கன்னத்தில் குழிவிழும் சிறுமி

– மாலதி மைத்ரி –

 கன்னத்தில் குழியிருக்கும் சிறுமியை

அனைவருக்கும் பிடிக்க காரணமிருக்கும்

ஒரு பலூனையோ

ஒரு மிட்டாயையோ

சட்டென்று பார்த்தவுடன்

கொடுக்கத் தோன்றும்

அவள் யாரென தெரியாவிட்டாலும்

தூக்கி முத்தமிட துள்ளும்

ஆட்டுக்குட்டி மனதை அடக்கி

செல்லமாக தட்டி

பூஞ்சிரிப்பால் கண்களைச் சிமிட்டி

சினேகத்தின் நூல் பந்தால்

ஒரு சிறு முடிச்சிடலாம்

கன்னத்தில் குழி விழும் விழாத

குழந்தைகளின் கள்ளமற்றச் சிரிப்பை

இனிப்புக் காட்டிக் கொல்பவனின்

வீட்டுக் குட்டித் தேவதைகளுக்கு

எப்போதும் புத்தன் அவனே

 

குழந்தையின் உயிரா

கருவாய் திரண்டிருக்கும்

சிசு உயிரா

மருத்துவரை நீதிபதியை

கட்டை அவிழ்த்து நீதி தேவதை

மலங்க மலங்கப் பார்க்கிறாள்

கன்னத்தில் குழிவிழும் சிறுமியை

நடுங்கும் கரங்களால் பொத்தியபடி.

 

 

1 Comment on “கன்னத்தில் குழிவிழும் சிறுமி”

  1. மிக்க நன்றி.
    பன்முகத் தகவல்கள்.
    இனிதான் படிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *