மலையகப் பெண்களின் கதைகளைப் பிரதிபலிக்கிறதா ‘மலையகா’? – மல்லியப்புசந்தி திலகர்

நன்றி தாய்வீடு – https://thaiveedu.com/pdf/24/May2024.pdf#page=66

இலங்கை மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகி விட்டிருக்கிற பயணத்தில் இலக்கியத்தில் மலையக மக்களின் இனத்தனித்துவம், அடையாளம், மாற்றம், பண்பாடு கலாச்சாரம் குறித்தத் தளங்களில் மலையக இலக்கியம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் பங்களிப்புகள் குறைவாக இருந்த போதிலும்… எனத் தொடங்கும் பதிப்புரையை தொடங்கியிருக்கும் ‘மலையகா’ – மலையகப் பெண்களின் கதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2024 ஆண்டு ஜனவரியில் ‘ஊடறு’ அமைப்பின் வெளியீடாக வந்திருக்கிறது. இலங்கை மலையகத்தின் யுவராணி இராஜேந்திரனின் அட்டைப்படம், பா.ரவீந்திரனின் பக்க வடிவமைப்பு, ஜோதி அச்சகத்தின் தரமான அச்சுப்பதிப்பு என விடியல் பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்திருக்கும் இந்த 303 பக்கங்களிலான நூலை இந்திய விலை 280 ரூபாவில் பெறலாம் (இலங்கை ரூபா 2000 ஐ எட்டலாம்) என குறிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விபரங்களுடன் இந்த விமர்சனக் குறிப்பைத் தொடங்குவதற்கு காரணமே

இந்த நூல் பரவலாக வாங்கப்பட வேண்டும், வாசிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவே. இப்படியான ஒரு முயற்சியைப் பற்றி சிந்தித்தமைக்கும் செயற்பட்டமைக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர்களான றஞ்சி (சுவிஸ்) உள்ளிட்ட தோழமைகளுக்கு நன்றி கலந்த பாராட்டுகளை முதலில் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

மலையகப் பெண்களின் கதைகளைத் தொகுக்க எண்ணியபோது அந்தத் தொகுப்புக்கு தெரிவு செய்திருக்கும் தலைப்பே அலாதியானது. மலையகத்தைக் குறித்து நிற்பதற்காக ‘குறிஞ்சி’ எனும் சொல்லோடு தொடங்கும் தலைப்புகளைத் தெரிவு செய்யும் போக்கு ஒரு காலத்தில் இருந்தது. ‘குறிஞ்சிப்பூ’ (மலையகக் கவிஞர்களின் தொகுப்பு – ஈழ குமார் 1965), ‘குறிஞ்சி மலர்கள்’ (மலையகப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் – அந்தனிஜீவா-2000), ‘குறிஞ்சிக் குயில்கள்’ (மலையகப் பெண் படைப்பாளிகளின் கவிதைகள்; – அந்தனிஜீவா-2002) போன்றன அதற்கான உதாரணங்களாகக் கொள்;ளலாம். ஆனால் ‘மலையகம்’ எனும் கருத்தியல், சமூகவியல் அடிப்படையில் ஓர் இனத் தேசியத்தின் அடையாளமாக வலுப்பெறத் தொடங்கியதுமே ‘மலைமுரசு’, ‘மலைப்பொறி’ போன்ற அடைமொழிகளோடு மலையகச் சிற்றிதழ்கள் தம்மை புதுப்பித்துக்கொண்டன. அதுவரை ‘முத்தமிழ் முழக்கம்’என வெளிவந்த இதழின் தலைப்பையே அதன் கூட்டாசிரியர்களான கவிஞர் ஈழகுமார், க.ப.சிவம் ஆகிய இருவரும் ‘மலைமுரசு’ என மாற்றிக் கொண்டார்கள். “மலைநாடு, மலைநாடு என்று போற்றுவோம்! மலை முரசறைந்து மலை மக்கள் வாழ்வு உயர்த்துவோம்!| என்னும் முழக்கத்துடன் 1962, ஜனவரியிலிருந்து வெளிவந்த ஏடு ‘மலை முரச”| எனக் குறிப்பிடுகின்றார் தெளிவத்தை ஜோசப். (இருதாம் நுற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் – 2000-2002 தினகரன் தொடர் கட்டுரை)

இவ்வாறு எழுச்சி பெற்று வந்த ‘மலையகம்’ எனும் கருத்தியலின் தாக்கத்தின் தொடர்ச்சியாக தெளிவத்தை ஜோசப் தொகுத்த துரைவி வெளியீடான ‘மலையகச் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பையும் கொள்ளலாம். அதற்கடுத்து அத்தகையதொரு தொகுப்பாக வந்திருக்கக் கூடிய மலையகப் பெண்களின் கதைகளின் தொகுப்புக்கு ‘மலையகா’என தலைப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமானது. ‘மலையகன்’ எனும் புனைப் பெயரில் அவ்வப்போது அரசியல் கட்டுரைகள் சிலவற்றை எழுதியிருக்கும் நான் (கட்டுரையாளர்), ஆஹா.. சுப்பர் (Super) என சொல்லிக்கொண்டே ‘மலையகா’ எனும் தொகுப்பின் தலைப்பை உள்வாங்கி;க் கொண்டேன் என்கிற உண்மையை இங்கே பதிவு செய்ய வேண்டும். ‘மலையகன்’என எனக்கொரு புனைப்பெயரைச் சூட்டிக் கொள்ள எண்ணிய நான்,மலையகா’ என ஒரு பெண்ணுக்குப் பெயர் சூட்டலாம் என ஒரு போதும் எண்ணியதில்லை. ‘ஓவியம்’ எனும் சொல்லில் இருந்து ‘ஓவியா’ என மகளுக்கு பெயர் சூட்ட முடியுமெனில், ‘மலையகம்’ என்ற சொல்லில் (கருத்தியலில்) இருந்து ‘மலையகா’ எனும் பெயரைத் தேர்ந்தெடுப்பது எத்தனைப் பொருத்தமானது. மலையகப் பெண்களின் கதைகளைத் தொகுக்க ‘மலையகா’ எனும் இந்தப் பெயரைத் தெரிவு செய்தவர்களுக்கு எனது பெரும் பாராட்டுகளையும் பதிவு செய்கிறேன். இதுதான் பெண் உணர்வு, தன்னுணர்வு. இந்தத் தொகுப்பின் மிகப் பலமான (Positive) அம்சங்களில் ஒன்றாக இதனைக் கொள்ளலாம். இனி பெண்குழந்தைகளுக்கு சூட்டக் கூடிய பெயராகவும் பரிந்துரைக்கக்கூடியது ‘மலையகா’.

ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் பங்களிப்புகள் குறைவாக இருந்த போதிலும்…எனும் பதிப்புரையில் விட்ட இடத்தில் இருந்து இனி தொடர்ந்தால் ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் பங்களிப்புகள் குறைவாக இருந்தது என்பதற்கு அப்பால் ஆரம்பத்திலேயே மலையக இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பும் இருந்தது என்பதை முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டியுள்ளது.

மலையக இலக்கியத்தின் ஊற்றுக்கண்களான நாட்டார் பாடல்களின் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்களில் இருந்தே அது ஆரம்பிக்கிறது. அவை எழுத்து இலக்கியங்களாக, அச்சு இலக்கியங்களாக உருப்பெற்ற சுமார் நூறு வருட வரலாற்றில் எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பே கோ.ந. மீனாட்சியம்மையின் படைப்புகள் அச்சேறியிருக்கின்றன. அதேபொல ‘அஞ்சுகம்’ என்பவரின் எழுத்துக்களையம் கூட அடையாளங் காட்ட எத்தனிக்கிறார் மு.நித்தியானந்தன் (கூலித்தமிழ், 2014). எனவே குறைவான பங்களிப்பாக இருந்தாலும் மலையக இலக்கிய உருவாக்கத்திலும் தொடர்ச்சியிலும் மலையகப் பெண்களின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. அந்த சுட்டிக்காட்டுதலை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்கிறது, முகவுரை.

‘பெருமூச்சும் சிறுநகையும்’ எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுpரையாளர் எம்.எம். ஜெயசீலன் எழுதியிருக்கும் முகவுரை இந்த நூலின் இன்னுமொரு பலம். நேரே மலையகப் பெண்களின் கதைகள் என்ற கோதாவுக்குள் இறங்கிவிடாமல் மலையக இலக்கிய வரலாற்றைத்தொட்டு அதில் பெண் படைப்பாளர்களின் பங்களிப்பை விரிவாகப் பேசி இந்தத் தொகுப்பின் பலம், பலவீனங்களையும் எடுத்துச் சொல்லும் முகவுரை அது.

ரோஹினி முத்தையா (2) (நாவலப்பிட்டி – கண்டி) அக்னஸ் சவரிமுத்து (4) (வட்டகொடை – நுவரெலியா), பாலரஞ்சனி சர்மா (3) (மாத்தளை), புசல்லாவ இஸ்மாலிஹா (3) (புசல்லாவை – கண்டி), ரூபராணி ஜோசப் (2) (கண்டி), சாந்தா ராஜ் (1) (ஹட்டன் – நுவரெலியா), அரபா மன்சூர் (1) (கண்டி), செ.கோகிலவர்தனி (1) (ஹட்டன் – நுவரெலியா), பிரமிளா பிரதீபன் (5)(பதுளை), நயீமா சித்தீக் (4) (ஹப்புத்தளை பதுளை), நளாயினி சுப்பையா (2) (கண்டி) பேபி இம்மானுவேல் (1) (கொழும்பு), இரா.சர்மிளாதேவி (1) (கண்டி), பூரணி (1) (கண்டி), பவானி வேதாஸ் (2), (கண்டி), சிவாஜினி சதாசிவம் (1) (மாத்தளை), செல்வி சுந்தரி மலைசுவாமி (1) (சாமிமலை- நுவரெலியயா), சுகந்தி வெள்ளையக் கவுண்டர் (1) (கந்தப்பளை – நுவரெலியா), தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா (2), (தியத்தலாவை –பதுளை) மலைமதி சந்திரசேகரன் (1) (மாத்தளை), லறீனா அப்துல் ஹக் (1) (மாத்தளை), சாந்தி மோகன் (1) (பண்டாரவளை – பதுளை), பேராதனை ஷர்புன்னிஷா (1)(ஹட்டன் – நுவரெலியா) ஆகிய 23 பெண் படைப்பாளிகளின் 42 கதைகள் ‘மலையகா’வில் தொகுக்கப்பட்டுள்ளன.

தொகுப்பு என்று வரும்போது அதனைத் தொகுப்பதற்கான அடிப்படைகள் ஏதேனும் இருப்பது சிறப்பு. ‘மலையகா’ தொகுப்பின் தேவை எங்கிருந்து எழுகிறது? என்பதனை பதிப்புரையின் ஆரம்பம் எடுத்துக் கூறுகின்றது. இலங்கை மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகிவிட்டிருக்கிற பயணத்தில்… எனத் தொடங்குவதானது அந்தப் பயணத்தில் மலையகப் பெண் படைப்பாளர்களின் சிறுகதைப் பங்களிப்பை ஆவணப்படுத்துவது என்பதாகப் பொருள்படுகிறது. அந்த வகையில் ‘மலையகா’ வில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளின் கதைக்காலங்கள் அல்லது அவை எழுதப்பட்ட காலங்கள் பறற்p ஆராய்வது அவசியமாகிறது.1994, 1994, 1999, 2001, 2001, 1994, 1998, 1992, 1987, 1997, 1997, 1997, 1997, 1999, 1994, 2000, 2010, 2007, 2007, 2006, 2010, (…), 1981, 1978, 1982, 1997, 1994, 1994, 1999, 1975, 2003, 2003, 1997, 1997, 1994, 2011, 2010, 1996, 2015, 1993, 1993. இவ்வாறு கதை தொக்கப்பட்டுள்ள ஒழுங்கில் காலத்தை இங்கே எடுத்துக்காட்டுவதன் நோக்கம், 200 ஆண்டு கால மலையக வரலாற்றில் எந்தக் காலப்பகுதியினை இந்தத் தொகுப்பு பிரதிபலிக்கிறது என்பதனைப் புரிந்துகொள்வதற்காகும்.

அதேநேரம் கதாசிரியர்கள் அனைவரும் ஊவா (பதுளை மாவட்டம்), மத்திய (நுவரெலியா, கண்டி, மாத்தளை) மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவதானிக்கத்தக்கது. இதற்கு வெளியே சப்ரகமுவ, (இரத்தினபுரி, கேகாலை) மேல் (களுத்துறை, கொழும்பு, கம்பஹா) தென் (காலி, மாத்தறை) மாகாணங்களிலும் பகுதியளவில் குருநாகல் மாவட்டத்திலும் மொராகலை மாவட்டத்திலும் கூட மலையகம் விரிந்திருக்கிற என்பதும் இங்கு அவதானத்துக்குரியது? இங்கு காலம் எடுத்துக் காட்டப்பட்டது போல களங்களும்; எடுத்துக் காட்டப்படுவது அங்கே கதைக் களங்கள் மாறுபடுகின்றன என்பதை எடுத்துரைக்கவே. அந்த வகையில் 1975 ஆண்டு பூரணியினால் எழுதப்பட்ட கதையே இந்தத் தொகுப்பில் காலத்தால் முந்தியதாகும். அதேபோல 2015 ஆம் ஆண்டு லறீனா அப்துல் ஹக்கினால் எழுதப்பட்ட கதையே காலத்தால் பிந்திய கதையாகும். எனவே 1975 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகாலத்தில் வெளியான மலையகப் பெண்களின் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதனை நான்கு தசாப்த காலகட்டங்களாக வகுத்த நோக்கும்போது பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.

*முதல் – பத்தாண்டு காலமாகக் கருதக் கூடிய 1975-1986 காலப்பகுதியில் (4 கதைகள்)

*இரண்டாம் – பத்தாண்டு காலமாகக் கருதக் கூடிய 1986-1995 காலப்பகுதியில் (11 கதைகள்)

*மூன்றாம் – பத்தாண்டு காலமாகக் கருதக் கூடிய 1996-2005 காலப்பகுதியில் (18 கதைகள்)

*நான்காம் – பத்தாண்டு காலமாகக் கருதக் கூடிய 2006-2015 காலப்பகுதியில் (8 கதைகள்)

*எழுதப்பட்ட காலம் குறிப்பிடப்படாத ஒரு கதை (நயீமா சித்திக் – நெடி துயர்ந்த மலையில்) காலம் குறிப்பிடப்படாத இந்தக் கதை நயீமா சித்திக்கின் ஏனைய கதை எழுதப்பட்ட காலங்களிலேயே எழுதப்பட்டிருக்கலாம் என கணித்தால் அது முதலாவது பத்தாண்டு காலத்திற்குள் உள்ளடக்கப்படலாம் எனவே ‘மலையகா’ கொண்டுள்ள கதைகளில் 1996 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதிகளவான கதைகள் (18) சேர்க்கப்பட்டுள்ளன.

அதற்கடுத்ததாக 1986 க்கும்; 1995 க்கும் இடைப்பட்ட காலத்தில் 11 கதைகளும் அதற்கடுத்ததாக 2006 க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் 8 கதைகளும் உள்ளடக்கப்ட்டுள்ள அதேவேளை 1975 க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் 5 கதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 200 ஆண்டுகால மலையக வரலாற்றில் நாற்பது (40) ஆண்டு கால கட்ட கதைகள் மாத்திரமே இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

200 ஆண்டு கால மலையக வரலாற்றில் ஏறக்குறைய 100 ஆண்டு கால எழுத்திலக்கிய வரலாற்றை தன்னகத்ததே கொண்டுள்ளது. 1925 ஆண்டளவிலேயே நடேசய்யர் – மீனாட்சியம்மைத் தம்பதிகள் துண்டுப்பிரசுர இலக்கியமாக அவற்றை ஆரம்பித்துள்ளனர். (அதற்கு முன்பதாகவே 1869 ஆண்டு ஆபிரஹாம் ஜோசப்பின் ‘கோப்பிக்கிருஷி கும்மி’ எழுத்துரு பெற்றிருந்தது). சிறுகதை என்று வரும்போது 1931 ஆம் ஆண்டு நடேசய்யரால் எழுதப்பட்ட ‘ராமசாமி சேர்வையின் சரிதம்’ எனும் கதையை முதல் மலையகச் சிறுகதை என அடையாளப்படுத்துவதுடன் அதனை ஈழத்தின் முதல் சிறுகதையாளர்களாக அடையாளப்படுத்தப்படும் சம்பந்தர், வைத்திலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோருடன் நடேசய்யரும் நான்காமவராக சேர்க்கப்படல் வேண்டும் என ‘மலையகச் சிறுகதை வரலாறு’ நூலில் தெளிவத்தை ஜோசப் விவாதிக்கிறார்.

இந்த நால்வருக்கு முந்திய சிறுகதையாளர்களும் இலங்கையில் இருந்திருக்கிறார்கள் என்கின்ற கருத்து வைப்புகளும் உள்ளன. இங்கே யார் முந்தியவர்? என்பதற்கு அப்பால் ஒரு தொகுப்பு ஏதேனும் விவாதத்தை முன்வைப்பதாக அல்லது ஏற்படுத்துவதாக அமைதல் சிறப்பு.

அந்தவகையில் ‘மலையகா’ தொகுக்கப்படுவதற்கான அடிப்படைகள் என்ன? என்பது குறித்த சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் சில விவாதப் புள்ளிகளைத் தோற்றுவிக்கலாம்.

1.‘மலையகா’ வுக்காக தெரிவு செய்யப்பட்ட கதைகளுக்காக விதித்துக்கொண்ட கால எல்லை 1975 க்கும் 2015 க்கும் இடைப்பட்ட 40 ஆண்டுகளுக்குள் மட்டுமானதாக அமையப்பெற்றது ஏன்?

2.மலையகப் பெண்களின் கதைகள் 1975 ஆம் ஆண்டுதான் தொடங்குகின்றதா?

3.கதைகளைத் தொகுப்பதில் ‘மலையகா ஒரு கால ஒழுங்கைக் கடைபிடிக்காதது ஏன்?

4.கால ஒழுங்கு அல்லாது வேறு ஏதேனும் ஒரு ஒழுங்கு – முறைமை கடைபிடிக்கப்;பட்டிருக்குமெனில் அது என்ன?‘

5.மலையகா’ வுக்காக தேர்வு செய்யப்பட்ட மலையகப் பெண் சிறுகதையாளர்களைத் தெரிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட அளவுகோள்கள் ஏதும் உண்டா?

6.இதற்கு முன்பதாக வெளியாகியுள்ள தொகுப்புக்களில் சேர்க்கப்பட்ட கதைகளே ‘மலையகா’ விலும் சேர்க்கப்பட்டுள்ளமை ஏன்?


மேற்படி விவாதப் புள்ளிகள் ‘மலையகா’ மீதான விமர்சனமாக அல்லாமல் மலையகப் பெண் கதையாசிரியர்கள் குறித்த கவனம் கொள்ளலாகவே பார்க்க வேண்டியுள்ளது. இங்கே தொகுக்கப்பட்டுள்ள 23 கதையாசிரியர்களில் பிரமிளா பிரதீபன், எச்.எப்.ரிஸ்னா, லறீனா அப்துல் ஹக் முதலானவர்கள் தவிர்த்து ஏனையோர் சமகாலத்தில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தவர்கள் என்பதும் கடந்த காலத் தொகுப்புகளில் எல்லாம் இடம்பெற்றவர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. ரூபராணி ஜோசப், பூரணி, சாந்தாராஜ் பொன்றவர்களிடம் நாம் தொடர்ந்தும் கதைகைளை எதிர்பார்க்க முடியாது. இவர்கள் உள்ளிட்ட ஏனைய மூத்த பெண் எழுத்தாளர்கள் எல்லோருமே கூட 2000 க்கு முற்பட்ட காலத்திலேயே அதிகம் எழுதியுள்ளனர். புஸல்லாவ இஸ்மாலிஹா, நயீமா பஷீர், நளாயினி சுப்பையா, அக்னஸ் சவரிமுத்து போன்ற மூத்த எழுத்தாளர்களின் கதைகளின் கடந்த கால வீரியங்கள் தெரிகின்ற போதும் அவை கடந்த காலக் கதைகள் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே 2024 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டுள்ள மலையகா – ‘மலையகப் பெண்களின் கதைகளை’ முன்வைத்து சில கேள்விகளை முன்வைக்கலாம்?


• சமகாலத்தில் மலையகத்தில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்கள் யாவர்? (அண்ணளவாக) எத்தனை பேர்?

• ‘மலையகா’ வெளிவந்த காலத்தில் (2024) மலையகப் பெண்களின் நிலைமைகளை பிரதிபலிக்கும் கதைகளை ‘மலையகா’ வினால் சுமந்து வரமுடிந்ததா?

• மலையகா வில் சேர்க்கப்பட்டுள்ள 1975 க்கு முற்பட்ட மலையகப் பெண்களின் கதைகள் யாவை? அவற்றை எழுதியோர் யாவர்?

• 1986-1995 தசாப்தத்தில் இருந்து இத்தொகுப்புக்காக சேர்க்கப்பட்ட 11 கதைகள், 1996 -2005 தசாப்தத்தில் இருந்து இத்தொகுப்புக்காக சேர்க்கப்பட்ட தொகுக்கப்பட்ட 18 கதைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது 2006-2015 தசாப்தத்தில் இருந்து 8 கதைகளை இடம்பெற்றுள்ளன. எனவே மலையகத்தில் பெண் கதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றதா?

• 2015-2024 எனும் இறுதி பத்தாண்டு காலத்தில் (இந்தத் தொகுப்பு 2024 இல் வெளிவருகின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு) குறைந்த பட்சம் ஒரு கதையையேனும் மலையகாவால் உள்வாங்க முடியாது போனது ஏன்?

• ஆக, ‘மலையகா’ புதிய தொகுப்பா ? அல்லது தொகுப்புகளின் தொகுப்பா?

இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயலும் போது மலையகப் பெண் கதாசிரியர்களின் வகிபாகம் குறித்த, எண்ணிக்கை குறித்த ஒரு கணக்கெடுப்பும் அதில் இருந்து முன்செல்ல வேண்டிய பக்கங்கள் குறித்துமான ஒரு தீர்மானத்துக்கு வர முடியும். அது ‘ஊடறு’ வின் பணியல்ல. அது மலையக கலை இலக்கிய ஆய்வறிஞர்களின் கைகளில் உள்ள பணியாகிறது. சமகாலத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் கலைத்துறையில் ஃ தமிழ்த்துறையில் ஃ சமூகவியல்துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் ஆய்வுக் கவனத்தைப் பெற வேண்டியுள்ளது. இது போன்ற தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொள்ள தமது மாணவர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு பேராசிரியர்கள், விரிவுரையாளரகளின் பொறுப்பாகிறது.

தமக்குக் கிடைக்கக் கூடியதான கதைகளைக் கொண்டு ‘ஊடறு’ ஒரு தொகுப்பைக் கொண்டு வந்து அதன் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறது. ஆனால் குறைந்த பட்சம் கால ஒழுங்கிலாவது இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பதை ‘ஊடறு’ வின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ‘மலையகா’ கால ஒழுங்கில் 1975 முதல் 2015 வரையான என தொகுக்கப்ட்டிருக்கும்பட்சத்தில் கதைக்கருக்களின், கதை மாந்தர்களின் போக்குகளை அடையாளம் காண்பதன் ஊடாகவாவது ஓரளவு மலையகப் பெண்களின் நிலைவரத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்திருக்கலாம். உண்மையில் கால மாற்றத்தால் மலையகப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்துவதற்கு இந்த கால ஒழுங்கிலான கதைகள் வழி ஏற்படுத்தி இருக்கலாம். மறுபுறமாக மலையகப் பெண்கள் எழுதியுள்ளதான இந்தக் கதைகள் ‘மலையகா’ வின் உபதலைப்பாக குறிக்கப்படும் ‘மலையகப் பெண்களின் கதைகள்’ என்பதுவும் இரண்டு கேள்விகளை தோற்றுவின்றன.

மலையகப் பெண்களின் கதைகள் என்பது பெண்கள் எழுதும் கதைகளா? மலையகப் பெண்கள் பற்றியதான கதைகளா?

இந்த இரண்டு கேள்விகளில் முதலாவதுக்கு ‘ஆம்’என்றும் இரண்டாவதற்கு ‘இல்லை’ என்றும் பதிலளிக்கலாம். மலையகப் பெண்கள் எழுதும் கதைகள் மலையகப் பெண்கள் பற்றியானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுக்குப் படைப்புச் சுதந்திரம் உண்டு. ஆனால் பெண்களா லேயே வெளிப்படுத்த வேண்டிய பெண்களின் கதைகள் நிறையவே உண்டு. அவற்றை அவர்கள்தான் வெளிப்படுத்தியாக வேண்டும். அந்த இடைவெளி மலையகப் பெண்களின் கதைகளில் காணப்படுவதாகவே மலையகா சாட்சி பகர்கிறது. அதே நேரம் மலையக ஆண் எழுத்தாளர்களின் கதைகளில் படைக்கப்படும் பெண் பாத்திரங்கள் அல்லது பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தும் கதைகள் அவற்றை சொல்ல வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. உதாரணமாக அண்மையில் வெளிவந்த சு.தவச் சல்வனின் ‘ஆடுபாலம்’ கதைத் தொகுப்பில் சில கதைகளை அவதானிக்கலாம்.

மலையகப் பெண்களின் கதைகளைத் தொகுக்க வந்தவேளை அதில் முஸ்லிம் படைப்பாளர்களின் கதைகள் இடைவிலகிச் செல்வது தொடர்பில் முகவுரையில் ஜெயசீலன் எழுதியிருக்கும் குறிப்பு கவனத்துக்குரியது. அதே நேரம், மலையகப் பெண்களின் கவிதைகளை இதற்கு முன்னர் ‘இசை பிழியப்பட்ட வீணை’ எனும் தலைப்பில் வே.தினகரனைத் தொகுப்பாசியராக கொண்டு தொகுத்த போதும் இந்தச் சிக்கல் அவதானிக்கப்பட்டது.கிழக்கு மாகாண பெண் கவி அனார் புனை பெயர ஒன்றில் எழுதிய கவிதையும் கூட அதில் சேர்;க்கப்பட்டிருந்தது. ‘இசை பிழியப்பட்ட வீணை’ நூலுக்கு ‘ஊடறு’ சார்பில் ரஞ்சி (சுவிஸ்) தேவா (ஜேர்மனி) ஆகியோர் எழுதியிருக்கும் பதிப்புரையில ஒரு பகுதி இங்கு மீண்டும் நினைவுகூரத்தக்கது.

“பொதுவாக கவிதைகளின் பாடுபொருள் சமூகப் பிரச்சினைகள் சார்ந்தும், அரசியல் பொருளதாரம் சார்ந்துமே படைக்கப்பட்டுள்ளன. அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் ஒரு சமூகத்தில் பெண்ணியப் பார்வை அரிதாகக் காணப்படுவதை நாம் புரிந்துகொண்டுதான் ஆக வேண்டும். இவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற இலக்கியத் தளமும் கூட நாட்டின் மற்றையப் பகுதிகளில் வாய்க்கப் பெற்றதைப்போல பரந்து விரிந்ததல்ல. வசதி வாய்ப்புக் கொண்டதல்ல” (2007).
இத்தகைய புரிதலோடுதான் மலையகப் பெண்களின் கதைகளையும் ‘ஊடறு’ தொகுக்க முன்வந்திருக்க வேண்டும். இதற்கிடையே ஜெயசீலன், ஹெரோசனா தொகுத்த கோ.ந. மீனாட்சியம்மை படைப்புகளையும் ஒரு சேர தொகுக்க ஊடறு பங்களிப்புச் செய்துள்ளது என்பதை நினைவு கூரவேண்டியுள்ளது.

இந்த மூன்று பெண்ணிலைச்சார்ந்த தொகுப்புகளுக்காகவும் மலையக இலக்கியத் தளத்தின் சார்பில் ‘ஊடறு’வுக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதே நேரம் 2007 இல் இருந்த நிலைமைகளை விட மலையகப் பெண்கள் சூழலில் ஏற்பட்டிருக்கும் பின்வரும் அவதானிப்புகளைக் கவனத்தில் கொண்டு அடுத்த தொகுப்புக்குச் (அது மலையகப் பெண்களின் கட்டுரைத் தலைப்பாகக் கூட இருக்கலாம்) சொல்லலாம். குடும்பப் பொருளாதாரத்தை சுமந்தே ஆக வேண்டிய மலையகப் பெண்களின் சுமைகள் (ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது (House wife) கலாசாரம் இங்கு மிகமிக குறைவு), பெருந்தோட்டத் தொழில் சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளும் தொந்தரவுகளும், பெருந்தோட்ட முறை மாற்றமடைந்து அறிமுகப்படுத்தபட்டு வரும் காணிக் கொழுந்து (அவுட்குரோவர்) முறையில் இடம்பெறும் பெண்களின் உழைப்பு சுரண்டல்;, பெருந்தோட்டத் தொழிலுக்கு மாற்றாக அவர்கள் தெரிவு செய்யும் வெளிநாட்டுப் பணிப் பெண்கள் (இது குறித்து பேராதனை;ப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி. பஸீஹா அஸ்மி குழுவினர் அண்மையில் செய்த ஆய்வறிக்கை கவனத்தில் கொள்ள வேண்டிய மலையகப் பெண்களின் பல்வேறு பிரசசினைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது- நூலாக்கமும் பெற்றுள்ளது) ,

வெளிநகர வீட்டுவேலைப் பெண்கள் ஆகிய தெரிவுகளில் ஏற்படும் சிக்கல்களும் குடும்ப சிதைவுகளும், வீட்டு வேலைக்கு எனச் செல்லும் மலையகச் சிறுமியர்கள், வெளிநகர சிறப்பங்காடிகளில் ( Super Markets) ) விற்பனை உதவியாளர்களாக, காசாளர்களாக தமது பொருளதார வாழ்வைத் தொடங்கும் மலையக இளம் யுவதிகள் (இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டு வருவது அவதானிக்கப்படுகிறது), ஆண்கள் மட்டுமே ஆரம்பத்தில் தெரிவு செய்த கடைச்சிப்பந்திகள் தொழிலை இப்போது மலையகப் பெண்களும் தெரிவு செய்வது, தோட்டத் தொழிலுக்கு அடுத்து மலையகப் பெண்கள் தொழிற்படையாகத் திரண்டிருக்கும் ஆசிரியத் தொழிலில் அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், சாதனைகள், அதிகரித்து வரும் மலையகப் பெண் பட்டதாரிகள் : அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சாதனைகள் போன்ற இன்னோரன்ன மலையகப் பெண்களின் பேசப்படாத, பேசப்படவேண்டிய கதைக் கருக்கள் விரவிக்கிடக்கின்றன. இவை மலையகா 2 க்கான தேவையை வலியுறுத்த நிற்கின்றன. இவை குறித்து மலையகப் பெண் எழுத்தாளர்கள் கவனம் கொள்ளதபோது மலையகா (2) மே கூட மலையகப் பெண்களின் கதைகளின் தொகுப்புகளின் தொகுப்பாகவே அமைய வாய்ப்புண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *