தலித் இலக்கியம்- ஒரு பார்வை

கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை)

“நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவேயிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடி சனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால், ‘ஒரு தீண்டத்தகாதவர்- ஹரிஜனுடன் தொடர்பு கொள்வது என்பது உயர்சாதியினரின் கட்டுப்பாட்டுக்குள் நாமில்லை என்று அர்த்தம் தருமா?’ ‘கோயிலில் வாழும் தெய்வங்கள் தாழ்ஜாதியினரின் கோயிலுக்கான வருகையினால் கோபம் கொள்ள மாட்டார்களா?

அஜித் கோர், கே.சச்சிதானந்தன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு சார்க் எழுத்தாளர்களது இலக்கியக் காலாண்டு சஞ்சிகையாக டெல்லியிலிருந்து வெளிவரும் Beyond Borders’ 6ம் இதழ்- 2010, தலித் இலக்கியத்துக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து வெளிவந்திருக்கிறது. கண்டி- இந்திய உதவி ஸ்தானிகரது கருணையால் என் கரம் கிட்டிய அந்நூலை வாசித்தபோது, தலித் இலக்கியம், அம்மக்களது வாழ்வுமுறை, அவர்களது போராட்டம் இன்னபிற பற்றியெல்லாம் பெரு வியப்பும், மரியாதையும் ஏற்பட்டது என்னுள். அந்நூலில் நான் தரிசித்த உணர்வை தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியதன் விளைவே இந்தக் கட்டுரையாகும்.

திருமதி.அஜித் கோர் தனது குறிப்புரையில் ஆத்மா மீது நீடிக்கும் வடுக்களாக எங்ஙனம் சில பழையதும், அவ்வளவு பழையதுமில்லாத காயங்கள் ஆகின என்று தம் வாசகருக்கு தெரியப்படுத்தவென்று சில சம்பவங்களை உதாரணங்களாகக் காட்ட விழைகிறார்.

லாகூரில் 1939-40 களில், தனதான சிறுபால்யத்தின் வாயிலில் மிக அழகான பெண்மணியாக தன்னுள் பதிந்து கிடக்கும் மன்ஜா எனும் பெண்மணி பற்றிக் குறிப்பிட்டு, தனது வீட்டின் கழிவறைகளையெல்லாம் துப்புரவு செய்து தருகின்ற அந்தப் பெண்மணிக்கு தனது வீட்டு வேலைக்காரியால் நாய்க்கு வீசப்படுவது போன்று உணவு வீசப்படும்; விதம் தான் இப்போதும் நினைத்தும் வெட்கப்படுமளவு- கடவுளிடம் மன்னிப்புக் கோருமளவு- தன்னை வதைத்தது பற்றியும், லண்டனில் 1978 களில் ஒரு உயர்குலச் சீக்கியப் பெண்மணியால், ஒரு தாழ்ஜாதியெனக் கருதப்பட்ட இன்னுமொரு சீக்கியப் பெண்மணிக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை நேரில் கண்டு அடைந்த சொல்லொணா வெட்கம் பற்றியும் கூறி “நம்மைச் சுற்றிலும் ஒரு தவறான மனித சமூகமாகவே கருதப்பட்ட பெரும்பாலான இந்தத் தாழ்ஜாதி மக்கள் நமது வீடுகளைத் துப்புரவு செய்வோராக, வீதிகளில் குப்பை அள்ளுவோராக இருந்து கொண்டிருக்கின்றனர். இத்தகையதொரு பெரும்பான்மை சமூகத்தின் துயரங்கள், மனநோ பற்றியெல்லாம் எந்தளவு குருடாக இருந்துவிட்டோம் என்பதில் பிறக்கும் எனது தனிப்பட்ட கவலையின் காரணமாகவே, என் ஆன்மாவை துப்புரவு செய்யுமுகமாகவே இந்த இதழை தலித்துகளுக்காக இலக்கிய இதழாகக் கொணர விழைந்தேன்” என்கிறார் அவர்.

“பௌத்தர்களும், சைன் இலக்கியவாதிகளும் இந்தியாவின் சுதந்திரமான பாரம்பரிய இலக்கியத்தை வளப்படுத்தியவர்களாகக் கருதப்பட்டனர். 1970 களில் இந்தவகை இலக்கியங்கள் சமூகத்தின் கட்டுகளை உடைத்து முன்னொருபோதுமில்லாதவாறு புறப்பட்டுவர ஆரம்பிக்க, தலித் இலக்கியமும் கன்னட, மராத்திய, குஜராத்திய மொழிகளில் வீரியம் கொண்டு எழுந்தது. பஞ்சாபி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஒரியா, வங்காளம், மலையாளம் என பல மொழிகளில் பல எழுத்தாளர்களை தலித் இலக்கியம் தோற்றுவித்தது. இயற்கையும், கலாசாரமும், வரலாறும் அவர்களது ஆக்க இலக்கியங்களில் அதிகம் இடம்பிடித்துக் கொள்ள இந்தியாவின் குலச் சமூகமாகிய இவர்கள் தமக்கான வாழும் நிலத்திற்கான உரிமையையும், வாழ்க்கைக்கான உரிமையையும் கோர இலக்கியத்தை ஊடகமாக்கிக் கொண்டனர்” என்கிறார் கே.சச்சிதானந்தன் தனது ஆசிரியர் குறிப்புரையில்.
பகத் சிங்-சஹீட் அவர்களின் ‘தீண்டத்தகாதோர்’ எனும் தலைப்பிட்ட கட்டுரை பின்னோக்கிய கடந்த காலத்தைய சம்பவங்களை மீட்டுகிறது.

“நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவேயிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடி சனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால்இ ‘ஒரு தீண்டத்தகாதவர்- ஹரிஜனுடன் தொடர்பு கொள்வது என்பது உயர்சாதியினரின் கட்டுப்பாட்டுக்குள் நாமில்லை என்று அர்த்தம் தருமா? ‘கோயிலில் வாழும் தெய்வங்கள் தாழ்ஜாதியினரின் கோயிலுக்கான வருகையினால் கோபம் கொள்ள மாட்டார்களா?’, ‘ஹரிஜனங்கள் நீரள்ளுவதால் கிணற்றுநீர் குடிப்பதற்கு உகந்த நிலை என்கிற அந்தஸ்திலிருந்து நீங்கித் துப்புரவு கெடாதா?’, இருபதாம் நூற்றாண்டில் கூடஇவைபோன்ற கேள்விகள் கேட்கப்படுவது எத்தனை பெரிய தலைகுனிவு” என்கிறார் அவர். “இந்தியர் நாம் நம்மை மேன்மைச் சமூகம் என்று பீற்றிக் கொள்கிறோம் எனினும், நமது போலவே மற்றவர் நிலையை, சகமனிதனைப் பார்ப்பதற்குத் தயங்குகிறோம்.” என்று கவலையுறுகிறார் அவர்.

“மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்கள், இந்தியர்களாகிய நம்மைச் சமத்துவமான சமூகமாகக் கருதவில்லையெனக் குறிப்பிட்டு எதிர்ப்புக் குரலெழுப்ப நமக்கென்ன தகுதியிருக்கிறது?” என அவர் வினவுகிறார்.1926 இல் சிந்தி முஸ்லிம் ஒருவராகிய திரு.நூர் மொஹமட் பம்பாய் சட்டப்பேரவையில் குரலெழுப்பியதை அவர் ஞாபகமூட்டுகிறார். “இந்து சமூகம் சக மனித இனம் ஒன்றை பொதுப் பள்ளிக்கூடத்துக்குள் நுழைய அனுமதிக்காவிடின், ஒரு கிணற்றில் நீரள்ள அனுமதிக்காவிடின் அவர்களுக்கு தமது உரிமையின் பொருட்டு குரலெழுப்ப எந்த உரிமையும் கிடையாது.” என்கிறார் அவர்.

“எத்தனை வெட்கக்கேடு பாருங்கள். நமது மடிமீது நாயைக் கூட தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுகிறோம். அது நமது சமையலறையில் சுதந்திரமாய் உலவும். ஆனால், நம் சகமனிதன் ஒருவன் நம்மைத் தொட்டால் எமது தர்மம் அதற்கு இடம் கொடாமல் சினம் கொண்டு எழும்பும். தாய்மார் தமது குழந்தைகளைத் துப்புரவு செய்ய என்னென்ன கடமைகளையெல்லாம் செய்கிறார்கள். ஆயின், அவர்கள் அசுத்தமானவர்களா? நீங்கள் நீங்கள் மட்டுமே தேசத்தின் தூண்கள். தூங்கும் சிங்கங்களே! எழுந்திருப்பீர்களாக!” என அவர் வேண்டுகோள் விடுக்கிறார். ‘கீர்த்தி’யில் ஜுன் 1929இல் பஞ்சாபி மொழியில் வெளியான இக்கட்டுரையை பேராசிரியர் மல்விந்தர் ஜித் சிங் மொழிபெயர்த்திருக்கிறார்.

‘தலித் இலக்கியம் ஏன் முக்கியத்தவம் பெறுகிறது?’ என்கிற எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களது கட்டுரை, எல்லா இலக்கியங்களும் ஒன்று என இருக்கையில் தலித் இலக்கியம் என தனியொரு பிரிவாக ஏன் இது இருக்க வேண்டும் என்பது பற்றியும், உன்னத இலக்கியங்களின் தரத்தையும், அவற்றினது கற்பனை வளத்தையும் தலித் ஆக்க இலக்கியம் கொண்டுள்ளதா என்பது பற்றியும் அற்புதமாக ஆராய்கிறது.


அவர் கூறுகிறார்; “தலித்துகள் தீரா வறுமையை அனுபவிக்கிறார்கள். கற்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் படுவதாகயில்லை. பொருளாதாரச் சீர்குலைவுகள், சாதியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைகள், மனித உரிமைகளுக்கான முடிவுறா மறுதலிப்பு என்றெல்லாம் வேதனையை தாமுணர்ந்த விதமாய் இலக்கியத்தூக்கூடாக முன்வைக்கிறார்கள். அது அவர்கள் உள்ளிருந்து அனுபவித்த கசப்பூட்டும் பதிவுகளின் அறிக்கையாக இருக்கிறது. ஒரு மிதியுண்ட பெரும் மக்கள் திரளின் விழிப்பூட்டுகின்ற விடுதலையின் குரலாக அது தன்னை பிரதிநிதித்துவப் படுத்திக் கொள்கிறது.”

அந்தவகையில் தலித் எழுத்தாளர்களாக, கவிஞர்களாக மராத்தியில் எழுதிய சரண்குமார் லிம்பாலே, ஹிந்தியில் எழுதிய ஓம் பிரகாஷ் வால்மீகி, தெலுங்கு மொழியில் எழுதிய கொலகலூரி இனோச், கன்னட இலக்கியம் தந்த தேவனூர் மஹாதேவ், பஞ்சாபி இலக்கியம் கண்ட இலக்கியவாதிகள் பல்பிர் மதோபூரி, குர்தியல்சிங் இன்னும் பலரை பட்டியற் படுத்தும் இவர், “இவர்களே நீண்டகால மௌனத்தை, நீண்டநாள் துயரத்தை உணர்ச்சி கலந்த மனசின் குரலாக முன்வைத்தவர்கள்” என்கிறார்.

போலவே, தலித்திய நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சரித்திரங்களாகத் திகழ்கின்றன. உதாரணமாக, வினோதினி தெலுங்கு பாஷையில் படைத்த ‘கறுப்பு மை’ எனும் சிறுகதை ஒரு உயர்குலத்தில் பிறந்த சின்னஞ் சிறுமி தலித்துகளை வெறுத்து ஒதுக்க கொடூரமாகப் பயிற்றுவிக்கப்படுவதை உணர்வுபூர்வமான கவிமொழியில் முன்வைக்கிறது. இதுபோல பல உதாரணங்களைக் கூறி , சமூகத்தின் ஒரு பகுதியான இம்மக்கள் அனுபவித்த கீழ்த்தரமான அவலத்தை வாழும் உதாரணங்களுக்கூடாகக் காட்டி, தலித்துகளின் சிறுகதைகள் என்னவாய் அவர்களது ஆக்கத்திறனை கண்முன் தருவிக்கின்றன என வியக்கிறார் அவர்.

“தலித்தியக் கவிதைகளோ ஆழ்மன உணர்வுகளின் தன்னிச்சையான வெளிப்பாடுகளாகும். அதனூடாக சாதி முறைக்கான எதிர்ப்பையும், சினத்தையும் காட்டி சுதந்திரத்துக்கும், நீதிக்கும் அவர்களது மனங்கள் அவாவுறுவதை அக்கவிதைகள் இயம்பி நிற்கின்றன. இந்து புராணங்களில் ஏகலைவன், துரோணாச்சரியார், அகலிகை போன்ற பாத்திரங்கள் தலித் கவிதைகளின் நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுகின்றன.

அகலிகை உயர்குல ஆண்வர்க்கத்தால் குரூரமான முறையில் சிதைக்கப்பட்ட பெண்ணாக, பாலி சுதந்திரத்துக்கு ஏங்கும், அநீதியை எதிர்க்கும் ஆன்மாவாக, துரோணாச்சாரியார் ஏமாற்றுக் குணமுடைய குரூர குருவாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். மல்கான் சிங்கின் ஹிந்திக் கவிதை ‘ஓ! கேளும் பிராமணரே’ தயானந்த் படோகியின் துரோணாச்சாரியாரே, இக்கவிதைகளை செவிமடுங்கள்’ மற்றும் பல்பிர் மதோபூரியின் கவிதைகள், சிவசாகரின் ‘நடைமுறைச் சரித்திரம்’, வத்தேபோயினா ஸ்ரீனிவாசனின் ‘இன்னுமொரு தாஜ்மஹால்’ போன்ற கவிதைகள், குரூர புத்தியால் ஒரு இனத்தை அடிமைப்படுத்தி அடக்குமுறைக்கு ஆளாக்கும் உயர்குலத்தாரை, தனது பழைய துருப்பிடித்த வில்லை சூட்டில் வெப்பமாக்கிப் பழிதீர்க்கப் புறப்பட்டிருக்கும் ஒரு நவீன ஏகலைவனை நமக்கு அறிமுகம் செய்கின்றது.

ஹிந்தி கவிஞையான பெண்ணிலைவாதி ராஜட் ராணி மீனு எழுதிய ‘ஏன் ஒரு இலைதானும் அசையவில்லை?’ எனும் தலைப்பிட்ட இக்கவிதையைப் பாருங்கள்.

“நாம் பாலியல் வன்முறை செய்யப் பட்டபோது,
ஒரு கும்பலே கூடி நம்மைக் பாலியல் வன்முறைசெய்த போது
ஏன் ஒரு இலைதானும் அசையவில்லை?”

இப்படி நீளும் இக்கவிதை உயர்குலப் பெண்களுக்கு இது நடந்துவிட்டால் பாராளுமன்றமே ஆட்டம் காணும் எனவும், பெண்ணிலைவாதிகள் புரட்சிக் கொடிகள் தூக்குவர் எனவும், கற்பழித்தவனுக்கு மரணதண்டனை கூடக் கொடுத்துவிடுவர் எனவும் எடுத்துக்கூறி, ஒரு கும்பலே கூடித் தம்மைக் கற்பழித்தபோது அனைவரும் மௌனம் காத்ததை வன்மமாய்ச் சாடி நிற்கிறது. அதற்கான காரணம் மொழிந்து கவிதை இவ்வாறு நிறைவு செய்யப்படுகிறது. “ஏனெனில் நீங்களோ உயர்குலத்தார்@ நானோ வெறும் தலித்.”

இழிசனரினது துயரங்களையும், வலியையும் அப்படியப்படியே எடுத்துரைத்து, சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப அவர்கள் செய்திருக்கும் காத்திரமான பங்களிப்பின் காரணமாக அவ்விலக்கியம் குறிப்பிடத்தக்களவில் முக்கியத்துவம் பெறுகிறது.” என்கிறார் எஸ்.ஸ்ரீனிவாசன்.

‘தலித் இலக்கியமும் அழகியலும்’ என்ற சரண்குமார் லிம்பாலேயின் கட்டுரை அடுத்து தொகுதியை அலங்கரிக்கிறது. தலித் இலக்கியமானது தனியொரு இலக்கியப் பிரிவு எனக் கொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிற சில விமர்சகர்களது கருத்தைப்பற்றிக் குறிப்பிடும் அவர், அது பற்றிய பரவலான கருத்துக்கள் பலவற்றை முன்வைக்கிறார்.

“1967 இல், தலித் இலக்கியம் சம்பந்தமான கருத்தரங்கொன்று மஹாராஷ்திரப் பகுதி சாகித்திய மண்டல இலக்கிய மாநாட்டின் ஒரு பகுதியாக மஹாபாலேஷ்வர் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாம். தலித் எழுத்தாளர்கள் பலரோடு தலித் பேச்சாளர்களல்லாத பிம்ராவ் குல்கர்னி, வி.டி.ஞாதே, வித்தியாதர், கவி அனில் போன்றோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்களாம். தனது கருத்தை முன்வைத்து கவி அனில் பேசுகையில், “தலித்துகளின் வாழ்வு பற்றி அனுதாபக் கண்ணோட்டத்தோடு எழுதப்படுபவை தலித் இலக்கியங்களாகும்.” என்கிறார்.

முதற்பார்வையில் இந்தக் கருத்தானது பெருந்தன்மையானது போலத்தான் தோன்றுகிறது. எனினும், இதற்குப் பின்னே வேறொரு வித்தியாசமான கருத்து கண்ணுக்குத் தெரியாமல் இயங்க ஆரம்பிக்கிறது. தலித்துகள் மட்டுமே தலித் இலக்கியத்தை எழுத முடியும் என்பதை மறுக்கிற கவி அனில், தலித் அல்லாதோரும் தலித் இலக்கியம் படைக்கலாம் எனவும், அது தலித்துகளின் ஏகோபித்த ஆளுமைக்கு உட்பட்டதொன்றுமல்ல என்கிறார்.

வித்யாதர்; முன்வைத்துள்ள கருத்தின்படி தலித்துகள் மட்டுமே தலித்துகளின் துயரறிவர் எனும் கருத்து ஓரளவுக்கு மாத்திரமே உண்மையாகும் என்கிறார். கற்பனைத் திறனோடு தலித்துகளின் அனுபவங்கள் கலந்து கொடுக்கப்படுபவையாகவும் அது இருக்க முடியும் என்கிறார் அவர். எனினும், இன்று வரை தலித்தியர்கள் அல்லாத இம்முதல்வர்கள் தம் கற்பனாசக்தி எங்கு சென்று ஒளிந்து கொண்டுள்ளது என்பது பற்றிய தெளிவுகள் ஒன்றும் அவரது உரையில் கிடையாது எனக்கூறும் லிம்பாலே “இறந்த விலங்குகளது உடல்கள் வெட்டுவது அகற்றுவது என்பவற்றையெல்லாம் தலித்தியரல்லாத படைப்பாளி ஒருவர் எங்ஙனம் தன் கற்பனை கலந்து கொடுத்திட முடியும்? தீண்டத்தகாதோரின் ஹிருதயங்களில் துளிர்க்கும் கோபத்தின் கனலை இவர்கள் தம் நாதியற்ற கற்பனைத் திறன் எப்படிக் கொணரும்? தன் கிராமத்தின் எல்லையை விட்டு தானே வெளியேறி வராத வித்யாகரது கற்பனைத் திறன் மட்டும் வெளியேறி வந்து விடுமா?” என வினா தொடுக்கிறார்.

“தலித் இலக்கியம் என்பது பிறப்பால் தலித்துகளானோரால் எழுதப்படும் புறக்கணிப்பினது காயங்களை எடுத்தியம்பும் தலித்துகளின் மனசாட்சியின் வெளிப்பாடுகளேயாகும். தலித்துகள் அனுபவிக்கும் இனம்சார்ந்த துயரம் கப்பிய அம்சங்கள் மற்றும் அனுபவங்களை கற்பனை கலந்தெல்லாம் கொடுப்பது என்பது ஒருபோதும் சாத்தியப்படாது. தமதான பிரச்சினைகளையும், வினாக்களையும், வலியினையும் சுமக்கும் வாகனமாக இலக்கியத்தை அவர்கள் கண்டார்கள்” எனக்கூறும் சரண்குமார் லிம்பாலே, “அவர்களது இலக்கியமே அவர்களது வாழ்வாக இருந்திருக்கிறது. அது வெறுமனே சந்தோசத்துக்காக மட்டுமே படைக்கப்படும் இலக்கியம் என்று தான் கருதவில்லை எனவும், அதனாலேயே தலித் இலக்கியத்தின் அழகியல் மற்ற இலக்கியங்களது அழகியலிலிருந்து வேறுபடுகிறது. கூடவே, அம்பேத்காரினது எழுச்சியூட்டும் சிந்தனை தலித் இலக்கியத்துக்கு வீரியம் கொடுத்தது. ” எனவும் தன் கருத்தை முன்வைக்கிறார்.

dalitwomen 2

மனித இனத்தவர்கள்; என்ன அழகின் மீதான பித்து மட்டும் கொண்டவர்கள் தானா என வினவும் அவர், சமத்துவத்தையும், நீதியையும், நேஸத்தையும், விடுதலையையும் வேண்டுகின்றவை அவர்களது எழுத்துக்கள் எனவும், அவற்றின் பொருட்டே அவர்கள் தம்மையேதான் தியாகம் செய்திருப்பவர்களும் கூட என்ற கருத்தையும் முன்வைக்கிறார். அழகினை நாடியும், சந்தோசத்தினை நாடியும் உலகில் இதுவரை புரட்சிகள் எதுவும் நடந்ததுண்டா என வினா எழுப்பும் சரண்குமார் அவர்கள்;, பெரும்பாலான இராச்சியங்களோ நீதி, சமத்துவம், விடுதலையின் காரணத்தால் மாற்றம் கண்டிருப்பதையும் சுட்டுகிறார். சந்தோசம் நாடி எழுதப்படும் இலக்கியங்கள் நம்முள் குதூகலத்தையும், அனுதாபத்தையும் தோற்றுவிக்கிறதென்றால் புரட்சி இலக்கியங்கள் மனிதனின்சுயமரியாதையினது மனசாட்சியினைத் தட்டி எழுப்பிய பணியைச் செய்திருப்பதாக அவர் வாதம் செய்கிறார்.
பி.பி;.அஜய்குமார் அவர்களது கட்டுரை தலித் பெண் படைப்பாளிகள் பற்றியும், அவர்களது இலக்கியங்கள் பற்றியும் ஆராய்கிறது.

thlumpugal kayankalaagi-s

பாமாவினது ‘கருக்கு’(2000), ‘சங்கதி’(2005), மற்றும் சிவகாமியின் ‘மாற்றத்தின் மீதான பிடிப்பு’, தலித் ஆர்வலர் சீ.கே.ஜானுவின் ‘தாய் வனம்’ போன்றவை ஆரம்ப அலையை ஏற்படுத்திய ஆக்கங்கள் எனவும், தலித் பெண்களின் எழுத்துகளில் அவை பெரும் சீர்த்திருத்தத்தைக் கொணர்ந்தவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். அடிமைத்தளையின் அனுபவங்களிலிருந்து வெளிப்பட விரும்பும் குரல்களாக அவை ஒலிப்பன. ஒன்றை நாம் காணுகின்ற, நாம் கதைகூறுகின்ற பழைமையான பாணியிலிருந்து அவர்களது எழுத்துகள் வேறுபட்டு நின்று சவால் விடுப்பன. மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு அவர்தம்; பிரச்சினைகளை அவை தெளிவுற முன்வைப்பனவாகவும் உள்ளன. இவ்விழிசனப் பெண்களின் எழுத்துக்கள் ஏனைய உயர்குலப் பெண்களின் எழுத்துகளைவிட வேறுபட்டு நிற்க யாது காரணம்? தமக்கான தனித்துவமான கதைகூறும் பாணியொன்றை அவர்கள் எல்லாவிதத்திலும் தேர்ந்தெடுத்தது எப்படி? இவ்வெல்லா வினாக்களுக்கும் தலித் பெண்கள் சிலரின் எழுத்துக்களிலிருந்தே விடைகளைத் தேடி உதாரணங்களாக முன்வைக்கிறார் அஜய்குமார்.

பாமாவின் ‘சங்கதி’ தலித் பெண்களின் முடிவில்லாப் போராட்டத்தை முன்வைப்பது. அதிலே பாட்டியின் விமரிசனம் ஒன்று தலித் பெண்களின் துயர் நிலையைச் சொல்லும் இப்படி:- “பெண்கள் தாம் நெனச்சமாதிரியெல்லாம் தம் நிலை மறந்து இந்த இடத்துக்கெல்லாம் வரக் கூடாது. மேல்சாதியினரின் கண் உன்மேல பட்டுட்டா போதும் நீ முடிந்தாய். இழுத்துப்போய் உன்னை கற்பழிச்சு சூறையாடிடுவாங்க.” இப்படிப் பாட்டியாகவும், தாயாகவும் ஒளிரும் பாத்திரங்களின் ஒலிக்கின்ற ஆக்ரோஷக் குரல்கள் பல சேதிகளை முன்வைக்கின்றன. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு அதன் கருத்துகளை அப்படியப்படியே முன்வைக்கத் தவறி விட்டதாகவும் வாதம் செய்யப்படுகிறது. ‘பொம்புள’, ‘பொட்டச்சிக’ போன்ற சொற்களை அடையாளப்படுத்த வெறும் ‘வுமன்’ என்கிற சொல்லாட்சி போதுமா எனக் கேள்வியெழுப்புவர் விமர்சகர்கள்.

தலித் சமூகப் பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக்கப்படவில்லை. கலாநிதி. சுசீலா தாக்பூர் ஹிந்தியில் எழுதுகின்ற தலித் பெண்ணிலைவாத எழுத்தாளர் ஆவார். அவரது தன் வரலாறு கூறும் நூலில் தன் தாய் பள்ளி செல்லவிடாமல் வீட்டில் தடுத்து வைக்கப்பட்ட குரூர அனுபவத்தை அற்புதமாக விளக்குகிறார்.

“என் தாய் பன்னாபாய் அவர்களால் பள்ளி செல்ல முடியவில்லை. ‘பெண்பிள்ளைகள் படிச்சு என்னத்த செய்யப்போகுதுகள்?’ என்கிற மாதிரி மனோபாவமே அங்கு காணப்பட்டது. அத்தகைய மனோபாங்குடன் தீண்டாமையின் அகோரக்கரம் அவர்களது கல்விக்கான சகல கதவுகளையும் அடைத்தே வைத்துவிட்டது.” எனக்கூறும் அவர் மேலும் சொல்கிறார். “சாதியும், கண்மூடித்தனமான அடக்குமுறைகளும் ஆழமாக வேரூன்றியிருந்த மத்திய பிரதேசக் குடும்பங்களிலிருந்து அவர்களை எதிர்த்து வெளிக்கிளம்புகின்ற சக்தியை நாம் பெற்றிருக்கவில்லை.”

சில ஹரிஜனப் பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் அதிருஷ்டவசமாக. பாமாவின் தன் வரலாறு கூறும் நூலாகிய ‘கருக்கு’வில் அவரது அனுபவம் இப்படிப் பேசுகிறது.

“எப்போதுமே நமது வகுப்பாசிரியர் மற்றும் உடற்பயிற்சிக்குப் பொறுப்பான ஆசிரியர் ஹரிஜனப் பிள்ளைகளை நிற்கச் சொல்லியே பணிப்பார். பாடவேளையோ, காலைக்கூட்டமோ நாம் நின்று கொண்டேயிருப்போம். அவர்கள் எப்போது நம் பெயரை அடையாளப் படுத்துவரோ அப்போதே நாம் உட்கார அனுமதிக்கப் படுவோம். மிகப் பாதிக்கப்பட்டதாய் உணர்ந்தோம். ஏறக்குறைய இரண்டாயிரம் பிள்ளைகள் முன்னே வெட்கத்தில் தலைகுனிந்து ஏதோ தவறு செய்துவிட்டமாதிரி நிற்போம். ஆம். அது பெருத்த அவமானம். வறுமையுடன் இந்த அவமானம் ஏராளமான பள்ளி மாணாக்கரை கல்வி நிறுவனங்களைவிட்டு பாதியில் இடைவிலகுமாறு செய்து விட்டிருந்தது.”
சுசீலா தாக்பூர் மாறுபட்டதொரு கதை வைத்திருக்கிறார் சொல்லுவதற்கு.

“நான்காம் வகுப்பு. உயர்சாதிப் பிள்ளைகளுக்கு ஆசிரியர் சங்கீதமும், நடனமும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் அக்குழுவில் அனுமதிக்கப் படவில்லை. ஒருநாள் நடனப் பயிற்சியில் எனக்கும் கலந்து கொள்ள ஆசை பிறக்கவே குழுவில் நானும் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தேன். சாந்தி பெஹன்ஜி(ஆசிரியர்) குழுவை விட்டும் என்னைத் துரத்தியடித்து “நீ எப்படி இவர்களிடையே வர முடிந்தது? நீ ஆடக்கூடாது இவர்களோடு” என்கிறார். எனக்கு அவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்கிற காரணம் புரியவில்லை. ‘சிலவேளை அவர்கள் உயர்சாதியினர் என்பதனால் இருக்கும்.’

child labour

“தாழ்ஜாதியில் பிறந்துவிட்டால் நாம் இழினர் என்றே மரணம் வரை கருதப்பட்டோம்” எனத் துயருறும் பாமா, “மரணத்தின் பின்னும் அந்நிலைபாடு முற்றாக மறைந்து விடுவதில்லை.” என்கிறார். “சாதிப்பிரினை எல்லா மூலைமுடுக்குகளையும் ஊடுருவி, நம்மைப் பைத்தியங்களாக்கி அலைய விடும்வரை ஓயாதிருந்தது. இந்த மனப்பாங்கு கல்வியில் முன்னேற்றம், கல்விக்கான வழிவகைகளைத் தேடல் என்பதிலிருந்தெல்லாம் நம்மை சதாவும் அப்பால் வைத்திருந்தது.” என்கிறார் ‘கருக்கு’வில்.

தலித் தெலுங்குக் கவிஞை சல்லாப்பல்லி ஸ{வாருப்பரணி தனது கவிதை ஒன்றிலே தலித் பெண்கள் சமூகத்தில் கட்டுண்டு வைக்கப்பட்டிருக்கும் இழிநிலை குறித்துச் சொல்கிறார். அக்கவிதையின் இடைநடு வரியொன்று இப்படி நீளும்.

“அந்த அபாயம்
என்றென்றைக்குமாகச் சூழ்ந்தேயிருக்கிறது,
கிணற்றடிக்கும் குழிக்குமிடையே
நம்மை நசுக்கி வைத்து.
நான் என் சொந்த வாழ்வை
வாழ்ந்தது எப்போது நிகழ்ந்தது,
ஒரு கன்னத்தே அறைந்து
ஆண் வீட்டிலே நம்மைக் கட்டுப்படுத்த
வீதியில் மறுகன்னத்தே அறைந்து
சாதி நம்மைக் கட்டுப்படுத்துகையில்… ?”

‘தீண்டாமையின் புது வடிவங்கள்’ என்றொரு செய்தித் துணுக்கு பல அதிர்வு தரும் சேதிகளை முன்வைக்கின்றது.
மயிர் சிரைக்கும் நாவிதன் கடையிலே கூட ‘மற்றையது’ எனக் குறிப்பிட்டு வேறாக ஒரு கதிரை இருக்குமாம் இவர்களுக்காக தமிழ்நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் கூட.

மதுரை மாவட்ட தணியமங்கலம், ஆண்டார்கோட்டாரம் போன்ற கிராமங்களில் தபால்காரன் தலித் குடியிருப்புகளுக்குள் செல்ல மறுப்பதால் காசோலையோ, தந்தியோ, கடிதமோ பெற அவர்கள் தாமாகவே தபாலகங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளதாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் உயர் ரக நாய்களை வளர்ப்பதற்கும் தலித்துகளுக்கு அனுமதி கிடையாது@ மாட்டுவண்டி, சைக்கிள் ஓட்டவெல்லாம் அனுமதி கிடையாது@ பண்டிகை நாட்களில் மத்தாப்பு கொளுத்த அனுமதி கிடையாது@ பொதுப் பஞ்சாயத்துக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்க்க இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை@ லொண்டரிகளில் தனியாக அலுமாரிகள் வைக்கப்பட்டு இருக்குமாம் இவர்களுக்காக@ அருந்ததியார் இன மாணாக்கர் மட்டுமே பள்ளிக்கூடங்களில் கழிவறைகள் துப்புரவு செய்;தாக வேண்டுமாம்.

‘மாடசாமி’, ‘முனியசாமி’ போன்ற பெயர்களை உடையோர் ‘சாமி’ எனப்படும் சொல்லானது மரியாதைச்சுட்டாக இருப்பதால், அதைத் தவிர்த்து ‘மாடன்’ என்றோ, ‘முனி’ என்றோதான் அழைக்கப் பட்டாக வேண்டுமாம். மனித மலத்தை உண்ண அவர்கள் வற்புறுத்தப்படும் நிலையும் உள்ளதாம். இவை பற்றி மாவட்டக் கலெக்டருக்கு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் பெரும்பாலும் வெற்றி காண்பதில்லை என அறிவிக்கும் அரச தரப்புச் செய்தியாளர் “பெரும்பாலும் உயர் குலத்தாருக்கு மறைமுக ஆதரவு காட்டுவோராக பொலிசார் இருப்பதே இதற்குக் காரணம்” என்கிறார்.

கலாநிதி. ஈ.வி.ராமகிருஷ்ணன் ‘சுயமும் சமூகமும்’ என்ற தனது கட்டுரையில் தலித்திய தன் வரலாறு கூறும் கதைகள் பற்றி ஆராய்கிறார். “தலித்திய தன் வரலாறு கூறும் கதைகளின் மாதிரிகள் இதுவரை காணாத புது மாதிரிகளாக உள்ளன.” எனக்கூறும் இவர், உதாரணங்கள் பலதை முன்வைக்கிறார். ‘அக்கார்மாஷி’ எனப்படும் சரண்குமார் லிம்பாலேயின் வாழ்வியல் நூலானது வறுமைக்கும், இனப்புரட்சி பாகுபாடு என்பவற்றுக்குமிடையே நடைபெற்ற போராட்டங்களின் ஆவணம் என்று கூடச் சொல்லலாம்.

‘பாகாரி’ எனப்படும் ஒருவகை உணவுப்பண்டத் திருட்டைப் பற்றி அவர் வர்ணிப்பார் இப்படி:- “ ‘பாகாரி’ மனிதனைப் போலவே விசாலமானது. அது வானம் போல பரந்தது. சூரியனது பிரகாசம் போலயிருக்கும். பசி மனிதனைவிடப் பெரியது. நரகத்தின் ஏழு வளையங்களை விடவும் பெரியது. மனிதன் ‘பாகாரி’யின் அளவு அல்லது அவனது பசியினது அளவே பெரியவன். பசி அவனைவிடச் சக்தி வாய்ந்தது. ஒரு தனி வயிறு இந்த அண்டத்தைப் போல….” நாளாந்த வாழ்வுக்கான அவர்தம் போராட்டத்தை அற்புதமாகத் தொடங்கிச் செல்வார் அவர் இப்படி.

லக்ஷ்மன் மானே அவரது வாழ்வியல் நூலான ‘உபாரா’வில் மத்தியதர வர்க்கத்தினரான மகாராஷ்டிரியருக்கும், ‘காய்காடி’ சமூகத்தினருக்குமான இடைவெளியைக் காட்டுகிறார். “நான் உள்ளார்ந்து பொங்கிய கோபத்தில் கொதித்தேன், இன ரீதியாக தரக்குறைவாக நடத்தப்பட்டபோது. அந்த வயதிலும் என்னால் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிந்தது.” என்கிறார். இந்த வாழ்வியல் நூல்கள் அச்சமூக அமைப்பின் பண்புத்தரத்தை அற்புதமாக விபரித்து நின்றன.

சங்காரு காரத் தனது நூல் ஒன்றில் தனது தந்தை அழுகி நாறும் சடலமொன்றைக் கிணற்றுக்குள்ளிருந்து எடுக்குமாறு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிலால் பலவந்தப்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறி, “ஓரளவேனும் நம் உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளவே நான் சட்டத்தரணியாகவும் ஆனேன்.” என்கிறார். பொது உலகுக்கு முகம் கொடாத ஒரு புறப்பிரதேசத்திலே தாம் வாழ நேர்ந்த அவலத்தை அவர் அதிலே அடிக்கடி மீட்டிச் செல்கிறார்.

சித்திலிங்கையா தனது நூலில் புதைகுழிக்கருகே தாம் வாழ நேர்ந்தது பற்றி விபரித்துச் செல்கிறார். நண்பர் தன்னைப் பற்றி விசாரித்து வந்தால், “அவன் புதைகுழியில்” என்று அம்மா சுருங்கக் கூறுவாராம். ஒருதடவை அம்மா அப்படிக் கூறியதை ஒரு நண்பன் தவறாக விளங்கிக் கொள்ள நேர்ந்து, “ஏன் அவன் இறந்து விட்டானா?” எனக்கேட்டு அதிர்ந்து போனதை ஞாபகிக்கிறார்.

பாமா ‘கருக்கு’வில் எழுதுகிறார். “நாயக்கர் குடும்பம் வீச ஆயத்தப்படுத்தியிருந்த உணவை பாட்டி எடுத்துக்கொண்டு வருவதை நான் முன்னமேயே அறிந்திருந்தேன். ஒருநாள் பாட்டியோடு நானும் சென்றிருந்தேன். தன் வேலைகளை முடித்து தான் கொணர்ந்த பாத்திரத்தை பாட்டி கழிவுநீர்க் கானருகே வைக்கிறார். நாயக்கர் பெண் வந்து தூரமாய்த் தள்ளி நின்று பாட்டியின் பாத்திரத்தில் உணவைப்போட்டார். நான் அதை எதிர்த்தபோது பாட்டி இப்படிச் சொன்னார்,

“இவர்கள் மஹாஜனங்கள். இவர்கள் இல்லையெனில் நாம் உணவின்றிச் சாக வேண்டியதுதான்.”
ஓம் பிரகாஷ் வால்மீகி தனது வாழ்வியல் நூலுக்கு ‘வீசப்பட்டவை’ என்றே பெயரிட்டிருக்கிறார். வீசப்பட்ட பூரிகள் மழைக்காலம் கருதி காய வைக்கப்படும் அனுபவத்தை அதிலே அவர் விபரிக்கிறார்.

சரன்குமார் வாழுதற்காக குப்பை சேகரித்த அனுபவத்தைச் சொல்வார். குப்பையில் பொறுக்கும் காகிதங்களை தான் வாசிக்கவென்று நின்று தாமதிப்பதை ஞாபகமூட்டுகிறார். “ஒரு கையில் குப்பை இருந்தது. மறு கையில் நமதான பசியை நாம் சுமந்திருந்தோம். அவர்கள் நாம் சேகரித்த குப்பைகளின் பாரத்தை அளவிடுவர். குப்பைக்கு பதிலாக நமது பசி அளக்கப்பட மாட்டாதா என நான் ஏங்குவதுண்டு. அப்போதுதான் நம் பசியின் கனம் தெரியலாம். சிலவேளை நமது பசியை மட்டுமன்றி, நம்மையே அளக்கத் தராசிலே நிறுத்த வேண்டுமென்று நான் விரும்பினேன். நாள் முழுக்க நாம் தேடிய குப்பைகளின் அளவுக்கேனும் நாம் இருக்க மாட்டோமா….?”

பாமாவின் இன்னொரு அனுபவம் இப்படி நீண்டு செல்கிறது. ஒருதடவை பள்ளியில் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டதாம் பாமாவுக்கு. “நீ உண்மையான பறையர்களது தன்மை என்னவென்று நிரூபித்து விட்டாய்.” என்று ஆசிரியர் ஏசியிருக்கிறார். அன்று அழுததைச் சொல்லி அவர் தொடர்ந்து எழுதுகிறார் “இன்னமும் அந்த அழுகை தொடர்கிறது….”என்பதாக.

ஓம் பிரகாஷ் வால்மீகி வகுப்பறையைக் கூட்டிப் பெருக்க எப்போதும் பலவந்தப்படுத்தப்படுவாராம். ஆனால், வகுப்பறையில் அமர உரிமை கிடையாதாம் அவருக்கு. கிராமத் தலைவரிடம் இது பற்றித் தன் தந்தை முறைப்பாடு செய்தபோது, “வகுப்பைக் கூட்டத்தானே கேட்க்கப்பட்டான். அது என்ன பெரிய விடயமா?” என்று கேட்டாராம் கிராமத்தலைவர்.

சமூகத்தில் சேர்க்கப்பட்ட இவ்வாறான அனுபவங்களின் தொகுப்பாக இந்த சுயவரலாறு கூறும் நூல்கள் உள்ளன. “நான் துடைத்து அழிக்க முயன்ற இனப்பிரச்சினைகளின் கறை இருட்டுச் சூழ்ந்து கிடந்தது. நான் உடைந்து போனேன். ஒரு குரூர நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் நோயிலிருந்து மீண்டு வந்தால் இருக்க முயலுவானே அது போல முயற்சித்து என்னை நான் நிலைநிறுத்தினேன்.” என்கிறார் மானே. “வெட்கக்கேட்டினதும், கீழ்த்தரத்தினதும், புரட்சியினதும் சேகரிக்கப்பட்ட அனுபவங்களாக மிளிர்ந்து, ஏனைய சாதாரண சுயவரலாறு கூறும் கதைகளிலிருந்து அவை மாறுபட்டு நிற்பதைக் காண்கிறோம்.” என்கிறார் ராமகிருஷ்ணன் அவர்கள்.

அடுத்து பாமாவுடனான நேர்காணல் ஒன்று இடம்பெறுகிறது. பாமா 1958ல் மதுரைக்கருகில் புதுப்பேட்டையில் பிறந்தவர். 18ம் நூற்றாண்டுகளில் அவரது குடும்பம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக் கொள்கிறது. அவரது தந்தை சூசைராஜ் இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். தன் முழுச் சம்பளத்தையும் தன் குழந்தைகளின் கல்விக்காகவே செலவழித்தார். தாயாரது பெயர் செபஸ்தியம்மா. பாமா தூத்துக்குடியிலுள்ள சென்.மேரி கல்லூரியில் தன் கற்கை முடித்து, கல்விமாணி கற்கையின் பின்னர் ஆசிரியையாகக் கடமை புரிந்து, சில காலத்தின் பின்னர் ஒரு கொன்வன்டில் கன்னியாஸ்திரியாக வரவேண்டுமென்ற கனவில் இணைந்து கொண்டு ஏழு ஆண்டுகளின் பின் அங்கும் பாகுபாடு நிலவுவதைக் கண்டு உளம் கொதித்து, அதையும் கைவிட்டு, மறுபடியும் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர். இப்போது காஞ்சிபுரம் அருகே ஒரு பாடசாலையில் பணியாற்றுகிறார். 1992ல் அவர் எழுதிய ‘கருக்கு’ வாழ்வியல் நூலானது, அவரை ஒரு கவனத்துக்குரிய சிறந்த எழுத்தாளராக உலகுக்கு இனங்காட்டியது. ‘சங்கதி’, ‘வன்மம்’, ‘குசும்புக்காரன்’, ‘ஒரு தாத்தாவும், எருமையும்’ போன்றவை அவரது இதர படைப்புகளாகும்.

“ ‘நான்’ என்கிற கோபாவேசத்துக்கும், பொதுவான தலித் பெண்களுக்குமிடையேயான மனமுரண்பாட்டைத் தணிக்கவே ‘கருக்கு’ எழுதப்பட்டதா?” என்கிற கேள்விக்கு பாமா இப்படி பதிலளிக்கிறார்.

“ ‘கருக்கு’ உண்மையில் என் வாழ்வில் என்னை மிக வருத்திய வலிகளினால் உண்டான படபடப்பிலிருந்து தணியச் செய்து கொள்ள எனக்கு நானே எழுதிக் கொண்டது தானே தவிர, பிரசுரம் கருதி எழுதப்பட்டதல்ல. ‘கொன்வன்டை’ விட்டுச் சென்றபோது, ஜீவிதம் எப்படியிருக்குமென்று நான் அறிந்திருக்கவில்லை. என்னிடம் எந்தக் கனவுகளோ, நம்பிக்கைகளுமோ அறவே இருக்கவில்லை. வாழவேண்டும் ஆதலால், துணைக்கு யாரும் இல்லையாதலால் முதலில் ஒரு தொழில் தேவைப்பட்டது எனக்கு. அம்மா அன்பாய்த்தான் இருந்தாள். ஆனால், அவளாலும் எனக்கு உதவ முடியாத நிலை அப்போது. தொழிலும், உதவிகளுமின்றி நாதியற்ற நிலையுணர்ந்தேன். கொன்வன்ட் பயிற்சிகளிலிருந்தும் தப்ப முடியாதிருந்தது. என்னை நான் மறுபடி இனம் காணவே ‘கருக்கு’வை எழுதினேன். ‘சங்கதி’ மாறுபட்டது. இந்நாவல் தலித் பெண்கள் மீது கவனத்தை ஈர்ப்பது. தலித் கலாசாரத்தை விபரிப்பவராகிய ‘நான்’ இற்கும், தலித் என்கிற நிதர்சனத்துக்குமிடையே குழப்பங்கள் இல்லை.

எல்லாக் கெரக்டர்களையும்- கதாபாத்திரங்களையும் திரட்டுகிற ‘நானாக’ இங்கே நான் வெளிப்படுகிறேன். தலித் கலாசாரத்தின் புரட்சிப்போக்கை வெளிக்கொணருவதே என் எழுத்தின் பிரதான இலக்கு. வன்முறையை அனுபவிக்கிறபோது தலித்துகளின் குரல் எங்ஙனம் ஒலிக்கிறது, எதிர்க்கிறது என்பதையே நான் எழுதுகிறேன். ‘கருக்கு’ என் வாழ்வியல் கதைதான். ஆயினும், என் சமூகத்தின் வாழ்வோடு என் கதையும் சேர்ந்தே இருக்கிறது. ‘நான்’ என்கிற அடையாளம் நாவலில் இருந்தாலும், தலித் பெண்களது இருப்பை விபரிக்கவே இரண்டும் எழுதப்பட்டன. ஒவ்வொரு பெண்ணும் தலித் அடையாளத்தை நிலைநிறுத்தவே முயல்கிறாள்.

பெண்கள் எப்போதும் இரண்டாம் தர குடிமக்கள் உலகில். தலித் பெண்களுக்கோ அதைவிட ஆழமான இரண்டாம்பட்ச நிலை. தலித் என்கிற அடையாளம் வேறுபட்ட பிரச்சினைகளை அவர்களுக்குத் தருகிறது. மற்றப் பிரச்சினைகள் எல்லோருக்கும் பொது என்றிருக்க, தலித் பெண்களோ வாழுவதற்காக சாக வேண்டியிருக்கிறது. அதையே என் கதையில் விபரித்துள்ளேன்.”

தமிழ் தலித் பெண் எழுத்தாளர்கள் பற்றி பாமாவின் அவதானிப்பு இப்படி அமைகிறது. “தமிழ்நாட்டிலே தலித் பெண் எழுத்தாளர்களாக சிலரே உருவாக்கம் பெற்றிருக்கிறார்கள். ஐ.எஸ்.ஏ.அதிகரியான சிவகாமி, அரங்கமல்லிகா, சுகிர்த்தராணி ஆகியோர் அவர்களுள் சிலர். எல்லா வீடுகளிலும் ஆண்கள் கற்க அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்பிள்ளைகள் வீட்டுவேலைகள் செய்வதற்காக நிறுத்தப்படுகிறார்கள். கல்வி இல்லையாதலால் அவர்களிடமிருந்து ஆக்கத்திறனை எதிர்ப்பார்ப்பது எப்படி? ஆனால், நீங்கள் கேட்டுப்பார்த்தால் தெரியும். நல்ல கதை கூறுவோர் நிறைய பேர் இருக்கிறார்கள். சரியான கல்வி இல்லையாதலால், அவற்றைச் சிறந்த கதைகளாக முன்வைக்கிற சாமர்த்தியம் அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. பாதியில் கல்வியை கைவிட்ட பெண்களது எண்ணிக்கை தலித் சமூகத்தில் மிக உயர்வு. அவர்களது அனுபவங்கள் எல்லாமும் தனித்துவமானவை. தலித் பெண்கள் தனித்துவமானவர்கள். ஆயினும், அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.”

“மலையாளத்தில் உங்கள் எழுத்துக்கள் மூலக்கருத்து சிதைவுறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா?” என்கிற கேள்விக்கு பாமாவின் பதில் இப்படி அமைகிறது. “மூலக்கருத்து முழுக்க இழக்கப்படவில்லை. மலையாளமும், தமிழும் ஒனறுபோலிருப்பதால், மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பது சாத்தியமாக உள்ளது. ஆங்கிலம் அப்படியல்ல. மூலக்கருத்து சற்று மாறியுள்ளது. எனினும், மொழிபெயர்ப்பு மிக அவசியமானது. தன்னைத் தானே அறிய வைத்தல் என்பது ஒருவருக்கு மிகவும் கடினம். என் புத்தக பிரசுரத்துக்காக நான் நிறைய சிரமங்கள் பட்டாக வேண்டியிருந்தது. தலித் இலக்கியமானது முன்பு பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. மிக நீண்டகாலமாகவே தலித்தியரல்லாதோர் தலித்துகளை மங்கிய வெளிச்சத்திலேயே அடையாளம் காட்டி வந்திருக்கிறார்கள். எனது நூல் ஆங்கிலத்தில் பிரசுரமானபின்னேதான் கவனத்தைப் பெற்றது. செய்தித்துறை, அச்ககப் பணி புரிவோர் எல்லோருமே உயர்குலத்தினரோடேயே இருக்கிறார்கள். தலித் எழுத்துக்களை தலித் சமூகத்திலிருந்து வருவோரே மொழிபெயர்த்து வழங்கும் நிலை வர வேண்டும்.”

கிறிஸ்தவ மதத்தில் இனப்பாகுபாடுகள் நிலவுதல் பற்றி பாமா இப்படிப் பேசுகிறார். “கடவுளின் முன் அனைவரும் சமம் என்று கிறிஸ்தவம் சொன்னாலும், இது பூரணமாக நடைமுறையில் இல்லை. தலித் கிறிஸ்தவர்கள் இதன் பொருட்டு போராடுகிறார்கள். கத்தோலிக்கக் கிறிஸ்தவம் சற்று இதை வரவேற்கிறது. தலித்திய இந்துக்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்குமிடையில் முடிவற்ற பகையுணர்வு உள்ளது. இயக்கத்தலைவர்கள் இரு சாராரையும் இணைத்திடப் போராடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எண்பது வீதமானோர் ரோமன் கத்தோலிக்க தலித்துகள். ஆயினும், தமிழ்நாட்டுக் கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களில் தலித்தியர்களுக்கு உயர் அந்தஸ்துக்கள் எதுவும் கொடுக்கப் படுவதில்லை. தலித் கிறிஸ்தவர்களின் போராட்டங்கள் காரணமாக சில மாற்றங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பெரும்பாலான கொன்வன்டுகளில் இனப்பாகுபாடு அதிகமாக் காணக் கிடக்கிறது. என் அனுபவத்தின்படி, எல்லா மட்டங்களிலும் இனப் பாகுபாடு உள்ளது. பல தலித் கன்னியாஸ்திரிகளுடன் பேசிப்பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்த்தன. அவர்கள் தாம் சமமாக நடத்தப்படவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். கொன்வென்ட் வாழ்க்கை நரகமாக உள்ளது. பலர் தப்பித்துச் செல்ல முயலுகிறார்கள். எனினும், மதத்தின் கட்டளைகளுக்குள்ளும் கூட தலித் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட தனிநபர்கள் இருக்கவும் செய்கிறார்கள்.”

“ஏன் உங்கள் எழுத்துகளில் அன்பு-காதல் என்பவற்றுக்கான கவனிப்பு மிகக் குறைவாக உள்ளது?” எனக் கேட்கப்பட்டபோது, “நாம் அன்போடு போராடுகிறோம். தலித்தியக் கலாசாரத்தே அன்பென்பது பொதுவாக அற்புதமான காட்சி. என் ‘சங்கதி’, மற்றும் பல சிறுகதைகளில் அன்புக்கான கவனிப்பு இருக்கவே செய்கிறது.” என விடை பகர்கிறார் பாமா.

“சமூகத்தோடு தலித்துகள் இணைந்து போக வேண்டியிருப்பதன் தேவையை நீங்கள் உணரவில்லையா?” என்கிற வினா எழுப்பப்பட்டபோது, “சமூகம் நமக்கு சில எல்லைகளை வகுத்தே வைத்துள்ளது. நாம் முயன்று நடுப்பகுதிக்கு வர முயற்சிக்கிறபோதெல்லாம் இன்னும் மோசமாக ஓரங்கட்டப் படுகிறோம். நமக்கு ஆதரவு காட்ட வேண்டிய ஒரு முக்கியமான பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது. தலித்துகளுக்காக எழுதுவது கூட அவர்தம் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியே.” என மறுமொழி பகர்கிறார் அவர்.

அந்தப் பேட்டியிலே பின்வரும் கருத்துக்களை பாமா மேலும் முன்வைக்கிறார்.

“நான் ஒரு சாதாரண கிராமத்துப் பள்ளிக்கூட ஆசிரியை. மக்கள் என்னை ஒரு தலித் பெண்ணாகவே பார்க்கிறார்கள். வாடகைக்கு ஒரு வீடு கொடுக்கக்கூட பின்வாங்குகிறார்கள். கொன்வன்டில் கற்பிக்கிற போது, நிர்வாகம் என்னை உயர்குலப் பெற்றோருடன் மோத வைத்துக் கூத்துப் பார்த்தது. தலித் என்பதால் ‘பறையா டீச்சர்’ என்கிற அடைமொழி ஒன்று உள்ளது. அதை மாற்ற முடியவில்லை எனக்கு.

‘கருக்கு’ வெளியானபோது பிழையான கருத்துக்கள் கிராமத்து மக்களிடம் இருந்தன. தம் வாழ்வின் இரகசியமான விடயங்களையெல்லாம் எனது அந்த நூல் அம்பலத்துக்குக் கொண்டுவந்து விட்டதாக அவர்கள் என்னைக் குற்றஞ் சாட்டினார்கள். என் இல்லத்துக்குக் கூட ஆறு மாதங்கள் என்னால் அடியெடுத்து வைக்க முடியவில்லை. அப்பாகூட கடுஞ்சினத்துடனிருந்தார். என் சமூக இளைஞர்கள் சிலரது உதவியோடு நான் அவர்களை எந்தவித அவமானத்துக்கும் ஆளாக்கவில்லை என்பதைத் தெளிவுற எடுத்துரைத்த பின்பே என் உண்மை நிலைப்பாடு புரிந்தது அவர்களுக்கு. இப்போது அவர்கள் எனக்கு நிறைய உதவுகிறார்கள். என் சமூகத்துக்குள் நான் போகிறபோது, ஒரு மீன் மீள நீருக்குத் திரும்புவது போல உணர்கிறேன். என் சமூகத்தைவிட்டுத் தள்ளியிருத்தல், என்னை கதிகலங்க வைத்து நிம்மதியற்ற நிலைக்கு ஆளாக்குகிறது. அந்த விடுதலையுணர்வை வேற்று மனிதர்களுடனான கூட்டுறவில் என்னால் ஒருபோதும் உணர முடியவில்லை.

தலித் எழுத்தாளர்கள் தமது கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர வேண்டும். தத்தமது எழுத்துக்களை உலகறியச் செய்ய முயல வேண்டும். ஒருதடவை என் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையொன்று நான் எழுதி, அது பிரசுரமாகி விட, என் கிராமத்தே அது பற்றி அறிய வந்தபோது, ஒரு பெண் சொன்னாள் மற்றவளைப் பார்த்து “பாமா முன்னால் நாம் ஒன்றும் பேசக்கூடாது. பார். அனைத்தையும் அவள் கதைகளில் கொணர்ந்து விடுகிறாள்.” என் ஊரவர்களே எனக்குக் கரு தருவோர்.

‘கருக்கு’ வெளியானபின் தலித் பெண்களைப் பற்றி நான் எழுத வேண்டுமென்று பலரும் என்னை வற்புறுத்தியதன் பேரில் ‘சங்கதி’யை எழுதினேன். அவர்தம் வாழ்வு முறைகள், கலாசாரம், கனவுகள், பலங்கள், பலவீனங்கள், ஆவல்கள், போராட்டங்கள் அனைத்தையும் மூன்று தலைமுறைப் பெண்களை-பாட்டி, அம்மா, மகள்-வைத்து வரைந்தேன். நாளாந்தம் அவர்கள் அனுபவிக்கும் உளைச்சல்கள், வேதனைகளுக்கு மத்தியில் அவர்கள் வாழ்விலே அவர்கள் கொண்டிருந்த உறுதியை நான் சொல்ல வேண்டியிருந்தது.

இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. ஒரு தனி மாது தனியே வாழுவதன் போதான அவளது சுதந்திர உணர்வு, அப்படி வாழுவதற்கு அவள் நிகழ்த்தும் போராட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவல் எழுதி வருகிறேன். மேலும் ஒரு ஆசிரியையாக இருந்து பெற்ற அனுபவங்கள், அவை இரு வகையானது ஒன்று மக்களுக்குக் கற்பிப்பது, மற்றையது அவர்களிடத்தே நான் கற்றது அவற்றையும் வைத்து எழுத எண்ணம் உள்ளது.

தலித் பெண் எழுத்தாளர் என்ற அடிப்படையில் நிறைய மாநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். பல அனுபவங்கள். சில இடங்களில் நல்ல வரவேற்பு. வானத்தே இறக்கைக் கட்டிப் பறந்ததாய் உணர்ந்தேன். சிலவிடத்தே படுபயங்கரப் புறக்கணிப்பு. நோகடிக்கும் விமர்சனங்கள், தேவையற்ற வினாக்கள் என்பவற்றுக்கு முகம் கொடுத்து மிக அந்நியமாய், தாழ்வாய் உணர்ந்தும் உள்ளேன் சில மாநாடுகளில்.”

“உங்களது அனுபவங்களினூடாக இவ்வெழுத்துக்கள் வாயிலாக சமூகத்தில் ஏதேனும் மாற்றங்களைத் தோற்றுவிக்க இயலும் எனும் நம்பிக்கையுண்டா?” என்று பாமாவிடம் கேட்கப்பட்டதற்கு அவர் இப்படி பதிலளிக்கிறார். “ஆமாம், நிச்சயமாக. என் எழுத்துக்கள் இளம் தலைமுறையினரிடையே புது நம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளன. தலித்துகள் உறுதிபெற்றுள்ளனர். தலித்தல்லாதோர் பீதியுற்றுள்ளனர்.

“ஏன் எழுதுகிறீர்கள்? சுருக்கமாகச் சொல்லுங்களேன்.” என்று இறுதியாக ஒரு வினா எழுப்பப்பட்டபோது, “எனது வித்தியாசமான பாத்திரப் படைப்புகளினூடாக நான் சக்தி பெறுகிறேன் ஆதலால், நான் எழுதுகிறேன். அதுவே என்னை வாழ வைத்துள்ளது. பலவீனர்களது ஆயுதமாக என் எழுத்தை பாவித்தாக வேண்டிய கடப்பாடும் உள்ளது. எழுதுதல் என்னைச் சுகப்படுத்துகிறது. சுதந்திரமாய் உணரச் செய்கிறது ஆதலால், நான் எழுதகிறேன்.” என்று விடையளிக்கிறார் பாமா.

அடுத்தும் ஒரு நேர்காணல் இடம்பெறுகிறது. கலாநிதி.ஜெய் பிரகாஷ் கர்தம் ஹிந்தியில் எழுதும் ஒரு தலித் எழுத்தாளர். அவரைப் பேட்டி காண்கிறார் கலாநிதி.நிலன்சுகுமார் அகர்வால் அவர்கள். கலாநிதி.ஜெய் பிரகாஷ் கர்தம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் காசியாபாத் எனும் ஊரில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். தொழிற்சாலைகளில் ஒரு கைத்தொழிலாளியாக ஆரம்ப காலங்களில் வேலை செய்திருக்கிறார். பல அரச, மாநில வங்கிகளில் பணியாற்றிவர். இந்திய மத்திய செயலகத்தே மொழித்துறை சேவைப்பகுதியில் உதவிப் பணிப்பாளராக இருந்து பின்னர், மொரிசியஷின் இந்திய உயர் ஸ்தானிகரின் செயலாளராக தற்போது கடமையாற்றுகிறார். 1999இலிருந்து வெளிவருகின்ற ‘தலித் சாகித்யா’ வருடாந்த சஞ்சிகையின் ஆசிரியரும் கூட. தலித் இலக்கியம் பற்றிய தனது கருத்துக்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.

“இந்திய இலக்கியங்களில் தலித் இலக்கியம் இன்று பெரும் இடம் பிடித்துள்ளது.” எனக்கூறும் அவர், “அதன் எதிர்காலம் வெகு பிரகாசமாக மிளிர்கிறது.” என மகிழ்ச்சி தெரிவிக்கிறார். அமெரிக்காவில் கறுப்பினத்தவரது பிரச்சினைகளோடு தலித் பிரச்சிகைளை ஒப்பீடு செய்யும் அவர், சில விடயங்களில் தலித்தியர்களது பிரச்சினைகள் வித்தியாசமாக இருப்பதையும் சுட்டுகிறார். “கறுப்பர்களுக்கு தீண்டத்தகாதவர் என்ற பிரச்சினைகள் எதுவும் கிடையாது. அவர்களுக்குள்ளது இனப்பாகுபாட்டுப் பிரச்சினைகள் மட்டுமே. ஆதலினால், தலித் இலக்கியம் கோபாவேசம் கூடியது” என்கிறார் அவர்.

மேலும் அவர் கூறுகிறார். “இந்திய இலக்கியங்கள் எனக் கூறப்படும் சிலவகை இலக்கியங்கள் தலித்தியர்களை எப்போதும் நசுக்கி வதை செய்வதாக உள்ளன. கடவுள், விதி என்கிற பெயரில் தலித் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகுதல் நிகழ்கிறது. சுயநலமற்ற பணி புரிய கீதை எதிர்ப்பார்க்கிறது எனக்கூறி, அவர்தம் கடின உழைப்புக்கு எதையும் கோராதிருக்க அவை கற்பிக்கின்றன. எஜமானனால் எது பகரமாகத் தரப்படினும் அது கடவுளின் விருப்பம் எனக்கூறி, அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
ஏனைய துறைகளில் தலித்துகளது ஈடுபாடு பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “நாடோடி இலக்கியம், இசை, பாட்டு, சங்கீதம், ஓவியம் என பல துறைகளில் தலித் இன்று கவனம் செலுத்துகிறது. தலித்திய உணர்வுகளை பெருத்த குரலோடு வெளிப்படுத்தி அவை இவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகங்களை ஓரளவுக்கு உலகறியச் செய்து வருகின்றன.” என்கிறார் அவர்.

“தலித்தியர் படைக்கும் தலித் இலக்கியம், தலித்தியரல்லாதோர் படைக்கும் தலித் இலக்கியம் இரண்டுக்குமிடையே என்ன வேறுபாடுள்ளது எனக் காண்கிறீர்கள்?” என்ற வினாத் தொடுக்கப் பட்டபோது, ஹிந்தி விமர்சகர் மனேஜர் பாண்டி, ரம்னிகா குப்தாவின் தலித் சிறுகதைகளுக்கு வழங்கிய அணிந்துரையினது வரியொன்றை ஞாகமூட்டுகிறார். ‘சுடுவதில் பெறும் அனுபவத்தை சாம்பல் மட்டுமே அறியும்’ என்ற வரியே அது. “தலித் மட்டுமே சுடப்படுவதிலிருக்கும் அனுபவம் அறிவர். துயர், வெறுப்பு, அகௌரவம், அநீதி, பாகுபாடு, தீண்டாமை என்கிற பல்வேறு தீ. தலித் அல்லாதோருக்கு அந்த அனுபவம் கிடையாது. தலித்தியர் பால் அவர்களுக்கு அனுதாபம் இருக்கலாம். நலனோம்பல் இருக்கலாம். தலித் அனுபவித்தவற்றைப் பார்த்தவர்கள் மட்டுமே இவர்கள். தலித் இலக்கியம் அவர்கள் அனுபவித்ததை அடிப்படையாகக் கொண்டது.” என விடை வருகிறது அவரிடமிருந்து.

“ஆங்கிலத்தில் தலித் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவது சிறந்தது. பெரியதொரு வாசகர் வட்டம் அதன் வாயிலாகக் கிடைத்து விடுகிறது. தலித் இலக்கியங்கள் உலகமயப்படுத்தப்படல் அவசியம். பல பல்கலைக்கழகங்களில் தலித் இலக்கியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் 2006இல் ஜெர்மன் ப்ராங்பார்ட் உலக புத்தகச் சந்தையில்; கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, தலித் இலக்கியங்கள் பொன், ஹம்பர்க் பல்கலைக்கழகங்களில் கற்பிப்பதைக் கண்டு வியப்புற்றேன். நிறைய மாணவர்கள் தலித் இலக்கியங்கள் சம்பந்தமாக ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகிறார்கள். பிரித்தானியா, அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து தலித் இலக்கியங்கள் சம்பந்தமாக ஆய்வில் ஈடுபடும் பலர் அடிக்கடி என்னோடு தொடர்பு கொள்கிறார்கள்.” எனக்கூறும் இவரது நூல் ஒன்று ஜீ.டபிள்யு.பிரிஜ்ஸ் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“இந்திய இலக்கிய பாடத்திட்டத்தில் தலித் இலக்கியம் உள்ளடக்கப்பட என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட முடியும்?” என்கிற வினா எழுப்பப்பட்டபோது, அவர் பின்வருமாறு தன் கருத்துகளை முன்வைக்கிறார். “எழுத்தாளரது பணி எழுதுவது மட்டுமே. பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது பற்றி மற்றவர்கள்தான் யோசிக்க வேண்டும். இந்திய பல்கலைக்கழகங்களில் தலித்துகள் எவரும் உயர்பதவிகளில் இல்லை. பாடத்திட்டத்தை வரைகிற குழுவிலும் அவர்கள் அங்கத்தவர்களாக இல்லை. அதனால், அவர்களால் இதை செய்ய முடியாது. எனது ‘ச்சாப்பர்’ நாவல், மற்றும் அநேக சிறுகதைகள் பல பல்கலைக்கழகங்களில் கலைமாணி, முதுமாணி கற்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. என் வாழ்வும், பணியும் பற்றி கிட்டத்தட்ட பதினைந்து கல்வியியலாளர்கள் தமது மேற்படிப்புகளுக்கான ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தலித் இலக்கியத்தில் என் மேற்சொன்ன நாவல் முதலாவதாகக் கருதப் படுகிறது.”
மேலும் அவர் கூறுகிறார். “ ‘தலித் சாஹித்தியா’ சஞ்சிகையின் ஆசிரியராக சமூகப் பொருளாதார, அரசியல், மதப்பின்னடைவுகள், தலித்துகளுக்கெதிராக துஷ்பிரயோகங்கள் அனைத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறேன். தலித்துகளின் வாழ்வில் வேரோடியிருக்கும் அறியாமை, வேலையற்ற நிலை, வறுமை, சமூகப் பின்னடைவு என்பவற்றைச் சுட்டுகிறேன். இது தவிர சிறுவர்களுக்காகவும் இலக்கியங்கள் படைத்து வருகிறேன்.”

ஒரு கூலித் தொழிலாளியாக இருந்து ஒரு நாட்டின் உயர் ஸ்தானிகரது செயலாளராக இன்றிருக்கும் அசாதாரண வளர்ச்சியைக் காட்டும் இவரது தொழில் வரைபு பற்றியும், எது அதில் பொறுப்பு வகித்தது என்பது பற்றியும் கேட்கப்பட்டபோது, “என் மன விருப்பம் தவிர வேறில்லை. என் அப்பா 1976ல் இறந்தபோது என் வாழ்வு முழுதும் இருளே இருந்தது. பதினோராம் தரம் கற்றுக் கொண்டிருந்தேன். மூத்தவன் நான் என்பதால், குடும்பத்தை நடாத்திச் செல்ல அம்மாவுக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம். பள்ளி செல்லாமல் வேலைக்குப் போனேன். நாளாந்தம் ஐந்து ரூபாய் கூலியாகக் கிடைத்தது. சிறிய தந்தையும், அவரது தோழர்கள் இருவரும் என்னை எப்போதும் ஊக்குவித்தார்கள்.

சக்தியும், நேரமும் தவிர மூலதனம் எதுவுமில்லை. கிராமத்தவர்கள் சிலரும் உதவி புரிந்தார்கள். ஒரு இயந்திரவியலாளராக வர ஆசை. 1977ல் 140.00 அனுமதிக்கட்டணம் செலுத்த வழியில்லை ஆதலால், விஞ்ஞானத் துறையில் சித்தியடைந்தும், அடுத்த வருடம் 1978இல் கலைப்பிரிவில் இணைந்து கொண்டேன். வறுமை துரத்தியது. ஒழுங்கான உடையில்லை. சப்பாத்துகள் இல்லை. ஆகவே, கல்லூரி செல்ல முடியவில்லை. இரும்புத் தொழிற்சாலையில் 180.00 ரூபா மாதாந்தச் சம்பளத்தில் சேர்ந்தேன். டியூசனும் கொடுத்தேன். என் முதல் அரச தொழில் 1980இல் விற்பனை அரசவரித் திணைக்களத்தில் சேர்ந்தேன். பிறகு, அதே நிறுவனத்தில் எழுதுவினைஞராக ஆனேன். 1980ல் விஜயா வங்கியில். 1988ல் மத்தியச் செயலக மொழித்துறையில் மொழிபெயர்ப்பாளராக இணைந்தேன். 1989இல் உதவிப் பணிப்பாளராக பதவி உயர்வு. 1996ல் கலாசாரத் திணைக்களத்திலும், பிறகு கிராம அபிவிருத்தித் திணைக்களத்திலும் பணி. 2006இலிருந்து மொரிஷியஸ் உயர்ஸ்தானிகரது இரண்டாம் செயலாளராக ஆனேன். கல்வியைத் தொடந்தேன். தத்துவவியல், ஹிந்தி, சரித்திரத்தில் முதுமாணி முடித்து, கலாநிதிப்பட்டம் ஹிந்தியில். என் எழுத்து அனுபவங்கள் இன்றைய தொழிலில் நிறைய உதவுகின்றன.” என்று விடை வருகிறது அவரிடமிருந்து.

ஓம் பிரகாஷ் வால்மீகியை சுரேஷ் சந்ரா த்விவேதி நேர் காணல் செய்கிறார். அவரது பிறப்பு, வாழ்வு பற்றி கேட்கப்பட்டபோது, “உத்தரப் பிரதேச முஸாபர் நகரிலே 1950 ஜுன் 30ல் கீழ்மட்ட தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தேன். என் குடும்ப உறுப்பினர்கள் வாழும் பொருட்டு கடின உழைப்பை மேற்கொண்டார்கள். ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ள குடும்பத்திலே நான் மட்டுமே பள்ளிக்கூடம் அனுப்பப்பட்டேன். என் பெற்றோர் கற்றவர்கள் கிடையாது. ஆயினும், அவர்களிடம் ஆழமான அவதானிப்பு இருந்தமையால் என்னை கற்க வைத்தார்கள். நாடு சுதந்திரம் பெற்று 7, 8 ஆண்டுகள் கடந்திருந்தது. பள்ளி செல்லும் தலித்துகள் மீது தடைகள், கெடுபிடிகள், அவதானிப்புகள் தொடர்ந்தாலும் நான் கற்க அனுப்பப்பட்டேன். பள்ளி செல்லும்போது வீட்டிலிருந்து பாய்த்துண்டு ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். அதில்தான் உட்கார வேண்டும். ஆழமான மறுதலிப்புகள், வறுமையின் கோரத்தாண்டவம் இருந்தாலும் பெற்றோர் கல்வியில் உந்துதல் காட்டினார்கள்.”

தொடந்து தன் கல்விசார் அடைவுகள், தோல்விகள் பற்றியெல்லாம் அவர் பேசுகிறார். “என் ஆரம்பக்கல்வியை கிராமப்புறப் பாடசாலையொன்றில் பெற்றேன். பாடங்களில் அதிக புள்ளிகள் பெறுபவனாக நான் எப்போதும் இருந்தேன். இனரீதியிலான வதைகள் காரணமாக ஒவ்வொரு கணமும் நெருப்பின் மீது நடப்பதாக உணர்ந்தேன். என் ஞாபகத்தில் என் ஆசிரியர்கள் படுபயங்கரமாகவே இன்றும் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் மோசமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தியே நம்மை எப்போதும் அழைத்தனர். வகுப்பில் முதலாம், இரண்டாம் ஆளாக வந்தாலும், பின் வரிசையிலேயே நாம் அமர நிர்ப்பந்திக்கப்பட்டோம். பாடசாலை நீர்க்குழாயில் நீரருந்த நான் என்றும் அனுமதிக்கப்பட்டேனில்லை. ஆசிரியர் கேட்டும் கேள்விகளுக்கு தப்பித்தவறி விடையளித்துவிட்டால் பிரம்படி விழும். இன்னும், என் முதுகிலும், பின்புறத்திலும் அந்த வடுக்கள் அப்படியே உள்ளன. இரசாயனவியல் செய்முறைப் பரீட்சையில் வேண்டுமென்றே என்னை பெயிலாக்கியது என் வாழ்வையே திசைமாற்றிப்போட்டது. ஊரைவிட்டு டெஹ்ராhடூன் வந்தேன். மறுபடி மறுபடி முயற்சித்தும் கல்வி தடைபட, ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். இடையில் கலைக்கூடங்களிலும் பணிபுரிந்தேன். கவிதை, கதை, தலித் இலக்கியம் மீதில் முனைப்புடன் ஈடுபட்டேன். கல்வி பூரணமடையாத கவலை துரத்தியது. மறுபடி கற்றேன். ஹிந்தி இலக்கியத்தில் முதுமாணி முடித்தேன்.

கலாநிதி அம்பேத்காரின் முன்மாதிரிகள் என் கவிதைகளுக்கு மூலம் தந்தன. கௌதம புத்தரின் கருத்துக்கள் விடயங்களைப் புரிந்து கொள்ள வைப்பதில் எனக்கு உதவிற்று. மாக்ஸியக் கருத்துக்கள், கொள்கைகள் பால் ஏற்பட்ட ஈடுபாடு மனித உறவுகளைப் புரிந்து கொள்வதில் எனக்கு மிக உதவிற்று. கோர்க்கி, செக்கோவ், ஜேம்ஸ் போல்ட்வின், ரிச்சர்ட் ரைட் போன்றோரின் எழுத்துகளில் மிக ஊடுருவல் செய்தேன். என் வாழ்வின் நோக்கக்கூற்றாக, தத்துவமாக அம்பேத்கார், புத்தர் ஆகியோரை வரித்தேன். அம்பேத்காரின் சிந்தனைகளிலிருந்து என்னால் ஒரு அங்குலம் அளவேனும் பிசகி நடக்க முடியவில்லை. அவரது 22 வாக்குறுதிகள் தனை உள்வாங்கி, அறியப்படாத தலித்திய வாழ்வியல் பக்கங்களை என் கதைகளினூடாகக் கொண்டு வந்தேன். புது வடிவம், மொழி என்பவற்றோடு கலந்து ஹிந்திக் கவிதைகளுக்கு புதுத்திசை காட்டியவன் நான் என நம்புகிறேன்.”

பஞ்சாபி தலித் இலக்கியம் பற்றிய ஹரிஸ் கே. பூரி அவர்களது கட்டுரை நிறைய தகவல்களை முன்வைக்கிறது. சதீஸ் சந்தரின் வாசகம் ஒன்றோடு கட்டுரையை ஆரம்பிக்கிறார் அவர். “நான் என் இடுப்பிலே அழகான அமைப்பிலுள்ள வார்பட்டியொன்றைக் கட்ட விழைகிறபோது, யாரோ ஒருவர் என் பின்புறத்தே என்னைக் கொண்டே என் வரலாறைக் கூட்டித் தள்ளிப் பெருக்கி வீச விழைகிற பிரயத்தனத்துடன் ஒரு தும்புத்தடியை கட்ட முயற்சிப்பதுபோல உணர்கிறேன்.” என்ற வாசகங்கள் மனதை வதை செய்கின்றன.

பால்பிர் மதோபூரி அவர்கள் பஞ்சாபி இலக்கியத்துக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்பு பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்து சமூக கட்டளைகளால் களவாடப்பட்ட தலித்துகளின் நிலையை அவர் தலை முதல் கைகால்களென்று துண்டிக்கப்படுகிற ஒரு மரத்துக்கு உவமையாகக் காட்டுகிறார் தனது வாழ்வியல் நூலில். “இலையற்ற மரங்கள் என் சொந்தங்களைப்போல தோற்றமளிக்கின்றன. அவை என் சகோதர சகோதரியர் போல. தம் வளர்ச்சியைத் தொடங்குகிற போதே அவர்களது தலைகள் கொய்யப்படுகின்றன கருணையே இல்லாமல். கைகால்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட, துண்டிக்கப்பட்ட மரங்களினது எஞ்சிய பிண்டப் பகுதிகள் என் தந்தையினது, மாமாமார்களினது, அவர்தம் மகன்களது வடிவத்தை ஒத்தருப்பதாகக் காணுகிறேன்.” எனக்கூறும் மதோபூரி பலதரப்பட்ட அமெரிக்கர்களது வாழ்வியல் கதைகளை இங்கு மேற்கோள் காட்டுகிறார். மார்டின் லூதர் கிங் 1958ல் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது, கேரளாவில் ஒரு கூட்டத்தில் பேசினாராம் இப்படி:- “ஆமாம் நானும் ஒரு ஹரிஜன்தான். ஒவ்வொரு அமெரிக்கா வாழ் கறுப்பனும் ஒரு தீண்டத்தகாதவனேயாவான்.” சில அம்சங்களில் வேறுபாடு நிலவினாலும், கறுப்பின நீக்ரோவின் வலி, தலித்தினதை ஒத்தது எனப் பகர்கிறார் மதோபூரி.

1955ல் ஹரிஜனக் குடும்பமொன்றில் பிறந்த மதோபூரி பஞ்சாபி இலக்கியம் தந்த அற்புதக் கவிஞர். இந்திய அரசின் சிவில் சேவையில் பணிபுரிகிறார். ‘யோஜனா’ மாதாந்த இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர். ஆங்கிலத்திலிருந்து பஞ்சாபிக்கு பல நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவரது சுயவரலாறு கூறும் நூல் ஐந்து வருடத்துள் ஆறு பதிப்புகள் கண்டுள்ளனவாம். 2007ல் அது ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டமை பெரும் அங்கீகாரத்தை இவரது எழுத்துகளுக்கு ஈட்டித்தந்துள்ளது. சமஸ்கிருத மொழியில் ‘தீண்டத்தகாதவர்’ என்ற அர்த்தம் தரும் ‘தலித்’ என்ற பதத்;தை அம்பேத்கார் அவர்களே முதலில் பிரயோகிக்க ஆரம்பித்தள்ளார். ‘கடவுளின் குழந்தைகள்’ என அர்த்தம் தரும் ‘ஹரிஜன்’எனும் பதத்தை மகாத்மா காந்தியவர்கள் பிரயோகித்ததாம். இந்தியாவில் கிட்டத்தட்ட 170 மில்லியன் தலித்துகள் உள்ளனர். ஒவ்வொரு 5 தலித்துகளுக்கும் நால்வர் இந்தியக் கிராமங்களில் சொந்த இடம் கூட இன்றி வாழ்வோரே. இந்தியாவுக்கென எப்போதும் நன்கறியப்பட்ட வறுமையின் உண்மை முகங்கள் இவர்களிடமுள்ளன. இவர்களுக்கெதிரான அடக்குமுறைகளைக் கற்றவர்கள் ஒருபோதும் கண்மூடிப் பார்த்திருக்கக் கூடாது என்பதே அவரது ஆதங்கமாக உள்ளது.

தலித்தியக் கவிதைகளுக்கு இதழ் கவனம் கொடுத்துள்ளமையைக் காண முடிகிறது. ‘கடவுளின் மரணம்’ என்ற மோஹனதாஸ் நாமிஸ்ரே அவர்களது கவிதையைஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் அர்ச்சனா குமார் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்.

“கடவுள் இறந்து போகிறான்
அன்றி,
ஏமாற்றுகின்ற,
திருடித் தட்டிப்பறிக்கின்ற,
பிழையாய் வழிநடத்துகின்ற
ஆண்கள் ஆளும் மடம் ஒன்று
கட்டியெழுப்பப்படல் நிகழ்ந்து விடுகின்றது.
கடவுள் இறந்து போகிறான்,
பெண்ணொருத்தி தேவதாசியாய் மாறி
விபசாரம் செய்யத் தூண்டப்படுகையில்,
கடவுள் இறந்தே போகிறான்
எந்தத் தாயின் கருவறையில்
கடவுள் பிறந்தான் என்றும்,
கடவுளின் தந்தை யார் என்றும்
எனக்குள் வினாவெழும்பும் அக்கணத்தே
கடவுள் இறந்தே போகிறான்.”
‘ஒரு தாசியின் மகள் தனக்குள் பேசிக் கொள்வது’ என்கிற

கன்னட மூலம் சுகன்யா மாருதி எழுதிய கவிதையை ஆங்கிலத்தில் ஜீ.எஸ்.அமூர் மொழிபெயர்த்துள்ளார்.

“என் தொலைந்துபோன
காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்
மாலைப்பொழுதின் இருட்டு
பகல் பொழுதுக்குள் தானாகவே பரவுகையில்..?

ஒரு தந்தை இல்லாமலேயே
எனக்கு ஜனனம் தந்த
என் தாயின் மார்புக் காம்புகளிலா?

என் தாயின் பெயரோடு
தந்தையின் இடத்தையும் சேர்த்தே நிரப்பிப்போன
தந்தையின் சப்பாத்துகளிலா?

என் தொலைந்துபோன
காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்?

என்னோடு கூடி விளையாட வரும்
தத்தமது மகள்மாரை இழுத்தெடுத்து
அப்பால் கொண்டு செல்லும்
தாய்மாரின் வெறுப்பினிலா?

காமம் கொப்புளித்து
வாயில் எச்சிலூற எனைப்பார்க்கும்
அச்சிறுமியரின் தந்தைமார் தம் உதடுகளிலா?
என் தொலைந்துபோன
காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்?

நகர்ந்து அடியெடுக்கவிடாமல்
என்னை தடுத்து நிறுத்திய
தெரு நாய்களின் பயமூட்டும் பார்வைகளிலா?

தமது பாவங்களை எனக்குள் கடத்தி
ஏதேதோ பேசிய மனித நாவுகளிலா?
என் தொலைந்துபோன
காலைப்பொழுதுகளை எங்கே தேடுவேன்?

இருள் மண்டிய மங்கலான காலைப்பொழுதொன்றில்
நான் பிறந்திருக்க வேண்டும்.
என் கண்கண் வெளிச்சத்தைக் காண்பதற்கில்லாதபடி,

பரவும் தன் சூட்டைத் தானே தாங்கவொண்ணாமல்
சூரியனது திணற,
நான் அறிந்தேன் இது பகல் பொழுதென.
சூரியக் கதிர்களின் தகிக்கும் சூடு
என் தலையைச் சுடுகையில்
நான் பயணித்தாக வேண்டிய பாதை
மிகத் தொலைவென்பதையும் அறிந்தேன்.

பூமியின் மீது நான் வாழ்ந்த வாழ்க்கையும்
கேலியும் கிண்டல் பேச்சும் எனக்குப் போதும்.
கர்ச்சிக்கும் ஆழ்கடல் தன் பெருவயிறு திறந்து
எனை விழுங்கிக் கொள்ள மாட்டாதா?

இங்குமங்கும் இருப்பிடமும்,
சிறு நம்பிக்கையும் காணுகிறேன் நான்
ஆயினும், இந்த இருட்டோ அடர்ந்தது எனவும்
என் கண்களைத் திறந்திருத்தல் பிரயோசனமற்றது
எனவும் நானறிவேன்.
இந்த இருட்டினது வாழ்வு என்றேனும்
முடிவுக்கு வந்துவிட்டால்
அது என் விடுதலையாயிருக்கும்.

‘பசி’ எனும் கவிதா மஹஜன் அவர்களது கவிதை இப்படி நீள்கிறது.
“ஆமாம் நான் உனது அடிமை
எஜமானனே,
எனக்கு இந்த எல்லாப் பிணைப்புகளும் வேண்டும்.
நானே முன் வந்து ஏற்கிறேன்
இழந்த சுதந்திரத்தின் உணர்வினை
என் சங்கிலி உன் கரத்தே.
நீ பாராட்டுப்பெற வேண்டி
என்னை நீ காட்சிப்படுத்துகிறாய்@
நானும் எனதான காட்சிப்படுத்தப்படலை
அனுமதிக்கிறேன்….

எனக்கான முழுமையான காதலுக்குப் பின்னாலும்,
எனக்கு விடுதலை வழங்கல் பற்றி
என்றும் பேசாதே.
எஜமானனே,
வெளியில் எண்ணிக்கையற்ற சங்கிலிகள்@
எண்ணிக்கையற்ற சிறைக்கூடுகள்@
எண்ணிக்கையற்ற சாட்டையடிகள்@
எண்ணிக் கணக்கிட முடியாத கரங்கள்
நாட்பட்டதால் நாறிப்போன
அன்னத்தோடு காத்திருக்கின்றன.
எஜமானனே,
உனதடிமையாய் நானிருக்க என்னை அனுமதி.
இந்ந நபரின் கால் நக்கியே
என் நாவு களைத்துப் போயிற்று.
ஆதலினால் அதிலிருந்து பிறக்கும் வார்த்தைகள்
வலிதற்று வழுக்கி
பற்கள் தாண்டி வந்தும்
முடிக்கப்படாமல நிறைவு பெறுகின்றன.

உதடுகள் எல்லாவிடத்தும் அழுத்தப்பட்டான பிறகு
எனதான குரலும் நலிவுற்று இருக்கிறது.
வெறும் எதிர்ப்பார்ப்புகள மட்டுமே
என் கண்களில் எஞ்சியிருக்கின்றன.
எஜமானனே,
தருவாயா எனக்கு
உனதான தட்டில்
மிஞ்சியிருக்கும் ஒரு சொட்டு உணவை…
எனக்கு மிகவும் பசியாயிருக்கிறது…..”

‘தீண்டாமையின் வாசனை’ எனும் தலைப்பிலான பாசுதேவ் சுனானியின் ஒரிய மொழிக் கவிதையொன்றை ஆங்கிலத்தில் பிஸ்னுப்பிரியா ஹோதா தருகிறார்.

“உன் குருட்டுத்தனத்தை
மிக ஆரம்பத்திலிருந்தே
அறியவந்தமையின் காரணமாக
வினவுகிறேன் இதனை.
என் பாதம் உன் பூமியில் பட்டுவிட்டால்
அதை துப்புரவாக்கிடக் கருதி
சாணம் கரைத்த புனித நீர் தெளித்து விடுகிறாய்.
வாடகைக்கு உன் வீட்டைக் கேட்டு வந்தால்
என்னை இகழித்து விரட்டி விடுகிறாய்
பறையா நாயொன்றைத் துரத்தியடிப்பது போல.
சிலவேளை நீ அறியாமலேயே இருக்கிறாய்
என் அழுக்கான மூச்சுக்காற்றால்
நிரம்பியிருக்கும் வளிமண்டலத்துச் சூழலிலே
உனதில்லம் நிமிர்ந்து நிற்கின்றதென்பதையும்,
உன் வீடு கட்ட நீ பயன்படுத்திய செங்கற்களோ
எனது எளிய குடில் அமைந்திருக்கும்
ஆற்றோரத்தே குடைந்தெடுத்த மண்கொண்டு
ஹரிஜன் என கேலியாய்ப் பெயர்சூட்டி நீயழைத்த
ஆண் பெண்டிர் கைப்பட உருவானது என்பதையும்.
இப்பொழுது நீ நகர்கிறாய் உன் புதுமனைக்கு.
நீ போதிக்கிறாய் ஹரிஜனங்கள் மனிதர்களேயல்ல என்றும்,
வெறுப்பூட்டும் விலங்குகளைவிட இழினர் என்றும்.
அன்பான ஐயனே,
உம்மிடத்தே உள்ளார்ந்த நன்னெறியும் தைரியமும் இருந்தால்
சுவர்களைக் கிழித்து உள்ளே பாருங்கள்
ஒவ்வொரு செங்கற்களினது அணுவும், மண்துணிக்கையும்
தீண்டாமையின் இனிய வாசனையைச் சுமந்திருக்கும் என்பதனை.”

‘தாகம்’ எனும் கவிதையை மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் சாந்தா கொக்ஹாலே மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.

“என் துயரங்களின் மூலம் தாகமே.”
கௌதம புத்தர்
என் துயரங்களின் மூலம் தாகமே.
பெண் துயரத்தின் மூலம் தாகமே.
கவியினது கவலையின் மூலம் தாகமே.
என் மனவேதனையின் கூரான கத்தியும் தாகமே.
என் உணர்வுகளின் வேதனை நிரம்பிய
எதிரொலியின் மூலம் தாகமே.
உள்ளார்ந்த என் இருப்பிலெல்லாம்
தாகம் வியாபித்துக் கிடக்கிறது.
என்னாகிறது என் மூலமாதிரிக்கு
தாகம் சவால் விடுத்துப் போட்டிக்கு அழைக்கையில்?
என்னாகிறது தாகம் என் கண்களிலிருந்து
துடைக்கப்படுகையில்?
என்ன நடக்கிறது
அந்த இருள்படர் அடர்தனிமைக்கு
ஒரு பருவ வயதினனின் தழுவலில்;
தாகம் என்னிடம் ஒட்டிக் கொள்ளுகையில்?
மெதுவாய், நிச்சயமாய் தாகமதன் விளையாட்டு
வளர்கிறது அகோரமாய்.
என் மடியோ
வேதனையின் எண்ணற்ற புஷ்பங்களால்
நிரம்பி வழிகிறது.
பெர்ரியின் கறுப்பாய் இருக்கின்றன
அந்த வேதனையின் புஷ்பங்கள்;;.
அந்த வேதனையின் பூக்களுக்கு நான்
குருதியினது ஈரலிப்பைக் கொடுத்து விடுகிறேன்.
அந்த வேதனையின் பூக்களிலிருந்து நான்
பூந்தாதுகளை பறித்துத் தூவுகிறேன்.
நான் என் நெஞ்சோடு இறுக அணைக்கிறேன்
அந்த வேதனையின் பூக்களது
வம்சாவழிப் பரம்பரையை.
நான் புத்தரின் இரங்கும் பிச்சைத்தட்டின்
பசியாய் உருமாறுகிறேன்.
இந்த முதுமையின் வேதனை
அனைத்து வாழ்வையும் ஊடுருவிச் சென்று
தாக்குகிறது எல்லா மீத இருப்புகளையும்.
இந்த நித்திய தாகம் என்னில்
என் மரணத்தோடெல்லாம் ஒன்றும்
மாண்டு போக வாய்ப்பேயில்லை.”

இப்படி தலித்துகளது வேதனையின் குரல்களாக ஒலிக்கும் இன்னும் பல கவிதைகள் நூலில் காணக் கிடக்கின்றன.
தொடரும் பக்கங்கள் தலித் சிறுகதைகள் சிலதை நமக்கு தரிசிக்கிற வாய்ப்பை வழங்குகின்றன. பாமாவின் ‘கிசும்புக்காரன்’, சாருப் சிவாலியின் பஞ்சாபிச் சிறுகதை ‘இருளில் வாழ்வோர்’, புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் சுராஜ்பால் சவ்ஹானின் ‘அந்தப் புது பிராமணன்’, மராத்தி எழுத்தாளர் அர்ஜுன் தங்லேயின் ‘பதவியுயர்வு’, கன்னட எழுத்தாளர் தேவனூர் மஹாதேவ் எழுதிய ‘விற்கப்பட்டது’ போன்ற பல சிறுகதைகள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், பால்பிர் மதோபூரி, சியோராஜ்சிங்கின் வாழ்வியல் கதைகள் இரண்டும் காணக்கிடக்கின்றன. அவைகள் தனிவேறு அலகுகளாகப் பகிர்ந்து கொள்ளப்படத் தக்கவை என்பதால் இக்கட்டுரையில் அவற்றை நான் சேர்க்;கக் கருதவில்லை.—-

தொடரும் பக்கங்கள் தலித் சிறுகதைகள் சிலதை நமக்கு தரிசிக்கிற வாய்ப்பை வழங்குகின்றன. பாமாவின் ‘கிசும்புக்காரன்’, சாருப் சிவாலியின் பஞ்சாபிச் சிறுகதை ‘இருளில் வாழ்வோர்’, புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் சுராஜ்பால் சவ்ஹானின் ‘அந்தப் புது பிராமணன்’, மராத்தி எழுத்தாளர் அர்ஜுன் தங்லேயின் ‘பதவியுயர்வு’, கன்னட எழுத்தாளர் தேவனூர் மஹாதேவ் எழுதிய ‘விற்கப்பட்டது’ போன்ற பல சிறுகதைகள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், பால்பிர் மதோபூரி, சியோராஜ்சிங்கின் வாழ்வியல் கதைகள் இரண்டும் காணக்கிடக்கின்றன. அவைகள் தனிவேறு அலகுகளாகப் பகிர்ந்து கொள்ளப்படத் தக்கவை என்பதால் இக்கட்டுரையில் அவற்றை நான் சேர்க்கக் கருதவில்லை.

தொடரும் பக்கங்கள் தலித் சிறுகதைகள் சிலதை நமக்கு தரிசிக்கிற வாய்ப்பை வழங்குகின்றன. பாமாவின் ‘கிசும்புக்காரன்’, சாருப் சிவாலியின் பஞ்சாபிச் சிறுகதை ‘இருளில் வாழ்வோர்’, புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் சுராஜ்பால் சவ்ஹானின் ‘அந்தப் புது பிராமணன்’, மராத்தி எழுத்தாளர் அர்ஜுன் தங்லேயின் ‘பதவியுயர்வு’, கன்னட எழுத்தாளர் தேவனூர் மஹாதேவ் எழுதிய ‘விற்கப்பட்டது’ போன்ற பல சிறுகதைகள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், பால்பிர் மதோபூரி, சியோராஜ்சிங்கின் வாழ்வியல் கதைகள் இரண்டும் காணக்கிடக்கின்றன. அவைகள் தனிவேறு அலகுகளாகப் பகிர்ந்து கொள்ளப்படத் தக்கவை என்பதால் இக்கட்டுரையில் அவற்றை நான் சேர்க்கக் கருதவில்லை.

-நன்றி- ;ஜீவநதி’யில் வெளியான எனது இக்கட்டுரை

 

2 Comments on “தலித் இலக்கியம்- ஒரு பார்வை”

  1. சாதியும் மதமும் எனக்குத் தேவையில்லை எனச் சொன்னாலும், இந்து , உயர்சாதிஎன்றே ஊட்டி வளர்த்துவிட்டனர். சாதி மத பேதமெல்லாம் முன்னோர் செய்த மோசம். இந்நாளிலும் இந்தக் கொடூரம் தொடரத் தானே செய்கிறது.
    சாதிக்குத் தீ வைக்கத்தான் வேணும்.
    அரசியல் வாதிகள் எல்லோரும் சாதியை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
    களத்தினில் தொடர்ந்து போராடவேண்டும். கல்வியில் உயரவேண்டும்.வெறும் கலப்புத் திருமணத்தில்சாதி ஒழிய வாய்ப்பு குறைவு.

    தொடரும் ……

  2. அது என்ன தலித் இலக்கியம். தவறான பெயர். தமிழ் இலக்கியம்.
    உயர் சாதி இலக்கியம். கீழ் சாதி இலக்கியம். அருவெருப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *