இந்தச் சமூகம் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை!

கவிதா லட்சுமி –

( நன்றி -April 2017 ‘காக்கைச் சிறகினிலே’ இதழில்,)

வீட்டு எண் 38/465

   kavitha2

kavitha 1யணங்கள் எழுத்தில் படிப்பதற்கானது அன்று. அது ஆத்மதரிசனம். எனது மனதையோ, அதன் நிலையையோ மற்றவர்களுக்கு கடத்துவது அல்ல இதை எழுத்துவதன் நோக்கம். மழையின் மகிழ்வை அதன் சுவையை அல்லது அது தந்த அனர்த்தங்ளை அதில் நனைந்துதானே உணர்ந்துகொள்ள முடியும்? இது பயணக்குறிப்பா அல்லது மனச்சுமையை இறக்கி வைப்பதன் வெளிப்பாடா? தெரியவில்லை. ஏதோவொன்றாக இருந்துவிட்டுத்தான் போகட்டுமே.ஆசை. அது, அதுதான் வாழ்வின் உந்துசக்தி. இந்த நடனக்கலை கற்பவர்களுக்கென்று சில விசித்திர ஆசைகள் வரும் போலும். எனக்கோ தேவதாசி மரபில் ஒருவரையாவது சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் உச்சத்திலிருந்தது. பிறகு ஆசை தனது சாத்தியக்குறைபாட்டை உணர்ந்து தனது வீரியத்தை குறுக்கிக்கொண்டு மனதின் அடியில் படுத்துக்கொண்டுவிட்டது. சென்றமாதம் கும்பகோணத்தில் இருந்த நாட்களில் இதைப்பற்றிப் பேச்சு வந்தபோதுதான் பக்கத்து ஊரில் தேவதாசி மரபில் வந்த சகோதரிகள் இருப்பதாகவும், அவர்களைச் சந்திக்கலாம் என்றும் அறியக்கிடைத்தது. அந்த நொடியிலிருந்து, மடிந்துகிடந்த ஆசை மீண்டும் உயிர்பெற்றெழ, மறுநாள் காலை அவர்கள் வசிக்கும் இடம் தேடிச் சென்றேன்.

போகும் வழியில் பல கேள்விகள் மனதில், குறிப்புகள் வேறு தனியாக எடுத்துவந்தேன். நான் தெரிந்துகொண்டவை, இனி தெரிந்து கொள்ள வேண்டியவை, நடனத்தின் அன்றைய முறைகளும் இன்றைய மாற்றங்களும், நடனம் தொடர்பாக, சமூகம் சார்ந்த அவர்களின் மனநிலை என பல விடயங்கள். ஏதோ ஆய்வுக்கட்டுரை எழுதும் பெரிய புடுங்கி எழுத்தாளன் போல அன்றிருந்த எனது மனநிலையை இனி நினைத்துப்பார்க்க வேண்டாம் என்றிருக்கின்றேன். இதில் பெரிய கொடுமை என்னவென்றால், நாங்கள் தனித்துவமானவர்கள்; என்று நம்மைநாமே நினைத்துக்கொள்வதுதான். இது கும்பகோணத்தின் நகர்ப்பகுதி. தனியார் அடுக்குவீடுகள் நிறைந்த வீதி. பேருந்துப் பாதை, வாகன இரைச்சல் என நகர்ப்புற இடத்தில் பொருந்தமறுத்து இருக்கின்ற ஒரு வீடு அது. நீளமான பெரிய இரும்புக் கதவு. தூண்கள் கொண்ட ஓட்டுவீடு. நூறு வருடங்களுக்கு மேல் பழமையானதா? நாற்சார் வீடு என்பார்களே. அதில் ஒருவிதம். வீட்டுக்குள் வெயிலும் மழையும் பெய்யும் கூரையமைப்பு. கூரையின் பற்கள் எல்லாம் கொட்டிக்கிடந்தது, எனினும் சிறிய வீடல்ல. பல கட்டுக்கள் இருந்தன. ஒரு காலத்தில் வீதியின் அரண்மனை போன்ற தோற்றத்தில் இருந்திருக்கக்கூடும்.

ஆள் நடமாட்டம் இல்லாமல் வீட்டை சுற்றிலும் நிலம் இருப்பது இந்த இடத்தில், அதுவும் இந்தக்காலத்தில் ஆச்சரியம்தான். சில மரங்கள் நின்றன. கொடியில் புடவைகள் சில காயப்போடப்பட்டிருந்தன. பராமரிப்பற்ற நிலம். புற்களும் சருகுகளும் காய்ந்துபோய்க் கிடந்தன. சாளரங்களையும் பழைய கதவுகளையும் ஒளிப்படம் எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் ஒன்று எனக்குண்டு. திரும்பிப் போகும் போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

என் வருகையை ஏற்கனவே அறிவித்திருந்ததால் இரும்புக்கதவின் சத்தம் கேட்டு ஒரு அம்மா வீட்டின் கோடியில் இருந்து வந்தார். அவர்கள் அத்தையென்றே அழைக்கப்பட்டு வந்தார்கள். நானும் அத்தை என்றே அழைத்தேன். எழுபது வயதிருக்கும். வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார். எனக்கோ வேறு ஒரு காலத்திற்குள் நுழைந்த பிரமை. இந்தக் கணம் மனம் ஆழப்பதிந்துவிடக்கூடியது என அந்தக்கணமே தோன்றியது. இதுவரை மனம் உற்சாகமாகத்தான் இருந்தது.இவ்வளவு நாள் காத்திருந்தேனே. யாரும் வரலையே. இப்போ வாறியே. உனக்காகத் தானே காத்திருந்தேன் என பக்கத்து அறைக்குள் இருந்து வந்த ஒரு குரலின் அதிர்வு என்னை ஒருவினாடி ஸ்தம்பிக்கச் செய்தது. கனவுலகில் தொங்கிக்கொண்டிருந்த என் கயிறு அறுபட கையில் வைத்திருந்த குறிப்புப்தாளை அங்கிருந்த ஒரு மர இருக்கையில் வைத்துவிட்டு அந்த மெலிந்தகுரலின் பக்கம் போனேன். கதவுகளும் சாளரங்களும் திறந்தபடி இருந்தன. எண்பது வயதிருக்கும். அதற்கேற்ற தோற்றம். கட்டிலில் படுத்திருந்தார். சிலநாட்களாக சுகயீனம் என்று அவர் தங்கை கூறினார். என்னைக் கண்டதும் சைகையால் அழைத்து தன் அருகில் பிடித்து வைத்துக்கொண்டார். இப்போது அந்த வீட்டின் இன்னொரு அறைப்பகுதியில் இருக்கிறேன். அது முற்றத்தின் சுவரோடு கூடிய அறை.

எழுந்து அமர அவர் எடுத்த முயற்சியெல்லாம் தோல்வியுற தனக்கு உணவு ஊட்டுமாறு கேட்டார். இந்த கணம்வரை அவர்களை யார் என்றே எனக்குத் தெரியாதுதான். ஒரு சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட இந்த நெருக்கம், இதற்காகத்தான் கடல் கடந்து வந்திருக்கிறேன் என நம்பத்தொடங்கிற்று. அப்போது எனக்கிருந்த உணர்வை நிச்சயமாக என்னால் எந்த மொழியிலும் எழுதிவிட முடியாது.
இந்த வீட்டின், இந்த மனிதர்களின் இருத்தலோடு ஏதோ தொடர்பிருக்கிறது. இரு மனிதர்களுடைய பெரும் உலகம் இது. எனது நினைவுகளில் ஒரு பனிகாலத்தைப்போல நுழைந்துகொண்டிருந்தது இந்த வீடு அவர்களுக்கேயான இந்த உலகமும். இதன் வருகை இனி தொடர்ந்துகொண்டே இருக்கும் போலும்

”நடனம் கற்றுக்கொள்கிறாயா அம்மா” என்று மெதுவாகக் கேட்டார். தன்னை எழுப்பி அமர்த்துமாறு கேட்டு, கட்டிலின் ஓரத்தில் என் கையைப் பிடித்தவண்ணம் எழும்பி அமர்ந்துகொண்டு என்னைப்பற்றிய பல கேள்விகளை கேட்கத் தொடங்கினார். கடைசியில் நான் கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் அவர் கேட்க, இதற்காகத்தான் வந்தேன் என்பது போல நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

-இந்தக்காலில் எனக்கு உணர்வில்லாமல் போய்விட்டதம்மா. நான் கடவுளிடம் இதை எதிர்பார்க்கவில்லை. கடவுளுக்கு நான் என்ன செய்தேன். இந்தக் காலை மட்டும் எனக்கு தரப்படாதா, என்ற அவர்குரலை இனி யாரும் கேட்க வேண்டாம்.

-நீ காலம் பிந்தி வந்திட்டியே. உனக்கு எதுவும் சொல்லித்தர என்னால் முடியவில்லையே, என்றவர் ஆற்றமையோடு தன் தங்கையை அழைத்து சில கீர்த்தனைகள் பாடினார். அவர்பாடும் போதே அவரது கண்களும் கைகளும் நடனலயத்தில் லயிக்கத் தொடங்கின. சற்றும் சுருதிப் பிசகில்லை. அமர்ந்தபடி நடனமாடினார். எல்லா அசைவுகளையும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறார். அவரது முகம் வெற்றிடமாகி இருந்ததேயொழிய அவர் எதையும் மறக்கவில்லை. முகமெங்கும் ஆற்றாமையின் கோடுகள்.

kavitha 3

பாடும்போதும் சரி தன்னைமறந்து அபிநயிக்கும்போதும் சரி அவர் முகத்தில் எழுந்த பரவசம் அவர் நடனக்கலையை எத்தனைதூரம் நேசித்திருக்கிறார் என்பதை காட்டியது. மங்கிக்கிடந்த அந்தக் கண்களில் ஒளி அப்பப்போ தோன்றிற்று. கலைக்குதான் எத்தனை சக்தி. ”நடனமாடினார”; சிவகீர்த்தனையில் தொடங்கி, ”சொல்லவல்லாயோ கிளியே” என்ற பதம் என அவரால் முடியாத போதும் தொடர்ந்து பாடினார். பாடிக்கொண்டு சில பாவங்களையும், நடன அசைவுகளையும் செய்துகொண்டே தனது பழைய ஒளிப்படங்கள் காட்டுகிறேன் என்றார். தன் தங்கையை அழைத்து, ரங்குப்பெட்டி என்று சொல்வார்களே அதை எடுத்துக் கொணரச்செய்தார். அதில் இருந்து பல ஒளிப்படங்கள், பத்திரிக்கைப் பிரசுரங்கள், நாட்டிய அழைப்பிதழ்கள் என அவருடைய வாழ்க்கை அதற்குள் அடங்கிப்போயிருந்தது. கடைசியில் இந்தப்பெட்டி சேகரித்து வைத்திருக்கும் தகவல்கள்தானா அவரது வாழ்க்கை? இந்த முதுமைதான் என்ன கோலம் செய்துவிடுகிறது. முதுமை என்பது வெறும் சுருக்கங்களும் நரையுமல்ல. இயலாமையும் அதன் தாக்கமும் உடலையும் மனதையும் ஆட்கொண்டுவிடுகிறது. இயற்கை மனிதர்களால் வெல்லக்கூடியதா என்ன?

அந்தப்பெட்டியையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஏதும் சொல்லாமல் வேறெதிலோ லயித்த மனத்தோடு கட்டிலில் படுத்துக்கொண்டார். தொந்தரவு செய்ய வேண்டாமென நானும் அருகில் வெறுமனே உட்காந்திருந்தேன்.

அங்கிருந்த அனைத்துமே பழங்காலத்துப் பொருட்கள். அனைத்துப் பொருட்களும் தமது முதுமையை இவர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தது. பழைய பொருட்களின் காடுபோல தோற்றமளித்தது எனக்கு. நான்கு தலைமுறை வாழ்ந்திருக்கக் கூடிய அந்த வீட்டில் முதலாம் தலைமுறையினரோடேயே காலம் நின்று போயிருந்தது போலும். கடிகாரமுள் ஒடுவதும் அதன் டிக்டிக் சத்தமும் அங்கு பொருத்தமற்ற ஒன்றாகத் தோன்றியது. எத்தனை பழையதானாலும் அந்த வீட்டில் கலைநயம் ஒட்டிக்கிடந்ததை மறுப்பதற்கில்லை. அங்கு கிடந்த பொருட்கள் எல்லாம் அருங்காட்சியகங்களில் இருக்கவேண்டியவைதாம். இந்த சுற்றுப்புறமே வேற்றுக்காலத்தின் இயைவுகளைக் கொண்டிருந்தன. புல்வெளி, பாதி அழிந்த சுவர்ப்பூச்சு, பக்கத்தில் இருந்த மரப்பெட்டி, தளபாடங்கள் எல்லாம் அழகுதான். இந்த மனிதர்களைப்போலவே தமது அடையாளம் தெரியாமல் உருமாறிப்போயிருந்தாலும் அதன் கலையை எதுவும் இழந்துவிடவில்லை. இந்த சமூகம் இழந்துவிட்டிருக்கிற பொக்கிசங்களில் ஒன்றென இவைகளையும் கொள்ளவேண்டியதுதான் போலும்.

கோயில் கல்வெட்டுகளில் பெயர் பொறிக்கப்படும் அளவு அன்று ஒரு காலத்தில் தேவரடியார்ச் சமூகத்திற்கென்று அந்தஸ்து இருந்தது. பொருளாதார நிலை மேம்பட்டதாக இருந்தகாலம் அது. அக்காலத்தில் தேவரடியார்ச் சமூகத்தினர் மரியாதைக்குரியவளாக இருந்திருக்கிறார்கள். கலைஞர்கள்தான் தேவரடியார்கள் எனவும் அழைக்கப்பட்டனர். மனிதர்களின் கடவுளை நோக்கிய பயணத்தில் அனைத்து ஆன்மாக்களுக்குமான குறியீடுகளாக தேவரடியார்கள் முன்னிறுத்தப்பட்டனர். அவர்கள் வெறும் நர்த்தகிகளாக அல்லாமல் கடவுளை அடையும் மார்க்கத்திற்கான மக்களின் பிரஜையாகவும் இருந்தனர்.

தேவரடியார்களிடமிருந்த கலையை எடுத்து பரதத்தைப் புனிதப்படுத்தலின் மூலமே மக்களிடம் கலை போய்சென்றதென்ற வரலாற்றை நாம் பெருமைபட கூறிக்கொள்கிறோம். பரத்கலையை பல காலங்களினுடாகக் கடத்தி இன்று புனிதமெனப்போற்றப்பட எம்மிடம் சேர்த்த கலைஞர்கள் தேவரடியார்கள்தாம். தேவரடியார் மரபிற்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டபோது திரையுலகம் பேசும்படங்களின் ஊடாக இவர்களை உள்வாங்கிக் கொண்டது. தேவரடியார்கள் இசையிலும், நடனத்திலும் திறமைவாய்ந்தவர்களாக இருந்ததினால் இச்சமூகத்தினரே திரையுலகிலும் முன்மாதிரியாக திகழ்ந்தனர். முக்கியமாக பெண்கலைஞர்களின் முதல் திரையுலக வருகை இவர்கள்தாம். இவர்கள் முலமே பரதம் என்ற கலையும் மக்களை பரந்த அளவில் சென்றடைந்தது என்பதை இக்காலத்திலும் யாரும் மறுக்க இயலாது. திரையுலகம் மக்களிடம் ஏற்படுத்துகின்ற பாதிப்பு இன்றுவரை உள்ள ஒன்றுதானே. தேவரடியார்களின் திரையுலக வருகைதான் தமிழ்ப்படங்களை இன்றும் இசைக்கும் பாடலுக்கும் முக்கியத்துவம் தருபவையாக ஆக்கிவிட்டனவோ என்றும் தோன்றுகிறது. எஸ்.பி.எல்.தனலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என திரையுலகின் ஆரம்பபகுதியின் முக்கிய ஆளுமைகளாக தேவரடியார் மரபினரே விளங்கினர். இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கலைஞர்களின் மரபுவழிவந்த அத்தைமாரைச் சந்திக்கக் கிடைத்தது என் வாழ்வில் அரியதொரு விடயம்.

தனி மனிதனதோ அல்லது ஒரு சமூகத்தினதோ பொருளாதாரம் எப்படி ஒட்டுமொத்த மனிதசமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்குமான காரணமாகிவிடுகிறதோ அதே போலத்தான் தேவரடியார் மரபினரும் சமூகத்தின் வர்க்கப்பிரிவினைக்குள் சிக்குண்டு சிதைந்து போகத்தொடங்கியதன் சான்று இவர்கள். வரலாற்றின் சான்றாக, ரணங்களை மனதிலும் உடலிலும் தாங்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உயிராக என் அருகில் அத்தை படுத்திருக்கிறார். இறுக என் கைகளைப்பற்றியவாறு…

– நீ இந்த கலையை விட்டிடும்மா. கஸ்டப்பட்டெல்லாம் உழைக்காதே. இந்த கலையால உனக்கு எந்த பயனும் இருக்கப் போறதில்லை. உன் மகனை நல்லா பாத்துக்கம்மா. வைத்தியமோ, வக்கீலோ படிக்கவை. அவனையும் இந்தக்கலைக்குள்ள இழுத்துப் போட்டிடாத. இந்த சமூகம் நம்மள மாதிரிக் கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யாது. செய்திருந்தா நான் இப்படி இருந்திருப்பேனா? பாரு.. யாரும் இல்லாமல் இப்படி தனியா கிடந்து புலம்புறன். உனக்கும் என்னைமாதிரி நிலை வேணாம். நான் என்ன செய்யட்டும். பணம்தாம்மா முக்கியம். இந்தக்கலையை வச்சு முடிஞ்சவரைக்கும் சம்பாதிச்சுக்கோ. எல்லாரும் உன்னை அவங்க அவங்க தேவைக்கு பாவிச்சுகொள்வாங்க. இந்த சமூகத்திற்கு அது பண்ணுறேன் இது பண்ணுறேன்னு கிளம்பாத. நான் அப்படிதான் இருந்தேன். இப்போ பார்த்தியா என் நிலைமையை.
எவ்வளோ கேட்க வேணுமோ கேட்டாச்சு. படவேண்டியதெல்லாம் பட்டாச்சு. எங்கள எல்லாம் இந்த அரசாங்கம் கூப்பிட்டு கொன்று போட்டிருக்கலாம் இப்படி கொஞ்ச கொஞ்சமா சாவடிக்கறதுக்கு பதிலா. எங்க அப்பா எப்ப போய் சேர்ந்தாரோ அப்பவே நாங்களும் போயிருக்கணும். அவர்கூடவே எல்லாம் போயிரிச்சும்மா…

– ஏன் அத்தை நீங்க திருமணம் செய்துகொள்ளவில்லை? வாழ்வில் ஒரு துணை இருந்திருக்குமே என்று கேட்க வேண்டும் போல இருந்தது. அந்த கேள்வி எப்படிப்பட்ட மனநிலையை அவர்களுக்கு உருவாக்கும் என்று தெரியவில்லை. அல்லது அந்தக் கேள்வி இப்போது கேட்பது சரியா தவறா தேவையா என்றுகூடத் தெரியவில்லை. அதை ஆராய்ந்து கொண்டிருக்க அப்போது தோன்றவும் இல்லை. இப்படிப் பல கேள்விகள் என் தொண்டைவரை வந்து பாதியிலேயே நின்று போனது. இத்தனை ரணக்காயங்களோடு படுத்திருப்பவரை எனது பேச்சு கலவரப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமெடுக்கத் தொடங்கியிருந்தேன். அதனால் நானாக எதுவும் கேட்பதைத் தவிர்த்து, என் சுபாவத்தை மீறி அன்று அவர் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார்..

வேற எதுக்கோ சேர்த்து வைச்சிருந்த பணத்தை எடுத்துத்தான் இப்போ இந்த வைத்தியச் செலவுக்கு ஆச்சு. நான் திரும்ப திரும்ப சொல்லுறேன்னு நினைக்காத. இந்த கலையை விட்டிடு. இது நமக்கு சோறுபோடாது. அனுபவத்தில சொல்றேன்… என்று சொன்னதையே திரும்பத் திரும்ப வேறு வேறு விதமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஆனாலும் தனது கருத்தில் அத்தனை அழுத்தம். அத்தனை வலி. எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து ஒரு காயப்பட்ட மனசுக்காரியின் முழுஉருவமாகத் கிடந்தார். ஒளவை சொன்னது போல, அதனிதும் கொடுமை முதுமையில் தனிமை! ஆனால் முதுமை யதார்த்தம். ஒவ்வொரு மனிதனும் கடந்து செல்லவேண்டிய இடம். நமது கடவுளர்களுக்கே காதல், காமம், உறவு, குடும்பம் எல்லாம் தேவைப்படும்போது, இவர்கள் இவையனைத்துமின்றித் தாண்டிவர கடவுளுக்கும் மேலானா மனத்திடம் உரியவர்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும். தமது வாழ்வை மட்டுமன்றி மற்றவர்களுடைய வாழ்வையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பது பேச்சிலும் தெரிந்தது.

இந்தச் சோகம் எனக்குப் புரிகிறதா? உங்களுக்குத் தன்னும் புரிகிறதா? ஒருவேளை புரிந்துகொண்டால் இனி நாம் செய்யவேண்டியது என்னவாக இருக்கும்?

நான் உறங்கப்போகிறேன் என்றார். சரி உறங்குங்கள் என்று எழுந்தேன். பற்றிய கையை விடவில்லை. மீண்டும் அருகில் அமர்ந்துகொண்டேன். அவருடைய தங்கை பழைய இரும்புப்பெட்டியுடன் வந்தார். அதிலிருந்த பழைய துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள் அழைப்புகள் அனைத்தும் அத்தை அன்றிருந்த நிலையை எடுத்துக்காட்டியது. இளமையும் அழகும் கலையும் சேர்ந்த புகைப்படங்கள். அவரா இவர் என்று திரும்பி முகத்தை உற்றுப்பார்க்குமளவு முதுமை ஆக்கிரமித்திருந்தது. சிறய அத்தையின் அனுமதியோடு பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.

-தாராளமாக எடுத்துக்கொள், எங்களிடம் மிஞ்சிக்கிடப்பது இது மட்டும்தான், என்றார்.

நான் புறப்படத் தயாரானபோது வாசல் வரை வந்தார். வரும் போதே-நாங்கள் வெளியே கூடப்போவது கிடையாதும்மா. ஏதும் அவசரம் என்றால் மட்டும்தான். இல்லாட்டி இந்த வீடுதான்னு இருப்போம், என்றவரிடம் ஏன் என்று கேட்கப்பிடிக்கவில்லை. எனது பார்வையிலேயே அந்தக் கேள்வியைக் கண்டுகொண்டாரோ என்னவோ. அவரே தொடர்ந்தார்.

-எங்க அப்பா போனதில் இருந்து ஆடுறது நிறுத்திட்டோம். வெளில போறதும் குறைஞ்சு போச்சு. வெளில எங்களப் பார்த்தாலே தப்பா பேசுரா. நாங்க எப்படி இருந்தாலும் குலம் என்று ஒன்று இருக்குதானே. என்ன பண்ண சொல்லு. ஆனா நாங்க ஒன்னுக்கு ரெண்டு மணிமேகலை போல அம்மா.. அந்த மணிமேகலைமாதிரிதான் வாழ்ந்திட்டு இருக்கோம், என்று சொல்லும் போது அவருடைய முகத்தில் ஒரு திடமும் வைராக்கியமும் நின்றது.

-நீ அக்கா சொன்னதெல்லாதையும் மனசில வைச்சுக்காத. அது வலியில் அப்படி சொல்லுது. நீ தொடர்ந்து ஆடு. ஆனா உன் வாழ்க்கையில கவனமா இருந்துக்க. பணம் சேர்த்து வைச்சுக்க. இங்க வரும் போது முடிஞ்சா எங்ககிட்ட வந்து பாரு. எங்களுக்கு வேற என்னம்மா சந்தோசம். அங்க இருந்து எங்களை வந்து பார்க்கணும் என்று தோணிச்சே அது போதும், என்றபடியே வழியனுப்பி வைத்தார்.

உறவுகளும், மனிதமும் பொய்த்து போய்விடுகின்ற உலகத்தில், ஒரு தனிமனிதனுக்கோ, ஒரு சமூகத்திற்கோ வாழ்வில் நம்பிக்கையைத் தரக்கூடியது பொருளாதாராம்தான். சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த அடிப்படைத்தேவையில் மாற்றம் வராமல் எதுவும் நிகழாது. ஆனால் இந்தத் தனிமை… தனிமையினுடைய திகைப்பு எழும்போதெல்லாம் வாழ்வு நம்மை மட்டும் ஒதுக்கிவிட்டதாகக் தோன்றுகிறது.

உண்மையாக நான் இந்தச் சூழ்நிலையையா எதிர்பார்த்து வந்தேன். இல்லையே. நடனத்தில் அன்றும் இன்றும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும், முதிர்ந்த ஒரு நடனக்கலைஞரின் மனதையும் அறிந்து போகத்தானே வந்தேன். உண்மையில் என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. ஒருசில மனிதர்களை வாழ்வில் சந்திப்பது என்பது நாம் பல ஆண்டுகள் வாழ்ந்ததிற்கான அனுபவத்தை சில மனிநேரங்களில் தந்துவிடுகிறது. அந்த வீட்டின் கதவைத்தாண்டும் போது நானே வேறு யாரோ போலாகி வருவது போல் உணர்ந்தேன். அரைநூற்றாண்டுகளுக்கு மேலான காலத்தில் இருந்த கால்கள் நிகழ்காலத்திற்கு வரும் போது மனம் பலவீனமடைந்து விடுகிறது. இவ்வெழுத்தும் ஆழப்பதிந்த திகைப்பின்; வடுவே தவிர வேறொன்றும் இல்லை. நவீன தொழிநுட்பம் தவிர இந்தக் கால இடைவெளியில் நிகழ்ந்ததும் எதுவுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *