”பீ நாத்தத்தை மீறியா பூவாசம் வீசிடப்போவுது?!” – மலம் அள்ளும் பெண்ணின் கேள்வி

 Thanks -http://www.vikatan.com/news/tamilnadu

மலம்

“மலம் அள்ளற பொம்பளைங்க யாரும் பூ வெச்சிருக்கிறது இல்லை, அது ஏன் தெரியுமா?”

தலையில் மலச்சட்டியுடன் விழிகளில் ஏக்கம் சுமந்து அந்தப் பெண் கேட்க, பார்வையாளர்களிடம் அப்படி ஓர் அமைதி. அரைநிமிட இடைவெளிவிட்டு, “உடம்பு முழுக்க பீ நாத்தம் அடிக்குது, அதை மீறியா தலையிலிருந்து பூவாசம் வீசிடப்போவுது?” என்கிறார். பார்வையாளர்களின் மேல் குற்ற உணர்ச்சியை வலையாக வீசிவிட்டு, அடுத்தக் காட்சிக்கு நகர்கிறது.

இயக்குநர் பா.ரஞ்சித்தும் அவரது தோழர்களும் இணைந்து நடத்தும் ‘நீலம்’ அமைப்பும் ‘ஜெய்பீம் மன்றம்’ இணைந்து நடத்திய ‘மஞ்சள்’ நாடகத்தின் ஒரு காட்சிதான் அது. பாஷாசிங் எழுதிய Unseen: The truth about India’s Manual scavengers எனும் நூல், ‘தவிர்க்கப்பட்டவர்கள்’ எனும் தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலையை பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆய்வுசெய்து பாஷாசிங் எழுதிய நூலைத் தழுவி, எழுத்தாளர் ஜெயராணியால் உருவாக்கப்பட்டதுதான் ‘மஞ்சள்’ நாடகப் பிரதி.

கையால் மலம் அள்ளுவது நமது நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அது நடைமுறையில் இல்லை. கழிவறைத் தொட்டியைச் சுத்தம்செய்ய இறங்கி மரணம் தழுவுவோர், நாளிதழின் அன்றாட செய்திகளாகிப் போனார்கள். அந்தச் செய்திகளுக்குப் பின்னிருக்கும் வலியை, நாம் உணரும் வகையில் ‘மஞ்சள்’ நாடகத்தின் உருவாக்கம் அமைந்துள்ளது. தொழிலாக அல்லாமல், குறிப்பிட்ட சாதியை மீண்டெழுந்துவிட முடியாமல் செய்கிற அடக்குமுறையாக இருக்கிறது என்பதை வெளிப்படையாகப் பேசுகிறது. பொதுச் சமூகத்தில் புனிதம் எனக் கட்டமைக்கப்பட்டிருக்கிற விஷயங்களிடம் அறமிக்க கேள்விகளை எழுப்புகிறது.

”நாங்கள் மலத்தைச் சுத்தம்செய்துவிட்டு கைகளைக் கழுவத் தண்ணீர் கேட்டால், கொடுக்க மறுக்கிறார்கள். நாங்கள் உட்கார்ந்த இடத்தில் புனித நீர் தெளிப்பதும் பெண்கள்தான். அப்படியெனில் எங்கள் பிரச்னை பெண்ணியத்தில் உள்ளடக்கியது இல்லையா?”

”மங்களரமானது எனச் சொல்லப்படும் மஞ்சள் நிறம், எங்களுக்கு மலத்தையே நினைவூட்டுகிறது. சாப்பிடச் செல்லும்போது, மஞ்சள் நிற உணவுகளைப் பார்த்ததும் வாந்தி வருகிறது.”

”மழை என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். ஆனால், மலக்கூடையைச் சுமந்துச் செல்லும்போது மழை பெய்தால், நாங்கள் ஒதுங்குவதற்குகூட இடம்தர மறுக்கிறார்கள். மலக்கூடையில் உள்ள மலம் கரைந்து உடலெங்கும் வழிகிறது. மழையைப் பிடிக்குமா எங்களுக்கு?

இன்னும் இதுபோன்ற கேள்விகள் மனசாட்சியை உலுக்குகின்றன. பொதுப்புத்தியில் கெட்டித்தட்டிவிட்ட குறியீடுகளின் மறுபக்கம், எளிய மக்களின் மீதான எழவே முடியாத அழுத்தமாக இருப்பதை முகத்தில் அறைந்து காட்டுகிறது. மலக்கழிவுகளின் மத்தியிலிருந்து வெளியேறும் துப்புரவுத் தொழிலாளர்கள், கழிவுகளைச் சமூகத்தின் மீது வீசுவது போலத் தொடங்குகிறது நாடகத்தின் காட்சி.

மஞ்சள் நாடகம்

இந்தியா முழுக்க மலம் அள்ளுபவர்களைச் சுட்டும்விதத்தில் பல மாநிலங்களில், இந்தத் தொழில்செய்து இறந்துபோன பெண்களையே முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஏனெனில், இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான பிரச்னைகள், நாம் கற்பனை செய்துபார்க்க முடியாதது. ‘கருவுற்ற ஒரு பெண், மலத்தை அள்ளும் வேலைக்குச் சென்றால், நோய்க்கிருமிகள் தொற்றிக்கொள்ளும். அதனால், வயிற்றில் இருக்கும் சிசுக்கு ஆபத்து’ என்கிறார் மருத்துவர். ஆனால், தன் பசியையும் சிசுவின் பசியைப் போக்க அந்த வேலைக்கு அவள் சென்றே ஆகவேண்டும். ஆறு மாதம் கழித்தாவது வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம் என்றால், அதுவும் முடியாது. பிரசவச் செலவு பணம் வேண்டுமே. கடைசியில், தன் குழந்தையையாவது இந்தத் தொழிலிலிருந்து மீட்க வேண்டும் எனப் போராடித் தோற்றுப்போகிறாள்.

”எல்லோருக்கும் பிள்ளைப்பேறு காலத்தில் மட்டும்தான் குமட்டலும் வாந்தியும் வரும். இந்தக் குழிக்குள் தினம் தினம் இறங்கும் எங்களுக்கு எப்போதும் குடல் கிழியும் அளவுக்குக் குமட்டல் இருக்கும். ஆனால், அந்த வீட்டுப் பெண்கள் எங்களைப் புழுவைப் பார்ப்பார்கள். பிறப்புறுப்பு ஒரே மாதிரி இருப்பதால் மட்டும் எல்லாப் பெண்களும் சமமாகிவிட முடியாது!” என அரங்கம் அதிர அமில வார்த்தைகள் ஒலிக்கின்றன.

‘வாழ்வு என்றால் என்ன? 
சாவு என்றால் என்ன?
ரெண்டும் ஒன்றா ஐயோ!
எனக்கிங்கு ரெண்டும் ஒன்றா ஐயோ!’

என்ற பின்னணிப் பாடல் நம் மனசாட்சியை சுயவிசாரணை செய்துகொள்வதற்கான குரல்.

”பிச்சை எடுக்கக்கூட போ. ஆனா, பீ அள்ளுற வேலைக்குப் போகாதே!” என்று கணவனிடம் சண்டையிடும் மனைவி, ”நாட்டுக்காக உயிர் இழக்கறவங்க தியாகிகள், அப்படின்னா நாங்க?” என்று கேட்கும் பெண் துப்புரவாளர், ”மலம் அள்ளுவது குலத்தொழிலாக இருக்கும் வரை சாதியம் ஒழியாது” என்று தன்னை துப்புரவு வேலை செய்யச் சொன்ன ஆசிரியரிடம் பேசும் மாணவி என நாடகம் முழுக்க ஏராளமான பெண் பாத்திரங்கள் வருகின்றன.

மஞ்சள் நாடகம்

மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுபவர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் இடத்தில் சந்திக்கும் அவமதிப்புகள் தொடங்கி, இந்திய ரயில்வே பட்ஜெட்டில் மலம் சுத்தப்படுத்துபவர்களுக்கு இருக்கும் பாரபட்சம் வரை எதையும் விட்டுவிடாமல் அலசுகிறது இந்த நாடகம். உடலெங்கும் புண்ணும் மல நாற்றமும் ஒட்டிக்கொண்டிருக்க நீதிமன்றம் ஏறும் அவர்களுக்கு, செப்டிக் டாங்குகள் போலவே நீதிமன்றக் கதவுகளும் மூடப்படுகின்றன. இந்தத் தொழிலின் அடிப்படையாகச் சாதிதான் நிலவுகிறது. அதை ஒழிக்காமல், இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாது. இறுதியாக, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், பிரதமர் பங்கெடுத்து பெயருக்குச் சில குப்பைகளைக் கொட்டி, கூட்டிப் பெருக்குவதுபோலவும் சுற்றிலும் இதே துப்புரவாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருப்பது போல முடிகிறது.

ஶ்ரீஜித் ‘கட்டியக்காரி நாடகக் குழு’ கலைஞர்கள் தங்கள் நடிப்பின் வழியே மலம் அள்ளும் மனிதர்களை நமக்குள் வலியுடன்  கடத்தியிருக்கிறார்கள். சுமார் மூன்று மணி நேர நாடகத்தைத் துளியும் சோர்வில்லாமல் இயக்கியிருக்கிறார் ஶ்ரீஜித் சுந்தரம்.

நேற்றைய இந்தியாவின் நள்ளிரவு ஜி.எஸ்.டி பற்றிய சிந்தனையுடன்தான் கடந்திருக்கும். ’புதிய இந்தியா’ பிறந்துவிட்டதாக அரசு முழங்கிய நேரத்துக்குச் சற்று முன்பு, நம் கண்ணுக்கு முன்னால் புறக்கணிக்கப்பட்ட ‘இன்னொரு இந்தியா’வைக் காண முடிந்தது. கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், சத்யராஜ், கனிமொழி, சல்மா, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *