“என்னை மிகவும் தொந்தரவு செய்த புத்தகம்”- புதியமாதவி

“நீ அழும்போது அவர்கள் கேட்டார்களா..? = DO THEY HEAR YOU WHEN YOU CRY ” என்ற புத்தகம் 1999 களில் நான் வாசித்தப் புத்தகம். இப்போதும்

அந்தப் புத்தகத்தின் அதிர்வுகள் வெவ்வேறு அலைகளில் பல்வேறுதருணங்களில் என் மறுவாசிப்புக்குள்ளாகிறது. பவ்ஷியா கசின்ட்ஜா(FAUZIYA KASSINDJA) எழுதிய சுயசரிதை. ஆப்பிரிக்க மண்ணில்டோகா வில் பிறந்து வளர்ந்தவள், தன் 17வது வயதில் நான்காவது மனைவியாக அலங்கரிக்கப்பட்டிருந்த தருணத்தில் தன் சகோதரியின் உதவியுடன் நள்ளிரவில் ஆப்பிரிக்காவை விட்டு தப்பி ஓடுகிறாள். ஜெர்மன்வழியாக (அமெரிக்கா )- யு,எஸ்.ஏவில் நுழையும் போது இமிகிரேஷன் அதிகாரிகளால் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் இருக்கிறாள்.

சிறைச்சாலைகளும் சிறைச்சாலை கொடுமைகளும் உலகமெங்கும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. நிர்வாணமாக நிறுத்தும் அதிகாரிகள், அமெரிக்க குளிரில் குளிர்ந்த நீரில் நிர்வாணக் குளியல், மாதவிலக்கின் போது கூட மாற்றுத்துணி கொடுக்க மறுக்கும் பெண் அதிகாரிகள்.. இவர்களுக்கு நடுவில் என்றாவது தங்களுடைய வழக்குநிதீமன்றத்திற்கு வரும் என்றும் நீதிபதியின் முன்னால் தங்கள்கோரிக்கையை வைக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் பலமாதங்கள் சிறையில் தவிக்கும் பெண்கள்..

. ஆப்பிரிக்க மண்ணில் அதிலும் குறிப்பாக இசுலாமியர்களிடன் திருமண உறவுக்கு முன் பெண்ணுக்கு நடத்தும் ஒரு சடங்கு CIRCUMCISION என்றழைக்கப்படும் .FEMALE GENITAL MUTILATION என்பார்கள். அதாவது பெண்குறி மூலமும் (CLITORIS) யோனியின் உதடுகளும் (LABIA) சிதைக்கப்பட்டோ முழுமையாக துண்டிக்கப்பட்டோ சிறுநீர் கழிக்கவும் மாதவிடாய் ரத்தப் போக்கிற்கு சிறுதுவாரமும் விட்டு பெண் உறுப்பைச் சிதைக்கிறார்கள்.

கத்தி, கத்திரிக்கோல், துருப்பிடித்த ப்ளேடு, உடைந்தக் கண்ணாடிதுண்டுகளையே ஆயுதங்களாகக் கொண்டு இச்சடங்கை நடத்தும்கொடுமை.வேறு. இச்சடங்கை செய்வதன் மூலம் அப்பெண்ணின் பாலுணர்ச்சி மட்டுப்படுத்தப்படுவதுடன் அவளுடைய “கன்னித்தன்மை” “கற்பு”இத்தியாதி சமாச்சாரங்கள் பாதுகாக்கப்படுவதாக இப்போதும் நம்புகிறார்கள்!இன்றைக்கும் உலகில் 150 மில்லியன் பெண்கள் இந்தக் கொடுமைக்குள்ளாகிஇருக்கிறார்கள். இந்தச் சடங்கு செய்யாத பெண்ணைத் தூய்மையற்றவள் என்று சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இந்தச் சடங்கு செய்யும் நாளில் தான் பவ்சியா இரவோடு இரவாக ஓடி வருகிறாள். இக்கதைக்கரு ஒரு பெண்ணின் சுயசரிதையை ஒரு சமூகத்தின் சுயசரிதையாக மாற்றிவிடுகிறது.

பவ்ஷியாவின் உண்மைக்கதை ஏப் 1996 நியுயார்க் டைம்ஸில் கவர் ஸ்டோரியாக வெளிவந்தவுடன் அங்கிருக்கும் பத்திரிகைகள் , தொலைக்காட்சி ஊடகங்கள் பெண்ணுரிமையை,மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமையை, இக்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடிவந்த பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. விளைவு.. அமெரிக்கா அரசு தன் கொள்கையில் திருத்தங்கள் செய்கிறது. பவ்ஷியாவுக்கு விடுதலை. அகதியாக அடைக்கலம். பவ்ஷியாவின் கதையைப் புத்தகமாகக் கொடுத்திருப்பவர் லைலி மில்லர் பஷீர். பன்டெம் புக்ஸ் (BANTAM BOOKS) வெளியிட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *