பெயரிடாத நட்சத்திரங்கள் …பற்றிய விமர்சனம் – மாதவி சிவலீலன் – லண்டன்

ஊடறு விடியல் வெளியீடாக 2011 இல் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த நூல் பெயரிடாத நட்சத்திரங்கள். களத்திலே ஆயுதமேந்திய இப்பெண்களின் அபிலாசைகள், எண்ணங்கள், ஏக்கங்கள், மண் மீதும் மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த பற்றுக்கள், கவித்துவங்கள் யாவற்றினதும் வெட்டுமுகத்தோற்றமாக இக்கவிதைத் தொகுப்பைக் காணலாம்.

அம்புலி, காந்தா, அலையிசை, ஜெயா, கலைமகள், ஆதிலட்சுமி, கனிமொழி, ஞானமதி, வானதி, புரட்சிகரா, கஸ்தூரி, கிருபா, மலைமகள், நகுலா, நாமகள், நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபிமார்க்கட், பாரதி, சிரஞ்சீவி, சூரியநிலா, சுதாமதி, தமிழவள், தயாமதி, தூயவள் ஆகியோரின் கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல், போராட்ட நிகழ்வுகள் பலவற்றை ஆவணப்படுத்துவதால் காலத்தின் பொக்கிசமாக அமைகின்றது.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மழுங்கடக்கப்பட்ட பின்னர், அங்கிருந்த போராளிகள் தற்போது உயிரோடில்லை. ஆயினும் அவர்தம் உணர்வுகளைப் பதிவிடத்துணிந்த ஊடறு மதிப்புக்குரியதாகின்றது. தினமும் க்ஷெல்லுக்குள்ளும் விமானக்குண்டு வீச்சுக்குள்ளும் மரணங்களுக்குள்ளும் வாழ்ந்திட்ட போதும் தம் வாழ்வில் வசந்தமொன்றைக் கற்பனை செய்தவாறு காலங்களைக் கடத்திய அவர்தம் வாழ்வு மிகப்பெரும் சோகமொன்றை விதைத்து விடுகின்றது. சாக விரும்பாது பலரும் நாளைய பொழுதும் தாம் வாழ வேண்டுமென விரும்புகின்றனர். நிச்சயமற்ற வாழ்வோடு நாளும் வாழ்கின்ற நிலைப்பாட்டினால் ஆழ்மனத்து ஏக்கமாகக் கவிதைகளில் அவற்றை வெளிப்படுகின்றனர்.

ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான

என் காவலிருப்பு

நாளையும் நான் வாழவேண்டும் (அம்புலி)

பெறுமதிமிக்க தம் வாழ்வை மக்களின் நிம்மதி வாழ்விற்காக அர்ப்பணித்தமையைக் காணலாம்.

ஓர் அழகிய காலையை

உனக்கு

காட்டமுடியா வசந்த காலத்தில்

விளையாட முடியாத பாலைவன நாட்களையே

உனக்குப் பரிசளிக்கிறேன் (ஆம்புலி)

எனக் கூறுகையில் மனதால் வதைபடுவதை எம்மால் உணரமுடிகின்றது. `ஏ-9 வீதி பற்றிய குறிப்புகள்` பற்றிய கவிதைகள் போர்க்காலச் சூழலை எடுத்தியம்புவனவாகக் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்து சென்ற மக்களின் துயர் வாழ்வை ஒரு விமர்சனக் கவிதையாக அம்புலி முன் வைக்கின்றார். அதுவெல்லாம் அன்றைய அவர்களது கனவுகளிலொன்றாக இருந்திருக்கின்றது.

காயப்பட்டு அங்கவீனர்களாகிய போராளிகள் தாம் ஏனையோருக்குப் பாரமாகிப் போனதாகக் கவலையுறுவதனை, `சாகாத பிணமாக நானிங்கு நிலையானேன்` எனத் துயருற்றுப் பதிவாக்குகின்றார்.

மரணங்கள் மலிந்து காணப்பட்ட அத்தேசத்தை காந்தா என்ற போராளி எந்த மகனுக்காக எந்தன் கால்களை நகர்த்த என ஏங்கித் துயருறுகின்றார். இவ்வாறே வீதியில் பாடையில் செல்லும் போராளிக்குத் தலை வணங்கி வேலி நிற்பதாக,

வீர மகளிரின்

வித்துடல் சுமந்த

ஊர்திகள் தம்மை

கடந்து சென்றபோதெல்லாம்

தலை வணங்கி நின்றிருக்கின்றது

அந்த வேலி (சீரஞ்சீவி)

மாவீரர்கள் தியாகங்கள் பற்றியும் கந்தக வெடி சுமந்து கரும்புலியாகிக் காற்றோடு போன போராளிகள் பற்றியும் இப்போராளிகள் பேசியுள்ளனர். அந்த நேர அவஸ்தையைக் கூறும் போது `மௌனமாக ஒளிமுகங்கள் தமக்குள் குமுறிக் கொள்ளும்` என்றும் `அவர்கள் அதிர்வுகளோடு வெளிச்சமாகி இருப்பர்` என்றும் பதிவிடுகின்றனர். சங்கச் செய்யுட்களில் கூறப்படும் புறச்செய்யுட்களின் காட்சிப்படுத்தலின் இன்னொரு வடிவங்களை இப்பாடல்களில் காணலாம். `பெயரிடாத நட்சத்திரங்கள்` கரும்புலி மறவர் பற்றிச் சொல்கிறது. போராளிகளின் வாழ்வை இரவுகளோடு பயணிக்கும் பயங்கரங்களை `காலங்களற்ற கடல்` எனும் கவிதையில் சூரியநிலா வடித்திருக்கின்றார்.

இந்த்திய இராணுவம் செய்த அட்டூழியங்களும் இவர்களால் நினைவுபடுத்தப்படுகின்றது, `உணவும் மருந்தும் கொண்டு உள்ளே வந்தார்கள்` எனஆதங்கப்பட்டுகின்றார் ஒரு போராளி. `அந்தத் தீபாவளியும் என் அழகிய கிராமமும்` எனும் கவிதையில்

இந்தியா என்கின்ற இமாலயம்

எங்கள் மனப்பரப்பில் இடிந்து

நொருங்குகின்றது

என்னவென்று அறியாமல்

முற்றத்துக்கு ஓடிவந்த அம்மா

குண்டுபட்டு வீழ்கிறாள்

அதைப் பார்த்து

அலறிய தம்பிக்குச் சூடு` (ஆதிலட்சுமி)

என்று அப்பாவிகளின் இறப்புச் சொல்லப்படுகின்றது. வல்வெட்டித்துறைப் படுகொலையைக் கூறுவதாகப் பின்வரும் வரிகள் அமைகின்றன.

இறந்து கிடப்பவர்கள்

ஈழத்தமிழர்கள் அல்ல

இந்தியாவின் மனிதாபிமானமும்

ஜனநாயகமும் தான் ( தூயவள்)

எழுதாத கவிதை என்ற தன் இறுதிக் கவிதையினூடாக சமுகத்தை உலுக்கிய வானதியின் இன்னொரு கவிதை நாளைய சந்ததிக்கு நடந்ததைக் கூறு எனும் கவிதையாகும். பனையோடு இங்கு உறவாடும் வானதி பனை பற்றி இதுவரை வந்த பாடல் கருப்பொருளில் இருந்து மாறுபட்டு பனையைக் களம் நின்ற இன்னொரு போராளியாகப் பாவித்துக் கதையாடுகின்றார்.

அத்தனை `செல்` துண்டுகள் உன்

வைரமேனியை ஊடுருவியதை

கூறுவாயா?

அம்மாவிற்கும் தங்களுக்குமான பாசப்பிணைப்பை கண்ணீர் ததும்ப எழுதியுள்ளனர். இதுபோல் அம்மாவிற்கும் ஊர்ப்பாட்டியொருவருக்குமான தங்கள் நெருக்கத்தைச் சொல்லியுள்ளனர். தன் தாயின் அடக்கப்பட்ட கோபங்களே தன்னைப் போராட வைத்ததாக மலைமகள் கூறுகின்றார்.

`எந்த வேளையிலும் எனை

இழக்காதிருக்க ஆசிர்வதி அம்மா` (மலைமகள்)

இடர் நடுவிலும் உயிர்ப்புடன் இருக்கும் காதலை மிக அழகியலுடன் சொல்லும் கவிதை,

எப்போதாவது தெருவில்

அவசர இயக்கத்தில்

கண்டுவிட நேர்கையில்

சந்திப்பை வரவேற்பதாய் அவன்

கண்கள் ஒருமுறை விரியும்

மறுகணம் ஆழ்ந்து மூடிக் கொள்ளும்

அவனுக்குத் தெரியும்

எனக்கு அது போதுமென்று (நாமகள்)

பெண்ணடிமைத்தனத்திற்கு சமாதிகட்ட வா எனப் பெண்களுக்கு அறைகூவல் விடுவதான கவிதைகளையும், உலக நாடுகளால் மனித அவலம் கண்டு கொள்ளப்படவில்லையென்கின்ற சோகத்தையும் செம்மணிப் புதைகுழி, ஆனையிறவுச் சமர், பூபதியின் உண்ணாநோன்பு போன்ற பல வரலாற்றுத் தகவல்களையும் இவர்கள் பதிவிட்டுள்ளனர்.

நிச்சயமற்ற பொழுதுகளிலெல்லாம் கவிதை எழுதத் துணிந்த இப்பெண்கள் போராட்ட வாழ்வை எமக்குப் புடம் போட்டுக் காட்டியுள்ளனர். இது எமக்குக் கண்ணீரை மனநெருடல்களைத் தந்த போதும் தமிழ்ச் சமூக அமைப்பை உடைத்தெறிந்து பொதுவெளியில் ஆளுமையுடன் செயற்பட்ட போராட்ட வாழ்வும் சொன்ன போராட்டச் செய்திகளும் வரலாற்று ஆவணமாக நிலைநிற்கும். இப்பெண்களும் மனதில் இருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *