ஈழப் பின்னணி கொண்ட ஓவியர்களின் படைப்புகள் -Thiagarajah Wijayendran – Norway

கொரோனாவின் கொடுமைகள் ஒருபுறம் இருந்தாலும் அதன் பின்விளைவுகளிற் சில நன்மைகளும் உள. உலகின் எல்லா மூலைகளிலும் மனிதர்கள் வீட்டுக்குள் அடங்கும்படி நேர்ந்ததால் ஒருவரோடொருவர் தொடர்பாடலிற் புதிய வகைகள் தோன்றுகின்றன. பலர் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி இணையவழியில் நிகழ்த்தும் செவ்விகள், கலந்துரையாடல்கள் மிகப் பயன் தருவனவாயும் நேரத்தைப் பொன்செய்வனவாயும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை தமிழிலேயே ஆயிரத்தைத் தொட்டிருத்தல்கூடும். பிரச்சனை என்னவென்றால், இவை அனைத்தையும் பார்க்கவோ தொடரவோ நேரம் போதியளவு கிடைப்பதில்லை. இவற்றின் சாரத்தை யாரேனும் நீட்டி முழக்காமற் பகிர்ந்தால் அது பலருக்கும் பயன்தரும்.

அண்மையில் நான் அவதானித்து, அதிற் பங்குபெற முடியாமற் போன ஓர் இணையவழிக் கலந்துரையாடல் பல வழிகளில் முக்கியமானது. இலங்கையில் ஒரு காலத்திற் பெண்கள் அதிகம் ஈடுபடாத ஓவியத் துறையில் ஆர்வத்தோடு ஈடுபட்டு, அதிற் தம் திறனை வளர்த்த பெண்கள் ஒரே தளத்தில் வந்து தம் அனுபவங்களை மற்றோரோடு பகிர்ந்துகொண்டனர். இதனைச் சாத்தியப்படுத்திய .ஊடறு பாராட்டைப் பெறுகிறது.

கமலா வாசுகி இணைப்பாளராயிருக்க அருந்ததி, சர்மிலா, ஜனனி, கீர்த்திகா, டிசாந்தினி, யுவராணி, பிருந்தாஜினி, சத்தியப்பிரியா, டயாளினி அம்மு, பிரௌப்வி, தர்சிகா என்போர் பங்கெடுத்த இந்த நிகழ்வு ஈழ ஓவிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாய் அமைந்தது. இதைப் பார்க்க விரும்புவோர் முதற் பின்னூட்டத்திற் சென்று பார்க்கலாம்.

இலங்கையில் மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, ஹட்டன், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்தும் சுவிஸ், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, இந்தியா, மலேசியா, ஜேர்மன் என வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்துகொண்டு நிகழ்வைத் சிறப்பித்தனர்.

ஈழப் பின்னணி கொண்ட ஓவியர்களின் படைப்புகள் கொண்ட ஒரு தொகுதி தயாரிக்கப்பட உள்ளது என ஒரு செய்தியும் காற்றுவழி வந்து மனதை மகிழ்வித்தது. முற்கூட்டியே வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *