நன்றி பெண்மொழி இதழ் 4 லண்டன் 2024
உலக அளவில் பெண்கள் மீதான சக்திவாய்ந்த ஒடுக்குமுறைக் கருவியாக பாலியல் வன்முறை காணப்படுகிறது. சமூக அமைப்பில் பெண்களுக்கு மட்டுமென்ன மூன்று வயதோ அதற்குக் குறைந்த வயதோ உள்ள பெண் குழந்தைக்குக்கூட பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகிறது என்பதை அண்மையில் மன்னாரில் பாலியல் வன்முறை செய்யப்பட்ட 10 வயது பெண் குழந்தையின் மரணம் கூறி நிற்கின்றது.
வீட்டில்; வெளியில், பணியிடங்களில்,பாடசாலைகளில்; என எல்லா இடங்களிலும் பெண்கள் துன்புறுத்தலுக்கோ கொடுமைக்கோ ஆளாகும் பயங்கரம் தொடர்கின்றது.
ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்னென்ன காரணங்கள் இதன் பின்புலத்தில் உள்ளன. எப்படி இவற்றைத் தவிர்க்கலாம், தடுத்துநிறுத்தலாம் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய கட்டாயத்திற்கு ஒவ்வொருமுறையும் தள்ளப்படுகின்றோம்.
பாலியல் வன்முறைகளை கேள்விப்படும் போது பெண்களும் பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் இக்கொடிய பிரச்சினையை தீர்க்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கலாம். அவைபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தெரிவுசெய்து ஆய்வுகள் நடத்தினால் பிரச்சினைகளின் அடிப்படை குடும்ப அமைப்பின் முறையான நெறிப்படுத்தலில் ஏற்படும் குறைபாடுகளில் இருந்தே முளைவிடுகின்றது என்ற நிலையிலிருந்து நாம் தீர ஆராயவேண்டியுள்ளது அடிப்படையான மனநிலை மாற்றம் என்பதும் முதன்மையானது.
ஒரு புறம் நுகர்வு கலாச்சாரம் பாலியல் வன்முறையை தூண்டி விடுகிறது. ஆபாச சினிமா இணைய வெளியெங்கும் பரவிக்கிடக்கும் ஆபாசத் தளங்கள் தெருவெங்கும் திறந்துவிடப்பட்டிருக்கும் மது போதைப்பொருள் தொழில் நுட்ப வசதிகள் குறிப்பாக கையடக்கத் தொலைபேசி ஊடகங்கள் போன்றவற்றினால் பாலியல் வக்கிரங்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக தற்போது முன்வைக்கப்படுகின்றன. பெண்களை வெறுமனே போகப் பொருளாக அல்லது உடம்பை மையப்படுத்திய பாலியல் பண்டமாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல் பரவலாவதற்கும் மனிதர்களுக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிடுவதிலும் மேற்படிக் காரணங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன என்பதில் ஐயமில்லை.
என்றாலும் இந்த வெளிக் காரணிகளுக்கு அப்பால் இதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஓர் அகக்காரணியும் உண்டு என்றே நான் கருதுகின்றேன். இன்னொரு வகையில் சொல்வதானால் மேற்சொன்ன காரணங்களின் தூண்டுதலுக்குள் சிக்கி, பாலியல் எனும் நோயினால் பீடிக்கப்படாமல் தற்காக்கக்கூடிய எதிர்ப்புச் சக்தி ஒவ்வொரு வீட்டிலும் சரிவர ஊட்டி வளர்க்கப்படாமையும் ஒரு காரணம்தான் எனலாம்.
அடுத்த தலைமுறை உருவாக்கத்தில் ஆளுமைகளை உருவாக்கும் பள்ளிக்கூடமும் கூட ஒழுக்கச் சீர்கேடுகளும் அதன்விளைவுகளும் பற்றிய ஒரு விவாத சூழலை ஏற்பத்த முனைய வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் அச்சுறுத்தல் பலவந்தம் பாலியல் துஸ்பிரயோகம் என்பன உள்ளடங்கலாக உடல் உள மற்றும் பாலியல் அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் கருத்துக்களை விளங்கப்படுத்த வேண்டும். வன்முறைகளுக்கெதிரான கடுமையான சட்டங்களை பாராளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும்.
எல்லாச் சமூகங்களிலும் பெண்களும் சிறுமிகளும் உடல,; உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக மீண்டும் மீண்டும் செய்திகள் வந்து கொண்டேதானிருக்கின்றன. மன்னாரில் 10 வயது சிறுமியை 55 வயது ஆண் பாலியல் வன்முறை செய்தார் என்ற செய்தியை எழுதி நாமும் கடந்து செல்கிறோம் அதற்காக பெண்கள் அமைப்புக்கள் கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்பது வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம்
பெண்கள் எப்போதெல்லாம் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம், பெண்களின் உடை குறித்த அறிவுரைகள் நாடு முழுவதுமுள்ள சமூக காவலர்களிடமிருந்து வழங்கப்படும். இச்சமூகம் பெண்ணின் உடல்மொழியைக் குறித்து ஓர் அநாகரிகமான பிம்பத்தை வைத்திருக்கிறது.
பெண்களிற்கு எதிரான வன்முறைகளை வெறுமனே சட்டம், ஒழுங்கு, நீதி, என்பவற்றால் நிறுத்தி விட முடியாது. ஓரளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகம் நிலவுகிற நாடுகளிலே கூட சட்டங்களினாலே பாலியல் குற்றங்களை குறைக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை. பெண்களை போகப் பொருளாக நுகர்வுப் பண்டமாக மட்டும் சித்தரிக்கும் வணிகக் கலாச்சாரம், முதலாளித்துவ பொருளாதாரம் இருக்கும் வரை அவள் விடுதலையாக முடியாது.
அவளை சமமற்றவளாக நடத்தும் மதங்களை உடைக்காமல் அவளால் பாலியல் உரிமை, தனியுரிமை விடுதலை கூட பெறமுடியாது… பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுவதும் மரணத்தில் வாழும் நிலைதான்… சமூகம் மீண்டும் மீண்டும் அவர்களை தமது ஆண்நோக்கினுள் வீழ்த்துகிறது. பெண்களை உடல் உள ரீதியில் பாதிக்கும் இப்பிரச்சினையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வரவேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத் தேவைகளோடு மட்டும் குறுகிவிடாமல் சமூகத்தின் ஆணதிகாரக் கருத்தியலுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டங்களும் தேவையும அவசியம். பெண்கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
25-2-2024

