கமலாதாஸ் கவிதைகள்

kamalathas.2   – தமிழில் : சமீரா (இந்தியா)

உலகை தனது கவிதை மொழியால் கவனிக்க வைத்த ஆங்கில மலையாளக் கவிஞர் பாலாமணி அம்மாவுக்கும் மாத்ரு பூமியின் நிர்வாக ஆசிரியர் வி.என். நாயருக்கும் பிறந்த கவிதை. சிறு வயது முதலே வார்த்தைகளைக் கனவுகளுடன் குழைத்து பிம்பங்கள் உருவாக்கி விளையாடி மகிழ்ந்தவர்

சிறு வயது முதலே வார்த்தைகளைக் கனவுகளுடன் குழைத்து பிம்பங்கள் உருவாக்கி விளையாடி மகிழ்ந்தவர். பாலக்காடு மாவட்டத்தில் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பதின்ம வயதிலேயே இல்லறம் புகுந்து விட்டார். சர்வதேச கட்டுப்பாட்டின், நிதியகத்தின் உயர்நிலை ஆலோசகராகப் பணியாற்றியவர் கமலாவின் கணவர். மாதவதாஸ்

தென்னிந்தியாவிலிருந்து முற்றிலும் தனித்த பண்பாட்டைக் கொண்ட கொல்கத்தாவிலும் பிற வட மாநிலங்களிலும் வாழ நேர்ந்த கமலாதாஸ் தான் கேட்டு வளர்ந்த இலக்கிய இலக்கணங்களுக்குள்ளும் கவிதைகளுக்குள்ளும் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கிக் கொண்டார். அங்கிருந்து தொடங்கியது அவரது வற்றாத கவியூற்று.

கமலாதாசாகவும் மாதவிக்குட்டி என்ற பெயரிலும் கவிதை பிறந்து பறந்து சென்றது.

ஏதோ ஒரு பொழுதில் தன் உலகைத் திறந்து வைக்க நினைத்து என் கதை என்ற புதினத்தைப் படைத்தார். அவரது கவிதையொழுகும்  கற்பனை உலகைப் பார்த்தவர்களில் விமர்சகர்களே அதிகம்.

காதலின் வேதனைகளையும் தனிமையின் ஏக்கங்களையும் கனவுகளின் தூரத்தையும்  உண்மையின் ஆழத்தையும் ஒன்றாக உணர்த்துபவை கமலாவின் கவிதைகள்.

பெண்ணியத்திற்கும், பெண்ணுக்கும் ஆணாதிக்க மொழியில் இலக்கணம் படைத்தவர்களால் இவரை ஜீரணிக்க முடியவே இல்லை.

விமர்சனங்கள் இடி முழக்கங்களாக இவரைத் தாக்கினாலும் உலகளாவிய இலக்கிய விருதுகள்,அங்கீகாரங்கள் என்கிற பெருமழையில் இன்றும் நனைந்து கொண்டிருக்கிறார் கமலா.

சூரிய ஒளியினால் ஒரு பூனை

அவர்கள் அவளை
இப்படியெல்லாம் செய்தனர்

அவளைக் காதலித்த ஆண்கள்
அவளைத் தேவைக்கேற்ப காதலிக்காத,
அவள் காதலித்த ஆண்கள்

அவளைக் காதலியாமல் பயன்படுத்தாமல்
பயந்தவனும் சுயநலவாதியுமான
கணவன் இரக்கமற்ற ஒரு காவலாளி

அவள் பிறகு அபயம் தேடிச் சென்ற
உணர்ச்சியற்றவர்களின் குழுக்கள்

பெரிய சிறகுள்ள மழைப்பூச்சிகளைப் போல
புது ரோமங்கள் முளைத்த
மார்புகளில் அவளை அணைத்தனர்

அவர்களது வாசனைக்ளுக்குள்ளே
அவளது முகம் ஒளித்து வைக்கப்பட்டது
இளமையின் காம இச்சைகள்
மறக்க ..ஹோ.. மறக்க

அவர்கள் ஒவ்வொருவரும் கூறினர்-

||நான் உன்னைக் காதலிக்கவில்லை
காதலிக்க இயலாது
காதல் என் இயல்பல்ல
ஆனால் எனக்கு உன்னிடம்
இரக்கம் காட்ட முடியும்

தெளிவான கொக்கிகளிலஒpருந்து
கண்ணீர் மென்மைபடுத்திய படுக்கையில்
வழுக்கி விழ அவர்கள்
அவளை அனுமதித்தனர்

ஏங்கி ஏங்கி அழுது
அவள் அங்கேயே இருந்தாள்
உறக்கம் பயனற்று விட்டது

அவள் கூறினாள் –
நான் கண்ணீரால் சுவர்கள் எழுப்புவேன்
என்னை சிறைவைக்கும் சுவர்கள்

நித்தம் நித்தம் காலையில்
புத்தகங்களின் அறையில்

வாசலில் ஓர் ஒளிக்கீற்று
மஞ்சள் பூனையாக
அவளது தோழனாக…

அதற்குள் திடுமென்று
பனிக்காலம் வந்துவிட்டது

ஒருநாள்
அவளை அவன்
அறைக்குள் மறைத்தபொழுது
சூரிய ஒளிப்பூனை
கோடாக மாறியதைக் கண்டாள்

சாயுங்காலம்
அவளை அவன் வெளியே அழைத்தபொழுது
குளிர்ந்து உறைந்திருந்தாள்

இப்பொழுது அவள்
பாதி இறந்த பெண்
ஆண்களுக்கும்
பயனற்றவளாக

 

தை இதழில் வெளளிவந்த இக் கவிதையையும் குறிப்பையும் ஊடறுவுக்கு அனுப்பித்தந்த யசோதாவுக்கு நன்றிகள்

2 Comments on “கமலாதாஸ் கவிதைகள்”

  1. படிமங்கள் குறியீடுகளை விதைக்கின்றன.சிறைச்சாலை ,சுவர்கள்,சூரிய ஒளிப்பூனை இவையாவும் மேடையற்றதோர் குரலினை அதன் நடுக்கத்துடன் மொழியாக்கியுள்ளது.

  2. கவிதையும்,கதையும்,புதினமும் பிறக்குமிடம் தன்னை புரிந்தவர்களிடமிருந்து அல்ல.எல்லோரையும் புரிந்தவர்களால் மட்டுமே முடியும்.புரிதலின் புனிதம் இவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *