என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!

மீனா சோமு -http://thetimestamil.com

meenaஎன் கதை…

தற்போது NIT என்று சொல்லப்படுகிற Regional Engineering College- இல் பொறியியல் படித்தவள். என் குடும்பத்தில், உறவில் எங்கள் அப்பா, அம்மா ஆகியோரின் உறவுகளில் முதல் பொறியியல் பட்டதாரி நான் தான்.

என் அப்பா, அவரது கிராமத்தில் முதல் முதுகலை பட்டம் பெற்றவர். அந்த கிராமத்தில் அக்ரஹார பிள்ளைகள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத போதும்,பத்தாம் வகுப்பை பெயில் ஆகாமல் பாஸ் செய்த பிள்ளையை, படிக்காத பெற்றோரும், படிப்புவாசனையற்ற உற்றாரும் பெருமையோடு (என் தந்தையை) மேலும் மேலும் படிக்க வைத்தனர். இது தான் என் தந்தையின் பின்னணி.

சிறுவயதில் இருந்தே முதல் மதிப்பெண், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, விவாதம், புத்தகங்கள் என என் பெற்றோர்கள் செதுக்கி செதுக்கியே வளர்த்தார்கள் என்னை. பள்ளியில் சில ஆசிரியர்கள், சாதியின் பெயரால் உதாசினப் படுத்தினாலும் சில ஆசிரியர்கள் என்னை கொண்டாடியதில், என் ஆளுமை சிதையாமல் காப்பாற்றப் பட்டேன். படிப்பிலும் மற்ற போட்டிகளிலும் வென்றதால் கல்லூரியில் நுழைந்த போதும் அவ்வாறே இருந்தேன்.

ஆனால் எனது ஆளுமையை என் கல்லூரி சிதைத்தது.

அங்கு கல்லூரி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் அடையாளம் வெறும் பதிவு எண் தான். அந்த பதிவு எண் , என் சாதியின் அடையாளமாக இருந்தது என்பதை நான் முதலில் அறிந்திருக்கவில்லை. இன்றும் என் பதிவு எண் (Roll number) மறக்கவில்லை. 922414, (92- batch, 24-branch, 14-th student which reveals my reservation category and rank by which I got selected). ஒவ்வொரு வருடமும் அந்த கடைசி 2 இலக்கங்கள் உள்ள நபர் குறிப்பிட்ட இடஒதுக்கீடில் வந்தவர். 4 வருடங்களும் நம் சாதியின் முகவரியோடு தான் விடைத்தாள்கள், நம் ஆசிரியர்களால் திருத்தப்படும். ஏனெனில் எங்கள் கல்லூரி தன்னாட்சி அதிகாரம் கொண்டது, அதனால் விடைத்தாள்கள், மதிப்பீடு எல்லாம் நமக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியரால் மட்டுமே வழங்கப்படும். ஆக எனது அதிகபட்ச மதிப்பெண் ஒரு போதும் 65 யை தாண்டியதில்லை, அது மட்டுமின்றி சராசரி எப்போதும் 50-54க்குள் தான். 50 என்பது தான் பாஸ் மார்க்.

இது கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் புரிந்தது. முதல் இரண்டு வருடங்கள், மதிப்பெண் குறைவாக வாங்க, என் தமிழ்வழி கல்வியையும், state board படிப்பையும், ஒரு சிறு டவுனில் படித்த பின்னணியும் என்று நானாக ஊகித்துக்கொண்டேன். முயன்று படித்தேன்… ஆனால் 3 மற்றும் 4 ஆவது செமஸ்டர் பின்னும் மதிப்பெண் குறைந்தே வாங்க… உற்சாகம் இழக்கலானேன்.

அதைவிட… என்னை கல்லூரி பேராசிரியர்கள் நடத்திய விதம்…

அந்த ஆசிரியர் பெயர் சின்னசாமி, 3 வருடங்களும் மிகமுக்கியமான தாள்களை அவர் தான் நடத்தினார். இத்தனைக்கும் அவருக்கு ஆங்கிலம் சரியாக பேச வராததால், வகுப்பு சரியாகவே புரியாது. முக்கிய லேப் வகுப்புகளுக்கும் அவர் தான் வருவார்.

அவரது லேப் வகுப்புகளில் என்னை மிக மிக இழிவாக நடத்துவார். தீண்டாமையின் உச்ச பட்ச வேதனையை அனுபவித்தேன். அவர் என்னை அழைக்கும் விதத்திலும், மற்ற ஆண் மாணவர்களின் முன் கேவலப்படுத்துவதிலும் கூனிக் குறுகிப் போகும் மனசு. இத்தனைக்கும் நான் லேபில் நன்றாகவே டெஸ்ட் செய்வேன். circuit connection, எல்லாம் சரியாக இருக்கும், ஆனாலும் ஏதோ குற்றம் சொல்வதும் viva கேட்கும் போது இழிவுபடுத்துவதும், உனக்கெல்லாம் இது வராது என அடிக்கடி சொல்வதும் என என் ஆளுமையை கிழித்து சிதைப்பதில் அவருக்கு ஒரு குரூர சந்தோசம் இருக்கும்.

அவர் ஒருவர் மட்டுமல்ல, பெரும்பாலான பேராசிரியர்கள் அப்படித்தான் நடந்தார்கள். பெரும்பான்மையான ஆசிரியர்கள் பிராமணர்கள், அவர்களுக்கு மற்ற மாணவர்கள், இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் , அவ்வளவு தான். இடஒதுக்கீட்டில் வந்தவர்களை அவர்களுக்கு அறிவிருப்பதற்கான அங்கீகாரத்தை தவறியும் கொடுக்க மாட்டார்கள்.

SC/ST மாணவர்களை பெரும்பாலும் ஃபெயில் செய்வதும், அவர்களை 4 வருடங்களுக்குள் படிப்பை முடிக்க முடியாமல் year back system மூலம் 5/6/7 வருடங்கள் இழுத்தடிப்பதும் சகஜமாக அந்த புகழ்பெற்ற தேசிய மண்டல பொறியியல் கல்லூரியில் நடக்கும்.

நான் 4 வருடங்களுக்குள் படிப்பை முடிக்க முடித்தாலும் 60.02 மொத்த விழுக்காடுகள் பெற்றும் 58.23 விழுக்காடுகள் (3 வருடங்களுக்கானது) பெற்றும் “இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி” என்ற முத்திரையோடு என்னை வெளியே தள்ளியது அந்த கல்லூரி. என் ப்ராஜக்ட் கைட் திரு வெங்கட்ட ரமணி அவர்களின் சாதிய வன்மத்திற்கு, என் பொறியியல் தேர்ச்சியை பிச்சையாக, அவர் முகத்தில் தூக்கி எறியத் தோன்றியது. ஏனெனில் அந்த பிராஜக்ட் முழுவதும் நான் எவ்வாறு உழைத்தேன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் அதில் கைவைத்து, என் “முதல் வகுப்பு தேர்ச்சியை” தடை செய்த அவருக்கும்… என் கல்லூரிக்கும் நான் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.

1 Comment on “என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!”

  1. ச்சே! கல்வி கற்ற காட்டுமிராண்டிகள்… 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *