ஆளண்டாப்பட்சி [Aalandaapatchi]

 

alandapatchiதேவிகா கங்காதரன் ஜேர்மனி –என்னுடன் பேசும் புத்தகங்கள்

பெருமாள் முருகன் எழுதிய புத்தகம்.
கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்பந்தத்தால் விடுபட்டு இடம் பெயர்ந்து வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை இது.இடப்பெயர்வுகள் இடம் பெறாத வாழ்க்கையில்லை .அதில் கிடைக்கும் வலியும், துன்பமும் ஓரிடத்தில் நிலை கொண்டாலும் எளிதாக மறைந்து போகுமா என்ன.?இந்த இடப் பெயர்வுகள் தரும் புதிய அனுபவங்களும் மனவிசாலமும் இந்தக் கதையை நகர்த்திப் போகிறது.
விவசாயக் குடும்பமொன்றில் கடைசிப் பையனான முத்தண்ணன்.மூன்று அண்ணன்கள், இரண்டு அக்காக்கள்.அவன் மேல் தீராப் பிரியம் கொண்டு அவனை நடக்கவே விட்டதில்லை.கல்யாணமாகிப் போன பின்னும் வார்த்தைக்கு வார்த்தை எங்க முத்தண்ணன் என்று அவனை பிரியத்தில் குளிப்பாட்டினார்கள்.அப்படி ஒற்றுமையாய் இருந்த குடும்பத்தில் ஒவ்வொருக்காய் கல்யாணமாகிக் குடும்பம் நிறைந்த போது கொஞ்சம் கொஞ்சமாய் பிரச்சினை வந்தது .அது பின்னர் பிரிவினையாகி ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாதவராய் ஆக்கி விட்டது.

குடும்பம் இப்படிப் பிரியும் என்று முத்தண்ணன் நினைத்துப் பார்த்ததேயில்லை.அந்த அறுபடல் அவனுக்குத்தரும் ஆறா ரணம் கதை முழுக்க காணக் கிடைக்கிறது.
காணி,நிலம் காடு கரை எல்லாத்தையும் அப்பன் எல்லாப் பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்.பங்கு பிரிக்கும்போது அவர்கள் வழக்கப்படி பெரியவர்கள் பங்கு வைப்பார்கள் மூத்தவர்களுக்கு ஏற்றுக் கொள்கிற, ,நிராகரிக்கிற உரிமையுண்டு.கடைசியான் உரிமை பாராட்ட முடியாது.வாய் மூடிக் கொடுக்கிறதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.பள்ளத்து நிலம் ஒரு ஏக்கரும்,ஐநூறு ரூபா பணமும் ,வண்டியும்,எருதுகள் இரண்டும் முத்தண்ணனுக்குக் கிடைத்தன.பங்கு பிரித்த அடுத்த நாளே அவன் மனைவி பெருமா பிள்ளைகளையும் கொண்டு அவள் அம்மா வீட்டுக்குப் பொய் விட்டாள்.
தூக்கி வைத்துக் கொண்டாடிய உறவுகள் பிரிந்த சோகத்தில் மேலும் பிரச்சனைகள் வளரவே தான் முளைத்து வளம் உறிஞ்சி வளர்ந்த அந்த மண்ணைப் பிரிந்து செல்லத் தீர்மானிக்கிறான்.மாமியார்க்காரி சண்டை வந்த போது ” ஆளண்டாப்பட்சியாட்டம் ஒராளக் கூட பக்கத்திலே சேர்க்க மாட்டா.எங்கடா மனுசஞ்சதைன்னு சொல்லுலயே சதையைக் கொத்தி எடுத்து முழுங்கீருவா” , “சோத்துல விஷம் வைக்கக் கூட அஞ்ச மாட்டா” ,என்று திட்டி விடுகிறாள்.தன் மூத்த மகனின் கீழ்த்தரமான செய்கையை நியாயப் படுத்தும்அளவுக்கு மருமகள் மேல் வெறுப்பு. சொந்தக்காரர்கள் எட்டிப் பார்க்காத தொலைவில் குடியேற வேண்டும் என்பது பெருமாவின் விருப்பம். முத்தண்ணனுடன் துணையாக மாமனார் வீட்டுக் குடிமகன் குப்பன் செல்கிறான்.

பிறந்தது முதல் குப்பனும் மண்ணோடு உழலும் உயிர்தான்.செடி,கொடி,மண், பயிர்,பச்சையின் நுட்பங்களைப் போகிற போக்கில் சொல்லுவார்.வண்டியைப் பூட்டிக் கொண்டு இருவரும் இடப் பெயர்வுக்கு நல்ல விவசாய நிலம் தேடி சென்று அதில் வெற்றி பெறுவதையே இக்கதை விபரித்துச் செல்கிறது.எதிர் பாராத நேரத்தில் கதையை முடித்து விடுகிறார் பெருமாள் முருகன்.கிணறு வெட்டி , காட்டைத்திருத்தி வெள்ளாமை வைத்து, கொட்டாய் ஒன்றைப் போட்ட பின் மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வந்து விட வேண்டும் என்று அவன் படும் பாடு.இவ்வளவு பாட்டிலும் அவன் தன் மாடுகளை பாசமாகப் பார்த்துக் கொள்ளும் பக்குவம், உழவனுக்கும் மாட்டுக்குமுள்ள பிணைப்பைக் காட்டுகிறது.விவசாயி சோற்றுக்கு அரிசி இல்லையென்றாலும் கவலைப் படமாட்டான்.மாட்டுக்கு வைக்கோல் இல்லையென்றால் தூங்க மாட்டான் என்கிறார் பெருமாள் முருகன்.மாடுகளும் சும்மா இல்லையாம் புல்லோ,தண்ணீரோ ஒரு குறிப்பிட்ட சுவைக்குப் பழகிய நாக்கு வேறொரு ருசியை ஏற்றுக் கொள்ள நாட்கள் ஆகுமாம். நகர வாழ்வில் நாம் காணாத இயற்கையின் பல நுட்பங்களைத இந்தப் படைப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.ஆளண்டாப்பட்சி,இப்படி ஒரு பட்சியைப் பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை.மனிதர்களை அண்ட விடாதவை மட்டுமல்ல ,மனிதர்களை உணவாகவும் கொள்ளுமாம் இவைஅண்டரண்டப்பட்சி என்று சிந்துபாத் கதையில் வரும் ஏழு கடல் ஏழுமலை தாண்டிச் சென்று காரியங்களைச் சாதிக்க உதவும் பறவை இது என்பது நினைவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *