பெண் திரைப்பட இயக்குனர்களும்-“ஆம்பளைகளின்” விமர்சனமும் – Deepa_Janakiraman

ஒரு இயக்குனர் திரைப்படம் இயக்குகிறார். அதனை விமர்சனம் செய்பவர்கள் படம் குறித்து விமர்சிக்கிறார்கள், நக்கல் , நையாண்டி செய்கிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள். இதெல்லாம் சகஜம். சில இயக்குனர்கள் தங்கள் படம் குறித்து இப்படி விமர்சனம் வருவதை சிரித்தபடி கடந்து போகிறார்கள். ரசிக்கவும் செய்கிறார்கள். மிகக் கடினமான தோல் கொண்டவர்களே இங்கே இயக்குனர்களாக தொடர முடியும். அவர்கள் பல போராட்டங்களுக்கு பிறகே படம் இயக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். பல தயாரிப்பாளர்களிடமும் கதை சொல்லி அலுத்தவர்கள். அதனால் பொறுமை அவர்களின் இயல்பு. ஒரு இயக்குனர் திரைப்படம் இயக்குகிறார். அவர் பெண்ணாகவும் இருக்கிறார். இப்போது சில விமர்சனங்கள், இதை விமர்சனம் என்று சொல்வதற்கே எரிச்சல் வருகிறது. சில பதிவுகள்.. மிக ஆபாசமாக வெளிவருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் எழுதுகிறார். “அவர் புகைப்படத்தை எவ்வளவு நேரம் வேணுமானாலும் பார்ப்பேன்…ஆனா” அதற்கு மற்றவர்கள் இட்ட கமென்ட் மிக அநாகரீகம். முழுமையான தனி மனித தாக்குதல்கள்.இவர்கள் வீட்டில் பெண்கள் மருத்துவராக, ஆசிரியையாக, நிறுவன ஊழியர்களாக இருப்பார்கள். எப்படி இவையெல்லாம் ஒரு தொழிலோ, அதே போல படம் இயக்குதலும் ஒரு தொழில். அதை ஒரு பெண் செய்கிறார்.

ஆனால் எங்கிருந்து வருகின்றன இத்தனை அநாகரீகமான வார்த்தைகள்?ஊடக நிறுவனம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறேன். அனுதினமும் ஊடகத் துறை சார்ந்த பெண்களை சந்திக்கிறேன். எனக்குத் தெரியும் இங்கு பெண்கள் எத்தனைக்கு எத்தனை சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் என்று. ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் இப்போது தான் கணிசமான பெண்கள் உள்நுழைந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் சொல்ல ஏராளமான சம்பவங்கள் உண்டு. அவை நீங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராதவை. மிகச் சிறு சோறு பதம் ஒன்று சொல்கிறேன்.ஒரு பெண் இயக்குனர் சூட்டிங் ஸ்பாட்டில் கோபத்தில் கெட்ட வார்த்தை சொல்லிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம்..இது எப்படி எப்படியான அவதாரங்கள் எடுக்கும் என்பது ‘டிஷ்கஷனில்’ கேள்விப்படுபவர்களுக்குத் தெரியும். எல்லா இயக்குனர்களுக்கும் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தைகள் பேசும் தருணங்கள் வாய்த்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் ‘பொம்பளை’ ஒருத்தி பேசினால் அவருடைய கேரக்டர் வரை கேவலப்படுத்தும் நிகழ்வுகள் இங்கு சாதாரணம்.இப்படியான அலுப்பூட்டும் சம்பவங்கள் நிறைய..இதையெல்லாம் முன்வைத்து ஒருவர் கூட கருணைக்காக யார் முன்பும் நிற்கவில்லை. அவர்கள் படைப்போடு முன் நிற்கிறார்கள். களத்தில் நிற்பதற்கும், வேடிக்கைப் பார்ப்பவர்களின் கூச்சலுக்கும் வித்தியாசம் தெரிந்து நிற்கிறார்கள்.

நன்றி மனிதிhttps://m.facebook.com/story.php?story_fbid=4247207265359042&id=100002094312671

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *