மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளத்தூர் கமிட்டி செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் ஹேமா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
திருநங்கைகள் தருநம்பிகள் என்று அழைக்கப்படும் திருநர் சமூகம் குறித்து மனிதநேயப் பார்வையை உருவாக்கும் விதத்தில் மட்டுமல்ல சமத்துவ சமூகம் உருவாக ஏற்ற பார்வை மாறுதல் தேவை என்பதை வலியுறுத்தும் விதத்திலும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
சமீபத்திய எனது ரயில் பயணத்தின் போது கையேந்தி வந்த திருநங்கையைப் பார்த்த ஒரு பதின்பருவ சிறுவனின் ஏளனப் பார்வையை நினைத்துப் பார்த்த போதுஇவர்களுடன் தயக்கமின்றி கலந்து பழகிய அனுபவங்களை நமக்கு உரையாடல் வடிவில் அளித்துள்ள இந்நூலாசிரியரின் செயலின் மேன்மையை நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.
அரவாணிகள் என்ற நூலில் டாக்டர் ஷர்மிளா இவர்களின் பிறப்பு குறித்த பல விசயங்களைத் தெளிவாக எழுதியிருப்பார்.அவை அனைத்தும் பாடநூலில் இடம் பெற்று சாதாரண மக்கள் தெளிவு பெற உதவினால் மட்டுமே குடும்பங்கள் இதை உணர முடியும்.
அப்போது தான் தன் வயிற்றில் பிறந்த குழந்தையின் மாற்றம் குறித்து தாய் தெளிவாய் உணர முடியும்.ஆணின் கௌரவம் காத்தலே குடும்ப கௌரவம் காத்தலின் மையமாக உள்ள சமூகத்தில் தன்னைப் போல் ஒரு உயிர் அதன் உடல் மற்றும் மன எழுச்சியை ஆதிக்க உணர்வின்றி சமூகம் புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.
அத்துடன் அனைத்து பகுதி மக்களின் பிரச்சினைகளையும் புரிந்து கொண்டு சட்டம் இயற்ற வேண்டிய அரசாங்கமே இன்று திருநர் நலனுக்கு விரோதமாக சட்டம் இயற்றும் போது நடைமுறை வாழ்வில் பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையும் இவர்களை தவறாக கையாள்வதே அனுபவமாகிறது.இது போன்ற பற்பல விசயங்களை அறிந்து அவற்றை விவாதித்து புரிந்து கொள்ள இது போன்ற படைப்புகள் மிகவும் அவசியமாகிறது.
எளிய நடையில் உள்ள இந்த புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
வாங்குவோம் வரவேற்போம் !

