்டில் ‘மர நடுகை’ பற்றி சமூகம் தழுவிய ரீதியில் அறிமுகப்படுத்தினார். 1977இல் பசுமை வலய  இயக்கத்தை நிறுவினார். ஆரம்பத்தில் காடுகளை அழித்தலை எதிர்த்துப் போராடினார். அதன் தொடர்ச்சியாக, சமூகத்திற்கான அதிகாரத்தினை வழங்குதல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த அக்கறை என்பவற்றை தோற்றுவித்தார். இன்று வரைக்கும் கென்யா முழுவதும் 3 கோடிகளுக்கும் மேலான மரங்கள், குறிப்பாக பெண்களினால், நாட்டப்பட்டிருக்கின்றன. அத்துடன் பிரதான அரசியல் நீரோட்டத்தினுள் சுற்றுச்சூழல் பற்றிய முறையான திட்டத்தை கொண்டு வந்ததில் பசுமை வலய இயக்கத்திற்கு முக்கிய பங்குண்டு. பேராசிரியர் மாத்தாய் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் களைவு குறித்த ஆலோசனைச் சபை, பெண்களின் சுற்றுச்சூழல் அபிவிருத்தி அமைப்பு, சர்வதேச பசுமைச் சிலுவை, சர்வதேச சுற்றுச்சூழல் இணைப்பு மையம் போன்ற பல்வேறு வாரியங்களில்  பணி புரிந்தவர். Taking Root: The vision of Wangari Maathai என்னும்  விவரணப் படம் ஒன்று 2008ம் ஆண்டில் மல்போரோ புரொடக்க்ஷன் (Marlboro Productions) இனால் தயாரிக்கப்பட்டது. இது 12 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது வங்காரி மாத்தாயின் வாழ்க்கைப் பயணத்தையும் போராட்டத்தையும்  விவரிக்கின்ற ஒரு ஆவணப்படமாகும்.

 2006 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பேராசிரியர் மாத்தாய் சக நோபல் பரிசு பெற்ற பெண்களான  ஜோடி வில்லியம்ஸ், ஷிரின் எபாடி, ரிகோபெட்டா மெஞ்சு ரம், பெற்றி வில்லியம்ஸ் மற்றும் மெய்ரிட்  மகியிர் ஆகியோருடன் இணைந்து, ‘நோபல் பரிசு பெற்ற பெண்களின் பூர்வாங்க முன்னெடுப்பு’ எனும் அவையின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். 2004 ம் ஆண்டில் அவருக்கும் பசுமை வலய இயக்கத்திற்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. 2005ம் ஆண்டில் FORBES சஞ்சிகை தேர்ந்தெடுத்த அதிக செல்வாக்குப் பெற்ற நூறு பெண்களில் இவரும் ஒருவராவார். இவர் நிறைய நூல்களை எழுதி இருக்கிறார். அவற்றுள் பசுமை வலய இயக்கம், அணுகுமுறையினதும் அனுபவத்தினதும் பகிர்வு, பணிய மறுத்தவள் – நினைவோடை, மற்றும் கடைசி நூலான ஆபிரிக்காவுக்கான சவால் என்பவை  முக்கியமானவை.

 வங்காரி மாத்தாய் 2011ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் நாளில், தனது 71வது வயதில், புற்றுநோயுடன் நீண்ட காலமாகப் போராடி மறைந்தார். கென்யாவின் பிரதமர் றைலா ஒடிங்கா இவருக்கான மரண அஞ்சலியின்போது “வங்காரி மாத்தாயின் மறைவு எங்கள் தேசத்தின் இதயத்தை தாக்கி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

 வங்காரி மாத்தாயுடனான இந்த நேர்காணல் 2008ம் ஆண்டில் மரியான் ஷ்னால் என்பவரினால் நிகழ்த்தப்பட்டது.

1.ஆபிரிக்கா உட்பட, எங்கள் உலகத்தை பாதித்திருக்கின்ற – பாதித்துக்கொண்டிருக்கின்ற எத்தனையோ விடயங்கள் இருக்கின்ற நிலையில், உங்கள் சுற்றுச்சூழல் அக்கறை குறித்த பயணத்திற்கு எது காரணமாயிற்று?

 இதை எப்படி சொல்லலாம் என்றால், சுற்றுச்சூழல் குறித்த என்னுடைய புரிதல் என்பது மிகவும் சாதாரணமானது என்றுதான் நான் நினைக்கிறேன். கிராமப் புறங்களில் வாழுகின்ற சாதாரண பெண்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, எரிபொருள், போன்றவைகள் குறித்து வெளிப்படுத்தியதில் இருந்தும், இவை அவர்களின் வருவாய்க்கான மூலங்களாக அமைந்துள்ளன என்பதில் இருந்தும், சுற்றுப்புறச் சூழலை அவர்கள் எவ்வாறு விபரிக்கிறார்கள் என்பதில் இருந்தும் இந்தப் புரிதல் எழுந்தது. தங்களைத் தாங்கிக் கொள்வதில் தவறுகின்ற ஒரு சுற்றுப்புறச் சூழலை அவர்கள் உணர்ந்து கொள்வதில் இருந்து எழுந்தது. இதே சுற்றுப்புறச் சூழலில்தான் நானும் வளர்க்கப்பட்டேன். காடுகளை அழித்தல், மண் வாருதல் போன்ற மிகவும் பாரதூரமான செயற்பாடுகளினால்  படிப்படியாக சுற்றுச்சூழலை அழித்தல்மற்றும் வலுவிழக்கச் செய்தல் என்று அந்த மக்களை  வறுமைக்குள் தள்ளுகின்ற ஒரு நிலைமையை அவதானித்தேன். இதுவே எனது சிரத்தைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

 இந்தக் காலகட்டத்தில் நான் அவர்களுக்கு மரநடுகை பற்றி பரிந்துரைத்தேன். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நாங்கள் மரங்களை நடுவதற்கு ஆரம்பித்தபோது, எனக்கு அது ஒரு கல்விக்கூடமாக அமைந்தது. அந்தப் பெண்கள் என்னிடம் விபரித்தவைகள் எல்லாம் வெறுமனே அறிகுறிகள்தான். அதற்கான காரணியைத் தேடிச் செல்வது எனக்கு முக்கியமானதாக இருந்தது. அதற்கு காரணியான  சுற்றுச்சூழலின் இயற்பியல் அழிப்பிற்கு யார் காரணம் என்ற கேள்விக்கு. அரசாங்கத்தின் பொறுப்பற்ற நிர்வகிப்பு என்பதை நான் உணர்ந்தேன். சுற்றுச்சூழல் எப்படி அழிக்கப்படுகின்றது மற்றும் எப்படி மீட்கப்பட வேண்டும்  என்பது குறித்த மேலதிக தெளிவை அடைந்தேன்.

 2. சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர் என்ற வகையில், உங்கள் பிரதேசத்திலும், மற்றும் உலகின் ஏனைய பாகங்களிலும் சமாதானத்திற்கும் சுற்றுச்சூழலிற்குமான பிணைப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 மூலவளங்களைப் பாவிக்கும்போது சுற்றுச்சூழல் தேய்மானமடைகின்றது என்பதை ஆழமாக இந்தப் பிரச்சினைகளுக்குள் செல்லும்போது நான் உணர்ந்தேன். மூலவளங்கள் தேய்மானம் அடைகின்றபொழுது, அவற்றின் அளவு குறைகின்றது.  உலகின் அதிக வீதமான மக்கள் மூலவளங்களான நிலமும் நீரும் தங்களிற்கு  கிடைக்க வேண்டும் என்கிறார்கள்.

 இவை இரண்டும் எங்கள் அனைவருக்கும் தேவையானது. இந்த மூலவளங்கள் தேய்ந்து செல்கின்றபொழுது அல்லது மாசுபடுத்தப்படும்பொழுது எங்களுக்கு எஞ்சி இருப்பது மிகச் சொற்பமே. இதன் தொடர்ச்சியாக நாங்கள் அவற்றிற்கான போட்டியில் இறங்குகின்றோம். இறுதியில் வலுவுள்ளவர்கள், கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர்கள் இவற்றை நெருங்க முடிந்தவர்கள் யாரென்றும்,  எவ்வளவிற்கு அண்மிக்க முடியும் என்றும் தீர்மானிப்பார்கள். புறந்தள்ளப்பட்டதாக உணர்பவர்களும் ஒதுக்கப்பட்டவர்களும் தங்களுடைய நீதியைப் பெறுவதற்காக போராடும்பொழுது அதிலிருந்து பிளவு உருவாகின்றது.

 கென்யாவிலாக இருக்கட்டும்  அல்லது உலகின் வேறெந்தப் பகுதியிலாகவேனும் இருக்கட்டும் – அது  இனக்குழுக்களிடையிலான மோதல்களாக  இருந்தாலும் சரி, நீர் நிலம் மற்றும் எண்ணை கனிமங்கள் தொடர்பான மோதலாக இருந்தாலும் சரி. மோதல்கள் எல்லாமே இவற்றை மையமாகக் கொண்டவைதான் என்பது எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. 

 அதிலிருந்துதான், எங்களுடைய மூலவளங்கள் குறித்த ஒரு நிலையான திடமான நிர்வாகச் செயற்பாட்டை  ஊக்குவித்தலின் மூலமும்  இம்மூலவளங்களை சமத்துவமாக பகிர்வதன் மூலமும் சமாதானத்தை கொண்டு வரும் ஒரே ஒரு வழியால்தான் உண்மையாகச் செய்ய முடியும். இதனை எளிதாக்குவதற்கு அதற்கான ஒரு அரசியல் பொருளாதார கட்டமைப்பு இருக்கவேண்டும்; அதன் பின்னர் நீங்கள் மனித உரிமைகள் நீதி, பொருளாதார நீதி, சமூக நீதி, நல்லாட்சி அல்லது ஜனநாயக ஆட்சி போன்ற விடயங்களுக்குள் செல்லவேண்டும். இவ்வாறுதான் இவைகள்  தொடர்புபடுகின்றன. எனது முயற்சியை  நோர்வேஜிய நோபல் பரிசுக்கான அமைப்பு கண்டு கொண்டபோது  நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

 3. தற்போது வரையிலும் 3 கோடி மரங்களை பசுமை வலய இயக்கம் நாட்டியுள்ளது. மர நடுகை என்பதன் தனிச் சிறப்பு அல்லது முக்கியத்துவம் என்ன?

 ஒரு மரத்தை நடுவதென்பது இலகுவாக செய்து முடிக்கக் கூடியதான ஒரு காரியமாக நான் கருதுகிறேன். அதற்கு தொழில்நுட்பமோ,  பெரிய அறிவோ  தேவையில்லை. தங்களுடைய சொந்த மூலவளங்களை தாங்கள் எவ்வாறு அழிக்கிறோம் என்பது குறித்த புரிந்துணர்வு சமூகங்களுக்கிடையில் உருவாகுவதற்கு இது ஒரு மிக முக்கியமான உள்நுளைவுப் புள்ளியாக அமையும்,. எவ்வாறு இந்த மூலவளங்களிற்கு முன்னுரிமை அளிக்க முடியும் என்பதையும், அரசாங்கமோ அல்லது சர்வதேச முகவர்களோ வந்து உதவி செய்யும்வரை காத்துக் கொண்டிருக்காமல், தங்களுடைய சொந்த பிரச்சினைகளை  தாங்களே கையாள வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுத் தர முடியும்.  அவர்களுடைய மூலவளங்களை அவர்களே பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பதற்கும் அப்பால், இந்த மூலவளங்களுக்கு காவலர்களாக இருந்திருக்க வேண்டிய அரசாங்கத்திடம் இது குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த  முடியும். பெரும்பாலான மக்கள் எங்களுடைய நடவடிக்கை பற்றி கேள்விப்படும்பொழுது, அதனை  ‘மர நடுகை’ என்கின்ற செயற்பாடாக மட்டுமே எண்ணுகிறார்கள். ஆனால் மரம் என்பது ஒரு குறியீடு; ஒரு உள்நுளைவுப் புள்ளி. இந்த சமூகத்துக்குள் பிரவேசித்த பின்பு, மூலவளத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள பிணைப்பு பற்றி எடுத்துரைத்து செயற்பாட்டை நோக்கி அவர்களை அணிதிரட்டுவது.

 4. பசுமை வலய இயக்கம், குறிப்பாக, பெண்களை ஈடுபாடு கொள்ளச் செய்வதை  அவதானிக்க முடிகிறது. இயக்கத்தின் பணிக்கும் பெண்களை வலுவூட்டுதலிற்கும் இடையிலிருந்த தொடர்பு என்ன?

 இது ஒரு தற்செயலான நிகழ்வுதான் ஆனால் இதனை தற்செயல் என்று கூறவும் முடியாது. என்ன நடந்தது என்றால், இதற்கான பரிந்துரைப்பு பெண்கள் தேசிய அவையில் இருந்துதான் முதலில் வந்தது. 1975ம் ஆண்டு நாங்கள்  மெக்ஸிக்கோவிற்கு போவதற்கான ஆயத்த முயற்சிகளில் இருந்தோம். அந்தக் காலம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், ஒரு உலகளாவிய பெண்கள் இயக்கம் இருந்த சமயம். முதன் முதலாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் மாநாடு மெக்ஸிகோவில் நடக்க இருந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரக்கூடிய பெண்களையும் அங்கு நாங்கள் சந்திக்க தயாராகிக் கொண்டிருந்த வேளை. ‘கென்யாவின் பெண்கள் தேசிய அவை’ என்னும் பதாகையின் கீழ் எங்களை ஒழுங்கமைத்தோம்.  எனவே பெண்களை சென்றடைவது என்பதும் அவர்களின் சந்தேகங்கள், கேள்விகள் குறித்துப் பேசுவது என்பதும் மிகவும் இயல்பாகவே அமைந்தது.

 இன்னொன்று, ஆபிரிக்காவில் சுற்றுச்சூழல் சீரழிவினால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். ஏனெனில் அவர்கள்தான் வீட்டுத் தேவைக்கான தண்ணீர் தேடிச் செல்பவர்களாக இருந்தார்கள். அதற்காக அவர்கள் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அவர்கள்தான் எரிபொருளுக்கான விறகுகளையும் தேடிச் சேகரித்தார்கள். அவர்கள்தான் தங்களுடைய குடும்பத்துக்கு உணவு தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். எனவே சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும்போது அதன்  பின்விளைவுகள் குறித்து அவர்களுக்கு புரிய வைப்பது இலகுவானது. மரங்கள் வளர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உஷ்ண வலயத்தில் ஒப்பீட்டளவில் விரைவாக வளரும். எனவே, ஒரு மரத்தை நட்டால் 5 அல்லது 10 வருடங்களில் கட்டிடத் தேவைக்கோ அல்லது வேலி அடைப்பதற்கோ பாவிக்கும் அளவிற்கு அது வளர்ந்துவிடும்.

 உத்திரத்திற்கு மரத்தைப் பாவிப்பதற்கு ஏறத்தாழ 30 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் – எரிபொருள் மற்றும் கட்டிடத் தேவைக்கு, மரத்தின் கிளைகளைப்  பாவிக்க முடியும். உண்மையில் இந்த பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு மரத்தில் இருந்து ஆரம்பிப்பது ஒரு வழியாக இருக்கிறது. பெண்கள் மிகவும் நல்ல கூட்டாளிகளாக இருக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் ஆண்களும் மர நடுகை குறித்து புரிந்து கொண்டார்கள் என்பதை காணக்கூடியதாக இருந்தது. இதில் படிப்படியாக ஆண்களும் சிறுவர்களும் இணைந்தார்கள். நிலம் என்பது விலைமதிப்புள்ளது. நாங்கள் பெண்களுடன் மட்டும் இதை ஆரம்பித்திருந்தாலும், இன்று சகலரும் பங்களிக்கும் ஒரு திட்டமாக இது மாறியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

 5. காலநிலை மாற்றம் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பற்றி நீங்கள் பல நாடுகளில் உரையாற்றி இருக்கிறீர்கள். உலகளாவிய கண்ணோட்டத்தில் சுற்றுச்சூழலின் அவல நிலை குறித்து எவ்வகையான நுண்ணிய பார்வை உங்களிடம் இருக்கின்றது?

 எழுபதுகளுடன் ஒப்பிடும்பொழுது உலகளாவிய சுற்றுச் சூழல்  பற்றிய பிரக்ஞை தற்போது அதிகரித்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக, 1972ம் ஆண்டு, ஸ்டொக்ஹோல்மில்  நடைபெற்ற சுற்றுச் சூழல் பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாட்டின் பின்னர் அது பற்றிய பிரக்ஞை தீவிரம் கொண்டது. அதன் பின்னர்  பிரக்ஞை பூர்வமான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வெறுமனே அரசாங்கங்களும் வல்லுனர்களும் மட்டுமல்ல , சாதாரண குடிமக்களும் இதனை உணர்ந்துள்ளார்கள்  என்றுதான் சொல்லவேண்டும். இது ஒரு பாரிய சாதனை. தற்போது பெரும்பான்மையான அரசாங்கங்கள் தங்களுடைய அமைச்சரவையில், சுற்றுச்சூழலுக்கான ஒரு அமைச்சரை நியமித்து இருக்கிறார்கள். அரசியல்ரீதியாக இந்த விடயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன என்பது ஒரு பாய்ச்சல் என்று சொல்ல முடியும்.

 இந்த இடத்திலே நான் கட்டாயம் சொல்லியாகவேண்டும், பிரத்தியேகமாக ஆபிரிக்காவில், சுற்றுச்சூழலுக்குத் தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவில்லை. தேசிய வரவு செலவுத் திட்டத்தை உற்று நோக்கினீர்கள் என்றால், அரசாங்கம் சுற்றுச்சூழல் அமைச்சை விடவும் அதிக பணத்தை பாதுகாப்பு அமைச்சிற்கு செலவழிப்பதை நீங்கள் காணலாம். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல், சுற்றுச் சூழல் சீரழிவினால் எத்தனையோ சச்சரவுகள் எழுந்திருக்கின்றன. முக்கியமாக அருகிக் கொண்டு செல்கின்ற நீரிற்கும் நிலத்திற்கும்  மக்களுக்கிடையே ஏற்படுகின்ற சச்சரவுகளுக்கு தானே முன்னின்று செய்வதற்கான வழிகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்வதில்லை. அரசாங்கமானது சுற்றுச் சூழலில் முதலீடு செய்யும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும். எனவே முக்கியமாக ஆபிரிக்காவில், அரசியல் அர்ப்பணிப்பு மட்டுமன்றி, சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் மிக குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. இவர்களின் அர்ப்பணிப்பு நிலை  குறித்த மிகப்பெரிய பீதி எனக்குள் இருக்கின்றது.

 6. நீங்கள் உலகத் தலைவர்களுக்கு முக்கியமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நாங்கள் எவ்வளவோ முன்னேறினாலும் இன்னும் எஞ்சியுள்ள தேவைகள் என்ன?

 சுற்றுச் சூழலிற்கு அதிக வளங்கள் வழங்கப்பட வேண்டும். “கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது, சந்திர மண்டலத்திற்கு செல்வதற்காக  எத்தகைய அர்ப்பணிப்புடன் அமெரிக்கா கருமமாற்றியதோ, அதே போல் படிம எரிபொருட்களில் இருந்து சுற்றுச் சூழலை குறைந்தளவு பாதிக்கும் மூலாதாரங்களைத் தேடி அமெரிக்கா செல்லும்” என்று பராக் ஒபாமா சொல்வதைக் கேட்கும்பொழுது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அமெரிக்கா அதைச் செய்யும் என்றால், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற மூலாதாரங்களை  உலகம் முழுவதிலும் இல்லாமலாக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 ஆபிரிக்க நாடுகளை எடுத்துக் கொண்டால், பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகள் உதவுகின்றன. அவர்களிடம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உதவி வழங்கும்படி கேட்கவேண்டும். உலக வெப்பமயமாதல் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். விசேடமாக ஆபிரிக்காவில், காடுகளை பாதுகாத்தல். குறிப்பாக, கொங்கோ  காடு. உங்களுக்குத் தெரிந்ததுபோல், நான் கொங்கோ காட்டின் நல்லெண்ணத் தூதுவராக இருக்கிறேன். அந்தந்தப் பிராந்தியங்களில் உள்ள அரசாங்கங்கள் காடுகளை அழிக்காமல் இருப்பதற்காக, கொங்கோ காட்டிற்கான நிதியம் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.

 7. பூமி  வெப்பமடைதல், காலநிலை மாற்றம் என்பன குறித்து கேள்விப்படுகிற விடயங்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. அதே சமயம் தங்களால் இது குறித்து எதுவும் செய்யமுடியாதென்று நினைக்கிறார்கள். தங்கள் கைகளில் எதுவும் இல்லை என்று எண்ணுகிறார்கள். அவர்களும் இதில் பங்களிப்பதற்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?

 நான் இதற்கு ஒரு சிறிய நீதிக் கதையை உதாரணமாக சொல்ல முடியும். காடொன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு பறவை  தனது சிறிய அலகினால் சொட்டு சொட்டாக தண்ணீரை கொண்டு வந்து ஊற்றுகிறது. தீ மேலும் கொழுந்து விட்டு எரிகின்றது. ஏனைய மிருகங்கள் அக்கறை கொள்ளவில்லை. பறவையால் நெருப்பை அணைக்க முடியவில்லை. எனவே எவ்வளவு சிறிய செயற்பாடும் ஒருங்கிணைவதால்தான்  மாற்றத்தைக் கொண்டு வரும்.

 நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்களை செய்ய முடியும். நான் அமெரிக்காவில் இருந்தபோது மூன்று ‘R’ களைக் கற்றுக்கொண்டேன் – Reuse, Reduce, Recycle (மீள்பயன்பாடு, பாவனைக் குறைப்பு, மீள்சுழற்சி).  நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் நுகர் பொருட்களின் அளவைக் குறைக்கலாம். குப்பையில் போடும் எத்தனையோ பொருட்கள் மீளப் பாவிக்கப்படக் கூடியன. இதன் மூலம் உற்பத்தியைக் குறைக்க முடியும். பிளாஸ்டிக் பைகளை குப்பையில் போடுவதை தவிர்ப்பதற்காக, மீள்பாவனைக்கான பைகளை நாங்கள் கென்யாவில் ஊக்குவிக்கிறோம்.

 ஜப்பானில் நான் தங்கியிருந்தபோது எதையும் வீணடிக்காமல் இருக்கக் கற்றுக் கொண்டேன். பெரும்பாலும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் வீணடிப்பவர்களாக இருக்கிறார்கள். எதுவும் அளவுக்கதிகமாக இருப்பதனால்தான்  வீணடிக்கிறோம்.

 ஜப்பானில்  ‘mottainai’ (என்ன ஒரு வீணடிப்பு) என்று சொல்கிறார்கள். இச்சொல் பௌத்தத்தின் அடிப்படையில் உருவானது. ஜப்பானியர்கள் செல்வந்தர்களாகுவதற்கு முன்பு, அவர்களை ஊக்குவித்த ஒரு சொல். தங்கள் வளங்கள், தங்கள் உலகம், தங்கள் சுற்றுச்சூழல் என்பவற்றில் இருந்து கிடைப்பவற்றிற்கு என்றைக்கும் அவர்கள் நன்றியுடையவர்களாக இருக்கும்படி பயிற்றுவிக்கப்பட்டார்கள். வளங்களை மதித்து, அவற்றை வீணாக்காது, அதற்கு நன்றியுள்ளவர்களாக இருத்தல். ஜப்பானியச் சிறுவர்கள் தங்களுடைய சாப்பாட்டுக் கோப்பையில் ஒரு பருக்கையைக் கூட மீதம் வைக்க மாட்டார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு பருக்கை என்பது பன்மடங்காகும் பொழுது அது ஒரு பெரும் தொகை என்பது எங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.

 அண்மையில் நான் கொங்கோவிற்குச் சென்றிருந்தபோது, மிகவும் பிரசித்தமான ஒரு மரத்தொழிற்சாலைக்கு சென்றிருந்தேன். ஒரு 200 ஆண்டுகள் வயதுள்ள, ஒரு பாரிய மரத்தை அவர்கள் எப்படி பாவிக்கிறார்கள் என்று என்னிடம் விபரித்தார்கள். தாங்கள் அறுவடை செய்யப் போகின்ற மரத்தை அவர்கள் அடையாளம் குறித்து வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்த மரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்று நான் கேட்டேன். மரத்தின் 35 சதவீதத்தை மட்டுமே தாங்கள் பாவிப்பதாகவும், மீதி கழிவு என்றும் அதனை என்ன செய்வதென்று தெரியாததால் எரித்து விடுவதாகச் சொன்னார்கள்.

 மீதியை எரிப்பது என்பது ஒரு வீணடிப்பு. எனவே, நாங்கள் எதையும் வீணாக்காதீர்கள்  எனும்போது  – அதன் அர்த்தம் என்னவென்றால், மதிப்பளியுங்கள், நன்றியுள்ளவர்களாய் இருங்கள் என்பதுதான். 200 ஆண்டுகள் வயதான ஒரு மரத்தின் 65 வீதத்தை வீணாக்குவது என்பது எந்த வகையில் ஒரு நேர்மையான செயற்பாடாக இருக்க முடியும்?

 எனவே, தனி நபராக ஒவ்வொருவரும் செய்யக்கூடிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. எங்களுடைய வீடுகளில், அளவுக்கதிகமாக பொருட்கள் வாங்கும்போது, இவற்றை தனி ஒருவராகச் செய்வது மிகச் சொற்பமானது என்று நாங்கள் நினைத்தாலும், அவை ஓராயிரம் தடவைகள் திரும்பத் திரும்பத் செய்யப்படும்பொழுது என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்த வகையில் ஒரு தனி நபரின் சிந்தனைகூட நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வழி கோலும்.

 8. ஒரு பெண் செயற்பாட்டாளராக நீங்கள் எவ்வாறான தடைகளை எதிர்கொண்டிருக்கிறீர்கள்? எப்படி அவற்றைக் கடந்தீர்கள்? இக்கடினமான பயணத்தில் அதற்கான பலத்தையும் துணிவையும் நீங்கள் எங்கிருந்து கண்டடைந்தீர்கள்?

 எனது ஆரம்ப காலக் கல்வியை கென்யாவில் முடித்துவிட்டு அமெரிக்காவிற்குப் போனேன். பின்னர் ஐரோப்பாவில் சிறிது காலம் இருந்தேன். அதுவும் அறுபதுகளில், அந்தக் காலத்தில்  ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எத்தனையோ மாணவர் இயக்கங்கள், மக்கள்மயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்  என்று உத்வேகமாக இருந்தன. நான் அந்த இயக்கங்களுடன் இணைந்து செயற்படடேன். அப்போது மாற்றம் வேண்டிய மனநிலை, நீதியையும் தர்மத்தையும் காணுகின்ற உத்வேகம் என்பன இருந்தன. கென்யாவிற்கு நான் திரும்பி வந்தபோது வெளியுலகில் நான் சந்தித்த அனுபவங்களினால் நான் மிகுந்த உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் இருந்தேன். நான் எவ்வளவிற்கு தடைகளை எதிர்கொண்டேனோ, அவ்வளவிற்கு நான் ஊக்குவிக்கப்பட்டேன். நாட்டில் இருந்தவர்களுக்கு உலகத்தின் ஏனைய பகுதிகளில் என்ன நடக்கின்றது என்பது கூடத் தெரியாது. நீண்ட காலத்திற்கு  முன்பே காலாவதியாகி இருக்கவேண்டிய விடயங்களை இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள். – உதாரணத்திற்கு, சித்திரவதை, மனித உரிமை மீறல்கள் , பெண்கள் உரிமை மீறல்கள், சுற்றுச் சூழல் அழிப்பு போன்றன. இந்த விடயங்கள் நிச்சயமாகச் செய்யப்படக் கூடாதவை என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் நான் எனது நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தாலோ உலகின் வேறெந்தப் பகுதிகளிற்கும் செல்லாமல் இருந்திருந்தாலோ நான் ஒருவேளை சோர்வடைந்து போய் எனது தீவிர பிரச்சாரப் பயணத்தை கை விட்டிருக்கக் கூடும்.

 உயிரியலை ஒரு பாடமாக நான் கற்றதும் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கின்றதென்று நான் நினைக்கிறேன். உயிரியல் அமைப்பு எவ்வாறு செயற்படுகின்றது, எப்படி செயலிழக்கின்றது, அதனால் ஏற்படுகின்ற இடர்கள் என்பவற்றை என்னால் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் ஒரு உயிரினம் அழிந்து கொண்டிருக்கிறது அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது என்பதனை நாங்கள் கேள்விப்படும்பொழுது, பூமிப் பந்தில் இருந்து இந்த உயிரினங்கள் என்றைக்குமாக மறைந்து போகும் சாத்தியம் இருக்கின்றது என்பதை உணர முடியும். இந்தப் புரிதல் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உந்துதலை ஒருவருக்குத் தருகின்றது.

 9. உங்களுடைய சவாலான பணிகளுக்கிடையிலும் நீங்கள் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதை தொடர்ந்து பார்க்கிறோம். ஆனால் பலரும் இந்த உலகில் நம்பிக்கை இன்றி  காணப்படுகிறார்கள். எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்ற இந்த வாழ்வில் உங்களால் எப்படி அது முடிகிறது?

 ஒருவர் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். சில சமயங்களில் நீங்கள் சோர்வுற்றதாக உணருவீர்கள். அதுவும் உங்களுக்கு வயதாகும்பொழுது, ஐயோ கடவுளே! இன்னும் எவ்வளவு காலம் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று யோசிப்பீர்கள். சில சமயங்களில் சலிப்பு வரத்தான் செய்கிறது. ஆனால் நம்பிக்கையை இழக்காமல் இருப்பதென்பது மிகவும் முக்கியம். நான் எப்போதும் ஒரு ஒளிக்கீற்றை தேடிச்  செல்வதை என்றென்றைக்கும் தொடர்ந்து கொண்டிருப்பேன்.

 10. உலகளாவிய கண்ணோட்டத்தில், நாங்கள் தேசங்களைக் கடந்து, பூமிப் பந்தில் ஒரு குடும்பமாக எங்களை உணர்ந்து கொள்ளுவதை நோக்கி இப்போது நகர ஆரம்பித்திருக்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? பூமிப்பந்தில் உள்ள ஒவ்வொருவரிலும் இது தங்கியிருக்கின்றதென்பதை சகலரும் உணர்ந்துகொள்வது ஒரு தேவையான நகர்வு என்று எண்ணுகிறீர்களா?

 அரசியல் மட்டத்திலும் குடிமக்களிடமும் இது குறித்த அதிகளவிலான பிரக்ஞை ஏற்பட்டிருக்கிறதென்று நான் நினைக்கிறேன். அதே சமயம் இன்னும் நிறையப் பேர் அச்சத்துடனும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்னும் உணர்விலும் இருப்பதாகவும் நான் உணர்கிறேன். போலந்தில் இருக்கும் போஸ்னான் பல்கலைக்கழகத்தில் நான் நிகழ்த்திய ஒரு விரிவுரையின் பின்னர்,  ஒரு மாணவன் என்னிடம் “நாங்கள் போலந்து  நாட்டவர்கள். மற்ற இடங்களில் நடப்பது பற்றி ஏன் நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்? எங்களுடைய நாட்டில் நடப்பதையே ஒழுங்காக கவனிக்க முடியாமல் இருக்கும்போது இதைப் பார்ப்பதா, அதைப் பார்ப்பதா  என்று அதிசயிக்கிறேன்” என்று சொன்னான். இன்றைக்கும் இப்படி யோசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு எனக்கு இது ஒரு  சந்தர்ப்பமாக அமைந்தது.

 ஆனால் துரதிர்ஷ்டவசமாக உண்மை என்னவென்றால், நீங்கள் எல்லைகளை மூட முடியாது. கிட்டத்தட்ட அது முடியாதது. இறுதியில் பெர்லின் சுவரும் விழுந்துவிட்டது. தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில், இணையம், விமானங்கள் நாங்கள் பிரயாணம் செய்கின்ற வீதம் என்பவற்றை பார்த்தால், நீங்கள் விரும்பினாலும் உலகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து ஒளிந்துகொள்ள  முடியாது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ நீங்களும் இந்த உலகச் சந்தையின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒளிந்திருந்தாலும் அது உங்களைக் கண்டுபிடித்து விடும்.

 அதனால்தான் மக்கள் இதனைப் புரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக காலநிலை மாற்றம் என்கின்ற விடயம், இது நாங்கள் எல்லோரும் ஒரு கிரகத்தில் இருக்கிறோம் என்ற உண்மையை எங்களிடத்தில் கொண்டு வருகிறது. மனித உயிரிகள் உலகத்தின் ஒரு மூலையில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அதிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இன்னொரு மூலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நாங்கள் எல்லாரும் அதி தூரத்தில் இருப்பதாக இன்றும் உணர்ந்தாலும், பயணம், தொழில் நுட்பம், குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் இவற்றில் நாங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களினால் நாங்கள் அண்மித்து இருக்கிறோம்.

 11. எங்களில் பலர் நகரவாசிகளாக, எங்களுடைய இயற்கைச் சுற்றுப்புறச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறோம். ஆனால் சுற்றுப்புறச் சூழல் பற்றிய எங்கள் பிரக்ஞை இன்மையினால் மர நடுகையில் எத்தனை தூரம் ஈடுபாடு கொள்ள முடியும் என்று யோசிக்கிறேன்.

 இது மிக மிக உண்மை. தங்கள் மண்ணை விட்டு நகரங்கள் நோக்கிய இந்த மக்களின் தற்போதைய  இடப்பெயர்ச்சி குறிப்பிடத்தக்கது. சகல நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள்  குழந்தைகளும் சிறுவர்களும்  நிலத்துடனான உறவை பேணிக்கொள்வது  குறித்த பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டும். நகரங்கள் போதியளவு பசுமைவெளிகளையும்  திறந்த வெளிகளையும் கொண்டிருத்தல் அவசியம். அது தேவை என்பது மட்டுமல்ல, அந்த தொடர்பினை இழக்கவும் மக்கள் விரும்பவில்லை. நாங்கள் அதனை செய்யாவிடில் எங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண முடியாது.

 நான் சிறியவளாக இருந்தபொழுது தவளை முட்டைகளுடனும் தலைப்பிரட்டைகளுடனும் வால்பேத்தைகளுடனும் விளையாடி இருக்கிறேன். வயல்களில் திரிந்திருக்கிறேன். அம்மா வயலில் செய்யும் வேலைகளை  பார்த்து நானும் செய்திருக்கிறேன். பசுமை மீதானதும் பூமி மீதானதுமான என்னுடைய ஈடுபாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே வளர்ந்தவர்களும், குறிப்பாக நகரங்களிற்குப் பொறுப்பாக இருக்கின்றவர்களும் நாங்கள் நிலத்துடனும் சுற்றுச் சூழலுடனுமான பிணைப்பை இழந்து விடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம், விசேடமாக நமது குழந்தைகள்.

 12. உங்களுடன்  சக பரிசு பெற்றவரும் நோபல் பெண்களின் முயற்சி நிறுவனர்களில் ஒருவருமான பெற்றி வில்லியம், மற்றும் உங்களிற்கும் அமைப்பு உறுப்பினர்களுக்கு இடையில் இருக்கும் சகோதரத்துவம் அவர்களுடன் இணைந்த செயற்பாடு என்பன பற்றிக் கூற முடியுமா?

 2004ம் ஆண்டு என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டு சில நாட்களில் ஷெரினும் பெற்றி வில்லியம்ஸும் நைரோபிக்கு வந்தார்கள். அது அற்புதம். அந்தச் சமயத்தில் இது குறித்து உரையாடினோம். அது விரைவிலேயே இன்னொரு பாதையை நோக்கி வளர்ந்துகொண்டு போனது. நாங்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய பாதைகளில் பயணித்த போதும்கூட, மிகத்  தீவிரமாக முக்கியமானதொரு விடயத்தில் இணைந்து பணிபுரிவது எங்களுக்கு ஒரு அற்புதமான விடயம். அது பின்னாளில் நல்லதொரு விளைவைத் தந்தது.

 13. உலகிலுள்ள பெண்களினதும் இளம்பெண்களினதும் நிலை குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன அல்லது நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

 நான் நேற்றிரவு World Focus (அமெரிக்காவில் ஒலிபரப்பப்பட்ட சர்வதேச செய்தி நிகழ்வு, 06/10/2008 – 02/04/2010) நிகழ்ச்சி பார்த்தேன்; அதில் ரூவாண்டாவில் உள்ள பெண்களின் நிலை பற்றி பேசினார்கள். எத்தனையோ பெண்கள் தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக சொன்னார்கள். “சமூக மீள் உருவாக்கத்திற்கு பெண்கள்தான் சிறந்த முகவர்கள்” என்று ரூவாண்டாவின் அதிகாரபூர்வ உத்தியோகத்தர் கூறினார்; இது நம்பிக்கையைத்  தரக்கூடிய ஒரு வெளிப்பாடாக இருக்கிறது. ஆனால் உலகின் பல பாகங்களில் பெண்கள் ஒடுக்கப்பட்டுக்  கொண்டும் , அநீதியினதும், வன்முறையினதும் மூர்க்கமான வடிவங்களை எதிர்கொள்கிறார்கள், இது குறித்து.

 நாங்கள் பெண்கள் எப்படிச் செயற்படலாம் என்பது குறித்து கற்பனை பண்ணுகிறோம்.  ஏனெனில் உலகின் பல நாடுகளில் இன்னமும் பெண்கள் பொறுப்பான தீர்மானங்கள் எடுக்கின்ற பதவிகளில் இல்லை. ஆனால் சில வேளைகளில் அவற்றை தாங்களாகவே தேடிக் கொள்கிறார்கள். அங்கும் நாங்கள் அவ்வளவாக வித்தியாசங்களை காண்பதில்லை. அவர்கள் ஆண்களின் அதே விழுமியங்களால் போர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது தழுவப் பட்டிருக்கிறார்கள் என்பதனை நான் எப்போதும் உணர்ந்தேன். ஆண்களைப் போன்ற அதே சுபாவம் கொண்டவர்களாக மாறி, ஆண்களின் உலகத்திற்குள் தங்களைப் பொருத்துவதற்கு முயற்சிக்கிறார்கள்; உண்மையில் ரூவாண்டாவில் ஒரு தொகையான விமர்சனபூர்வ பெண்கள் அரசாங்கத்தில் பாத்திரம் வகிப்பார்களாயின், ஆண்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்படுத்திய அழிவுகளை விடவும் குறைந்த அளவிலான அழிவுகள் ஏற்படும். உண்மையில் பெண்கள் அவ்வாறு அதிகாரத்தை கையாள்வார்களா என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டும். உதாரணத்திற்கு, ரூவாண்டாவில் அல்லது கொங்கோவில் பிணக்குகள் இருக்கின்றன. இந்த பிணக்குகளைத் தீர்ப்பதை விடுத்து தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கு இரு தரப்பிலும் பெண்களை வன்முறைக்குட்படுத்துவதன் மூலம் எதிர்ப்பக்கம் இருக்கின்ற  ஆண்களை ஆத்திரமூட்ட  முயற்சிக்கிறார்கள்.

 நானும் ஜோடியும், மற்றும் நடிகை மியா பாரோவுடன் வேறு பெண்களும் சேர்ந்து சாட் நாட்டின் டார்பூரில் உள்ள அகதி முகாமில் பெண்களை பார்க்க சென்றிருந்தோம். தாங்கள் எவ்வாறு ஆண்களால் வன்முறைக்குட்படுத்தப்பட்டார்கள் என்பதை அவர்கள் சொல்லக் கேட்கும்போது அது மிகவும் பயங்கரமானதாக இருந்தது. வன்புணர்வு செய்வதை ஆண்கள் யுத்தத்தின் ஆயுதமாக பாவிக்கிறார்கள். எனவே இந்த பிணக்குகள் இருக்கும் வரையும் பெண்கள் துன்பத்தை அனுபவிக்கப் போகிறார்கள். பெண்களாக நாங்கள் ஏன் சமாதானத்திற்காக பணிபுரிய வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம் . ஏனெனில் போர் என்பது எத்தகைய வலிகளைத் தரக்கூடியது என்பது எங்களுக்கும் எங்கள் மகள்களுக்கும் தெரியும்.

 14. பசுமை வலய இயக்கத்தின் பணியானது கூர்ப்படைந்து பல வருடங்கள் ஆகின்றது. அதன் தற்போதைய இலக்கும் பணியும் என்ன?

 தற்போதைய குவிமையமாக இருப்பது, பிரதானமாக மண் அரிப்பை தடுத்தல், மரங்களை நடுதல், மற்றும் நிலங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக மக்களை ஊக்குவிப்பது. இன்றும் பெரும்பாலான மக்களுக்கு விறகு முக்கியமான எரிபொருள். அத்துடன் சீரழிந்த  காடுகளை எவ்வாறு பாதுகாப்பது, இன்னும் வாழ்கின்ற காடுகளின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், அத்துடன் இது தொடர்பான அனுபவங்களை பிரதேசத்தினுள்ளும் அதற்கு வெளியேயும் பகிர்ந்து கொள்ளுதல். இவற்றிற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

 தற்போது நைரோபி பல்கலைக் கழக மாணவர்களின் அனுபவங்கள் பற்றி அறிந்து பகிர்ந்து கொள்ள விழைகிறோம். விவசாயத் துறை, மிருகவியல்  விஞ்ஞானத் துறை,  சுற்றுச் சூழல் கல்விப் பீடம் போன்றவைகளில் கல்வி கற்பவர்கள் வெளியே வரும்போது, அவர்களிடம் அறிவுடன் அனுபவரீதியான கற்றலும் இருக்கும்படியாக ஏற்பாடு செய்வது குறித்து பேசுகிறோம். அவர்கள் பசுமை வலய இயக்கத்திலும் இணைந்து பணியாற்றக் கூடியதாக இருக்கும். அறிவை மட்டும் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது, செயற்பாடும் முக்கியம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

 செயற்பாடென்பது ஒரு மரத்தை நடுதல், அத்துடன் அதன் பாதுகாப்பு , நதிகள் மற்றும் குளங்களை சுத்தமாக வைத்திருப்பதை உறுதிப்படுத்தல் என்பனவாக இருக்க முடியும். அலுவலகத்திற்குச் சென்று வெறுமனே தாள்களைப்  புரட்டிக் கொண்டிருப்பதானது சுற்றுச் சூழலை பாதுகாக்காது. எங்களுக்கு செயற்பாடு தேவை.

 15. ஆபிரிக்காவின் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் அதிக கவனம் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆபிரிக்கா ‘நாகரிகத்தின் தொட்டில்’ என்று  சொல்கிறார்கள். ஆபிரிக்காவுக்கும் ஏனைய நாடுகளிற்குமான உறவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 ஆபிரிக்கா தொடர்பில் சில வேளைகளில் வெறும் உணர்ச்சிபூர்வமாக கற்பனை நிலவுகிறது. ஆனால் வளங்களை பிரயோகிப்பதில் எவரும் அடைய விரும்புகின்ற ஒரு நிலையை ஆபிரிக்கா  எட்டியிருப்பதாக தெரியவில்லை. ஆபிரிக்கத் தலைமை ஆபிரிக்காவில் தோற்றுவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆபிரிக்காவில் உள்ள மக்களின் நல்வாழ்விற்கு அந்தத் தலைமைகள் தங்களை உண்மையாக அர்ப்பணிக்கவில்லை. அவர்களுக்கு உதவிகள்  கிடைத்தபொழுது அவர்கள் அதை எப்படி பாவித்தார்கள்? ஆபிரிக்காவிற்கான கடன்கள் ரத்து  செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் எத்தனையோ ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்தக் கடன்களின் தொகைக்கு  எத்தனையோ மடங்கு மேலாக வசூல் பண்ணப் பட்டிருக்கின்றன. ஆபிரிக்காவின் அரசாங்கங்கள் தங்களுடைய மக்களின் பெரும்பாலான அடிப்படைத் தேவைகளில் குறைந்த பட்சமான கல்வி, சுகாதாரக் கவனிப்பு போன்றவற்றை கூட வழங்குவதற்கு இயலாமல் இருக்கின்றன. அத்துடன் சில வேளைகளில் உணவு, உறைவிடம் – இந்த அடிப்படைத் தேவைகள் ஆபிரிக்க மக்களுக்கு கிடைக்கக் கூடியதாக இல்லை.  யாரும் இதை காது கொடுத்து கேட்பதாயில்லை. விசேடமாக 2000ம் ஆண்டு நாங்கள் இந்த வறிய நாடுகளின் கடன்களை ரத்து செய்யுமாறு  அதற்கு உதவிய அரசாங்கங்களை சம்மதிக்கச் செய்வதற்கு முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.

 ஆனால் வியாபாரத்திற்காக அவர்கள் தற்போது பெறும் பணத்தை நாங்கள் நேரடியாக  பார்க்கிறோம். அவர்கள் ஒரு விதமான அச்சத்துடன் இருக்கிறார்கள். ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளை போன்றே  வேறு  நாடுகளும் எத்தனையோ காலத்திற்கு முன்பேயே கடன்காரராகி விட்டன. ஆனால் யாருமே அந்தக் கடன்களை ரத்து செய்து அவர்களிற்கு உதவி செய்வது பற்றி அக்கறைப்படவே இல்லை. எனவே இந்த கற்பனையான அடையாளத்தை  ஆபிரிக்காவிற்கு ,கொடுத்து, உதவி வழங்குகிறோம் என்று சொல்கின்ற நாடுகள் தப்பித்துக் கொள்கின்றன. நான் உலகத்தைத்தான் குறை சொல்கிறேன் அத்துடன் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இதில் ஆபிரிக்கத் தலைமைகளும் தவறிவிட்டன. ஏனெனில் அவர்கள் ஒரு நல்ல பொறுப்பான தலைமைத்துவத்தை ஊழலற்ற நிர்வாகத்தை இருக்கின்ற வளங்கள் தவறான வழியில் பாவிக்கப்படாமல் இருத்தல் என்பவற்றை நடைமுறையில் கொண்டு வர விரும்புபவர்களாக இருந்திருக்கிறார்களா?. நான் இதை இப்படித்தான் கூற முடியும்.

 16. நீங்கள் நிறையவே பிரயாணம்  செய்கிறீர்கள். சோர்வில்லாமல் பணி  புரிகிறீர்கள். எது உங்களை சோர்வில்லாமல் வைத்திருக்கிறது? எப்படி இந்தக் கனமான பணியை தொடர முடிகின்றது? பணியில் ஈடுபடுவதற்கு இயலுமானதாக எப்படி உங்களை தயார்படுத்தி  இருக்கிறீர்கள்?

 வேறு வேறான சந்திப்புகளிற்கு இடையில் நீங்கள் உங்களை சமநிலையில் வைத்திருப்பதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறன். இந்தச் சந்திப்புகளிற்கு நடுவில் நீங்கள் தங்குமிடத்திலும் பிரயாணத்தின்போது விமானத்திலும் உங்களிற்கு நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில் உங்களால் வாசிக்க முடியும், யோசிக்க முடியும். நீங்கள் எப்போதுமே உங்களுக்கு ஊட்டம் அளிக்க முடியும்.

 17. அண்மையில் உங்கள் கட்டுரை ஒன்றில் நீங்கள் “தன்னை அறிந்த, தன் பெறுமானத்தை அறிந்த, தன்னைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மனதை நீங்கள் அடிமைப்படுத்த முடியாது.” என்று குறிப்பிடுகிறீர்கள். இங்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

 சுற்றுச் சூழல் கல்வியின் மூலம்  இவற்றை உங்களதாக்கிக் கொள்ள முடியும் என்கிற ஒரு விடயத்தை சொல்லுவதற்கான என்னுடைய எத்தனம்- இப்படி இருக்கிறது. அதாவது உங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களை நீங்கள் அறிந்திருந்தால், உங்களை எதனாலும் குழப்ப முடியாது. ஏனெனில் சில வேளைகளில் மற்றவர்களின் கருத்துகளினால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *