பேரரசியம்

  ஜமாலனின் முகநூலிலிருந்து நன்றி ஜமாலன் 
தோழர் சிவ. செந்தில்நாதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்து வெளிவந்துள்ள இடைவெளி இதழில் கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் ”பேரரசியம்” என்ற ஒரு அருமையான தற்கால அரசியலை கதையாடலாக்கி பேசும் கவிதை ஒன்று வெளிவந்துள்ளது. 
kuttyrevathy
 idaiveliபுதிர்ச்சுழல் வழி தேசம்

வால் முளைத்த ஆண்களும்
அவர்கள் வால் அணிவித்த பெண்களும்
வால் பூணூலால் ஆனது
பூணூல் தந்திரங்களை
சூழ்ச்சிகளைத் திரிக்கும்
பல்லாயிரம் ஆண்டுக்கயிறு

என்றுத் துவங்கும் அக்கவிதைக்கதையில் பூணூல் வால் முளைத்த அரசியும் அவரது வாலுக்கு எண்ணெய் பூசும் தோழி ரிரியும்….. எனத் தொடரும் அக்கதையில் பேரரசியை பூணூல் சதியால் மெல்ல கொல்லும் நஞ்சால் கொன்று.. ரிரிக்கு பூணூல் வால் முளைக்கும் கனவை நிறைவேற்ற…. இப்படியாக கதை தொடர்கிறது.

சமீபத்தில் வாசித்த மிக முக்கியமான அரசியல் கவிதை இந்த பேரரசியம். குறிப்பாக இந்த தலைப்பு என்னை கவர்ந்தது காரணம். The Empire என்ற மைக்கேல் ஹார்டட் மற்றும் ஆண்டனியோ நக்ரியின் முக்கியமான அரசியல் கோட்பாட்டிற்கு ஒரு தமிழ் பெயர் வைத்தால் அது பேரரசியம் ஆகத்தான் இருக்கும்.

இந்த பேரரசியம் என்ற சொல்லிற்குள் இந்திய மனுவாத பூணூல் ஆதிக்க அரசியல் முற்றிலும் அடங்கியுள்ளது. சாணக்கியன் உருவாக்கிய மௌரியப் பேரரசுத்துவங்கி சமீபத்திய அம்மா பேரரசுவரை சாணக்கியர்களின் சதித்திட்ட அரசியல் ஊரறிந்ததே. (சந்திர-நந்தினி என்ற தொடரும் தொலைக்காட்சியில் வருகிறது என்பது துணைச் செய்தி.)

வேதகாலத்தில் விஞ்ஞானம் இருந்ததா இல்லையா என்ற சர்ச்சையே தேவையில்லை. உலகிலேயே பூணூல் என்கிற நெட்வொர்க் உருவாக்கி இன்றுவரை அது அப்கிரேட் ஆகி வருகிறது என்றால் சும்மாவா? இக்கவிதையில் அந்த பூணூல் அரசியல் என்பது வால் முளைத்த அனுமார் குறியீட்டைப்போல வந்து போவது கவிதையின் வாசிப்பை அதிக சுவராஸ்யமாக்குகிறது.

கவிதை இப்படி முடிகிறது..

பேரரசிகளின் வரலாற்றை
எழுதுவது
குறுவாள்களின் துரோகங்களே
என்ற நாட்குறிப்பைக் கைப்பற்றினர்
கிகியும் முமுவும்.

கவிதை வரலாற்றில் வரும் எதிர் பாத்திரங்கள் இந்த கிகியும் முமுவும்.

கவிஞர் குட்டி ரேவதியின் அரசியல் மற்றும் பெண்ணியக் கவிதைகள் தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் குறிப்பிடப் படவேண்டிய முக்கியத்துவம் கொண்டவை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *